mercredi 15 avril 2015

மோடியுடன் நேதாஜியின் பேரன் சந்திப்பு ஜெர்மனியில்

ஜெர்மனியில் பிரதமர் மோடியை நேதாஜியின் பேரன் சந்தித்து பேசினார். அப்போது, நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனிக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு தலைநகர் பெர்லினில், ஜெர்மனிக்கான இந்திய தூதர் விஜய் கோகலே விருந்து அளித்தார்.
அதில் பங்கேற்க வருமாறு ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் பேரனும், இந்தோ–ஜெர்மன் சங்க தலைவருமான சூர்ய குமார் போசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவரும் விருந்தில் கலந்து கொண்டார்.
பின்னர், பிரதமர் மோடியை சூர்ய குமார் போஸ் தனியாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து பின்னர் போஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–
நேதாஜியின் குடும்பத்தை நேரு அரசு உளவு பார்த்ததாக வெளியாகி வரும் தகவல்கள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பின்னணியில், நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர், உண்மை வெளிவர வேண்டும் என்று தானும் விரும்புவதால், இப்பிரச்சினையை கவனிப்பதாக உறுதி அளித்தார்.
இந்த பிரச்சினையில், உண்மை வெளிவருவதற்காக, மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட 2 விசாரணை கமிஷன்கள் போலியானவை. மேலும், அகிம்சையால்தான் இந்தியா விடுதலை பெற்றதாக பொய்களை பரப்புவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். நேதாஜியின் பங்கு இல்லாமல், விடுதலை பெற்றிருக்க முடியாது.
இவ்வாறு போஸ் கூறினார்.
முன்னதாக, இந்திய தூதர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:–
10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் வானொலியில் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை இடம்பெற்றது. அப்போது, இந்தியாவில் கூட சமஸ்கிருத செய்தி அறிக்கை கிடையாது. ஒருவேளை, மதச்சார்பின்மை பாதிக்கப்படும் என்று நினைத்து இருக்கலாம்.
ஒரு மொழி காரணமாக, மதச்சார்பின்மை உலுக்கப்படும் அளவுக்கு மதச்சார்பின்மை பலவீனமாக இல்லை. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நமது தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு வாயுவின் அளவு மிகவும் குறைவானது. இருப்பினும், வளர்ந்தநாடுகள் நம்மை திட்டுகின்றன. இயற்கையை பாதுகாப்பது இந்தியர்களின் பாரம்பரியம் ஆகும். பருவநிலையை அழித்தவர்கள், நம்மைப்பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் பதில் சொல்லப் போவதில்லை. ‘நீங்கள்தான் இயற்கையை அழித்தீர்கள்’ என்று அவர்களிடம் சொல்வோம். இருப்பினும், பருவநிலை மாற்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தடுத்த தலைமுறைகளும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார். அப்போது, நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமனின் கையெழுத்து பிரதிகள் மற்றும் படைப்புகளின் மறுபதிப்புகளை மெர்கலுக்கு பரிசளித்தார்.
பின்னர், மெர்கலுடன் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘ஐரோப்பிய கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள ஏஞ்சலா மெர்கலின் உதவியை கோரினேன்’ என்று மோடி கூறினார்.பின்னர், பெர்லின் ரெயில் நிலையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, கனடா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire