samedi 10 mai 2014

தொடர்ந்து வாதங்களில் ஈடுபடுவது அகால மரணத்தை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

H&W discussionவாழ்க்கைத்துணை, நண்பர்கள், உறவினர்கள் போன்றோருடன் தொடர்ந்து வாதங்களில் ஈடுபடுவது நடுத்தர வயதிலேயே மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும் என்று டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆண்கள் மற்றும் வேலையில்லாதோர் இத்தகைய பாதிப்புகளை விரைவில் அடைவார்கள் என்று தொற்றுநோய் மற்றும் சமூக சுகாதார இதழில் வெளியிட்டுள்ள தங்களின் கட்டுரையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெருங்கிய குடும்ப உறவுகளினால் பெறும் கவலைகள், கோரிக்கைகள் போன்றவையும் அதிகளவு மரண ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு தனி நபரின் ஆளுமை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன் போன்றவையும் இந்தக் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கை வகிக்கின்றன. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் குழு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வாதங்கள் ஆண் அல்லது பெண்ணின் அகால மரண வாய்ப்பை சாதாரணமானதை விட இரண்டு அல்லது மூன்று முறை அதிகரிக்கின்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும் இதற்கான காரணங்களை அவர்களால் தெளிவாக விளக்க முடியவில்லை.

இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இத்தகைய வாதங்களை மேற்கொள்வோர் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த சமூக சூழ்நிலைகளும், நண்பர்களின் பரந்த வலைப்பின்னலும் ஒருவரின் சுகாதாரத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஒருவரின் ஆளுமைத்தன்மையும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதுவும் ஆய்வுகளின்மூலம் தெரிவிக்கப்பட்டன.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அழுத்தம் குறித்த உடலியல் விளைவுகளான உயர் ரத்த அழுத்தம், அதிகரிக்கும் இதய நோய் ஆபத்து போன்றவை மரண ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிப்பது ஆண்களுக்கு பாதகமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் டென்மார்க் ஆய்வாளர்களின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
____________________________________________________________________________________________________
வாதம் விவாதம்
- எஸ்.கே

ஏதாவது தமக்கு சம்பந்த மில்லாத பிரச்னைகள் பற்றி ஓயாமல் விவாதம் செய்து கொண்டு பொழுதையும் வீணடித்து, வம்பையும் விலைக்கு வாங்கி வருவோர் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். ரயில் பிரயாணங்களிலும், வேறு பல பொது இடங்களிலும் பலர் இந்த வெட்டி வாதங்களில் ஈடுபட்டு கசப்பான விளைவுகளைச் சந்திக்கின்றனர். ஒரு பழைய திரைப்படத்தில் இரு சமையல்காரர்கள், "பாகவதரா, சின்னப்பாவா" என்று தீவிரமாக வாதம் செய்து, பேச்சு முற்றிப் போய் கடைசியில் அவர்களில் ஒருவர் தன் கையில் இருக்கும் பெரிய சட்டுவத்தால் மற்றவரின் தலை மேல் அடித்துக் கொன்று விட்டார். இந்த விவாதப் பேய் உங்களை உணர்ச்சி வசப்பட வைத்து, சிந்தனை செய்து முடிவெடுக்கும் திறனை மழுங்கடித்து, தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். இதனால்தான் பல சிகை அலங்கார நிலையங்களில், "இங்கு அரசியல் பேசாதீர்கள்" என்று போர்டு வைத்திருக்கிறார்கள்!

ஒருவர் தன் மனதில் ஒரு தீர்மானமான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்தால் அதனை எப்பாடு பட்டாவது நிலை நாட்டத்தான் பார்ப்பார். எவ்வளவு செய்திகளையும், காரணங்களையும் முன் வைத்து மணிக்கணக்காக விவாதம் செய்தாலும், அவர் தன் நிலையிலிருந்து மாறப் போவதில்லை. கடைசியில் கசப்பு உணர்வு தான் மிஞ்சும். பின் ஏன் இந்த வீண் விவாதம்?

இந்த விஷயத்தில் உளவியல் சார்ந்த உண்மை ஒன்று உள்ளது. ஒருவர் தன் மனத்தளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே (தற்குறிப்பேற்றி) உருவகப் படுத்திக் கொள்கிறார் (Personification). அதனால் அந்த விவாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து வாதாடினால், அவர் தன்னையே எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சி வசப்படுவார். அதில் அவருடைய ஈகோ உணர்ச்சிகள் எழுச்சியுருவதால், சம நோக்கில் எந்த விதமான வாதங்களையும் மனதில் வாங்கி சீர்தூக்கும் மன நிலையை இழந்து விடுவார். ஆகையால் தான் பெரியோர்கள் வாதப் பிரதி வாதங்களை தவிருங்கள் என்ற அறிவுறையை நமக்கு போதிக்கிறார்கள்.

    வாதத்தில் வென்றாரே தோற்றார் ஏனெனில்
    அதில் விஞ்சிய மனக்கசப்பைக் காண்.

என்கிறார் ஒரு மனத்தத்துவ அறிஞர்.

ஒருவர் அவர்தம் எண்ண ஓட்டத்துக்கு விரோதமாக, அவருடைய ஒப்புமை யில்லாமல், உரத்து (அடித்து, தடித்து) உரைக்கப் பட்டு அல்லது வேறுவகை மேலாண்மை காரணங்களால் ஒருவகை வாதத்தினை ஒத்துக் கொள்ள வைக்கப் பட்டாலும், தன் வாழ்நாள் முழுவதும், அவர் தன் நிலைப்பாடே முழுவதும் சரி. அநியாயமாக சூழ்நிலைக் கட்டாயத்தால் தான் மாற்றுக் கருத்தை ஒத்துக் கொள்ள வைக்கப் பட்டதாகவே நம்புவார். அவர் மனம் என்றாவது தான் கொண்ட நிலையே சரியானது என்பதை மெய்ப்பிக்க முடியுமா என்று, அத்தகைய வாய்ப்புக்காகக் காத்திருப்பர். (A man convinced against his will, is of the same view still!). ஒரு கனவன், தன் மனையை இவ்வாறு அடக்கி, அவள் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ள வைத்தானாகில், என்றாவது ஒரு நாள், அவன் வாதம்தான் தவறு என்பதை சுட்டிக் காட்டாமல் விடமாட்டாள் என்பது திண்ணம்!

சில நேரங்களில் ஏதாவது பொருள் பறறிய விவாதங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது ஆக்க பூர்வமான வாதமாக இருத்தல் வேண்டும். அவை "debate" என்கிற வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமே யல்லாது "argument"-ஆக அமையக்கூடாது. தன் கருத்துக்களை எடுத்துரைக்கும் போது உணர்ச்சி வசப்படாமல், fact-களை முன் வைக்கவேண்டும் - உங்கள் தீர்மானம், நம்பிக்கை, அயிப்பிராயம் இவைகளை அல்ல! தக்க எதிர்வினைகள் அகப்பட வில்லையென்பதற்காக தனி நபர் வசைபாடலில் ஈடுபடக் கூடாது. மேலும், அந்த விவாதம், எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி இருக்கவேண்டுமே யல்லாமல், அதில் ஈடுபடும் தனிநபர் பற்றியதாக இருக்கக் கூடாது. "Argumentum ad hominem" என்பதைத் தவிர்த்தால் நலம்!

நம் குடும்பத்திலோ, அல்லது நண்பர்களுடனோ ஒரு சாதாரண உரையாடல், பேச்சு தடித்தனால் கடும் விவாதமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டால், அதில் ஒருவர் சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு வெளியேறுதல் நலம். அல்லது ஏதாவது ஜோக் அடித்து நிலைமையை லேஸாக ஆக்குதல் வேண்டும். மனங்கள் முறுக்கிக் கொண்டு நிற்றலை தவிர்க்க வேண்டும்.

பல குடும்பங்களில் தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாதம் செய்து கொண்டே இருப்பர். பேரன், பேத்தி எடுத்த பிறகும் கூட ஓயாமல், தான் செய்தது தான் சரி என்று இருவரும் வாதிட்டுக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதிலும், பிறந்த வீடு, புகுந்த வீடு மேட்டரில் விவாதம் ஓயவே ஒயாது!

அவ்வாறு நெருங்கிய உறவுக்குள் ஏற்படும் விவாதங்களை சரியான அணுகு முறையால் சமச் சீரான முடிவுக்கு கொண்டு வரவில்லையெனில் உறவுகள் நாடைவில் முறிந்து விட ஏதுவாகும். சில சமயம் உடல் நிலை, மன அழற்சி, வேறிடத்தின்பால் கொண்ட கோபம் போன்ற காரணங்களால் பேச்சு தடிக்கும். அப்போது சரியான காரணத்தை உணர்ந்து மற்றவர் தணிந்து போதல் வேண்டும்.

எப்போதுமே ஒருவரிடம் வாதம் புரியும்போது எதிராளிக்கு ஒரு கௌரவமான வெளியேரல் வாய்ப்பினைத் (honourable exit) திறந்தே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் நல்லெண்ணம் வெளிப்பட்டு, நீங்கள் மெய்ப்பிக்க விரும்பும் கருத்து ஏற்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இப்போது இண்டெர்நெட் என்கிற அகண்ட, பரந்த விரிந்த வலையுலகத்தில் மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் மடலாடற்குழுமங்கள், சர்ச்சை மன்றங்கள், வலைப்பூக்களின் கருத்துப் பெட்டிகள், வலை இதழ்கள் முதலியவை கூட இந்த விவாதம் செய்யும் உந்துதல் நோய்க்கு நிறைய தீனி போடுகின்றன. சில புகழ் பெற்ற இதழ்ப் பக்கங்களில் பலர் ஒரே பொருளைப் பற்றி "மாங்கு மாங்கெ"ன்று முடிவில்லாமல் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில Bulletin Board-களில் உள்ளே சென்றாலே கலாய்த்து விரட்டி விடுவார்கள். இதை flaming என்று சொல்வார்கள். எதாவது மென்பொருள் சார்ந்த மன்றங்களில் சென்று ஒரு சந்தேகம் கேட்டால், உடனே ஒரு பிரஹஸ்பதி வந்து "RTFM" (Read The F@#$n Manual) என்று பதில் போடுவார். அவ்வளவுதான், சண்டை சூடு பிடித்துவிடும். சில சிறப்புத் துறைகள் சார்ந்த குழுமங்களில் கூட இத்தகைய வெட்டி சண்டைகள் பல நிகழ்கின்றன. உதாரணமாக IRFCA என்கிற இரெயில்வே பற்றிய குழுவில்கூட டீசல் நல்லதா, மின்சார traction சிறந்ததா என்ற சண்டை வருடக்கணக்காக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது!

டாக்டர்கள் பற்றி ஒரு ஜோக் உண்டு. டாக்டர் பில்லை கூடப்போட்டு விட்டார் என்று வாதம் செய்யாதீர்கள். ஏனென்றால் அவர் குறைத்துப் போட்டிருந்தால்தான் நீங்கள் கவலைப் பட வேண்டும் - உங்கள் கிட்னியில் ஒன்று குறைந்திருக்க வாய்ப்புண்டு என்பதால்!

வாதங்களைத் தவிருங்கள். தவிர்க்க இயலாவிட்டால், மற்றவருக்கு இடம் கொடுத்து அவருடைய வாதத்தையும் தடுக்காமல் கேட்டு, பெருந்தன்மையுடன் அணுகுங்கள். முக்கியமாக, நம் கருத்தை - அது எவ்வளவுதான் உண்மை மற்றும் பொருள் செறிந்ததாக இருந்தாலும், ஏனையொர் முழு மனத்துடன் (முழுவதையும்) எற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனெனில் அது இயற்கைக்கு எதிரான நிகழ்ச்சி! அவரவர்க்கு தான் சொல்வதுதான் பெரிது. அவரவர் வழியே சிறிது சென்றுதான் அவர்களை நம் வழிக்கு திருப்ப முயற்சிக்க வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire