டெசோ மாநாடு: அவர் வந்தாரா? இவர் வந்தாரா? சுவரில் இருந்த HUMPTY DUMPTY வந்தாரா?
டெசோ மாநாட்டின் கருத்தரங்கில் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, டெசோ துவங்கப்பட்ட காலத்தில் நடைபெற்ற கூட்டத்தையும் நினைவு கூர்ந்தார். 1986-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி, மதுரையில் நடைபெற்றது அந்த மாநாடு.
26 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற டெசோ மாநாட்டில் ,வாஜ்பாய், என்.டி.ராமராவ், பகுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அத்துடன், அனைத்து ஈழத் தமிழ் மற்றும் போராளி குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் தற்போது நடைபெற்ற மாநாட்டில், ஈழத் தமிழரின் பிரதிநிதித்துவம் என்பது கிட்டத்தட்ட பூச்சியம் என்ற நிலையில் உள்ளது. இன்றைய மாநாட்டில், இலங்கையில் இருந்து வந்து கலந்துகொண்டவர், நவசமாஜ கட்சியின் சிங்கள இன தலைவரான விக்கிரமபாகு கருணாரத்னே மட்டுமே. அவரைத் தவிர, ஸ்வீடன், நைஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களில் யாரும் தமிழர்கள் கிடையாது.
இலங்கையில் ஈழத்துக்காக போராடிய அமைப்புகளின் பிரதிநிதிகள் 26 ஆண்டுகளுக்குமுன் கலந்து கொண்டதுபோல இப்போது கலந்து கொள்ளாமைக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் குற்றம்சொல்ல முடியாது.
அன்று டெசோ மாநாட்டில் கலந்துகொண்ட ஈழ போராளி அமைப்புகளான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆகியவற்றை, விடுதலைப்புலிகள் இயக்கம் வேரோடு அழித்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை ராணுவம் அழித்தது. தமிழ் அரசியல் தலைவர்களை, ஈழ போராளி அமைப்புகள் சுட்டுக் கொன்றன.
இலங்கையில் தற்போதுள்ள தமிழ் கட்சிகளில் பெரிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இன்றும் அரசியல் செய்துகொண்டு உள்ளவர்கள், விடுதலைப் புலிகள், மற்றும் பிற இயக்கங்களின் துப்பாக்கிகளில் இருந்து ‘எப்படியோ’ தமது உயிர்களைக் காத்துக் கொண்டவர்கள். இவர்களது தலைவர்களே சுட்டுக் கொல்லப்பட்டபோது, இவர்கள் உயிர் தப்பியிருப்பது, அந்ததந்த நேரத்தில் யாருடைய கை ஓங்கி உள்ளதோ, அந்த தரப்பை சார்த்து இருந்ததால்தான்.
இன்றைய இலங்கை தமிழ் ‘தேசிய’ தலைவர்களில் ஒருவரது மகள் மத்திய அரசு கோட்டாவில் டில்லியில் மருத்துவம் படிக்கிறார். மற்றொரு தலைவரது இருதய சிகிச்சைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் மருத்துவ மனையை ஏற்பாடு செய்து கொடுத்தது மத்திய அரசு. இன்னொரு தலைவரின் கொழும்பு வர்த்தக சாம்ராஜ்யம், இலங்கை அரசின் கன்ட்ராக்ட்டுகளை நம்பி உள்ளது.
இந்த தலைவர்கள், விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது, புலிக்கொடியின் கீழ் நின்று முழக்கம் செய்தார்கள். இப்போது இலங்கை அரசின் கை ஓங்கியுள்ளது. சிங்கக் கொடியை கையில் ஆட்டியபடி உள்ளார்கள்.
கடல் கடந்து மாநாட்டுக்கு இவர்கள் வரவேண்டும் என்றால், கருணாநிதி ஒன்று, தமிழகத்தில் ஆட்சியை கையில் வைத்திருக்க வேண்டும். அல்லது, ஒரு துப்பாக்கியை கையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த இரண்டுக்கும் மட்டுமே பிஸ்கெட் போட்டு பழக்கப்பட்டவர்கள் மாநாட்டுக்கு வரவில்லை என்பது, கருணாநிதியின் தவறல்ல.
Aucun commentaire:
Enregistrer un commentaire