mercredi 29 août 2012

குறிவைக்கும் 'அக்னி' ஏவுகணைகள்


 [ கார்வண்ணன் ]
சிறிலங்காவின் கேந்திர நிலைகளை குறிவைத்து இந்தியா ‘அக்னி‘ ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

“போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுமுகமான உறவை விடவும் குறைவான உறவே நீடிக்கிறது என்பது இரகசியமான ஒன்றல்ல.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது இதில் முக்கியமானதொரு சம்பவமாகும்.

இந்தநிலையில் கடந்தவாரம் தமது நாட்டுக்கு வரவிருந்த சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவுக்கான பயண அழைப்பையும் திடீரென இந்தியா விலக்கிக் கொண்டது.

இரு அயல்நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள சில இணையதளங்கள் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா, அக்னி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டன.

இந்தச் செய்தி வெளியானதும், சிறிலங்காவுக்கு எந்த ஏவுகணை ஆபத்தும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டது.

எனினும், இந்திய அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தச் செய்திக்கு இந்தியா விளக்கம் கொடுக்கவும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை.

இதுகுறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தொடர்பு கொண்டு வினவியபோது, இணையதளங்களில் வெளியான இந்தச் செய்தி குறித்து தாம் கரிசனை கொள்ளவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

அத்துடன் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இல்லை என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire