vendredi 16 mai 2014

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள காங்கிரஸ்.பாஜக ஆட்சியமைக்கிறது:

இந்திய நேரம் மாலை 5.00 மணித் தகவல்கள்


நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் எழுவோம் என அறிவித்துள்ளது.

இந்தத் தோல்வி வருத்தத்தை அளிக்கக் கூடியது என்றும் அதற்கான அடிப்படை காரணங்கள் ஆராயப்படும் எனவும் அக்கட்சியின் பேச்சாளர் டாம் வடக்கன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஊடங்கள் மோடிக்கே அதிக முக்கியத்தும் அளித்தன என்றும் பெரு நிறுவனங்களின் ஆதரவும் அவருக்கு இருந்தன என்றும் டாம் வடக்கன் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சி தமது சாதனைகளை மக்களிடம் சரியாக எடுத்துச் செல்லவிலை என்றும் அவர் கூறுகிறார்.
இதனிடையே வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக வெற்றியை பகிர்ந்து கொண்டுள்ளன.
ஹிமாச்சல பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் சாந்த குமார், காங்ரா தொகுதியில் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும், பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் மத்திய அமைச்சர் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலேயும் வென்றுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மும்பை தெற்கில் போட்டியிட்ட முன்னாள் வங்கி உயரதிகாரியான மீரா சன்யால், வடகிழக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான மேதா பட்கர் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

இந்திய நேரம் மாலை 4.00 மணித் தகவல்கள்

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசித் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு வதோதரா தொகுதியை ராஜிநாமா செய்கிறார் என்று அறிவிக்கபட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பாஜக சார்பில் அமித் ஷா போட்டியிடுவார் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார் என பிபிசி ஹிந்தி சேவையின் இணையதளம் கூறுகிறது.
இதனிடையே அடுத்து அமையவுள்ள ஆட்சி குறித்த பேச்சுவார்த்தைகள் பாஜக உயர்மட்டத் தலைவர்களிடையே தொடங்கியுள்ளது.
நாளை சனிக்கிழமை மோடி டில்லி வருகிறார் என்றும் அதையடுத்து அமைச்சரவை பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய நேரம் மாலை 3.30 மணித் தகவல்கள்


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் மோடி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் மோடி ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
கர்நாடகாவில் முன்னாள் முதல்வர்கள் யடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் உட்பட பாஜக கட்சியின் சார்பில் பலர் வென்றுள்ளனர்.

அதேபோல அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், இந்தியாவின் பிரதமராகவும் இருந்த தேவே கௌடா, ஹாஸன் தொகுதியில் அவரது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் வென்றுள்ளார்.
எனினும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி சிக்பல்லாப்பூர் தொகுதியில் தோல்வி.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஒரு முன்னாள் முதல்வர் தரம்சிங், பிடர் தொகுதியில் பின்தங்கியுள்ளார் என்றாலும் மற்றொரு முதல்வரான வீரப்ப மொய்லி சிக்பல்லப்பூரில் வென்றுள்ளார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சபாநாயகர் மீரா குமார் உட்பட பலர் தோல்வியைத் தழுவிவரும் வேளையில், அக்கட்சியின் வேட்பாளரும் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே, குல்பர்கா தொகுதியில் வென்றுள்ளார்.
இன்ஃபோசிஸ் போன்ற பெரு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிட்ட வி பாலகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நந்தன் நிலகேனி போன்றோர் தோல்வியடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் சம அளவில் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.

இந்திய நேரம் மாலை 3 மணி

பாரதிய ஜனதா கட்சி தனியாகவே 279 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 20 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 3 இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

மோடிக்கு, ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த வாழ்த்து

தமிழ் நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
‘இந்த வரலாற்று மிக்க வெற்றிக்கு வாழ்த்துக்கள் மோடி’ என்று அவர் தனது டுவிட்டர் கணக்கிலிருந்து தெரிவித்துள்ளார்.
‘ஆதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு தமிழக முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக ஆதவாளர்களிடையே உற்சாகம் பெருகிவழிகிறது

காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடிக் கிடக்கிறது

இந்திய நேரம் மதியம் 2.30 நிலவரம்

இந்திய அரசியலில் பெரும் மாறுதலைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அக்கட்சியின் தலைவர் அர்விந்த கெஜரிவால் வாரணாசியில் தோல்வியடைந்துள்ளார்.
அதேபோல அக்கட்சியின் ஒரு மூத்த உறுப்பினரான யோகாந்திர யாதவ் குர்காவ்(ன்) தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். அங்கு பாஜகவின் ராவ் இந்தர்ஜித் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாபில் மட்டும் அக்கட்சிக்கு சில இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அந்த மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம்-பாஜக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னணியில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி-பிடிபியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி முன்னணியில் இருக்கிறார்.

