நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி ஆகியோர் ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்தி சேகரித்து வந்துள்ளனர். அதில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கள் கடந்த இதழில் வெளியாகின. இந்த இதழில் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
‘இலங்கைக்குப் போகிறோம்’ என்றதுமே சில உறவினர்களும், நண்பர்களும், ‘இப்படிப் பிரச்னையாய் இருக்கிற சமயத்தில் நீங்கள் ஏன் அங்கே போகிறீர்கள்? ஏன் இந்த ரிஸ்க்?’ என்று பயமுறுத்தினர். ஆனால், அங்கு எங்களை வரவேற்கக் காத்திருந்த தமிழ் நண்பரோ, ‘இங்கு துளியளவும் ரிஸ்க் இல்லை. நம்பி வரலாம்’ என்று தைரியமூட்டினார். அவர் சொன்னபடியே நாங்கள் கொழும்பு சென்றடைந்தபோது, எந்தப் பதட்டமுமின்றி எல்லோரும் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழல் என்பதால், இந்தியத் தமிழருக்கு விமான நிலையத்தில் சிறப்புச் சோதனைகளோ, ஆய்வுகளோ இருக்கலாம் என்று ஊகித்திருந்த எங்களுக்கு, அப்படி அங்கு ஏதுமில்லை என்பதே ஆச்சரியமாக இருந்தது.
ஈஸ்டருக்கு முந்தைய இரவு என்பதால், வழி நெடுகிலுமுள்ள கிறிஸ்தவ சர்ச்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பீச்சில் இரவு பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. “இலங்கையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல், பிறர் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டு தமிழகத்தில் பலர் இயங்குவதுதான் பிரச்னை. அதில் ஒன்று, சிங்களர் என்றாலே பௌத்தர்கள் மட்டும்தான் என்பது. ஆனால், சிங்களவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தமிழ் இனவாதம், பௌத்த மதவாதம் என்று தமிழகத்தில் மொத்தமாகக் குழப்பிக் கொள்கிறார்கள்.
“இங்கு பௌத்த மதவாதம் சிலரிடம் இருக்கிறது. ‘பொதுபல சேனா’ என்ற அமைப்பு, சமீப காலமாகப் பௌத்த மதவெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறது. சகல கட்சிகளும் இதைக் கண்டிக்கின்றன. ராஜபக்ஷ கூட இதைக் கண்டிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஆனால், பௌத்த மதவாதத்தால் பாதிக்கப்படுவது தமிழர்கள் மட்டும்தான் என்பது போன்ற எண்ணம் தமிழகத்தில் உருவாக்கப்படுவதால்தான், அங்கு புத்த பிட்சுகள் தாக்கப்படுகின்றனர். ஆனால், பௌத்த மதவாதம் எழுந்தால் அதில் பாதிக்கப்படுவது தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம்களும், சிங்கள கிறிஸ்தவர்களும் கூடத்தான்” என்றார் எங்கள் நண்பர்.
கொழும்பு நகரத்தில் உள்ள மெயின் ரோடு மற்றும் ஸீ தெருவில் பலரோடு பேசினோம். 90சதவிகித கடைகள் தமிழ்க் கடைகள்தான். நகைக் கடைகளுக்கும், ஜவுளிக் கடைகளுக்கும் முதலாளிகள், தொழிலாளிகள் எல்லாமே தமிழர்கள்தான். அவர்களிடமெல்லாம் பேசியபோது, “போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இலங்கையில் அமைதி திரும்பி, எல்லோரும் நிம்மதியாக வாழத் துவங்கி விட்டார்கள். தமிழகம் தயவு செய்து மீண்டும் ‘தமிழீழம்’ என்று ஆரம்பித்துக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்றே பெரும்பாலோர் சொன்னார்கள்.
ஆனால், அவர்கள் எல்லோருக்குமே ‘தமிழர்கள் இலங்கையில் சமமாக மதிக்கப்பட வேண்டும்’ என்ற ஆசை இருக்கிறது. அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது நடக்கும் போராட்டங்கள், தங்களின் ஆசைக்கும் எதிர்பார்ப்பிற்கும் இடையூறாக இருக்குமென்றே அவர்கள் நினைக்கிறார்கள்.
நாங்கள் சந்தித்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சாமான்ய மக்கள் எல்லோருமே தமிழக அரசியல்வாதிகளின் பேச்சுக்களையும், போராட்டங்களையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. கருணாநிதி மத்திய அரசை விட்டு விலகியதையும், ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதையும் அவர்கள் தமிழக அரசியலாகத்தான் பார்க்கிறார்கள். மாணவர்களின் போராட்டத்தை மட்டுமே அவர்கள் மரியாதையாகக் குறிப்பிட்டார்கள். ‘மரியாதை செய்கிறோம்; தலைவணங்குகிறோம்’ என்று மாணவர் போராட்டங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர்கள், ‘ஆனால், மாணவர்கள் இங்குள்ள நிலைமை தெரியாமல் போராடி, தங்கள் படிப்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமே?’ என்று அக்கறையோடு குறிப்பிட்டனர்.
‘தமிழகத்தில் நடக்கும் போராட்டம், இலங்கையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் இலக்கு நோக்கி அமையாமல் இருப்பதால், அது வீணாகப் போகிறதே’ என்ற ஆதங்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.
பொதுவாக, போர் நடந்த காலத்திலேயே கொழும்புவில் உள்ள தமிழர்கள், ‘தனி ஈழம்’ குறித்து ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. எங்களிடம் பேசிய ஜுவல்லரி முதலாளி ஒருவர், “முதலில் தமிழகத்தில் உள்ளவர்கள், இலங்கைத் தமிழர்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு இந்திய வம்சாவழித் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் மலையகத் தமிழர்கள், தனிப் பிரிவு போல் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஈழத்தோடு தொடர்பில்லை. இவர்களெல்லாம் ஈழத் தமிழர்கள் இல்லை.
“வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமே ஈழத் தமிழர்கள். நாங்களும் இலங்கை குடிமக்களே. ஆனாலும், அரசு தரும் சான்றிதழில் எங்களுக்கெல்லாம் இந்தியத் தமிழர் (India - Tamil) என்றே பெயர் இடப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழருக்கு மட்டும்தான் இலங்கைத் தமிழர் (Lanka - Tamil) என்ற பெயர் இடம் பெறும்.
“ஈழத் தமிழர்களுக்குத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மனோபாவம் உண்டு. இந்திய வம்சாவழித் தமிழர்களை அவர்கள் பெரிதாக மதிக்க மாட்டார்கள். கொழும்புவில் வந்து தொழில் செய்யும் ஈழத் தமிழர்கள் மீது கூட அவர்களுக்கு கோபம் ஏற்படுவதுண்டு. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்திற்கான எல்லைகளை வகுத்துக் கொண்ட போது, சுமார் 8 ஆயிரம் முஸ்லிம் தமிழ்க் குடும்பங்களை 24 மணிநேரம் மட்டுமே கெடு கொடுத்து, வட மாகாணத்தை விட்டு வெளியேறச் செய்தனர். அந்த முஸ்லிம் தமிழ்க் குடும்பங்கள் எல்லாம், வெறும் பாலிதீன் பைகளில் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு, பெண்களையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறிய துயரத்தை யாரும் மறக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. இதனாலேயே ஈழப் போராட்டம் துவங்கியது முதலே, இந்திய வம்சாவழித் தமிழரோ, முஸ்லிம் தமிழரோ, மலையகத் தமிழரோ அதற்கு ஆதரவாக இருக்கவில்லை” என்று விளக்கினார்,
அந்த ஜுவல்லரி முதலாளி. கதிரேசன் தெருவில் உள்ள ‘சரவணா ஸ்டோர்ஸ்’ என்ற கடைக்கு வந்த தமிழர்களிடம் உரையாடினோம். ‘இலங்கையில் நாங்கள் சமமாக நடத்தப்படவில்லை’ என்றே பெரும்பாலான தமிழர்கள் தெரிவித்தனர். ‘சம உரிமை பெற்றுத் தர இந்தியாவும், தமிழ்நாடும் முயற்சி எடுத்தால் மகிழ்வோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், ‘தமிழ் ஈழம் கோரிக்கை காலம் கடந்தது. இனி சாத்தியப்படாது’ என்று மிகத் தெளிவாக அவர்கள் குறிப்பிட்டனர். தமிழகத்தில் காலம் கடந்து நடத்தப்படும் ‘தனி ஈழம்’ தொடர்பான போராட்டம் தங்களுக்குக் கெடுதல் செய்யும் என்றே அவர்கள் பயப்படுகிறார்கள்.
“கொழும்பு நகரில் தனி ஈழம் தொடர்பாக வன்முறைகள் வெடித்ததில்லை. விடுதலைப் புலிகள்தான் அவ்வப்போது இங்கு வந்து வெடிகுண்டுகளை வைப்பதும், மனித வெடிகுண்டுகளை அனுப்புவதுமாக இருந்தனர். ஒருமுறை, மும்பைத் தாக்குதலைப் போல, கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி கண்மண் தெரியாமல் சுட்டபடி வந்தனர். மற்றபடி கொழும்பு நகரில் தமிழர் – சிங்களர் மோதல்கள் பெரிதாக வெடித்ததில்லை” என்றார் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர்.
மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை எல்லாம் நாங்கள் மட்ட களப்பு மற்றும் கண்டிக்குச் சென்றபோது, மேலும் உறுதி செய்து கொள்ள முடிந்தது.
கண்டி பகுதி தேயிலைத் தோட்டம் ஒன்றில் வரிசை வீடுகளில் வாழும் மலையகத் தமிழர்களிடம் பேசினோம். இரவு நேரம் என்பதால், ஆண்கள் பெண்கள் எல்லோரும் கூட்டமாகக் குழுமி எங்களிடம் பேசினார்கள். “ஈழம் வேண்டும் என்று நாங்கள் போராடியதில்லை. காரணம் அப்படி தமிழருக்கென்று ஒரு நாடு அமைந்திருந்தால் கூட, அதில் எங்களுக்கு இடம் தரப்பட்டிருக்காது. வட மாகாணத் தமிழர்கள் எங்களை அந்நியமாகத்தான் வைத்திருந்தார்கள். எங்கள் தமிழும், அவர்கள் தமிழுமே வித்தியாசமாக இருக்கும். நாங்கள் யாழ்ப்பாணம் பகுதிகளுக்குப் போனால் கூட, அவர்கள் எங்களை உதாசீனமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், அந்தப் பகுதிகளில் சுனாமி தாக்குதல்கள் நடந்தபோது, நாங்கள் இங்கிருந்து பொருட்களை எல்லாம் திரட்டி அங்கு அனுப்பி வைத்து உதவினோம்.
“அவர்களில் பலர் புலம் பெயர்ந்து, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மிக வசதியாக வாழ்கிறார்கள். அவர்கள் இங்குள்ள வட மாகாணத் தமிழர்களுக்கு உதவுகிறார்கள். எனவே, வட மாகாணத்தில் பலர் வசதியாக இருக்கிறார்கள். நாங்கள்தான் மிகுந்த கஷ்டத்தில் வாழ்கிறோம். எங்கள் இளைய சமுதாயம், தோட்ட வேலையை விட்டு விட்டு நகரத்தில் வேறு பல வேலைகளுக்குச் செல்கிறார்கள். தனி ஈழம் என்றில்லாமல், தமிழர்களுக்குச் சம உரிமை என்பது போன்ற தீர்வு வந்தால், அது இலங்கையில் இருக்கும் எல்லா தமிழர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்கள் அவர்கள்.
மட்டக்களப்பு தமிழர்களும் தனி ஈழம் குறித்து ஆர்வம் இல்லாமலே பேசினார்கள். “கிழக்குப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைதி திரும்பி விட்டது. போரிலிருந்து விடுபட்டு, இருமுறை தேர்தலைச் சந்தித்து விட்டோம். இங்கு கொஞ்ச நஞ்சம் பேருக்கு இருந்த தனித் தமிழ் ஈழ ஆசையும், வன்னி பகுதியில் நடந்த உயிரிழப்புகளைப் பார்த்துக் கரைந்து காணாமல் போய்விட்டது. அரசியல் தீர்வு மூலம் போதிய அதிகாரம் கிடைத்தாலே போதும் என்ற மனோபாவம் எல்லோருக்கும் வந்து விட்டது. தமிழகத்தில் நடக்கும் போராட்டம் அந்தக் கோணத்தில் அமைந்தால், அதுதான் யதார்த்தமாகவும் எங்களுக்குப் பலன் தரும் வகையிலும் இருக்கும்” என்கிற ரீதியிலேயே பலரும் பேசினார்கள்.
கிழக்கு மாகாணமும், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் பிடியில்தான் இருந்தது. ஆனால், கர்ணா வெளியேற்றத்திற்குப் பிறகு புலிகள் அமைப்பு அங்கு பலம் இழந்தது. இதனால் 2007-ல் கிழக்கு மாகாணம் ராணுவத்தின் வசம் வந்தது.
“இந்தக் கிழக்கு மாகாண மக்கள் தொகை தமிழர், தமிழ் முஸ்லிம்கள், சிங்களர்கள் – என்ற வரிசையில் அமைந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்தப் பகுதி, புலிகளின் பிரதேசமாகவே இருந்தது. அப்போது இங்கிருந்த சிங்களர்கள் பலர் துரத்தியடிக்கப்பட்டனர். ஈழத்தை விரும்பாத தமிழ் பேசும் முஸ்லிம்களும் துரத்தப்பட்டனர்; சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், முஸ்லிம்கள் சுமார் 35 சதவிகிதம் பேர் என்பதால், புலிகளால் முஸ்லிம்களை முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. முஸ்லிம்கள் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் பகுதி பகுதியாக அவர்களின் ஆதிக்கம் குறைந்து, 2007-ல் முழுமையாகப் புலிகளிடமிருந்து விடுபட்டது” என்றார் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கடைக்காரர்.
1990-ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு அருகில் உள்ள காத்தாங்குடி மற்றும் ஏறாவூர் நகரங்களில், முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் முஸ்லிம் – தமிழர் ஒற்றுமையைக் குலைத்துப் போட்டது என்று கூறப்படுகிறது. 3.8.90 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணிக்கு காத்தாங்குடி பள்ளிவாசலிலும், ஏறாவூர் பள்ளிவாசலிலும் ஒரே நேரத்தில் தொழுகையின்போது விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 103 முஸ்லிம்கள் பலியாயினர்.
காத்தாங்குடி பள்ளிவாசலுக்கு நாங்கள் சென்றிருந்தோம். சம்பவம் நடந்து 23 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டின் அடையாளங்களைச் சரி செய்யாமல் அப்படியே வைத்துள்ளார்கள். பள்ளிவாசலின் உட்புறச் சுவர்களில் புல்லட்டுகளின் அடையாளங்கள் இன்னும் அப்படியே உள்ளன. சம்பவம் நடந்த அன்று அங்கு தொழுகையில் இருந்தபோது உயிர் தப்பிய முகமது இப்ராஹிம் என்பவரைச் சந்தித்தோம்.
“நாங்கள் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்ற கோபம் புலிகளுக்கு இருந்தது. ஏற்கெனவே வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல், இங்கும் வெளியேற்ற முயற்சி செய்தார்கள். ஆனால், இங்கு நாங்கள் குறிப்பிட்ட இடங்களில் மொத்த மொத்தமாகக் குடியிருந்ததால், அவர்களால் எங்களை எளிதாக அப்புறப்படுத்த முடியவில்லை. நாங்களும் விழிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தோம். இரவு 10 மணி முதல் விடியும் வரை எங்கள் இளைஞர்களின் குழு ஊரைப் பாதுகாக்கும். ராணுவத்தினரும் எங்கள் பகுதிகளில்தான் பாதுகாப்பாக இருப்பார்கள்.
“கடைகளில் சாமான் வாங்க முஸ்லிம் பகுதிகளுக்குத்தான் எல்லா ராணுவ வாகனங்களும் வந்து போகும். பயந்து பயந்துதான் வாழ்ந்து வந்தோம். அன்றைக்கு வெள்ளிக் கிழமை நாங்கள் எல்லாம் இஷா நேரத் தொழுகையை தொழுது கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ உடையில் வந்த விடுதலைப் புலிகள், பள்ளிவாசலின் எல்லா வாசல்களிலும் சுற்றி நின்று கொண்டு, இஷ்டத்திற்கு சுட்டுத் தீர்த்து விட்டு ஓடிப் போனார்கள். காயம்பட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச் செத்தவர்கள் மட்டும் 78 பேர். அதில் எனது 10 வயது மகன் அஷ்ரஃபும் ஒருவன்” என்று கண் கலங்கினார் அவர்.
அருகில் இருந்த இளைஞர் ஒருவர், “பாலசந்திரன் என்ற பாலகனுக்கு மனமிரங்கும் தமிழ் உள்ளங்கள், இந்தப் பத்து வயது அஷ்ரஃபுக்கும் மனமிரங்கத்தானே வேண்டும்?” என்று கேட்டார்.
அருகிலிருந்த எம்.சி.எம். அமீன் என்பவர், “நானும் சம்பவத்தின்போது இருந்தவன்தான். நாங்கள் அடுத்த ஊருக்குப் போவதென்றால் கூட, மொத்தமாகக் காத்திருந்து ராணுவப் பாதுகாப்போடுதான் போவோம். அப்படி ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்தோம். இன்றுதான் நிம்மதியாக இருக்கிறோம். தமிழர்களும் (ஹிந்துக்கள்), நாங்களும் புட்டு மற்றும் தேங்காய்ப்பூ போலத்தான் இருந்தோம். புட்டு அவிக்கும்போது அந்தக் குழாயில் கொஞ்சம் மாவைத் திணிப்பார்கள். பின்னர் கொஞ்சம் தேங்காய்ப்பூ தூவுவார்கள். பின்னர் மீண்டும் மாவு மீண்டும் தேங்காய்ப்பூ. இப்படித்தானே புட்டு தயாரிப்பார்கள்? அப்படித்தான் நாங்களும் ஹிந்துக்களும் ஒரே தமிழ் மொழி பேசும் சகோதரர்களாக இருந்தோம். புலிகள் வந்த பிறகுதான் இதில் விஷத்தைக் கலந்தார்கள். தங்களை ஆதரிக்காத முஸ்லிம்களையும், பிற தமிழ்த் தலைவர்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். 1986-ல் ஒரு முஸ்லிம் குடும்பத்தை அவர்கள் உயிரோடு எரித்தது முதல் எல்லாம் தலைகீழாகி விட்டது” என்றார்.
அந்தப் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவுக் கல் நிறுவுவதற்குக் கூட, அவர்கள் பல ஆண்டுகளாகப் பயந்தே இருந்திருக்கிறார்கள். இறுதிப் போர் முடிந்து அமைதி திரும்பிய பிறகு, 2010-ல்தான் காத்தாங்குடியில் பலியான 78 பேருக்கும், ஏறாவூரில் பலியான 25 பேருக்குமாய் மொத்தம் 103 பேருக்கு அந்தப் பள்ளிவாசலில் நினைவுக்கல் எழுப்பியிருக்கிறார்கள்.
ஆக, நாங்கள் பார்த்த வரையில் கொழும்பு மற்றும் கண்டி தமிழர்கள் எப்போதும் போரைச் சந்திக்கவில்லை; விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. எனவே, போரின் பாதிப்போ, விடுதலைப் புலிகளின் ஆதரவோ அங்கு காணப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு கட்டம் வரை புலிகள் மீதான ஆதரவும், தமிழ் ஈழ ஆதரவும் தமிழ் மக்களிடம் இருந்துள்ளது. ஆனால், போரின் விளைவுகளாலும், இந்திய அமைதிப்படையின் வருகைக்குப் பிறகும், புலிகள் ஆதரவு அங்கு படிப்படியாகச் சரிந்து, ஈழ கோரிக்கை வலுவிழந்து விட்டது. 2012 தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே தனது தேர்தல் அறிக்கையில், தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது.
போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், முள் வேலி முகாம்கள், பிடிபட்ட புலிகளின் சித்ரவதைக் கூடங்கள், தமிழர்களின் மீள் குடியேற்றம், சிங்கள புது குடியேற்றம், ஹிந்து கோவில்கள் அழிப்பு, புதிய புத்தர் கோவில்கள், ஊர்களின் தமிழ்ப் பெயர் மாற்றங்கள்... என்று பல கடுமையான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிற வடக்கு மாகாணத்தில் பயணம் செய்த நமது நிருபர்களின் அனுபவங்கள் அடுத்த இதழில்..