இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வருகையை பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்த பின்பும் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அதற்கான முயற்சிகளும் இருப்பதாய் தெரியவில்லை. இறுதிக்கட்ட மோதலின்போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து இதுவரையிலும் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.
வடக்கு மாகாண தேர்தல்கள் நடைபெற்று புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்ட பின்பும் அந்த அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலை நீடிக்கிறது. ராணுவ அணிகாரி ஒருவரே வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நீடிக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப் பரவலுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ள நிலையில், தமிழர்களின் புனர் வாழ்விற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், இந்திய அரசு தன்னுடைய ராஜீய உறவுகள் மற்றும் அழுத்தங்களின் மூலமாகவும், பேச்சுவார்த்தையின் மூலமாகவும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே வருவதை பயன்படுத்தி கூடுதல் நிர்ப்பந்தம் கொடுத்து மத்திய அரசு, இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.