vendredi 8 juin 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை ரிஷி 01

மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம்.
இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத் தொடர் தொடங்குகின்றது. இந்திய நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்தலுக்காகத் திகதி குறிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் ஆழ்ந்திருந்த காலம். ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற வேகத்துடன் தலைவர்கள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
மற்றய தினங்களைவிட அன்றைய இரவு சென்னை விமான நிலையம் அதிக பரபரப்பாகக் காணப்பட்டது. காரணம் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அவர்களுடைய நட்சத்திர வேட்பாளருமான ராஜிவ் காந்தி அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பரபரப்பான விமான நிலையத்தில் காத்திருந்த இரு எதிரிகள்!

சென்னை விமான நிலையமே ஏதோ காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்ட மைதானம் போலக் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக முக்கிய தலைவர்கள் முதல் கிராமப் பக்கத்துக் குட்டிக் காங்கிரஸ் தலைவர்கள்வரை அனைவரின் தலைகளும் அங்கே தென்பட்டன. கட்சியின் தலைவர் வந்திறங்கும் நேரத்தில் அங்கே தலையைக் காட்டாவிட்டால் நாளைக்கே கட்சிக்குள் சிக்கலாகி விடுமல்லவா?
அங்கு 70 வயதைக் கடந்த மரகதம் சந்திரசேகர் காத்துக்கொண்டிருந்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அது மாத்திரமல்ல, அப்போது நடைபெறவிருந்த தேர்தலில் அவர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர். தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக ராஜிவ்காந்தி பேசவிருந்த இடங்களில் ஸ்ரீபெரும்புதூரும் ஒன்று.
மரகதம் சந்திரசேகருக்கு தமிழக காங்கிரஸ் அளவில் செல்வாக்குக் கொஞ்சம் அப்படியிப்படி இருந்தாலும் புதுடில்லி தலைமை மட்டத்தில் செல்வாக்கு அதிகம். காரணம் என்னவென்றால் ராஜிவ்காந்தியின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக இருந்தவர் மரகதம் சந்திரசேகர். இதனால் ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தியுடனும் நன்கு பரிச்சயமானவர்.
இந்தச் செல்வாக்கில்தான் அவருக்கு அந்தத் தள்ளாத வயதிலும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கட் கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு இருந்த முக்கியத்துவம் காரணமாகவே தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் இறுதிக் கட்டமாக அவரது தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறி அவருக்காகப் பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டிருந்தார் ராஜிவ் காந்தி.
இன்று 20 ஆண்டுகளின்பின் விறுவிறுப்பு.கொம் இணையத்தளத்தில் இந்தத் தொடரைப் படிக்கத் தொடங்கியுள்ள உங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயம் அன்று மரகதம் சந்திரசேகருக்கோ, ராஜிவ் காந்திக்கோ தெரிந்திருக்கவில்லை. கொஞ்சம் வில்லங்கமான அந்த விஷயம், அன்றிரவு ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறுமுன் ராஜிவ் காந்தி ஒரு மனித வெடிகுண்டால் கொல்லப்படப்போகின்றார்!

வாழப்பாடி ராமமூர்த்தியும் கருப்பையா மூப்பனாரும்
விமான நிலையத்தில் மரகதம் சந்திரசேகருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இரு பிரதான தலைவர்களான வாழப்பாடி ராமமூர்த்தி, ஜி.கே. மூப்பனார் (இருவருமே தற்போது உயிருடன் இல்லை) ஆகியோரும் காத்திருந்தனர். இந்த இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் கட்சிக்குள் இரு வெவ்வேறு (எதிரெதிர்) கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கட்சிக்குள் எதிரிகள்!
இது நடைபெற்ற காலப்பகுதியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளால் பிளவுபட்டிருந்தது (இன்றும் நிலைமையில் மாற்றமில்லை. கோஷ்டித் தலைவர்கள்தான் வேறு). அன்று தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி கோஷ்டி, ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவித்தது. ஆனால், மூப்பனார் கோஷ்டி கூட்டணி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும் யோசனையைக் கடுமையாக எதிர்த்தது.
இருந்தபோதும் டில்லியிலுள்ள காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தது.
கூட்டணி அமைந்தபின் தங்களுக்குள் அடிபட்டு என்ன செய்வது? இதனால் இரு கோஷ்டிகளும் தேர்தலை முன்னிட்டு ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டிருந்தன. இதனால் இரு கோஷ்டியினரும் அவற்றின் தலைவர்களும் அன்று ஒரே நேரத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர் (வழமையாக இவர் வரும் இடத்தில் அல்லது நேரத்தில் அவர் தலையைக் காட்ட மாட்டார்!)

அன்றிரவு சென்னைக்கு ராஜிவ் காந்தி வரவேண்டிய பின்னணி என்ன?

அதைத் தெரிந்துகொள்ளக் கொஞ்சம் பழைய கதையைச் சொல்வது அவசியமாகின்றது. இந்தத் தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை. ஆட்சி அதிகாரம் எல்லாமே காமராஜர் காலத்துடன் கைமாறி திராவிடக் கட்சிகளிடம் சென்றிருந்தன.
தி.மு.க.வில் அண்ணாத்துரையிடம் ஆட்சி சென்று… அவரது மறைவின்பின் கருணாநிதியிடம் ஆட்சி சென்று… இடையே அன்றைய நடிகரான எம்.ஜி.ஆர். திடீரெனத் தொடங்கிய கட்சியிடம் ஆட்சி கைமாறி… தான் இறக்கும்வரை முதல்வராகவே இருந்துவிட்டுச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வைக் கைப்பற்றியிருந்தார் ஜெயலலிதா.
இதெல்லாம் நடைபெற்ற காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றியே நினைத்துக்கூடப் பார்க்க முடிந்திருக்கவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்துக்கொண்டு அவற்றின் தயவில் தமிழகத்தில் அரசியலில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி.
நாங்கள் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற ஒரு கனவு அன்றுமுதல் இன்றுவரை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அதற்கான ஒரு சோதனைக் களமாக (எம்.ஜி.ஆர் இறந்த பிறகு) 1988 89-ல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், படுதோல்வியைச் சந்தித்தது.
அதற்குப்பின் தனித்துப் பலப்பரீட்சை செய்வது என்ற விபரீத விளையாட்டில் இறங்கவில்லை காங்கிரஸ்.
இப்படியான சூழ்நிலையில்தான் இந்தத் தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தது காங்கிரஸ். புதிய கூட்டணியும், தேர்தல் பிரச்சாரத்துக்காக ராஜிவ்காந்தியின் தமிழக வருகையும் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று ஊடகங்களால் பரவலாக எழுதப்பட்டது.

தமிழ்நாட்டில் போடப்பட்ட இரு தலைகீழ் கணக்குகள்

ஜெயலலிதாவுடனான கூட்டணிக்கு ஆதரவாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஒருவிதமாக கணக்குப் போட்டிருந்தார். ஜெயலலிதாவுடனான கூட்டணிக்கு எதிரான கருப்பையா மூப்பனார் அதற்குத் தலைகீழான கணக்கைப் போட்டிருந்தார்.

“சென்னைக்கு வந்துபோனால் ஓட்டு விழுவது நிச்சயம்”
தங்கள் கூட்டணி நிச்சயம் வெல்லும் என்ற நிலையில், ராஜிவ்காந்தி தமிழகம் வரத் தேவையில்லை என்று கூறினார் வாழப்பாடி. அதாவது தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது… காங்கிரஸ் ஜெயிக்க அதுவே போதும் என்று நிரூபிக்க விரும்பினார் அவர்.
வா.ரா. அப்படிச் சொன்னால் சும்மா விட்டுவிடுவாரா க.மூ?
ராஜிவ் காந்தி பிரச்சாரத்துக்கு வந்தால்தான் கூட்டணி ஜெயிக்க முடியும் என்று வெளிப்படையாகவே கூறினார் அவர். கூட்டணி ஜெயிக்கத்தான் போகிறது. அந்த வெற்றி அ.தி.மு.க.வால் கிடைத்ததாக இல்லாமல் ராஜிவ் காந்தியின் பிரச்சாரத்தால் கிடைத்ததாக இருக்கட்டுமே என்பது அவரது நிலைப்பாடு.
இதற்கிடையே மரகதம் சந்திரசேகரும் ராஜிவ் காந்தி தமிழகம் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ராஜிவ் காந்தி தமிழகம் வந்து ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறி அவருக்காகப் பிரச்சாரம் செய்தால் தான் சுலபமாக ஜெயித்து விடலாம் என்பது அவரது கோணம். இதுதான் ராஜிவ் காந்தியின் அன்றைய தமிழக வருகைக்கான அரசியல் பின்னணி.

பாதுகாப்பு வளையம் (சில ஓட்டைகளுடன்)

விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குச் சற்று தொலைவில் மாநில பொலிசாரின் சிறப்புப் பிரிவு பொலிசார் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைவிட சிவில் உடையில் மாநில உளவுப் பிரிவினரும் (கியூ பிரான்ச்) மத்திய உளவுப் பிரிவினரும் கட்சிக்காரர்களுடன் கட்சிக்காரர்களாகக் கலந்துபோய் நின்றிருந்தனர்.
ராஜிவ்காந்தி அப்போது பிரதமராக இல்லாதபோதிலும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் இலக்கில் அவர் இருந்ததால் உயர்நிலைப்பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் விடுதலைப் புலிகளின் தாக்குதல் இலக்கில் ராஜிவ் காந்தி இருப்பதாக அப்போது இந்திய உளவு அமைப்புகள் பெரிதாகக் கருதியிருக்கவில்லை.
இந்தியாவுக்குள் இருந்த காஷ்மீர் தீவிரவாதிகள் போன்ற அமைப்பினரின் தாக்குதல் இலக்கில் ராஜிவ் காந்தி இருப்பதாகவே அப்போது இந்திய உளவு அமைப்புகள் கருதியிருந்தன.

எங்கிருந்து சென்னைக்கு வந்தார் ராஜிவ்?

ராஜிவ் காந்தி அன்றிரவு சென்னை விமான நிலையத்துக்கு வருவது டில்லியிலிருந்து நேரடியாக வருவதாகத் திட்டமிடப்பட்டிருக்கவில்லை. காரணம் அவர் ஏற்கனவே நாடுதழுவிய தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியிருந்தார். தமிழகத்துக்கு வருவதற்குமுன் அருகிலுள்ள ஆந்திர மாநிலத்தில் அவரது பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கே விசாகப்பட்டினத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிவிட்டுத் தமிழகம் வருவதாகவே ஏற்பாடு.
இதனால் சென்னை விமான நிலையத்துக்கு ராஜிவ்காந்தியை ஏற்றிவரும் விமானம் விசாகப்பட்டினத்தில் இருந்தே வரவேண்டியிருந்தது. ராஜிவ் காந்தி டில்லியிலிருந்து நேரடியாகச் சென்னைக்கு வந்ததாகச் சில ஊடகங்கள் குழப்பியிருந்தன. அது தவறான தகவல்.
சென்னை விமான நிலையத்தில் 21ம் திகதி இரவு ராஜிவ் காந்தியை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு முதல் தினமே (20ம் திகதி) அவர் டில்லியிலிருந்து புறப்பட்டு விட்டிருந்தார். அவர் பயணித்தது வழமையாக டில்லியிருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் விமானமல்ல. காங்கிரஸ் கட்சி சார்பில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த தில்லி விமானப்பயிற்சி கிளப்பின் விமானத்தில்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று வந்துகொண்டிருந்தார் அவர்.
20ம் திகதி டில்லியிலிருந்து அந்த விமானத்தில் புறப்பட்டு, அங்கிருந்து முதலில் ஒரிசா மாநிலம் சென்றபின், ஆந்திராவுக்குச் சென்று, தமிழ்நாடு வந்து, அங்கிருந்து கர்நாடகா சென்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு 22ம் திகதி டில்லி திரும்ப வேண்டும் என்பதே ராஜிவ்காந்தியின் பயணத் திட்டம். அதுவரை அந்த விமானமும் அவருடனேயே இருக்குமாறு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
21ம் திகதி சென்னைக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து ராஜிவ்காந்தியின் விமானம் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களில் அவரது தனிப் பாதுகாப்பு அதிகாரியும் ஒருவர்.

தனிப் பாதுகாப்பு அதிகாரியின் கைத் துப்பாக்கி

ராஜிவ் காந்தியின் பாதுகாப்புக்காக அவருடன் ஒரு தனிப் பாதுகாப்பு அதிகாரியும் அவர் செல்லுமிடமெல்லாம் கூடவே செல்லுமாறு அவரது பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தந்த மாநிலங்களில் கொடுக்கப்படும் விசேட பாதுகாப்புகளைவிட மேலதிகமாக இந்தத் தனிப் பாதுகாப்பு அதிகாரி செயற்படுவார். அவரிடம் ஒரேயொரு கைத் துப்பாக்கி மாத்திரமே இருக்கும்.
இங்குள்ள மற்றொரு விஷயம் இந்தத் தனிப் பாதுகாப்பு அதிகாரி எப்போதும் ஒரே நபரல்ல. பாதுகாப்பு அதிகாரி மாறிக்கொண்டே இருப்பார்.
டில்லியிலிருந்து ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு ராஜிவ்காந்தி சென்றபோது உடன் சென்றிருந்த பாதுகாப்பு அதிகாரியின் பெயர் ஒ.பி. சாகர். ராஜிவ் காந்தி ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்திறங்கியவுடன் இந்த அதிகாரி பாதுகாப்புப் பொறுப்பை மற்றொரு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார்.
புதிய அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பதில் ஓ.பி. சாகர் தன்னிடமுள்ள கைத் துப்பாக்கியைப் புதிய பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைப்பது என்பதும் அடங்கியுள்ளது. அதாவது ராஜிவ் காந்திக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நேரத்தில்தான் குறிப்பிட்ட அதிகாரியிடம் ஆயுதம் இருக்கும். பாதுகாப்புக் கடமை முடிந்த பின்னரோ அல்லது கடமை ஆரம்பிக்கும் முன்னரோ ஆயுதம் இருக்காது.