இந்திய நேரம் மதியம் 2.15 மணி நிலவரம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரது மகனும் அக்கட்சியின் துணைத் தலவருமான ராகுல் காந்தி அமேதி தொகுதியில் முன்னணியில் உள்ளார்.
பாஜகவின் ஒரு மூத்த தலைவர் அருண் ஜேட்லி அமிர்தசரஸ் தொகுதியில் தோல்வி. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் வெற்றி.
மத்திய அமைச்சர் கபில் சிபல் டில்லியில் சாந்தினி சவுக் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை-சனிக்கிழமை மன்மோகன் சிங் பதவி விலகுவதாகவும் அறிவிப்பு.

இந்திய நேரம் மதியம் 2.00 மணி நிலவரம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல் கே அத்வானி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெற்றி பெற்றுள்ளனர்.
எனினும் மற்றொரு மூத்த தலைவரான அருண் ஜேட்லி அம்ரிதரஸ் தொகுதியில் தோல்வியை எதிர்நோக்குகிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவரும், மூத்த பாஜக தலைவருமான அத்வானி சுமார் ஐந்து லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்ட சுஷ்மா ஸ்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் வி கே சிங் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய நேரம் மதியம் 1.45 நிலவரம்

ஜனதா தளம் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
மாநிலத்திலுள்ள 21 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி அக்கட்சி 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை.
பிஜு ஜனதா தளமும் முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது. பின்னர் 2009 ஆம் ஆண்டுத் தேர்தலில்போது அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்திய நேரம் மதியம் 1.30 நிலவரம்


பிகார் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி 15 க்கும் அதிகமான தொகுதிகளை இழக்கும் அபாயம்.
மோடி பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அக்கட்சியுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது.
அந்த மாநிலத்தில் பாஜக 25 க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெரும் வாய்ப்பு.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக முன்னணி. பத்து தொகுதிகளுக்கும் அதிகான இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்ப்பு.

இந்திய நேரம் பிற்பகல் 1 மணி நிலவரம்


அந்தமான் நிக்கோபார் தீவுத் தொகுதியில் பாஜகவின் பிஷ்னு பண்டா ரே வெற்றி பெறும் வாய்ப்பு.
லட்சத் தீவுகளில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மொஹமது ஃபைசல் முன்னணி.
கோவா மாநிலத்திலுள்ள இரண்டு தொகுதிகளான வடக்கு மற்றும் தெற்கு கோவாவில் பாஜக வெற்றி முகம்.
தெற்கு கோவாவில் நரேந்திர கேசவ் சவாய்கர் ஒரு லட்சத்துக்கும் அதிமான வாக்கு வித்தியாசத்தில் முன்னணி. தெற்கு கோவாவை ஸ்ரீபத் யசோ நாயக் மீண்டும் கைப்பற்றியுள்ளார்.
மேகாலயா மாநிலம் துரா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற சபாநாயகருமான பி ஏ சாங்மா வெற்றி, ஆனால் தலைநகர் ஷில்லாங் தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

மோடி தலைமையில் கூட்டணி ஆட்சியே அமையும்: நிர்மலா சீதாராமன்

நடந்து முடிந்திருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனியாகவே அறுதிப்பெரும்பான்மை கிடைத்தாலும் நரேந்திர மோடி தலைமையில் அமையவிருக்கும் ஆட்சியில் தேர்தலுக்கு முன்னரே அமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாக அதை அமைக்கவே பாஜக தன்னால் இயன்ற அளவு முயலும் என்றும் பாஜகவின் பேச்சாளர் நிர்மலா சீதாராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமையுமா, அதிமுகவை பாஜக கூட்டணி அரசில் சேர்த்துக்கொள்வீர்களா என்கிற கேள்விக்கு அது பற்றி இப்போதைக்கு ஒன்றும் கூறமுடியாது என்றும் அப்படி ஒரு சூழல் உருவானால், அப்போது அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இன்றைய நிலையில் பாஜகவுடன் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்தவர்களை அரவணைத்துச் செல்வதிலேயே பாஜகவின் முதன்மையான கவனம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய நேரம் பகல் 12.45 மணி நிலவரம்

பாஜக பெற்றுள்ள "வெற்றி இந்தியாவின் வெற்றி, நல்ல காலம் காத்திருக்கிறது" என்று பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் எதிர்வுகூறியபடி 30 க்கும் அதிகமான தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
அந்த மாநிலத்தில் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு.
பிகார் மாநிலத் தலைநகர் பாட்னா சாகிப் தொகுதியில் பாஜக வேட்பாளர் சத்ருகன் சின்கா முன்னிலை. சரன் தொகுதியில் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராப்ரி தேவி பின்தங்கியுளார் . ana

இந்திய நேரம் பகல் 12.30 நிலவரம்

நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும், கேரளாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் ஓ ராஜகோபால் வெற்றி பெறும் வாய்ப்பு. எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சசி தரூர் தோல்வியைத் தழுவுகிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக சம நிலையில் இப்போது உள்ளன. இரு கட்சிகளும் தலா பத்து தொகுதிகளில் முன்னிலை.
தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் நரேந்திர மோடி

இந்திய நேரம் பகல் 12 மணி நிலவரம்

வாரணாசி தொகுதியிலும் நரேந்திர மோடி வெற்றி
அஇஅதிமுக தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆட்சி அமைக்க அக்கட்சியின் ஆதரவு தேவையில்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்தில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி அமைக்கிறது.

இந்திய நேரம் காலை 11.30

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் தொகுதியில் பிடிபி வேட்பாளரைவிட குறைவான வாக்குகள் பெற்று பின்னணியில் உள்ளார்.
பாஜகவின் மேனகா காந்தி உத்தர பிரதேம் பிலிபிட் தொகுதியில் முன்னணியில் உள்ளார்.
அமேதியில் ராகுல் காந்தி முன்னணியில் இருப்பதாக தகவல்கள்.

இந்திய நேரம் காலை 11 15 மணி

நரேந்திர மோடி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி.
வாரணாசி தொகுதியிலும் முன்னணியில் இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்கிறது என்று அதன் பேச்சாளர் சத்யவ்ரத் சதுர்வேதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்திய நேரம் காலை 11 மணி

பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது உறுதியாகி வருகிறது.
தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மட்டும் பாஜகவுக்கு 60 இடங்கள் கிடைக்கும் என வந்துகொண்டிருக்கும் தகவல்கள் எதிர்வு கூறுகின்றன.

இந்திய நேரப்படி காலை 10.45 மணி

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தெலுகு தேசம் முன்னணி, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு.
சந்திரபாபு நாயுடு முதல்வராவார் என்று கணிப்புகள்.
உ பி சுசல்தான்பூர் தொகுதியில் பாஜகவின் வருண் காந்தி வெற்றி.
அதே மாநிலம் ஆசம்கர் தொகுதியில் முலாயம்சிங் யாதவ் பின்தங்கியுள்ளார்.

காலை 10.30 மணி

வடகிழக்கு மாநிலமான அசாமில் இதுவரை இல்லாத வகையில் பாஜக 9 தொகுதிகளில் முன்னணி
உத்தர பிரதேசத்தில் 50 க்கும் கூடுதலான தொகுதிகளில் பாஜக முந்துகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பின்தங்கியுள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் பிகார் மாநிலம் சசாரம் தொகுதியில் தோல்வி முகம்

காலை 10.15 மணி

நாட்டின் தலைநகர் டில்லியிலுள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக முன்னணி
பஞ்சாபில் சில இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.
மத்திய அமைச்சர் அஜித் சிங் உத்தர பிரதேசம் பாக்பட் தொகுதியில் தோல்வி

இந்திய நேரம் காலை 10 மணி நிலவரம்:

பாஜக தலைமையிலான கூட்டணி 200 க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணி
காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவு.
பல மத்திய அமைச்சர்கள் பின்தங்குகிறார்கள்

இந்திய நேரம் காலை 9.30 மணி நிலவரம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேசிய அளவில் பாஜக முன்னணி. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சுஷ்மா ஸ்வராஜ முன்னிலை எனினும் அருண் ஜேட்லி பின்தங்குகிறார்.

பாஜக 174 தொகுதிகளிலும், காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் முன்னிலை

Aucun commentaire:

Enregistrer un commentaire