அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஜயமொன்றை மேற்கொண்டு செப்ரெம்பர் 20ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட்ட முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சுகளை நடத்தவுள்ளார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருகிறது என இந்தியா இராஜதந்திர மட்டத்தில் எதிர்ப்புகள் வலுவடைந்துவரும் ஒரு சூழ் நிலையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெறுகிறது.
அதேசமயம், இலங்கையில் சீனாவின் பங்களிப்பு இந்திய இலங்கை உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தாது என்பது பற்றிய விளக்கங்களையும் இந்தியத் தரப்பினருக்கு ஜனாதிபதி வழங்குவாரென உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தன.
இதேவேளை, நேற்று ஈரான் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ அங்கு நடைபெறும் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே சந்திப்பாரென்றும், அங்கு இருவருக்குமிடையில் உத்தியோகபூர்வ பேச்சுகள் நடைபெறாதென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
Aucun commentaire:
Enregistrer un commentaire