சென்னை பழைய விமான நிலையம் (அன்றைய தோற்றம்)
இதை ஏன் விலாவாரியாகச் சொல்கிறோமென்றால் 21ம் திகதி இரவு சென்னை வந்திறங்கிய ராஜிவ் காந்தியை வரவேற்ற புதிய பாதுகாப்பு அதிகாரி தனது கைத் துப்பாக்கி இல்லாத நிலையில்தான் அவருடன் செல்லப் போகின்றார். இதுதான் இந்தியத் தரப்பில் நடைபெற்ற பாதுகாப்புக் குளறுபடி நம்பர் 1.

இது எப்படி நடந்தது?

ராஜிவ் காந்தி சென்னைக்கு வருமுன் ஒரிசா மாநிலத்துக்குச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தோம். ஒரிசா மாநிலத்தில் புபனேஸ்ர் நகரில் (ஒரிசாவின் தலைநகரம்) தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசியிருந்தார். அங்கிருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் சென்று அங்கும் பொதுக்கூட்டங்களில் பேசினார்.
விசாகப்பட்டினத்தில் இறுதிப் பொதுக்கூட்டத்தில் ராஜிவ் பேசி முடிந்தவுடன் அவரும் அவரது குழுவினரும் விசாகப்பட்டினம் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர். அங்குதான் ராஜிவ் குழுவினரை ஏற்றிவந்த தனியார் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாமே திட்டமிட்டபடி நடந்தன.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தை அடைந்தபோது அவரை ஏற்றிச் செல்லவேண்டிய விமானமும் புறப்படத் தயாராக இருந்தது. விமானிகளும் தயாராக இருந்தனர். விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ராஜிவ் வந்த தனி விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது விமான நிலையத்தின் சாதாரண பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை.
பொதுவாக வி.ஐ.பி. பாதுகாப்பு கொடுக்கப்படும்போது சம்மந்தப்பட்ட வி.ஐ.பி. பயணிக்கும் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திலும் அதைச்சுற்றி பாதுகாப்புப் படையினரை நிறுத்திப் பாதுகாப்புக் கொடுப்பது வழக்கம். அதேபோல விமானத்தைச் செலுத்தும் விமானிகளும் ஒருவித கண்காணிப்பு வளையத்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வெளியே சென்றுவரலாம். ஆனால் கண்காணிப்பு இருக்கும்.
விமான நிலையத்தில் தரித்து நிற்கும் நேரத்தில் அந்த விமானத்துக்குள் யாராவது ஏறி வெடிகுண்டு வைத்துவிடலாம் அல்லது விமானத்தின் என்ஜின்களில் குளறுபடி செய்துவிடலாம் என்பதற்காகவே இந்த நடைமுறை.

திடீரென விமானத்தில் கோளாறு!

இந்தக் காலப்பகுதியில் ராஜிவ் காந்தி பதவியில் இல்லாதிருந்த காரணத்தாலோ என்னவோ அப்படியான விசேட பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இதுவும் கொலை நடந்தபின் புலனாய்வாளர்களுக்குச் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது. காரணம் டில்லியிலிருந்து புபனேஸ்வருக்கும் அங்கிருந்து விசாகப்பட்டினத்துக்கும் எதுவிதக் கோளாறுமின்றி வந்திருந்த விமானம் சென்னைக்குப் புறப்படுமுன் பறக்க முடியாதபடி கோளாறு இருப்பதாக விமானிகளால் அறிவிக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி விமானத்தில் ஏறி அமரும்வரை விமானத்திலிருந்த கோளாறு கண்டுபிடிக்கப்படவில்லை. ராஜிவ்வும் அவரது குழுவினரும் ஏறி அமர்ந்து விமானம் புறப்படத் தயாரானபோதுதான் விமானத்தின் என்ஜின் இயங்குவது நிறுத்தப்பட்டு விமானத்தில் கோளாறு இருப்பதாக ராஜிவ்வுக்குச் சொல்லப்பட்டது.
ராஜிவ் காந்தியே ஒரு முன்னாள் எயார் இந்தியா விமானியாக இருந்தவர். இதனால் விமானத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகள் பற்றிய அறிவு அவருக்கு இருந்தது.
குறிப்பிட்ட இந்த விமானத்தைச் செலுத்திய பிரதான விமானியின் பெயர் சந்தோக். அவர் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை என்பதால் பறக்க முடியாது எனத் தெரிவித்தார். இதையடுத்து ராஜிவ் காந்தி தானே நேரடியாக விமானத்தின் கொக்பிட்டுக்குச் சென்று அதன் சாதனங்களைப் பழுதுபார்க்க முயன்றார். ஆனால் அவராலும் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனத்தைச் சரிசெய்ய முடியவில்லை.
இதையடுத்து ராஜிவ் காந்தி அன்றிரவு விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்படியே நடந்திருந்தால் அன்றிரவு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களில் ராஜிவ் காந்தி கலந்துகொண்டிருக்க முடிந்திராது. அன்றிரவு அவர் கொல்லப்பட்டிருக்கவும் முடியாது!
ராஜிவ் காந்தி அன்றிரவு தங்குவதற்காக அரசு சுற்றுலா விடுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரையும் அவரது குழுவினரையும் ஏற்றிக்கொண்டு சுமார் 10 வாகனங்கள் அரசு சுற்றுலா விடுதியை நோக்கிப் புறப்பட்டன. ராஜிவ் காந்திக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக கைத்துப்பாக்கி சகிதம் இருந்த மெய்ப்பாதுகாவலர் அதிகாரியும் ராஜிவ் காந்தியுடன் சுற்றுலா விடுதியை நோக்கிப் புறப்பட்டார்.
இந்த மெய்ப்பாதுகாவலர் அதிகாரியின் பெயர் சாகர்.

அதே காரில் சாகர் ஏன் செல்லவில்லை?

இங்குள்ள முக்கிய விஷயம் என்ன தெரியுமா? ராஜில் காந்தி சென்ற வாகனத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் சாகர் ஏற்றப்படவில்லை. அந்த வாகனத் தொடரணியின் தொடக்கத்தில் சென்ற வாகனம் ஒன்றில் சாகர் ஏற்றிச் செல்லப்பட்டார். ராஜிவ் காந்தி சென்ற வாகனம் வாகனத் தொடரணியின் நடுப்பகுதியில் சென்றது.
இந்த வாகனத் தொடரணி விசாகப்பட்டினம் வவீதிகளில் சுற்றுலா விடுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விமான நிலையத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு நடந்தது. அங்கிருந்த விமானப் பொறியாளர்கள் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனக் கோளாறைச் சரி செய்துவிட்டனர். விமானியும் அதை இயக்கிப் பார்த்து சரியாக வேலை செய்வதாக கிளியரன்ஸ் கொடுத்துவிட்டார்.
இந்தத் தகவல் வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த ராஜிவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இருப்பதுபோன்ற செல்போன் வசதிகள் அந்த நாட்களில் இருக்கவில்லை. இதனால் விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்த பொலிஸ் கன்ட்ரோல் ரூமில் இருந்து பொலிஸ் வயர்லெஸ் மூலம் ராஜிவ்காந்தி சென்றுகொண்டிருந்த வாகனத்தில் இருந்த வயர்லெஸ் சாதனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானம் பழுதுபார்க்கப்பட்ட தகவலை அறிந்துகொண்ட ராஜிவ் காந்தி விசாகப்பட்டினத்தில் அன்றிரவு தங்கும் எண்ணத்தைக் கைவிட்டார். முன்பு திட்டமிட்டபடி சென்னைக்குச் செல்லப்போவதாகக் கூறி தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை விமான நிலையத்தை நோக்கித் திருப்புமாறு கூறினார்.
இப்படியான சூழ்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு நடைமுறையுடன் சென்றுகொண்டிருக்கும் ஒரு வாகனத் தொடணியில் செய்யவேண்டிய நடைமுறை என்னவென்றால் வாகனத் தொடரணியின் முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனத்துக்கு (பைலட் வாகனம்) இந்தத் தகவல் முதலில் தெரிவிக்கப்பட வேண்டும். அதையடுத்து வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருக்கும் சகல வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அதன்பின் எந்த மாற்றுப் பாதையால் வாகனத் தொடரணி செல்லப்போகின்றது என்ற விபரம் தொடரணியின் தொடக்கத்திலிருந்த வாகனத்துக்குத் தெரியப்படுத்தி அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையால் செல்ல வேண்டும். இதுதான் எங்குமுள்ள நடைமுறை.
அன்றிரவு விசாகப்பட்டினத்தில் ராஜிவ் காந்தியை ஏற்றிச் சென்ற தொடரணியில் இந்த நடைமுறை காற்றில் விடப்பட்டது.

சடுதியாக ஒரு திசைதிருப்பல்

ராஜிவ் காந்தி தனது வாகனத்தை விமான நிலையத்தை நோக்கித் திருப்புமாறு கூறியதும் அவரது வாகனம் திசை மாறி விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் ஓடத் தொடங்கியது. அவரது வாகனத்துக்கு பின்னால் வந்த மற்றய வாகனங்களும் இந்த வாகனத்தைப் பார்த்துப் பின்தொடர்ந்தன.
ஆனால்…
வாகனத் தொடரணியில் ராஜிவ் காந்தியின் வாகனத்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு இந்தத் திசை திருப்பல் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. விளைவு? முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சுற்றுலா விடுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அந்த வாகனங்களில் ஒன்றில்தான் ராஜிவ் காந்தியின் மெய்ப்பாதுகாப்பு அதிகாரி சாகர் தனது துப்பாக்கியுடன் சென்றுகொண்டிருந்தார்.
அடுத்த விஷயம் என்னவென்றால் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சுற்றுலா விடுதியை அடைந்து நிறுத்தும்வரை தமக்குப் பின்னால் மிகுதி வாகனங்கள் (தாம் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருந்த ராஜிவ் காந்தியின் வாகனம் உட்பட) தம்மைப் பின்தொடரவில்லை என்பதே தெரிந்திருக்கவில்லை!

ராஜிவ் காந்தி கடைசியாக விமானமேறிய விசாகப்பட்டினம் விமான நிலையம்
விமான நிலையத்துக்கு ராஜிவ்காந்தி திரும்பி வந்து பழுதுபார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் அவருடன் பயணிக்க வேண்டிய மெய்ப்பாதுகாவல் அதிகாரி சாகர் அங்கே இல்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர் சுற்றுலா விடுதிவரை சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கும் விஷயமும் தெரிய வந்தது.
சாகர் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார் என்ற விஷயம் தெரிந்திருந்தும் ராஜிவ் காந்தியை ஏற்றிக்கொண்டு சென்னைக்குப் பறக்கத் தயாராக இருந்த விமானம் அவருக்காகக் காத்திருக்கவில்லை!
மெய்ப்பாதுகாவலர் அதிகாரி இல்லாமலேயே ராஜிவ் காந்தி சென்னையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். சென்னை விமான நிலையத்தில் புதியதொரு மெய்ப்பாதுகாவல் அதிகாரி ராஜிவ் காந்தியின் வருகைக்காகக் காத்திருந்த போதிலும் அந்த அதிகாரி ராஜிவ் காந்தியின் பாதுகாப்புக்காகத் தன்னுடன் கொண்டு செல்லவேண்டிய கைத் துப்பாக்கி சாகருடன் விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிட்டது.
இந்த முக்கிய பாதுகாப்புக் குளறுபடியை ஏன் புலன்விசாரணையின்போது கூட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? இது சாதராணமாக நடைபெற்ற தவறா அல்லது இதன் பின்னால் யாரோ திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்களா? துப்பாக்கியுடன் கூடிய தனிப் பாதுகாப்பு இல்லாமல் ராஜிவ் காந்தி அன்றிரவு சென்னையில் நடமாடவேண்டும் என்று யாரோ திட்டமிட்டுச் செயற்படுத்திய சதியா இது? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை தெளிவான பதில் இல்லை!

இதுதான் தனது கடைசி விமானப்பயணமாக இருக்கப்போகின்றது என்று கற்பனைகூடச் செய்திராத ராஜிவ் காந்தியை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இரவு 8.20க்கு தரையிறங்கியது.   இரவு 8.20 மணிக்கு அந்த விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரி சாகர் இல்லாமல் வந்திறங்கினார் ராஜிவ் காந்தி.

சென்னையில் சாகரை ரிலீவ் பண்ணவேண்டிய புதிய பாதுகாப்பு அதிகாரி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் ராஜிவ் காந்தியுடன் சென்று இணைந்து கொண்டார். பாதுகாப்புக் கடமையில் இருக்கும்போது அவர் தன்னுடன் வைத்திருக்க வேண்டிய கைத்துப்பாக்கி அவரிடமில்லை.
கைத்துப்பாக்கி, பழைய பாதுகாப்பு அதிகாரி சாகருடன் விசாகப்பட்டினத்தில் தங்கிவிட்டிருந்தது.
இந்தப் புதிய பாதுகாப்பு அதிகாரி, தன்னிடம் கைத்துப்பாக்கி இல்லை என்ற விஷயத்தை விமான நிலையத்தில் நின்றிருந்த யாரிடமும் சொல்லவில்லை. அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த தமிழக அரசின் காவல்துறைக்கும், இந்த விஷயம் தெரிவிக்கப்படவில்லை.
விமான நிலையத்தில் ராஜிவ் காந்திக்கு, வழமைபோல தமிழக அரசு காவல்துறையின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழக பொலீஸ் பாதுகாப்பு ராஜிவ் காந்தி தமிழகத்தைவிட்டு வெளியேறும்வரை இருக்கும்.
ஒருவேளை புதிய பாதுகாப்பு  அதிகாரியும் இதனால்தான், தன்னிடம் துப்பாக்கி இல்லாதது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
சாதாரண சமயங்களில் என்றால், அவரிடம் கைத்துப்பாக்கி இருக்கவில்லை என்ற விஷயமே அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது போய்விடும். ஆனால், அன்றைய தினம் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதால், அதன்பின் நடைபெற்ற புலன்விசாரணையின்போது இந்த விஷயம் வெளியாகிவிட்டது.

ஸ்ரீபெரும்புதூர். சென்னைக்கு அருகே, கிராமங்களுடன் இணைக்கப்பட்ட, பகட்டில்லாத ஒரு சிறுநகரம்.
தனது தனிப் பாதுகாப்பு அதிகாரியிடம் ஆயுதம் ஏதுமில்லை என்ற விஷயம், ராஜிவ் காந்திக்குத் தெரியப்படுத்தப் பட்டிருந்ததா என்று தெளிவாகத் தெரியவில்லை. அதுபற்றி ராஜிவ் காந்தி கொலைவழக்கு நீதிமன்றம் சென்றபோதும், யாராலும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.
ஒருவேளை புதிய பாதுகாப்பு அதிகாரி அதைப்பற்றிக் கூறியிருந்தாலும் அதைக் காதுகொடுத்துக் கேட்கும் அளவில் ராஜிவ் காந்தி இருக்கவில்லை. விமானத்திலிருந்து இறங்கியதும் அவரைக் கட்சி முக்கியஸ்தர்களும், ஊடகவியலாளர்களும் சூழ்ந்து கொண்டனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்தே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ராஜிவ் காந்தி பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தவாறே, கிட்டத்தட்ட ஒரு மினி மீடியா கான்பிரன்ஸ் பாணியில் கேள்விகளுக்குப் பதிலளித்தார் அவர். இது சுமார் 10 நிமிடங்கள்வரை நீடித்தது.
அந்த 10 நிமிடங்கள்தான் ராஜிவ் காந்தியின் கடைசி மீடியா கன்பிரன்ஸாக அமையப்போகின்றது என்பதை, அதில் கலந்துகொண்ட மீடியா ஆட்கள் யாரும் அப்போது ஊகித்திருக்க முடியாது.
இந்த மீடியா கன்பிரன்ஸ், தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களால் வழமைபோல படமாக்கப்பட்டிருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், அந்த வீடியோக்களுக்கு ஏகக் கிராக்கி ஏற்பட்டது வேறு விஷயம். (சில நாட்களின்பின் புலனாய்வுக் குழுவினர் அந்த வீடியோக்கள் அனைத்தையும் தம்வசம் எடுத்துக் கொண்டனர்)
மினி பிரஸ் கான்பிரன்ஸ் முடிந்ததும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் அவரை உடனே கிளம்புமாறு அவசரப்படுத்தத் தொடங்கினார்கள். அவரது தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது, மிகவும் டைட்டான நிகழ்ச்சி நிரல் போடப்பட்டிருந்ததே அதற்குக் காரணம்.
கட்சிக்காரர்கள் புடைசூழ விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த ராஜிவ்காந்தி, அங்கே தயாராக நின்றிருந்த குண்டு துளைக்காத காரில் ஏறிக்கொண்டார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க வந்திருந்த மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார் ஆகியோரும், அவருடன்  ஸ்ரீபெரும்புதூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ராஜிவ் காந்தியை ஏற்றிச்சென்ற கார் அணிவகுப்பு, நேரே ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்லவில்லை. செல்லும் வழியில் போரூர், பூந்தமல்லி ஆகிய இரு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதாக நிகழ்ச்சி நிரல் இருந்தது. அந்தப் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.
இவ்விரு இடங்களிலும், வித்தியாசமான சம்பவங்கள் ஏதும் நடைபெற்றிருக்கவில்லை. அவை வழமையான கட்சிப் பொதுக்கூட்டங்கள்தான்.
ராஜிவ் காந்தியைப் பேட்டிகாணவேண்டும் என்று  நியூயோர்க் டைம்ஸ், கல்ஃப் நியூஸ் ஆகிய இரு பத்திரிகைகளின் செய்தியாளர்கள், அவரது ஊடக ஒருங்கிணைப்பாளரிடம் ஏற்கனவே கேட்டிருந்தனர். ராஜிவ் காந்தி விமான நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்லும் வழியில், பேட்டிகளை வைத்துக் கொள்ளலாம் என அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தது.
இதனால் இவ்விரு செய்தியாளர்களும் அங்கு வந்திருந்தனர்.
மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியபோது, ராஜிவ் காந்திக்கு தமிழக கட்சி நிலவரங்கள் பற்றிய பிரீஃபிங் தேவைப்பட்டிருந்தது. இதனால், அவரது கார் பயணத்தின் முதல் பகுதியின்போது பேட்டி நடைபெறவில்லை.  போரூரில் பொதுக்கூட்டத்தில் ராஜிவ் காந்தி கலந்துகொண்டபின் காரில் ஏறும்போது, இவ்விரு செய்தியாளர்களும் அதே காரில் ஏற்றப்பட்டனர்.
காருக்குள் இட நெருக்கடி காரணமாக ராஜிவ் காந்தியின் காரிலிருந்த மரகதம் சந்திரசேகர் கீழிறங்கி, மற்றொரு காரில் ஏறிக் கொண்டார்.
ராஜிவ்காந்தியின் காரும், அதைப் பின்தொடர்ந்த மற்றைய கார்களும் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லத் தொடங்கின, அங்கே ராஜிவ் காந்திக்காக தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் காத்திருக்கிறார் என்ற விஷயம் தெரியாமலேயே!
ராஜிவ் காந்தியின் அன்றைய சுற்றுப் பயணத்தின்போது ஹைலைட்டாக அமைந்திருந்ததே ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம்தான். அங்கே ராஜிவ் காந்தி பேசவிருந்த மாபெரும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மரகதம் சந்திரசேகரின் ஆதரவாளரான ஏ.ஜே. தாஸ் என்பவர் செய்திருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அந்த நாட்களில் ஒரு நடுத்தர அளவிலான நகரம்.  நகரத்தைக் கடந்து செல்லும் நெடுஞ்சாலைக்கு மேற்கே, புறவழிச்சாலைச் சந்திப்புக்கு அருகே ஒரு கோயில் மைதானம் இருந்தது. அங்குதான் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழமையாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்குப் பொதுக்கூட்டங்களில் பெரியளவில் மக்கள் திரண்டு வருவதில்லை. ஆனால், அன்றிரவு விதிவிலக்கு. காங்கிரஸ் கட்சியின் ஜனரஞ்சகத் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி கலந்துகொள்வதால், பெருமளவில் மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
ராஜிவ்காந்தி பேச்சைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். சாலை நெடுகிலும் மக்கள் வெள்ளம். மாலை 6.30 மணியிலிருந்தே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள் நடைபெறும்போது, அவற்றுக்கென்று பொதுவான சில சிறப்பியல்புகள் உண்டு. கூட்டத்துக்கு வரும் மக்கள் அரசியல் பேச்சுக்களைக் கேட்கத்தான் வருகின்றார்கள். ஆனால், முக்கிய அரசியல் பேச்சுக்கள் தொடங்கும்வரை, வந்தவர்களைக் கட்டிப்போட வேண்டுமே… அதற்காக கலை நிகழ்ச்சிகள் அதே மேடையில் நடாத்தப்படும்.
ராஜிவ் காந்தி கலந்துகொண்ட பொதுக்கூட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. ராஜிவ்காந்தியின் வருகையை முன்னிட்டு சிறப்பு இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த இசையமைப்பானர்கள் சங்கர்-கணேஷில், கணேஷ் தனது இசைக்குழுவினருடன் அங்கு இசை நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருந்தார்.
மொத்தத்தில் அன்றிரவு அந்த இடமே ஏதோ திருவிழா நடைபெறும் இடம்போலத்தான் காணப்பட்டது. சாதாரண நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெட்ட வெளியாகக் கிடக்கும் அந்த மைதானத்தில் ஒளி வெள்ளம், காதைப் பிளக்கும் இசையின் ஓசை, கரைபுரண்டோடும் மக்கள் கூட்டம் என வித்தியாசமாக காட்சி அளித்தது.

இந்திரா காந்தி குடும்பம். மூவருமே அகால மரணம்!
இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி படங்கள் வரைந்த பாரிய கட் அவுட்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளமாக நின்றன. அது தேர்தல் சமயம் என்பதால் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தப் பாரிய அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராஜிவ் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மட்டுமல்ல. வாக்காளர்களைக் கவரக்கூடிய தலைவர். தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராகக் கூடியவர் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதிலும் பரவலாக இருந்தது.
இதுதான் ராஜிவ் காந்தி வருவதற்குமுன் அங்கிருந்த சூழ்நிலை.
ராஜிவ் காந்தியின் கார், பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்துக்கு அருகே வந்து சேர்ந்தது. அந்த இடத்திலிருந்து சில மீற்றர் தொலைவில் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், ராஜிவ் காந்தியின் தாயாருமான இந்திரா காந்தியின்உருவச்சிலை ஒன்று இருந்தது.
லோக்கல் கட்சிக்காரர்களால், அந்தச் சிலைக்கு மாலை அணிவிக்கும்படி ராஜிவ் காந்தி கேட்டுக்கொள்ளப்பட்டார். அதையடுத்து, காரிலிருந்து இறங்கிய ராஜிவ், நேரே அந்தச் சிலை இருந்த இடத்துக்குச் சென்று, இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
இது ஒரு ஆச்சரியமான நிகழ்வுதான். எப்படியென்று பாருங்கள்.
காரிலிருந்து இறங்கி, மேடைக்குச் செல்லுமுன் அவர் கொல்லப்படப் போகின்றார். அதற்குமுன் தனது தாயாரின் சிலைக்கு மாலையிடுகிறார். அதாவது, கொல்லப்படச் செல்வதற்குப் போகும் வழியில், தாயாரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டே செல்கிறார். அந்தத் தாயார் கொல்லப்பட்டதும், தீவிரவாதத் தாக்குதலில்தான்! ஆச்சரியம்தான்!!
இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், மேடையை நோக்கிச் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்லத் தொடங்கினார் ராஜிவ் காந்தி, அடுத்த சில நிமிடங்களில் வெடித்துச் சிதறப் போகின்றோம் எனத் தெரியாமலேயே…அத்தியாயம் 3
பொதுக்கூட்ட மேடைக்கு முன்னால் இருந்த சிவப்புக் கம்பள விரிப்பின் இருபுறமும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் அரசியல் கூட்டங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிதான். வி.ஐ.பி.களை பொதுமக்கள் நெருங்காதபடி அமைக்கப்படும் தடுப்பு அது.
சிவப்புக் கம்பள விரிப்பில் ராஜிவ் காந்தி நடந்து வரும்போது, அவரை நெருக்கத்தில் காண்பதற்கு தடுப்பு வேலிக்கு அப்பால் பொதுமக்கள் பலர், இடிபட்டுக் கொண்டு நின்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சி மிக்க தலைவராக ராஜிவ் காந்திதான் அப்போது இருந்தார்.
தடுப்பு வேலிக்கு உள்ளே, மேடையின்  கீழ் சிவப்புக் கம்பளம் விரித்திருந்த பகுதியில், குறிப்பிட்ட கட்சிப் பிரமுகர்கள் சிலர் ராஜிவ் காந்தியை வரவேற்க நின்றுகொண்டிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டும் அவருக்கு மாலை அணிவிக்க முடியும் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது..
அதன்பின், பொதுக்கூட்டம் தொடங்குவதாக இருந்தது.

ராஜிவ் காந்தி, இன்னமும் சிறிது நேரத்தில்...
அங்கிருந்த நிலைமையைப் பார்த்தால், கூட்டம் முடிய நீண்ட நேரம் ஆகும்போலத் தோன்றியது. கூட்டம் இன்னும் தொடங்கவில்லை. ராஜிவ் காந்தி இன்னமும் மேடைக்கு வந்து சேரவில்லை.
மேடையிலிருந்த சில அடி தொலைவில் நின்றிருந்த தாஸ், கூட்ட ஏற்பாடுகளை மும்முரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். இந்த தாஸ் யாரென்பதைக் கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.
தாஸ் லோக்கல் ஆள். அந்த ஏரியா காங்கிரஸ்காரர்களை நன்கு அறிந்தவர். கடும் பாதுகாப்புக்குரிய, தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், அவரருகே யாரெல்லாம் வரலாம் என்பதை உள்ளூர் பிரமுகர்களின் யோசனைப்படிதான், பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிப்பது வழக்கம்.
இதனால், ராஜிவ் காந்தியை நெருங்கி மாலை அணிவிக்க வேண்டிய ஆட்களை ஸ்கிரீன் பண்ணும் வேலையை அவரிடம் ஒப்படைத்திருந்தது போலீஸ்.
தாஸ்தான், அன்றிரவு  ராஜிவ் காந்தியை வரவேற்கவுள்ளோர் பட்டியலைப் பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது. சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில், கையில் பட்டியலுடன் நின்று கொண்டிருந்தார் அவர்.
தாஸ் கிளியர் பண்ணினாலும், ராஜிவ் காந்தியை நெருங்கிவிட முடியாது. தாஸ் ஒப்புதல் அளித்த, பிரமுகர்களின் பட்டியலை போலீஸ் டபுள்-செக் பண்ண வேண்டும். அதன்பின் அவர்களைச் சோதனையிட்ட பின்னரே, ராஜிவ் காந்தியை நெருங்க அனுமதிக்கப்படுவர்.
பட்டியலில் உள்ளவர்களைச் சோதனையிட்டு, ராஜிவ்காந்திக்கு அருகில் அனுமதிக்கும் பொறுப்பு, ஒரு சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பொதுக்கூட்டப் பகுதியின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றிருந்தவர், இந்திய பொலிஸ் சர்வீசில் அனுபவம் வாய்ந்த ஆர்.கே. ராகவன். இது நடைபெற்ற காலத்தில் அவர், தமிழக பொலிஸ் துறையின் ஐ.ஜி.யாக இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூருக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் ராஜிவ்காந்தி மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரப் பயணத் திட்டம், தமிழக போலீஸ் துறைக்கு மே 17 ம் தேதிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியிருந்தது. தமிழ்நாடு உளவுப்பிரிவும் விரிவான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியிருந்தனர்.
மே 20ம் தேதி, கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ராஜிவ்காந்தி அருகே பிரமுகர்களை அனுமதிக்கும் பணி ஒப்படைக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு உதவியாக, வெடிகுண்டுச் சோதனைக் கருவிகளுடன் (மெட்டல் டிடெக்டர்)  இரு போலீஸார் நிறுத்தப்பட வேண்டும் என்றும் முடிவாகியது.
சுருக்கமாகச் சொன்னால், பலத்த முன்னேற்பாடுகளின் பின்னரே அன்றிரவு பொதுக்கூட்டம் நடைபெறவிருந்தது. பொதுக்கூட்டப் பாதுகாப்புப் பணியில் 300க்கும் மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா.
அவரும், பெண் பொலிசார் ஒருவரும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியைக் கண்காணிக்க நிறுத்தப்பட்டிருந்தனர். ஆண் பொலிசார், பெண்களைச் சோதனையிடுவதில்லை. எனவே, பெண்கள் கூட்டத்தைச் சோதனையிடும் பொறுப்பு இரு பெண் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அனுசுயாவிடம், ராஜிவ் காந்தியைக்கு அருகே செல்லவுள்ள பெண்களின் உடலைத் தொட்டுச் சோதனையிட வேண்டும் என்று, தெரிவிக்கப்படவில்லை. உடலைத் தொடாமல் சோதனையிட, இவர்களுக்கு  மெட்டல் டிடெக்டர் கருவிகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை!
ஒட்டுமொத்த பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ் ஐ.ஜி. ராகவன்,மேடையருகே நின்றிருந்தார். நின்ற இடத்திலிருந்தே அவர், சுற்றிலும் தனது பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் அதிருப்தி தெரிந்தது. மற்ற பொலிஸ் அதிகாரிகளும் திருப்தியாக இல்லை.
காரணம், இவர்கள் எதிர்பார்த்த விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.
போலீஸ் கூறிய விதத்தில், சவுக்குக்கட்டை தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கவில்லை. ராஜிவ் காந்தி நடந்துவரும் இடத்துக்கு மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தது தடுப்பு வேலி. போலீஸ் தரப்பிலிருந்து ஏதேனும் யோசனை சொன்னாலும், அதைக்கேட்கும் மனநிலையில் அன்றிரவு, கட்சித் தொண்டர்கள் இல்லை.
ஒரு பக்கம் இசை மழை, மறுபக்கம் ஒளிவெள்ளம். இவற்றுக்கிடையே மேடையருகே நின்றிருந்த தாஸிடம் தங்களை ராஜிவ்காந்திக்கு அருகே அனுமதிக்குமாறு ஏராளமான பிரமுகர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தாஸை நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஏரியா காங்கிரஸ்காரர்கள் தாஸிடம், தங்களது பெயர்களையும் பட்டியலில் சேர்க்குமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறு வேண்டுகோள் விடுத்தவர்களில் ஒருவர், லதா கண்ணன்.
லதா கண்ணன், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரல்ல. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட லதா பிரியகுமாருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவந்த கட்சித் தொண்டர் இவர்.
பொதுக்கூட்டத்துக்கு லதா கண்ணனுடன், அவரது மகள் கோகிலாவும் வந்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் லதா கண்ணன். மே மாதத் தொடக்கத்தில் லதா கண்ணன் தனது தந்தையால் தமிழில் எழுதப்பட்டு, மகள் கோகிலாவால் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த ஒரு கவிதையை ராஜிவ்காந்திக்கு அனுப்பி வைத்திருந்தார். அதற்கு ராஜிவ் காந்தியிடமிருந்து பதில் ஏதும் வந்திருக்கவில்லை.

பின்னாட்களில் லதா பிரியகுமார்
இப்போது ராஜிவ் காந்தி நேரில் வருவதால், அந்தக் கவிதையை ராஜிவ்காந்திக்கு கோகிலா வாசித்துக்காட்ட வேண்டும் என விரும்பினார் லதா கண்ணன். ஆனால், இவருக்கு தாஸைத் தெரியாது.
ஏ.கே. தாஸிடம் தன்னையும் தனது மகளையும் அறிமுகப்படுத்தி, ராஜிவ்காந்தியை சந்திக்க அனுமதி பெற்றுத்தர யாராவது வர மாட்டார்களா எனக் காத்திருந்தார் அவர்.
லதா கண்ணன் யாருக்காகத் தேர்தல் பணியாற்றுகிறாரோ அந்த வேட்பாளர் லதா பிரியகுமார் அங்கு இரவு 9.15 மணிக்கு வந்து சேர்ந்தார்.
இதையடுத்து ராஜிவ்காந்தி முன் கவிதை வாசிப்பதற்கு கோகிலாவை அனுமதிக்குமாறு ஏ.கே. தாஸிடம் லதா பிரியகுமார் சிபாரிசு செய்தார். அதையடுத்து, லதா கண்ணனின் மகள் கோகிலாவின் பெயர், தாஸின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

ராஜிவ் காந்தியைக் கொன்றதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுதாரியான தனு, இந்தக் கோகிலாவின் அறிமுகத்துடனேயே ராஜிவ் காந்தியை இன்னும் சிறிது நேரத்தில் நெருங்கப் போகிறார்!

லதா கண்ணன், மற்றும் கோகிலா ஆகிய இருவரின் பெயர்களைப் பட்டியலில் சேர்த்தபின், லதா பிரியகுமார்,  மேடையிலிருந்து விலகி  இந்திராந்தி சிலை அமைந்திருந்த இடத்துக்குச் சென்றுவிட்டார். மேடையருகே அவர், அதன்பின் வரவில்லை.
ராஜிவ் காந்தி அன்றிரவு கொல்லப்பட்டபின், விசாரணைகளின்போது இந்த லதா பிரியகுமார் என்ற பெயர் அடிக்கடி அடிபட்டது. இவர் வேறுயாருமல்ல, மரகதம் சந்திரசேகரின் மகள்தான். மரகதம் சந்திரசேகரின் வற்புறுத்தல் காரணமாகவே அன்றிரவு பொதுக்கூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்குச் சம்மதித்திருந்தார்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், கொலை விசாரணை நடைபெறத் தொடங்கியவுடனே இந்த இருவரது பெயர்களும் பரவலாக அடிபட்டன. மரகதம் சந்திரசேகர், 1991ல் எம்.பி.யானபின் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.(2001ல் இறந்துவிட்டார்)
அவரது மகள் லதா பிரியகுமார், ராஜிவ் கொலை விசாரணை நடைபெற்ற காலத்தில் அரசியலில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்தார். அதன்பின் அவருக்கு, அடுத்த தேர்தலில் (1996) தனது தாயாரின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தத் தேர்தலில் லதா, தி.மு.க. வேட்பாளரான டி.நாகரத்னத்திடம் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வாக்குக்களால் தோல்வியடைந்தார்.
ராஜிவ் காந்தியின் கொலை விசாரணை முடிந்து வழக்கு நடைபெற்றபோது, தாய்-மகள் இருவரது பெயர்களும் சார்ஜ் ஷீட்கள் எதிலும் தென்படவில்லை.
கோகிலாவின் பெயருக்கு தாஸ் ஒப்புதல் அளித்ததும், போலீஸ் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெற்றது. போலீஸ் பட்டியலில் அவரது பெயர், ‘அனுமதிக்கப்பட்டவர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப்பட்டியலில் 23 பெயர்கள் இருந்தன. கோகிலாவை தவிர அனைவரும் ஆண்கள். அவர்களில் மூவர் மேடையில் ராஜிவ்காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள்  சிவப்புக் கம்பள விரிப்புப் பாதையில் ராஜிவ்காந்தி மேடைக்குச் செல்லும்போது அவரைச் சந்தித்து வணக்கம் செலுத்துவதற்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தனது முயற்சியில் வெற்றிபெற்ற லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த  கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து, சந்தன மாலையுடன் ஒரு பெண்ணும் கூடவே சென்றார்.
இந்தப் பெண்ணின் உடலில்தான் வெடிகுண்டு இருந்தது!அத்தியாயம் 04
சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த  கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து, சந்தன மாலையுடன் ஒரு பெண்ணும் கூடவே சென்றார்.
இந்தப் பெண்ணை கூட்டத்துக்கு வந்திருந்த பலர் கவனித்திருந்தனர். சில நொடிகளுக்கு முன்தான் லதா கண்ணனுடன் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் ஹரிபாபு என்ற புகைப்படக்காரரும் காணப்பட்டார். ஹரிபாபு என்ற பெயர் அங்கிருந்த சிலருக்குத் தெரிந்திருந்தது. காரணம், அங்கிருந்த பல பத்திரிகையாளர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் அறிமுகமான நபர் அவர்.
இவர்களுடன் சேலை அணிந்த இரு பெண்களும், வெள்ளை குர்தா பைஜாமா அணிந்து முகத்தில் தடித்த கண்ணாடி அணிந்த ஆண் ஒருவரும் காணப்பட்டனர்.
இவர்களுக்கும் லதா கண்ணனுக்குமிடையே எப்படிப் பரிச்சயம்? அதைத் தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.
தாஸிடம் அனுமதி பெறுவதற்காக லதா கண்ணன் காத்திருந்தார் அல்லவா? அப்போதுதான் இந்த ஐவர் அணி அவரை அணுகியது. அங்கு கூடியிருந்த கட்சிப் பிரமுகர்களிடையே மிக எளிதாக லதா கண்ணன் நடமாடுவதை அவர்களால் காண முடிந்தது.
லதா கண்ணனுக்கு லோக்கல் காங்கிரஸ் ஆட்களிடையே செல்வாக்கு இருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
அதைத் தெரிந்துகொண்டபின், சேலை அணிந்த இரு பெண்களில் ஒருவர் லதா கண்ணனை முதலில் அணுகினார். “என்னுடன் வந்துள்ள நண்பர் ஒருவர், ராஜிவ்காந்திக்கு மாலை அணிவிக்க விரும்புகிறார். நீங்கள்தான் அதற்கு அனுமதி பெற்றுத் தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இவர் நண்பர் என்று குறிப்பிட்டது, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத்தான்.
“சரி. உங்க நண்பரை எனக்கருகே நிற்கச் சொல்லுங்க. நான் ட்ரை பண்ணுகிறேன்” என்றார் லதா கண்ணன்.

இந்த கண்ணாடி அணிந்த பெண் நண்பரின் உடலில்தான் வெடிகுண்டு இருந்த விஷயம் லதா கண்ணனுக்குத் தெரிந்திருக்கவில்லை!

