
தமிழ் ஈழம் என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளைத் தடைசெய்வது குறித்து தேர்தல் திணைக்களம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று பிரதித் தேர்தல் ஆணையாளர் (நிர்வாகம்) எம்.எம்.மொஹ மட் நேற்று "உதய'னிடம் தெரிவித்தார்.
பிரிவினையைத் தூண்டும் வகையில் தமிழ் ஈழம் என்ற பதமுடைய அரசியல் கட்சிகளைத் தடைசெய்வது குறித்து தேர்தல் ஆணையாளர் ஆராய்ந்து வருகின்றார் என்றும், இது தொடர்பில் விரைவில் முடிவொன்றை எடுப்பார் என்றும் வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் கேட்டபோதே பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"தேர்தல் திணைக்களம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. ஆணையாளரும் அதுகுறித்து பரிசீலிக்கவில்லை'' என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, தமிழ் ஈழம் என்ற பதத்தைக் கொண்ட அரசியல் கட்சியைத் தடைசெய்வது குறித்தோ அல்லது பரிசீலனை செய்வது குறித்தோ தேர்தல் திணைக்களம் தமக்கு இன்னும் எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது.
இதேவேளை, அவ்வாறு கட்சி தடைசெய்யப்படுமானால் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
தற்போது தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மட்டும்தான் தமிழ் ஈழம் என்ற சொல்லைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire