lundi 20 août 2012

நாட்டில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம்; அஸ்வர் சாடல்



news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள மறைமுகமான இரகசிய உடன்பாடானது முஸ்லிம் மக்களிடையே பாரிய எதிர்ப்பலையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளதுடன் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கும் நயவஞ்சகச் செயலுமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
 
புல்மோட்டையில் நடைபெற்ற ஐ.ம.சு.முவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 
 
இது புலம் பெயர் தமிழர்களினதும், புலி ஆதரவாளர்களினதும் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவுள்ள சூழ்ச்சிக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை அடகு வைப்பதற்குச் சமனாகும்.
 
அத்துடன் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் புலி ஆதரவு சர்வதேச சதித்திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணைபோவதுடன் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கும் நயவஞ்சகச் செயலுமாகும்.
 
எனினும் நாட்டிலுள்ள சில பள்ளிவாசல்கள் மீதான குழப்பத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியே உள்ளமை தெளிவாகியுள்ளது.
 
இதனைப் புரிந்து கொள்ளாது அல்லது இந்த உண்மை தெரிந்திருந்தும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் தான் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்.
 
இவ்வாறு அவர் நடந்துகொள்வது முஸ்லிம்களுக்கு அவமானமாக உள்ளது. முடிந்தால் மு.கா தலைவர் உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பள்ளிவாசலை தெரிவிக்கட்டும்.
 
அத்துடன் மு.கா தலைவர் ஹக்கீம் இன்று கிழக்கில் இனத்துவேசமாக பேசி வருகிறார். தயவு செய்து மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் சாணக்கிய அரசியல் மற்றும் தலைமைத்துவத்தைப் பின்பற்றுமாறு நான் அவரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். 
 
இருப்பினும் அண்மைக் காலமாக மு.கா தலைவரது செயற்பாடுகள் காரணமாக அக்கட்சிக்கிருந்த சொற்ப ஆதரவும் இல்லாது வருகிறது. எனவே விரைவில் மு.காவிற்கு மூடுவிழா செய்ய வேண்டிய நிலை ஏற்படவுள்ளது.
 
எனினும் உடைக்கப்பட்டதாக பொய்ப்பிரசாரம் செய்யப்படும் தம்புள்ள, தெஹிவளை பள்ளிவாசல்களில் இப்போது முன்னரை விடவும் முஸ்லிம்கள் அதிகமாகச் சென்று ஐவேளைத் தொழுகைகளை நடத்தி வருகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire