jeudi 22 mai 2014

மோடி பிரதமராவதற்கு முன்பே வைகோ மூலம் தமது முதலாவது சவாலை சந்திக்கவுள்ளார்.

மத்தியில் புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள பா.ஜ.க. அரசு, தமது முதலாவது மாபெரும் இக்கட்டான நிலையை தமிழகத்தில் இருந்துதான் சந்திக்க வேண்டும் என விதி இருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?
நரேந்திர மோடி, பிரதமராவதற்கு முன்பே, தமிழகத்தில் இருந்து வைகோ மூலம் தமது முதலாவது சவாலை சந்திக்கவுள்ளார்.
நாட்டின் 15-வது பிரதமராக பா.ஜ.க.வின் நரேந்திர மோடி, வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக உள்ள நிலையிலும், தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு  புறக்கணிக்கிறார், வைகோ.
மோடி பதவியேற்பில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் ஜனாதிபதி கர்சாய், ஆகியோருடன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளது, ம.தி.மு.க. வட்டாரங்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
“இந்த தேர்தலில் பா.ஜ.க. பெரு வெற்றிபெற உதவிய கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.-விடம், பதவியேற்பு விழாவுக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என ஆலோசனை நடத்தாமல், டில்லியில் உள்ளவர்கள் எப்படி ராஜபக்ஷேவை அழைக்கும் முடிவை எடுக்கலாம்”  என ஆவேச கேள்விக்கணை தொடுத்தார், ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர்.
“கடந்த தடவை  ராஜபக்ஷே மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வந்தபோது சாஞ்சிக்கே போய், ராஜபக்ஷேவுக்கு எதிராக கொடிபிடித்த தீரர் வைகோ மட்டுமே. சாஞ்சிக்கு வந்த ராஜபக்ஷேவையே கதிகலங்க வைத்த வைகோ, ராஜபக்ஷே தலைநகரில் கால் வைப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்து விடுவாரா? டில்லி விமான நிலையத்திலேயே மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்றும் தெரிவித்தார் அந்த ம.தி.மு.க. பிரமுகர்.
சாஞ்சிக்கு பஸ்ஸில் வைகோ புறப்பட்ட காட்சி
சாஞ்சிக்கு பஸ்ஸில் வைகோ புறப்பட்ட காட்சி
மத்திய பிரதேசத்துக்கு ராஜபக்ஷேவை அழைத்ததுகூட, அங்குள்ள பா.ஜ.க. மாநில அரசுதான்.
அப்படியிருந்தும் நூற்றுக்கணக்கான கி.மீ. பஸ்ஸில் பயணம் செய்து, ராஜபக்ஷேவுக்கு தமது எதிர்ப்பை இங்கு அழுத்தமாக பதிவு செய்து, தமிழரை தலைநிமிர வைத்தவர் வைகோ.
டில்லி சற்று தொலைவில் உள்ளதால், பஸ்ஸில் போவது அவ்வளவாக சாத்தியமில்லை என்ற போதிலும், ரயிலிலோ, விமானத்திலோ, ம.தி.மு.க. தொண்டர்களை திரட்டிக்கொண்டு வைகோ கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ம.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை பார்த்தால், டில்லி போராட்டத்துக்கான அறிவிப்பு,  இன்றோ, நாளையோ ம.தி.மு.க. தலைமையகத்தால் வெளியிடப்படலாம் என ஊகிக்க முடிகிறது.
மொத்தத்தில், புதிய அரசின் பதவியேற்பு அன்று, தலைநகரில் கருப்புக்கொடி காட்டி சரித்திரத்தில் இடம்பெறவுள்ளது, ம.தி.மு.க.
தமிழகம் இப்படி கொந்தளித்துக் கொண்டு இருக்கும்போது, டில்லியில் என்ன நடக்கிறது?
பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்ஷே உறுதி தெரிவித்து உள்ளதால்,  மிகுந்த இக்கட்டுக்கு ஆளாகியுள்ளது, புதிய பா.ஜ.க. அரசு. இதனால், புதிய அரசு உடனடியாக கவிழும் அபாயம் இல்லை என்பதே அவர்களுக்குள்ள ஒரே ஆறுதல்.
ம.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் நாம் தொடர்பு கொண்டபோது, “இலங்கை ஜனாதிபதிக்கு விடுத்துள்ள அழைப்பை, உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நட்பு ரீதியில் வைகோ வேண்டுகோள் விடுப்பார். டில்லி அதற்கு சம்மதிக்கவில்லை என்றால், அதன்பின் நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகிக்கொள்ளும் என்று மிரட்டல் விடுக்கவும் வைகோ தயங்க மாட்டார்” என்றார், அந்த ம.தி.மு.க. பிரமுகர்.                                                                     ராஜீவ் காந்திக்கு மோடி நினைவஞ்சலி
பாராளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் காங்கிரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே வார்த்தை யுத்தங்கள் நடைபெற்றன. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாளான நேற்று, அவருக்கு நரேந்திர மோடி நினைவஞ்சலி செலுத்தினார். இது குறித்து நரேந்திர மோடி 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் அன்னாருக்கு எனது நினைவஞ்சலி" என குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire