dimanche 12 août 2012

வாக்கெடுப்பு தேவை' - டெசோ தீர்மானம்


இலங்கைத் தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத்தீர்வு காணும் வகையில் உலக அளவில் அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம் சென்னையில் நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு டெசோவின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு சிக்கல்களைக் கடந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்பேரில் டெசோ மாநாடு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் நடைபெற்றுவருகிறது. மாநாட்டில் இலங்கைத் தமிழர் நலன்களை மேம்படுத்தும் வகையில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டங்களில் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர் எனக்கூறி, எனவே இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கான பன்னாட்டு விசாரணையை இன்னொரு தீர்மானம் கோரியது.
தவிரவும் இலங்கைத் தமிழர் நலனில் இந்திய அரசு போதிய அக்கறை காட்டுவதில்லை என்று குறைகூறி தமிழர் அனைத்து உரிமைகளையும் பெற்று அங்கே வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
'பன்னாட்டு கண்காணிப்பு குழு தேவை'
மேலும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு அமைக்க வெண்டும், தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும், இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும், என்று கூறும் தீர்மானங்களும் இன்றைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
காலையில் நடந்த ஆய்வரங்கத்தில் திமுக தலைவர் மு கருணாநிதி, இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியபோது, இலங்கை அரசின் தவறான வாக்குறுதிகளை நம்பியே, உடனடிப் போர் நிறுத்தம் கோரி தாம் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தினை சிலமணி நேரங்களிலேயே கைவிட்டதாகக் கூறினார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாளன்று கருணாநிதி உண்ணாவிரதம் துவங்கியவுடன், புதுடில்லிக்கும் கொழும்பிற்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தமாட்டோம் என இலங்கை அரசு அறிவிக்க திமுக தலைவரும் தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டார். அது குறித்து இன்றளவும் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இப்பின்னணியிலேயே சென்னையில் இன்று துவங்கிய தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு டெசோவின் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த ஆய்வரங்கத்தைத் துவக்கிவைத்துப் பேசுகையில்தான் கருணாநிதி, தான் உண்ணாவிரதத்திலிருந்தபோது, போர் முடிவிற்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டது, அது தனக்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அனுப்பிவைக்கப்பட்டது, அவ்வறிக்கையை நம்பியே உண்ணாவிரதத்தைக் கைவிட நேர்ந்தததாகக் கூறினார்.
ஆய்வாளர் அரங்கிற்குள் சென்று செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கருணாநிதியின் உரை விவரங்களை டெசோ அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மீள் குடியமர்வு, நிவாரணம், புனர்வாழ்வு ஆகியவற்றுக்காக அவசர தீர்வு காணப்பட வேண்டும். இடைக்கால தீர்வாக உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தமிழர்கள் நிம்மதியாக வாழ வகை செய்ய வேண்டும். சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும், நிரந்தர தீர்வாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். .
ஆய்வரங்ககத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பேசுகையில், ஈழத்தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த திமுக எப்போதுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் அவர் அப்போது கூறினார்.
இலங்கையிலிருந்து விக்ரமபாகு கருணரட்ண மேலும் பல்வேறு வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்கள், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தடைகளைக் கடந்து மாநாடு நடைபெறத்துவங்கியதில் திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire