samedi 24 mai 2014

ராஜபக்ஷே வந்தால்,செந்தமிழன் சீமான், தமிழகத்தின் எந்தப் பகுதியை எரிக்கலாம்,அம்மாவுக்கு தூது

வரும் திங்கட்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே வந்தால், தமிழகமே பற்றியெரியும்” என வீர முழக்கமிட்டுள்ள செந்தமிழன் சீமான், தமிழகத்தின் எந்தப் பகுதியை எரிக்கலாம், அல்லது  ஏதாவது ஒரு பகுதியை எரிக்கலாமா என அனுமதி கோரி, அம்மாவுக்கு தூது அனுப்பியுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, சீமானுடன் நெருக்கி விட்ட அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரிடம் ஆள் அனுப்பி, அம்மாவின் மனநிலை எப்படி என்று பல்ஸ் பார்த்து சொல்லும்படி கேட்டுள்ளாராம் சீமான்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே வருகையை தடுப்பதற்காக வைகோ, டில்லியில் முகாமிட்டு பா.ஜ.க. தலைவர்களை நேரில் சந்தித்து லாபி செய்துவரும் செய்திகள், தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் ‘தமிழுணர்வை’ இரண்டாம் இடத்துக்கு தள்ளும் விதத்தில் உள்ளதாக அக் கட்சியினர் கருதுகின்றனர்.
ராஜபக்ஷே விஜய அரசியலில் முழு கிரெடிட்டையும் வைகோ தட்டிச் சென்றுவிட்டால், அது நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவாக அமைந்து விடும் என்பதை அக் கட்சியினர் புரிந்து வைத்துள்ளனர்.
அதற்காக சீமானும் டில்லிக்குப் போய், பா.ஜ.க.  தலைவர்களை சந்திப்பதெல்லாம் சாத்தியமில்லை.
டில்லிக்கு போக செந்தமிழன் ரெடியாக உள்ளார். ஆனால், அங்கே போய் யாரை சந்திப்பது?
பா.ஜ.க.-வின் மூன்றாம் மட்ட தலைவர்களே, “சீமான் கியா ஹை?” என்று கேட்கும் அளவுக்கு அண்ணனின் செல்வாக்கு உள்ளதால், மோடி வீடு உள்ள தெருக்கோடி வரைதான் செந்தமிழனால் போக முடியும்.
அங்கிருந்து கூவினால், கையில் சில்லறைதான் போடுவார்கள்!
இதையடுத்தே, வைகோ போல லாபி செய்யும் டிப்ளமேட்டிக் உத்திகளை விடுத்து, தமக்கு நன்கு பரிச்சயமான “தமிழகமே பற்றியெரியும்” கோஷத்தை முன்னெடுக்கிறார் சீமான்.
அதிலும் ஒரு சிக்கலாக, தமிழகத்தில் ஆளும் கட்சியாக அ.தி.மு.க.-வும், அதன் முதல்வராக ஜெயலலிதாவும்  உள்ளார்கள்.
அண்ணன் தமிழகத்தை பற்றியெரிய வைத்துவிட்டால், சட்டம் ஒழுங்கு குலைகிறது என அம்மாவுக்கு கோபம் வந்தால் என்னாகிறது?
இதையடுத்து அ.தி.மு.க. அமைச்சர் ஒருவருக்கு தூது அனுப்பியுள்ளார், தமிழின வீரவேங்கை.
“திங்கட்கிழமை சென்னையில் ஒப்பாரி, இலங்கை தூதரகத்துக்கு கல்லெறிதல், ராஜபக்ஷே உருவ பொம்மையை சுற்றி கும்மியடித்தல் போன்ற வழமையான சிறப்பு அம்ச போராட்டங்களை நடத்தினால், அம்மா கோவிப்பாரா என கொஞ்சம் பல்ஸ் பார்த்துச் சொல்லுங்க” என சீமானின் தூதர் கேட்டுக் கொண்டதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரிடம் இது தொடர்பாக நாம் கேட்டபோது, “பதவியேற்பு நடப்பதோ டில்லியில், ராஜபக்ஷே வருவதும் டில்லியில்தான். பேசாமல் ‘டில்லியே பற்றி எரியும்’ என அறிவிக்கலாமே. எதற்கு தமிழகத்தில் நின்று துள்ள வேண்டும்?” என்றார் சலிப்புடன்!
விஷயம் புரியாமல் சலித்துக் கொள்கிறாரே இந்த அமைச்சர்…
டில்லியில் தீவிரவாதம் அது இதென்று ஏக பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில் சீமானின் ஆட்கள் அங்கு பீடி கொளுத்த தீப்பெட்டியை தூக்கினாலே, பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.
அண்ணன் டில்லியில் உள்ளே போடப்பட்டால், தமிழகத்தில் தமிழனை காப்பது யார்?
புரிந்து கொள்ளுங்க அ.தி.மு.க. அமைச்சரே.. எப்படியாவது அம்மாவிடம் அனுமதி வாங்கி கொடுங்க!

Aucun commentaire:

Enregistrer un commentaire