லதா கண்ணனும், கோகிலாவும் சற்று தொலைவில் மற்றவர்களுடன் காத்திருந்தபோது கண்ணாடி அணிந்த பெண்ணும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். அவருடன் வந்த மற்ற இரு பெண்களும், இந்தப் பெண்ணருகே நிற்காமல் விலகிக் கொண்டனர். அந்த இரு பெண்களும், அங்கிருந்து விலகி, மேடையருகே சென்றனர். அங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டனர்.
இவர்களுடன் வந்திருந்த புகைப்படக்காரர் ஹரிபாபு, தனது கமெராவை எடுத்தார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியைப் படம் எடுப்பதற்காக வேறொருவரிடமிருந்து இரவல் வாங்கி வந்திருந்த ‘சினான்’ காமெரா அது.
இந்தக் கட்டத்தில், ஹரிபாபு தனது கமெராவை இயக்கி, முதல் போட்டோவை எடுத்தார்.
இந்த நேரத்தில், வெள்ளை குர்தா பைஜாமா அணிந்த ஆண், சற்றுத் தள்ளி நின்றுகொண்டார். அவரது கையில் சிறிய நோட்டும் பேனாவும் வைத்திருந்தார். பார்ப்பதற்கு இவரும் அங்கு வந்திருந்த மற்றய பத்திரிகை நிருபர்களில் ஒருவரைப் போலவே காணப்பட்டார்.
ஹரிபாபு, பெண்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கிப் படம் எடுத்தார். அவருக்கு அறிமுகமான, சேலை அணிந்த இரு பெண்களையும் போட்டோ எடுத்தார். அவர்கள் அணிந்திருந்த சேலைகளின் கலரால் அடையாளம் காணும் வகையில், பெண்கள் பகுதியில் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தனர்.
இந்த ஐந்து பேர் அணி துல்லியமான திட்டத்துடனே வந்திருந்தனர். அவர்களது திட்டப்படி, வெவ்வேறாகப் பிரிந்து, வெவ்வேறு இடங்களில் பொசிஷன் எடுத்திருந்தனர்.
வெடிகுண்டை உடலில் அணிந்திருந்த பெண் மேடைக்கு அருகே, ராஜிவ் காந்தி நடந்து வரப்போகும் பாதையருகே நின்றிருந்தார். மற்றைய மூவர், அந்தப் பெண்ணிடமுள்ள வெடிகுண்டு வெடித்தால், அதனால் பாதிப்பு ஏற்படாத அளவான தூரத்தில் நின்று கொண்டனர். போட்டோகிராபர் ஹரிபாபு மாத்திரம் இங்கும் அங்கும் நகர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
இவர்கள் இப்படி பொசிஷன் எடுத்து நின்றுகொண்டதை, கூட்டத்திலிருந்த யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை… கூட்டத்தில் கலந்திருந்த உளவுப் பிரிவினர் உட்பட!
இப்போது, ராஜிவ் காந்தி மேடைக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் நின்றிருந்தார். அவரைச் சுற்றி, மற்றைய பெண் பொலிசார் நின்றிருந்தனர். இவர்கள் நின்றிருந்த இடத்துக்கு அருகே கூட்டம் நிரம்பி வழிந்தது.
கட்சித் தொண்டர்கள்  கடைசி முயற்சியாக தாஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தனர். தங்களையும் ராஜிவ் காந்தி அருகில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு தாஸை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
தாஸால் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டவர்கள், மேடைக்கு அருகில் கும்பலாக நின்றிருந்தனர். அனுமதிக்கப்பட்டோர் பட்டியலை வைத்திருந்த பொலிசார், ஒரு சிலரை மட்டுமே வெடிகுண்டு டிடெக்டர் கருவியால் சோதனை செய்தனர். அதுவும் ஆண்களை மாத்திரமே!
கூட்டம் நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக, அனுமதி அளிக்கப்படாத நபர்களும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் நிற்பது தெளிவாகத் தெரிந்தது.
அனுமதி அளிக்கப்படாத நபர்களை அங்கிருந்து அகற்ற வேண்டியது கூட்ட அமைப்பாளரின் (தாஸின்) பொறுப்பு என பொலிசார் கருதினர். ஆனால், கட்சி விவகாரங்களில் மூழ்கியிருந்த தாஸ், அனுமதிக்கப்பட வேண்டியோர் பட்டியலை பொலிசாரிடம் கொடுத்துவிட்டதோடு தனது வேலை முடிந்துவிட்டது என்று நினைத்தார்.
பட்டியலில் இல்லாதவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது பொலிசாரின் பொறுப்பு என்றும் நினைத்திருந்தார் அவர்.
இப்படியான இழுபறி நேரத்தில்தான், அந்த இடத்துக்கு ராஜிவ் காந்தி வந்து இறங்கினார். மேடை இருந்த திசையை நோக்கி நடந்து வரத் தொடங்கினார்.
ராஜிவ்காந்தி வந்துவிட்டார் என்றதும் இசைநிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
“ராஜிவ்காந்திக்கு அருகே செல்ல பர்மிஷன் எடுத்தவங்க, இந்தப் பக்கமா வாங்க. மேடைக்கு அருகே சிவப்புக் கார்ப்பெட் பகுதியில் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்து நில்லுங்க” என்று தாஸ் சத்தமாக அறிவித்தார். ஆனால் அவரது குரலையும் மீறி,  அந்த இடத்தில் ஒரே இரைச்சலாக இருந்தது.
மேடை இருந்த பகுதியருகே குழப்பமாக இருந்தது. இதனால், அனுமதி பெறாதவர்களும் ராஜிவ் காந்தியை நெருக்கமாகப் பார்க்க நினைத்து, அப்பகுதியை நோக்கி நெருக்கியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
அவர்களைத் தடுப்பதற்கு அங்கிருந்த சொற்ப எண்ணிக்கையிலான போலீஸ், ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
சற்று தொலைவில் ராஜிவ் காந்தி தெரிவதை, மேடைப் பகுதியில் இருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. அவர் மேடையை நோக்கி நடந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.அத்தியாயம் 05
பொதுக்கூட்ட மேடைக்கருகே இன்னமும் சிறிது நேரத்தில் ராஜிவ் காந்தி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. ராஜிவ் காந்தியை சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டதால், லதா கண்ணனும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த அவரது மகள் கோகிலாவும் பரபரப்பாக காணப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் அவர்கள் முன் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகே, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண் நின்றிருந்தார். அவரது கையில் ராஜிவ் காந்திக்கு அணிவிப்பதற்காக ஒரு சந்தன மாலை காணப்பட்டது.
இப்போது இந்தக் காட்சி வித்தியாசமாகத் தென்படவில்லை.
சரியாக ஒழுங்கு படுத்தப்படாத அந்தக் கூட்டத்தில், ராஜிவ் காந்தியை நேரில் பார்ப்பதற்காக நெருக்கியடித்துக் கொண்டிருந்த மற்றையவர்களில் ஒருவராகவே அந்த சல்வார் கமீஸ் பெண் காணப்பட்டார்.  சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று அவரது உடலில்  பொருத்தப்பட்டிருந்த விபரம் யாருக்கும் தெரியாதவரை, அவருக்கும் மற்றையவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.
அப்போது நேரம் இரவு 10.10 மணி.
ராஜிவ் காந்தி மேடையை நோக்கி வருவது தொலைவில் தெளிவாகத் தெரிந்தது.  மேடையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த ராஜிவ்காந்தி பொதுமக்களை நோக்கி கை அசைத்தார். அவருடன் காரில் வந்திருந்த இரு வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார் வாழப்படி ராமமூர்த்தி.
வாழப்படி ராமமூர்த்தி, ராஜிவ் பயணம் செய்த காரில் வந்திருக்கவில்லை. ராஜிவ் வந்த காருக்கு பின்னால் வந்த ஜீப்பில், ஒரு விடியோ கிராபருடன் வந்திறங்கியிருந்தார். ராஜிவ் காந்திக்கு கூட்டத்தில் வழியேற்படுத்திக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அகன்று மேடையருகே சென்ற வாழப்படி ராமமூர்த்திதான், முதல் ஆளாகப் பொதுக்கூட்ட மேடையில் ஏறினார்.
வாழப்படி ராமமூர்த்தி மேடையிலிருந்து பார்த்தபோது, சற்றுத் தொலைவில் சவுக்குக்கட்டைத் தடுப்பு வேலி அருகே ராஜிவ் காந்தி செல்வது தெரிந்தது. தடுப்பு வேலிக்கு அப்பாலுள்ள பொதுமக்கள் சிலருடன் ராஜிவ் கை குலுக்குவதும் தெரிந்தது.
வயதான மரகதம் சந்திரசேகரால், காரிலிருந்து சற்று மெதுவாகத்தான் இறங்க முடிந்தது.
அதற்குள் காரிலிருந்து இறங்கி சில மீட்டர் தொலைவுக்கு ராஜிவ் காந்தி நடந்து சென்றுவிட்டார். எனினும், வேக நடையில் ராஜிவ் காந்தி அருகே நெருங்கிவிட்ட மரகதம் சந்திரசேகர், தனது தொகுதி ஆதரவாளர்களை ராஜிவ் காந்தியிடம் அறிமுகப்படுத்த முயன்றார்.
கூட்டத்தினர் மரகதம் சந்திரசேகரை நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர். லோக்கல் கட்சித் தொண்டர் ஒருவர், ராஜிவ்காந்திக்கு சால்வை அணிவித்துவிட்டு போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார். அப்போது அந்தத் தொண்டர் தம் இரு கைகளினாலும் ராஜிவ் காந்தியை பிடித்துக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட மரகதம் சந்திரசேகர், அந்தத் தொண்டரைத் தள்ளிவிட முயன்றபோது, .நிலைதடுமாறி கீழே விழ இருந்தார். அருகிலிருந்த மற்றையவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.
இந்த நிமிடத்தில் யார் பேசுவதும் யாருக்கும் கேட்காத வகையில் ஒரே இரைச்சலாக இருந்தது. யார் பொதுமக்கள், யார் கட்சித் தலைவர்கள், யார் அனுமதி பெற்றவர்கள், யார் அனுமதி பெறாதவர்கள் என்றல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை.
ராஜிவ் காந்தியை சுற்றிலும் சீருடை அணியாத பொலிசார் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். ஆனால், மக்களின் நெரிசலிலிருந்து ராஜிவ் காந்தியை பாதுகாப்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.
கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் சூழ மேடையை நெருங்கிவிட்டார் ராஜிவ்காந்தி.
விடியோ கிராபர்களுக்கு, பிரதான மேடைக்கருகே சிறியதாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது. ஓரளவு உயரமான இடத்தில் இருந்துதான் வீடியோ எடுக்க முடியும் என்பதால்தான் அப்படி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை கவர் பண்ண வந்திருந்த வீடியோ கிராபர்கள் அனைவரும் அந்தச் சிறிய தற்காலிக மேடையில் நின்றிருந்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்றிருந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. விடியோ கேமெராக்களுக்கான மின் இணைப்பு, அந்த ஓரிடத்திலிருந்துதான் கிடைத்தது.(தற்போது இருப்பது போன்ற பாட்டரி பவர் காம்பாக்ட் வீடியோ கேமெராக்கள் அந்த நாட்களில் கிடையாது.  அந்த நாளைய பரொஃபெஷனல் வீடியோ கேமராக்களுக்கு மின் இணைப்பு அவசியம்)
கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் அலை மோதியதில், இந்த சிறிய மேடையிலும் பொதுமக்கள் வந்து ஏறத் தொடங்கினர்.  ஊடகவியலாளர்கள்  பொதுமக்களைத் துரத்தினர். இந்த இழுபறியில் எல்லா வீடியோ கேமராக்களும்  ஒரே நேரத்தில் திடீரென  ஷட்-ஆஃப் ஆகின.
காரணம், அந்தச் சிறிய மேடையில் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு ஏறி இறங்கியதால், விடியோ கேமெராக்களுக்கு வழங்கப்பட்ட மெயின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. (இதனால்தான், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் ஏதும் கிடையாது. வெறும் ஸ்டில் போட்டோக்கள் மாத்திரமே இன்று உள்ளன)
மேடையை நோக்கி நடந்துவந்த ராஜிவ் காந்தி, முதலில் ஆண்கள் இருந்த பகுதிக்குச் சென்றார்.
ஆண்கள் பகுதியிலிருந்த கட்சித் தொண்டர்களைப் பார்த்த பின், பெண்கள் பகுதிக்கு வந்த ராஜிவ்காந்தியை அங்கிருந்த கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் வணங்கி வரவேற்றனர்.ராஜிவ் பதிலுக்கு வணக்கம் செலுத்தினார்.
ராஜிவ் காந்தியை வரவேற்க வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த பெண்களில், முன்வரிசையில் தனது தாயுடன் நின்றிருந்தார் கோகிலா. ராஜிவ் காந்தி அவரை நெருங்கியபோது, “ஒரு கவிதை வாசிக்க வேண்டும்” என்று ஹிந்தியில் தெரிவித்தார் கோகிலா.
புன்சிரிப்புடன் ராஜிவ் காந்தி அந்த இடத்தில் தாமதிக்க, தனது ஹிந்தி, மொழி பெயர்ப்புக் கவிதையை ராஜிவ்காந்தியிடம் வாசித்துக் காண்பித்தார் கோகிலா.
அவரது கவிதை முடியும் நேரத்தில்-

கோகிலாவுக்கு பின்னால் நின்றிருந்த கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், ராஜிவ்காந்தியை நோக்கி அடியெடுத்து வைத்தார்.

வரிசையில் நிற்காமல், பின்னாடி நின்றிருந்த பெண் ஒருவர் மாலையுடன் முன்னே வருவதைக் கவனித்து விட்டார்  சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா. உடனே வேகமாகச் செயற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க முயன்றார்.
சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா செய்ய முயன்றதைச் செய்திருந்தால், அன்று கதையே மாறியிருக்கும். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது.

கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க வேண்டாம் என ராஜிவ்காந்தி சைகை காட்டினார்.

ஒரு கணம் தாமதித்த அனுசுயா, ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, அந்தப் பெண்ணைத் தடுக்காமல்  இரண்டு அடிகள்  பின்னால் எடுத்து வைத்து,  நின்று கொண்டார்.
இப்போது கண்ணாடி அணிந்த பெண் நகர்ந்து சென்று ராஜிவ்காந்தி முன்னால் நின்றார்.
ராஜிவ்காந்தியின் கழுத்தில் சந்தன மாலையை அணிவித்தார். பின்னர் அவரது காலைத் தொட்டு வணங்குவதைப் போல அந்தப் பெண் கீழே குனிந்தார்.
இது நடந்தது ராஜிவ்காந்தி குண்டு துளைக்காத காரிலிருந்து இறங்கிய 10 நிமிடங்கள் கழித்து. அப்போது நேரம் இரவு 10.20 மணி.
கண்ணாடி அணிந்த பெண் கீழே குனிந்தவுடன், அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ட்ரிக் செய்யப்பட்டது. ட்ரிக் செய்யப்பட்ட கணத்திலிருந்து சரியாக இரண்டு விநாடிகளில்-
அந்தக் குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது.
அப்போது வெடித்தது கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணின் உடலில் இருந்த குண்டு மாத்திரம் அல்ல. ஈழத் தமிழரின் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும், அந்தஒற்றை வெடிகுண்டால் வெடித்துச் சிதறியது.
ராஜிவ்காந்தி நின்றிருந்த இடத்தில் தீயுடன் 20 அடி உயரத்துக்குக் கரும்புகை காணப்பட்டது. புகை தணிந்ததும் பார்த்தால், ராஜிவ்காந்தி நின்றிருந்த இடத்தில் எவரும் உயிருடன் இருந்த அறிகுறியே இல்லை. எங்கு பார்த்தாலும் இரத்தமும், சதைத் துணுக்குகளும் சிதறிக் கிடந்தன.
கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு, ராஜிவ்காந்தியின் தனிப் பாதுகாப்பு அதிகாரி உட்பட 15 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் வைத்தியசாலையில் இறந்தனர்.
இறந்தவர்களில் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முகமது இக்பால் உட்பட 9 பொலிசாரும் அடங்குவர். 44 பேர் காயமடைந்தனர். இவர்களில் 20 பேருக்குப் பலத்த காயம்.
ராஜிவ்காந்தியின் கடைசி நிமிடங்களைப் படம் பிடித்த காமெரா, அதை இரவல் வாங்கிவந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின்  உடல்மீது,  ‘மௌனமாக சாட்சியாக’க் கிடந்தது.அத்தியாயம் 06
குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கரும் புகை தணியத் தொடங்கியது.  அங்கு பீதியும், குழப்பமும் காணப்பட்டன. குண்டு வெடிப்பதற்குமுன் அங்கு இருந்த கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம்,  ஏராளமான கட்சித் தொண்டர்களும், பொலிசாரும் அச்சத்தால் அங்கிருந்து ஓடிப்போய்விட்டனர்.
அங்கு விபரீதமாக ஏதோ நடைபெற்று விட்டது என்பதைப் புரிந்துகொண்டு,  அச்சத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடியவர்கள் அவர்கள்.  கடமையில் இருந்த போலீஸாரில் சிலரும் அங்கிருந்து ஓடியவர்களில் அடக்கம் என்பது மறுநாள் விசாரணையில் தெரியவந்தபோது, தமிழக போலீஸ் தலைமை அதிர்ந்து போனது.
ஆனாலும், கட்சித் தொண்டர்கள் சிலரும், பொலிசார் சிலரும் குண்டு வெடிப்பின் பின்னரும் அந்த இடத்தைவிட்டு அகலாமல், அங்கேயே இருந்தனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் இரு தலைவர்களான  ஜி.கே. மூப்பனாரும், வாழப்பாடி ராமமூர்த்தியும்அங்கேயே இருந்தனர்.
இவர்கள் இருவரும் அவசர அவசரமாக, ராஜிவ்காந்தி எங்கே எனத் தேடினர்.
குண்டுவெடிப்பு நடைபெற்ற நிமிடத்தில், தமிழக காங்கிரஸின் பிரதான தலைவர்கள்  இருவருமே,  ராஜிவ் காந்திக்கு அருகில் இருக்கவில்லை – வெடிகுண்டு பாதிக்கும் தொலைவில்கூட இருக்கவில்லை – என்பது ஆச்சரியமான உண்மை.
வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜிவ்காந்தி  மேடையை நோக்கி நடந்து வரும்போதே அவரில் இருந்து விலகி, முன்னே சென்று விட்டார்.  ராஜிவ் காந்தியை சூழ்ந்த ஆதரவாளர்களை விலக்கியபடி முன்னேறிச் சென்ற அவர், பொதுக்கூட்ட மேடையில் ஏறி, அங்கே காத்திருந்தார் .
ராஜிவ் காந்தி மேடையை நோக்கி வருவதற்குமுன், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் என்று எழுதியிருந்தோம் அல்லவா? அப்போது ராஜிவ்காந்தியுடன் நின்றிருந்தார் மூப்பனார். இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தபின்  ராஜிவ் காந்தி மேடையை நோக்கி நடக்கத் தொடங்கியபோது, அவருடன் செல்லாமல் பின்தங்கி, ஒரு மரத்தடியே  நின்று விட்டிருந்தார் மூப்பனார்.
இவர்களது இந்த நடவடிக்கைகள், பின்னாட்களில் சில கேள்விகளை எழுப்பியது.  குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது,  தமிழக காங்கிரஸ் பிரமுகர்களில் யாருக்குமே, எந்தப் பாதிப்பும் ஏற்படாதது எப்படி? குண்டு வெடித்த நிமிடத்தில், எந்தவொரு தமிழக காங்கிரஸ் பிரமுகரும் ராஜிவ் காந்திக்கு அருகில்கூட நிற்காமல் போனது எப்படி? என்ற கேள்விகள் பின்னாட்களில் எழுந்தன. அவற்றுக்கான பதில்கள், கடைசிவரை கூறப்படவில்லை!
குண்டு வெடித்த உடனேயே அந்த இடத்தை நோக்கி வாழப்பாடி ராமமூர்த்தியும், மூப்பனாரும் ஓடிச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அங்கு கரும்புகை அடங்கத் தொடங்கியபோது,  தரையில் தங்கள் தலைவர் ராஜிவ் காந்தியின் சிதைந்துபோன உடலைத்தான் அவர்களால் காணமுடிந்தது.
ராஜிவ்காந்தி அணிந்திருந்த ‘லோட்டோ ஷுக்கள்’தான் அவரது உடலை எளிதாக அடையாளம் காண உதவின.
ராஜிவ்காந்தியின் உடலைத் தனது கைகளால் தூக்க மூப்பனார் முயன்றபோது, சதைப் பிண்டங்கள்தான் கைகளில் வந்தன.
தரையில் வீழ்ந்திருந்த ராஜிவ் காந்தியின் உடல், முகம் தரையை நோக்கி இருக்கும் விதத்தில் குப்புற வீழ்ந்திருந்தது.  குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பள்ளத்தில் அவரது முகம் தரையிலுள்ள மண்ணில் ஓரளவுக்குப் புதைந்திருந்தது. இதனால், மூப்பனாரும் மற்றையவர்களுமாகச் சேர்ந்து,  அவரது  உடலை முகம் தெரியும் வகையில்  திருப்பிப் போட்டனர்.
அதன்பின், ராஜிவ் காந்தியின் உடல் மீது, சால்வை ஒன்றைப் போர்த்தினார் மூப்பனார்.
இதெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட தாக்கம் அந்த இடத்தில் இருந்தது. வெடிமருந்தின் மணம் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது.  காற்று அவ்வளவாக அடிக்காத காரணத்தால், கரும் புகை முழுமையாக அகலவில்லை.  ராஜிவ் காந்தியின் உடல் கிடந்த சிவப்புக் கம்பள விரிப்பின் ஒரு பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த இடத்துக்கு ஓடிவந்த போலீஸ் ஐ.ஜி. ராகவன்,  அந்தத் தீயை அணைத்தார்.
இதற்கிடையே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு ஸ்ட்ரெச்சர் கொண்டுவரப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் உடல், பிரதேப் பரிசோதனைக்காக  சென்னையில் உள்ள அரசாங்கப் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடல், பொலிஸ் வாகனம் ஒன்றிலேயே  கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மற்றையவர்களது உடல்களையும், காயமடைந்தவர்களையும் அங்கிருந்து அகற்றும் பணிகள் தொடங்கின. மற்றவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அகற்றப்பட்ட போது, ஹரிபாபுவின் உடலின்மீது வீழ்ந்து கிடந்தது, அவர் இறுதியாகப் பயன்படுத்திய ‘சினான்’ காமெரா.
காமெராவைக் கவனித்த பொலிஸ் ஐ.ஜி. ராகவன், அதை எடுத்துப் பத்திரப் படுத்துமாறு உத்தரவிட்டபின், அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், மற்றைய பணிகளில் மூழ்கிவிட்டார்.
குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில், பல பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்து ஓடியவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான செருப்புகள், ஹேன்ட்-பேக்கள், பைகள் என்று தரையெங்கும் பல பொருட்கள் சிதறிக் கிடந்தன.
அந்தப் பொருட்களைப் போல ஒரு பொருளாகவே, இந்த   சினான்  காமெராவும், பத்தோடு பதினொன்றாக சேகரிக்கப்பட்டது. எவ்வித உயர் பதவியிலுமில்லாத சாதாரண  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த காமெரா பத்திரப்படுத்தப் பட்டது.
இந்த காமெராவுக்கு உள்ளேயுள்ள பிலிம் ரோலில்தான், மனித வெடிகுண்டாக வந்து ராஜிவ் காந்தியைக் கொன்ற பெண்ணின் உருவமும், அவருக்கு துணையாக வந்திருந்த மற்றையவர்களின் உருவங்களும், குண்டு வெடிப்பைத் திட்டமிட்டுக் கொடுத்தவரின் உருவமும், வெவ்வேறு பிரேம்களில் பதிவாகியிருந்தன.
இந்த ஒற்றைக் காமெரா மாத்திரம் புலனாய்வாளர்களின் கைகளில் கிடைக்காதிருந்தால்,  ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்பது, இன்றுவரை கேள்விக் குறியாகவே இருந்திருக்கும்!

*  *  *

ராஜிவ்காந்தியின் உடல்  சென்னையிலுள்ள பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.  அவர் மரணமடைந்து விட்டார் என்பது அங்கு வைத்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் அவரது உடல், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கிடையே ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சேதி, டில்லிக்கு அறிவிக்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது. டில்லியிலிருந்து சென்னை செல்வதற்காக, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான  சிறப்பு விமானம் ஒன்றை மத்திய அரசு வழங்கியது. அதில், ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் சென்னை வந்து சேர்ந்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சில நிமிடங்களே நின்றிருந்த அந்த விமானத்தில், ராஜிவ் காந்தியின் உடல் ஏற்றப்பட, அந்த விமானம்  டில்லிக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது மே 22ம் தேதி, அதிகாலை நேரம்.

*  *  *

ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில், தமிழகத்தில் அரசியல் நிலை குழப்பத்தில் இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறவில்லை. கவர்னர் ஆட்சி (மத்திய அரசின் நேரடி ஆட்சி) நடந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக கவர்னராக இருந்தவர்,  பீஷ்மநாராயண சிங்.
ராஜிவ் கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற காரணத்திற்காக  தமிழக அரசு கலைக்கப்பட்டிருந்தது.  கலைக்கப்பட்ட ஆட்சி, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு.
ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விஷயம், நள்ளிரவில் கவர்னரை தூக்கத்தால் எழுப்பிக் கூறப்பட்டது. அவர், டில்லியுடன் தொடர்பை ஏற்படுத்தி, அடுத்து, என்ன செய்வது என்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தின் ஆட்சி என்னதான் கவர்னரின் கைகளில் இருந்தாலும், அது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆட்சியின் முழுமையான செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது கவர்னர் ஒருவரால் சாத்தியமில்லை. காரணம், எந்தத் துறைக்கும் – போலீஸ் துறை உட்பட – பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் கிடையாது.
சுருக்கமாகச் சொன்னால், போலீஸ் மெக்கானிசத்தை முழுமையாகச் செயற்படுத்த கவர்னரால் முடியாது.
டில்லியுடன் ஆலோசித்த கவர்னர் பீஷ்ம நாராயண சிங்,  ராஜிவ் காந்தி கொலை விசாரணை பற்றிய தனது பரிந்துரையை மத்திய  அரசுக்கு அனுப்பி வைத்தார். அதில் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவப் புலனாய்வுப் பணியை தமிழக போலீஸிடம் விட்டுவிடாமல், மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ரெக்கமென்ட் பண்ணியிருந்தார்.
“கவர்னரின் பரிந்துரை  ஏற்கப்பட்டு, புலனாய்வுப் பொறுப்பு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்தில் கூறிவிட்டு, செல்ல முடியாது. காரணம், சி.பி.ஐ.யிடம் ராஜிவ் கொலை கேஸ் ஒப்படைக்கப்படும் முன்னர், கொலை நடந்த மறுநாள் (மே 22ம் தேதி)  நடந்த சில சம்பவங்கள் பற்றிக் கூற வேண்டும்.
சி.பி.ஐ. இந்த கேஸை எப்படி எடுத்துக் கொண்டது, அவர்களது புலனாய்வுக்குழு யாருடைய தலைமையில், எப்படி அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள அந்தச் சம்பவங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். புலன் விசாரணை தொடர்பாக இந்திய அதிகாரிகளிடையே நடைபெற்ற முக்கியமான தொலைபேசிக் கலந்துரையாடல்களைத்தான் இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.அத்தியாயம் 07
1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. இந்தக் கட்டத்தில், கொலை எப்படி நடந்தது என்பதும் தெரியாது. கொலை செய்தது யார் என்பதும் தெரியாது. “குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்” என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் தெரியாது.
கொலை பற்றிய புலனாய்வு நடவடிக்கைகளை மத்திய அரசே செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொண்டது, தமிழக அரசு. அப்போது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கவில்லை. தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி நடைபெற்றது.
கொல்லப்பட்ட ராஜிவ் காந்தி, இந்தியாவின் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர். சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் நடக்கவிருந்த தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றினால், மீண்டும் பிரதமராகும் வாய்ப்பைக் கொண்டிருந்தவர். (காங்கிரஸ் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் கூறியிருந்தன)
இதனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம், நாட்டின் மிக முக்கியமான குற்றவியல் நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளை, நாடு முழுவதுமே கூர்ந்து கவனிக்கும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதனால், யாருடைய கையில் புலனாய்வை ஒப்படைப்பது என்ற விவாதம் மத்திய அரசு அதிகார மட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.
மே மாதம் 22ம் தேதி, காலை 11 மணி.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகரில் இருந்த ஒரு இல்லத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டார், மத்திய பாதுகாப்புப் படையின் அன்றைய இயக்குநர் ஜெனரல் கே.பி.எஸ்.கில். அப்போது, கொலை நடைபெற்று கிட்டத்தட்ட 12 மணி நேரமாகியிருந்தது.
தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்ட இல்லம், தென்னக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் (ஐ.ஜி.) குவாட்டர்ஸ். அந்த இல்லத்தில் வசித்தவர், டி.ஆர். கார்த்திகேயன். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழர். தென்னக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமையகம் ஹைதராபாத்தில்தான் அப்போது இருந்ததால், அதன் ஐ.ஜி. கார்த்திகேயனும் ஹைதராபாத்தில் வசிக்க வேண்டியிருந்தது.
மத்திய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரலின் அழைப்பு வரும் முன்னரே, ராஜிவ் காந்தி தமிழகத்தில் வைத்துக் கொல்லப்பட்ட சேதி, பத்திரிகைகள் வாயிலாக கார்த்திகேயனுக்குத் தெரிந்திருந்தது.
இதனால், அவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்தைப் புலனாய்வு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், புலனாய்வுக்காக, சி.பி.ஐ.யின் ஒரு பகுதியாக சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட் உள்ளதாகத் தெரிவித்தார்.
“சிறப்புப் புலனாய்வுக்கு குழுவுக்கு உங்களையே தலைவராக நியமிக்க சி.பி.ஐ. விரும்புகிறது. உங்களுக்குச் சம்மதமா?” என்று கேட்டார்.
தயங்கிய கார்த்திகேயன், இது பற்றி யோசிக்க அவகாசம் கேட்டார். அத்துடன் அந்த தொலைபேசி உரையாடல் முடிவுக்கு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் கார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்தவர் சி.பி.ஐ.யின் அன்றைய இயக்குநர் விஜய் கரன். அவரும், இதையே வலியுறுத்தினார்.
“மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகிய இரு தலைவர்களும் கொல்லப்பட்டபோது, கொலையாளிகள் சம்பவ இடத்திலேயே கைது பிடிபட்டனர். இதனால், சாட்சியங்கள் திரட்டுவதும் புலனாய்வு மேற்கொள்வதும் சற்று எளிதாகவே இருந்தது. ஆனால், ராஜிவ் காந்தி கொலை அந்த மாதிரியானதல்ல. கொலையாளிகள் யார் என்ற அடையாளமே தெரியவில்லை” என்று, கார்த்திகேயனிடம் தெரிவித்திருந்தார்.
இந்த உரையாடலின்போது ஒரு முக்கிய விஷயத்தையும் தெரிவித்தார், சி.பி.ஐ.யின் அன்றைய இயக்குநர் விஜய் கரன். “ராஜிவ் காந்தியைக் கொலை செய்தது யார் என்பதையோ, அதில் ஏதாவது அமைப்புக்கு சம்மந்தம் உள்ளதா என்பதையோ பற்றிய ஊகங்களைக் கூட, நமது உளவு அமைப்புகளால் தர முடியவில்லை” என்பதே அந்த முக்கிய விஷயம்.
ஆனால் அதே தினத்தில், அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த சுப்ரமணியம் சுவாமி, “விடுதலைப் புலிகள் அமைப்பால்தான் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்” என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்! அதைவது, இந்திய உளவு அமைப்புகளால் ஊகம்கூட செய்ய முடியாத ஒரு விஷயம், சுப்ரமணியம் சுவாமிக்குத் தெரிந்திருந்தது!
இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் சம்மதித்தார் டி.ஆர். கார்த்திகேயன்.
மறுநாளே, ஹைதராபாத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்ட கார்த்திகேயன், மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் போய் இறங்கினார். (சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்ட முறையான அறிவிப்பு இந்திய அரசாங்கத்திடமிருந்து மே 24ம் தேதிதான் வெளியானது. அதற்கு ஒரு தினம் முன்னரே சென்னை சென்று விட்டார் அவர்)
இது நடைபெற்ற காலப்பகுதியில், தமிழக காவல்துறையின் தலைவராக இருந்தவர் பி.பி. ரங்கசாமி. ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒட்டுமொத்தப் பொறுப்பு அதிகாரியான (ஐ.ஜி.) இருந்தவர், ஆர்.கே. ராகவன். இவர்கள் இருவரும், காவல்துறை தடய அறிவியல் நிபுணர்களுடன் சேர்ந்து, குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் சில தடயங்களை ஏற்கனவே சேகரித்திருந்தனர்.
சென்னையில், சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிரதான அலுவலகமாகச் செயற்பட, தமிழக அரசு, ‘மல்லிகை’ என்ற அரசு மாளிகையை ஒதுக்கிக் கொடுத்தது.
‘மல்லிகை’ நீண்ட காலமாகப் பூட்டிக் கிடந்ததால் மோசமான நிலையில் இருந்தது. அலுவலகத்திற்காகவோ, குடியிருப்பதற்காகவோ இந்தக் கட்டடத்தை எவரும் விரும்பாத காரணத்தாலேயே அப்படி இருந்தது. காரணம், அதற்கு முன் அங்கு குடியிருந்தவர்கள், ராசியில்லாத கட்டடம் என்று அதை ஒதுக்கி விட்டிருந்தனர்.
ராசியில்லாத ‘மல்லிகையில்’ இருந்தே இயங்கத் தொடங்கியது, ராஜிவ் காந்தி கொலையைத் துப்பறிய நியமிக்கப்பட்ட, சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழு.
இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்படுவதற்கு முன், தமிழக தடய அறிவியல் சோதனைக் கூடத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ராஜிவ் காந்தி கொலை நடந்த இடத்தை அலசியிருந்தனர். அந்த நாட்களில் தமிழக தடய அறிவியல் துறையின் இயக்குநராக இருந்தவர் பேராசிரியர் டாக்டர் பி. சந்திரசேகர்.
கொலை நடைபெற்ற இடத்தில் கிடைத்த முதல் நிலைத் தடயங்களைக் கைப்பற்றியிருந்த அவர்கள், அவற்றை ஆராய்ந்து ஒரு பிரீலிமினரி ரிப்போர்ட்டைத் தயாரித்திருந்தனர். இந்த ரிப்போர்ட், சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் கொடுக்கப்பட்டது. அதுதான், ராஜிவ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவின் கைகளில் கிடைத்த முதலாவது ஆவணம்.
இந்த ஆவணத்தில், முக்கியமாக இருந்தவை, ராஜிவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய இவர்களது ஆய்வுகள். அந்த ரிப்போர்ட் என்ன சொன்னது?
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு, அவரது உடல் வீழ்ந்து கிடந்த இடத்துக்கு அருகே, கந்தலாகிப் போன நீல நிறத் துணி ஒன்று காணப்பட்டது. அந்தத் துணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன் காரணம், குறிப்பிட்ட நீலத் துணியுடன் மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததை தடய அறிவியல் நிபுணர்கள் அவதானித்தனர்.
இந்த நீல நிறத் துணி லேப்புக்கு கொண்டு செல்லப்பட்டு ஆராயப்பட்டது. அப்போது, அது ஒரு துணி பீஸ் அல்ல என்பது தெரியவந்தது. வெளிப்பார்வைக்கு ஒரே துணிப் பகுதி போலத் தெரிந்த அது, 3 அடுக்குகளாக, ஒரு வெள்ளைத் துணி, அதற்கு மேல் 2 நீல நிறத்துணிகள் என்று, ஒரு ‘துணி பெல்ட்’ போல தைக்கப்பட்டிருந்தது.
துணி பெல்ட்டை ஒட்டுவதற்காக டேப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மின் ஒயர்கள் துணிக்குள் மறைந்து இருக்கும் படியாக தைக்கப்பட்டிருந்தன. துணி பெல்ட்டுடன், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத் துணித் துண்டுகளும், ப்ராவின் ஒரு பகுதியும் ஒட்டிய நிலையில் காணப்பட்டன. அத்துடன், துணியுடன் மனிதச் சதைத் துண்டும் காணப்பட்டது.
அங்கே கிடைத்த துணித் துண்டுகளை ஒன்றிணைத்துப் பார்த்தபோது, இடுப்பு பெல்டுடன் கூடிய ‘வெஸ்ட் ஜாக்கெட்’ என்பது தெரியவந்தது.
இவ்வளவு விபரங்களும் கிடைத்ததில் இருந்து, வெடித்த குண்டு, ஒரு பெண்ணின் உடலில் இணைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்திருந்தது. அந்தப் பெண் கொல்லப்பட்ட நேரத்தில், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான ஆடை அணிந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் வரக்கூடியதாக இருந்தது.
சம்பவ இடத்தில் உயிரிழந்த 15 பேரில், ஒரு பெண்ணின் உடல் மாத்திரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அவரது உடல் பகுதி கிட்டத்தட்ட முழுமையாக சிதறி விட்டிருந்தது. வலது கை குண்டுவெடிப்பில் துண்டு துண்டாகப் பிரிந்து சற்றுத் தொலைவில் கிடந்தது. பிரிந்து கிடந்த உடல் உறுப்புகளில் ‘சிறு குண்டுகள்’ பாய்ந்த ஓட்டைகளும், தீயில் கருகிய அடையாளங்களும் காணப்பட்டன.
சிதறிக்கிடந்த உடல் உறுப்புகள் மீது ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத் துணித் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருந்தன.
சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளும், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரியின் சில பகுதிகளும், எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுக்கான வெள்ளை நிற ஒயர்களும், 2 ஸ்விட்சுகளும் கிடைத்தன.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்களிலில் இருந்து நூற்றுக்கணக்கான சிறு குண்டுகள் எடுக்கப்பட்டன. சிதைந்து கிடந்த உடல் உறுப்புகள் ரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உடல் உறுப்புக்களில் கிடைத்திருந்த சிறு குண்டுகளும் சோதனை செய்யப்பட்டன.
இந்தச் சோதனைகளின் முடிவில், ராஜிவ் காந்தியைக் கொல்வதற்காக வெடிக்க வைக்கப்பட்டது மிக வீரியமான பிளாஸ்டிக் வெடிகுண்டு என்பதும், அதில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருள் ஆர்.டி.எக்ஸ். என்பதும் தெரியவந்தது.
ஆர்.டி.எக்ஸ்., பொதுவாக ராணுவ ரீதியான பாவனைக்கு உபயோகிக்கப்படுவது. தமிழகம் போன்ற இடத்தில் சுலபமாகக் கிடைக்காத பொருள் அது. அதைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பதற்கு, திறமையும், பயிற்சியும் தேவை.
கிடைத்த விபரங்களில் இருந்து, வெடிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டு எந்த வகையில் செட் செய்யப்பட்டிருந்தது என்பதை, முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்திருந்தது. அதன் மெக்கானிசம், தடயவியல் நிபுணர்களை திகைக்க வைத்தது.
சுமார் அரை கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். அடங்கிய வெடிகுண்டு, இடுப்பு பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்டு, வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் பத்தாயிரம் சிறு குண்டுகள் கலக்கப்பட்டிருந்தன. சிறு குண்டுகள் ஒவ்வொன்றும் ஒரேயளவாக, 0.2 மில்லி மீற்றர் விட்டம் கொண்டவையாக இருந்துள்ளன. வெடிகுண்டுடன் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் டெட்டனேட்டருடன், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரி, 2 சுவிட்சுகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.
ஒரு சுவிட்சை அழுத்தியதும் பலத்த ஓசை, தீப்பிளம்புடன் குண்டு வெடிக்கும். அத்துடன் பத்தாயிரம் சிறு குண்டுகளும் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்து, எதிரில் இருப்போரின் உடல் பூராவும் ஊடுருவிவிடும். ஒரே இடத்தில் தாக்காமல், இருதயம், நுரையீரல், மூளை என்று மனித உடலின் முக்கிய பாகங்கள் அனைத்திலும் சிறு குண்டுகள் வேகமாகத் துளைத்துச் செல்லதால், உடனடி மரணம் சம்பவிக்கும்.
இந்த ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டை, ஒரு பெண் தனது உடையில் மறைத்து வந்து எளிதாக இயக்கியுள்ளார்.
ராஜிவ் காந்திக்கு முன்னே வந்த அந்தப் பெண், ராஜிவ் நின்றிருந்த இடத்தில் இருந்து, நேருக்கு நேராக தன்னை நிறுத்திக் கொண்டதை முதலில் உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும்.  அதன்பின், வெடிகுண்டை இயக்குவதற்கான சுவிட்சை அவர் அழுத்தியிருக்க வேண்டும்.
நேருக்கு நேராக நின்று இயக்கப்பட்டதால், அந்தக் குண்டு ராஜிவ் காந்தியின் முகத்திலும், நெஞ்சுப் பகுதியிலும் வெடிக்கும் வகையில் இருந்துள்ளது. ராஜிவ் காந்தியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் சிசிலியா சிரில், அவரது உடலில் 22 காயங்கள் காணப்பட்டதாகக் கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தியின் போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட் கூறுவது என்ன என்பது, அடுத்த பராவில் தரப்பட்டுள்ளது. சென்சிட்டிவ்வான வாசகர்கள், அதைப் படிப்பதைத் தவிர்க்கவும்.
ராஜிவ் காந்தியின் மண்டை ஓடு வெடித்து, உட்பகுதி பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றிருந்தது. மூளைப்பகுதி, முகத்தின் தசைகள், உதடு, மூக்கு, இரு கண்கள் ஆகியவை சேதமடைந்திருந்தன. தாடை எலும்புகள் நொறுங்கியிருந்தன. கருகிப்போன மார்பில் பல இடங்களில் ஆழமான காயங்கள் காணப்பட்டன. அடிவயிற்றில் குறுக்கும் நெடுக்குமாகக் கண்டபடி கீறல்கள் இருந்தன. ஈரலும், வயிற்றின் உட்பகுதிகளும் அப்படியே வெளியே வந்துவிட்டன. இடது புற நுரையீரலைக் காணவில்லை. வலது கைப் பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சிதைந்திருந்தன. உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடல் முழுவதும் சிறு குண்டுகள் பாய்ந்திருந்தன.அத்தியாயம் 08
மே மாதம், 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்தது. அந்த நிமிடத்திலிருந்து  தமிழக போலிசாரிடமிருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்குப் புலனாய்வுப் பணியை அதிகாரபூர்வமாக சி.பி.ஐ. தமது கரங்களில் எடுத்துக் கொண்டது.
ஆனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட 21ம் தேதி இரவு 10 மணிக்கும்,  24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கும் இடையே வழக்கு தமிழக போலிஸிடம் இருந்த காலப் பகுதியில்,   பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்று விட்டன.
சில  தடயவியல் ஆய்வுகளை தமிழக போலிஸ் செய்து முடித்திருந்தது. அத்துடன், இந்த வழக்கின் மிக முக்கிய துப்புக்கள் அடங்கிய கேமராவும் (குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஹரிபாபு வைத்திருந்த கேமரா) , அதற்குள் இருந்த பிலிம் ரோலும் சில கைகள் மாறிவிட்டிருந்தன!
வழக்கு சி.பி.ஐ.யின் கன்ட்ரோலுக்கு வந்த உடனே, தமிழக  காவல்துறை கிரைம் பிராஞ்சிலிருந்து  வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் வந்து சேர்ந்தன.
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் சிதறிக் கிடந்த பச்சை-ஆரஞ்சு வண்ண சல்வார் கமீஸ் அணிந்திருந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் பாகங்களை மார்ச்சுவரியில்  பத்திரப்படுத்தி வைத்திருந்தது,  தமிழக காவல்துறை. அவற்றையும் தம்வசம் எடுத்துக் கொண்டது சி.பி.ஐ.
அந்தப் பெண்ணின் தலை, இடது கை, 2 தொடைகள், கால்கள் ஆகிய உடல் உறுப்புகள் ஓரளவுக்கு முழுமையாக இருந்தன. அத்துடன்,  அந்தப் பெண் அணிந்திருந்த,  குண்டுவெடிப்பில்  கந்தலாகச் சிதறிப்போன துணிகளில் ஒட்டிக்கொண்டிருந்த தசைத் துண்டுகள் மற்றும்,  சிதறிய உடல் உறுப்புகள் ஆகியவையும்,  சிறிய பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவை அனைத்தையும், டி.என்.ஏ. (மரபணு) சோதனைக்காக  அனுப்ப முடிவு செய்து,  ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு அணுக்கள் உயிரியியல் மையத்துக்கு அவற்றை அனுப்பியது சி.பி.ஐ.
இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய புலனாய்வுகளின்   டி.என்.ஏ. சோதனைகளுக்காக,  ஹைதராபாத்தில் உள்ள உயிரியியல் மையத்தையே அந்த நாட்களில் அணுகுவது வழக்கம்.  இதனால் அங்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் சாம்பிள்களின் முடிவு  வந்துசேர, நீண்ட கால அவகாசம் எடுக்கும்.
இந்த கேசின் முக்கியத்துவம் குறித்து சி.பி.ஐ. ஏற்கனவே ஹைதராபாத் மையத்துடன் பேசியிருந்ததால்,  ரிசல்ட் உடனே வந்து சேர்ந்தது.
ரிசல்ட் என்ன? சிதறிய உடல் உறுப்புகளின் திசுக்களும், மின் ஒயர்கள் வைத்துத் தைக்கப்பட்ட துணியில் ஒட்டியிருந்த திசுக்களும் ஒரே நபருடையவைதான் எனச் சோதனையில் தெரியவந்தது.
அதாவது, பச்சை-ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் உடையணிந்து, கையில் சந்தனமாலை வைத்திருந்த அந்தப் பெண்தான் மனித வெடிகுண்டாக செயற்பட்டு ராஜிவ் காந்தியைக் கொன்றார் என்பது,  அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.  ஆனால் யார் அந்தப் பெண்?  அந்தப் பெண் பற்றிய எந்த அடையாளமும் (ஐடென்டிட்டி)  சி.பி.ஐ. குழுவிடம் இல்லை.
இந்த இடத்தில்தான், தமிழக போலிஸிடம் இருந்து சி.பி.ஐ. பெற்றுக் கொண்ட  ஹரிபாபுவின் கேமரா, ராஜிவ் கொலை  வழக்கில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றது.
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து  தமிழக காவல்துறை  இன்ஸ்பெக்டர் ஜெனரல்  ராகவனின் உத்தரவின்பேரில் அந்த  சினான்  கேமரா எடுத்துப் பத்திரப் படுத்தப்பட்டது என்று எழுதியிருந்தோம்.  அதன் முக்கியத்துவம் புரியாமல் அதை எடுத்த ஒரு கான்ஸ்டபிள், சிறிது நேரம் அதைக் கையில் வைத்திருந்தார்.  அதை யாரிடம் கொடுத்துப் பத்திரப் படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை.
காரணம்,  இப்படியான ஒரு தடயம் கிடைத்தால் அது தடயவியல் துறையின் ஆட்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும்.  ஆனால்,  குண்டு வெடிப்பு நடைபெற்ற பின்,  இந்த கேமரா எடுக்கப்பட்ட நேரத்தில்,  தடயவியல் துறையின் ஆட்கள் யாருமே அங்கு வந்திருக்கவில்லை.
கேமராவைச் சிறிது நேரம் தனது கையில் வைத்திருந்த கான்ஸ்டபிள், அதை  யாரிடம் கொடுத்தார் தெரியுமா? குண்டு வெடிப்பை போட்டோ எடுப்பதற்காக வந்திருந்த போலிஸ் போட்டோகிராபரிடம்! (கிடைத்தது கேமரா.  இவர் டிப்பார்ட்மென்ட் போட்டோகிராபர் என்ற லாஜிக்கில் கொடுத்திருக்கலாம்)
கேமராவில் அடங்கியிருந்த போட்டோக்களின் முக்கியத்துவமும் தெரிந்து, அது சரியான கைகளிலும் கொடுக்கப்பட்டிருந்தால், இந்த கேமரா  பலத்த பாதுகாப்புடன் தடயவியல் துறை லேப்புக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.  ஆனால்,  போலிஸ் போட்டோகிராபர்,  கேமராவை  தனது பையில் போட்டுக்கொண்டு, தனது வேலையில் மூழ்கி விட்டார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் எடுக்க வேண்டிய போட்டோக்கள் அனைத்தையும் எடுத்து முடித்தபின்,  வீட்டுக்கு கிளம்பினார்  போலிஸ் போட்டோகிராபர்.  போகும் வழியில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கேமராவின் நினைப்பு வரவே, அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக  அருகில் உள்ள போட்டோ  ஸ்டுடியோ ஒன்றுக்குள் நுழைந்தார்.
இது நடைபெற்றது 1991ம் ஆண்டு!  அந்த நாட்களில் தற்போது உள்ளதுபோல டிஜிட்டல் கேமராக்கள் ஏதும் கிடையாது. பிலிம் போட்டு படம் எடுக்கும் கேமராக்கள்தான் இருந்தன.  அவற்றினால் எடுக்கப்பட்ட போட்டோக்களை,  டெவலப் பண்ணி பிரின்ட் போட்டுக் கொடுக்க போட்டோ ஸ்டூடியோக்கள் ஆங்காங்கே இருந்தன.
அந்த நாட்களில் கலர் போட்டோ என்பதும் பெரிய விஷயம். இதனால், தமிழகத்தில் இருந்த அநேக போட்டோ ஸ்டூடியோக்கள், கறுப்பு-வெள்ளை பிலிமையே டெவலப் பண்ணும் வசதி பெற்றிருந்தன.  கலர் போட்டோ டெவலப் செய்ய பெரிய ஸ்டூடியோக்களுக்கு செல்ல வேண்டும்.
போலிஸ் போட்டோகிராபர் சென்ற உள்ளூர் ஸ்டுடியோவில், கலர் பிலிம்  டெவலப் செய்ய இயலாது என்று அந்த ஸ்டுடியோக்காரர், சொல்லிவிட்டார்.  டார்க் ரூமில் வைத்து பிலிம் ரோலை திறந்து பார்த்த ஸ்டுடியோக்காரர்,  அந்த பிலிம் ரோலில்  சில பகுதிகள்  வெளிச்சம் பட்டு வீணாகப் போய்விட்டன என்று தெரிவித்தார்.
அதன்பின்,  வெளிச்சம் பட்ட  பகுதியைக் கத்தரித்துவிட்டு, எஞ்சிய பிலிம் ரோலை  போலிஸ் போட்டோகிராபரிடம் அளித்தார்.
கேமராவும், பிலிம் ரோலும் மீண்டும்  போலிஸ் போட்டோகிராபருடன்  பயணித்தது.  லோக்கல் போலிஸ் ஸ்டேஷனில் விசாரித்தபோது, அதை தடய அறிவியல் துறை லேபில் ஒப்படைத்து விடும்படி  கூறினார்கள். ஆனால், அதுவும் உடனே அனுப்பப்படவில்லை.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதை அடுத்து,  இந்தியா முழுவதும் சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும், பல இடங்களில், கடையுடைப்புகள்,  தீவைப்புகள் என்று பதட்டமான நிலை இருந்தது.  காவல்துறை இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியிருந்தது.  அதனால்,  இந்த கேமராவை யாரும் கவனிப்பாரில்லை.
கொலை நடைபெற்ற மறுநாள்,  கொலையாளி யார் என்ற கேள்வியே இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஊடகங்கள் முதல், காவல்துறை வரை அனைவரும்,  கொலையாளி யார் என்று அறிய  தலைகீழாக முயன்றுகொண்டிருந்தார்கள்.  டில்லியிலுள்ள மத்திய அரசும் இதே கேள்வியுடன்,  தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையே இந்த அத்தியாயத்துடன் தொடர்பற்ற மற்றொரு விஷயத்தையும் ஓரிரு வரிகளில் கூறுகிறோம். இதே கேமராவை வேறு சிலர் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தனர்!  அவர்கள், ராஜிவ் காந்தி கொலையைத் திட்டமிட்ட ஆட்கள்.
கொலை நடைபெற்ற இடத்தில் நடப்பவற்றை போட்டோ எடுக்க அவர்களால் அனுப்பப்பட்ட ஹரிபாபுவும்  குண்டு வெடிப்பில் எதிர்பாராமல் இறந்து, கேமராவும் கொலை நடந்த இடத்தில் சிக்கி்க் கொள்ளவே அவர்கள் உஷாராகினர். அந்த கேமராவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று ஆட்களை அனுப்பி வைத்தனர்.  அவர்களால் அனுப்பப்பட்ட ஆட்களுக்கு,  இந்த கேமரா எங்கே போனது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
இவர்கள் அனைவருக்கும் பதில் கொடுக்கக்கூடிய கேமராவும் பிலிம் ரோலும்,  தமிழக காவல்துறையின் ஸ்டோரேஜ்  தட்டு ஒன்றில்  தூங்கிக் கொண்டிருந்தது.
மே 23ம் தேதி பிற்பகல் வரை, அந்த பிலிம் ரோல் தமிழகத் தடய அறிவியல் லேபுக்கு போய்ச் சேரவில்லை.
ஒருவழியாக லேபுக்கு போய்ச்சேர்ந்த பிலிம்ரோல், 23ம் தேதி  மாலையில் டெவலப் செய்யப்பட்டது. முதலில் பிரிண்ட் செய்யப்பட்ட புகைப்படங்கள் சீலிடப்பட்டு, சோதனைக் கூடத்திலேயே வைக்கப்பட்டன. மொத்தம் 10 போட்டோக்கள்  இருந்தன.
இந்த போட்டோக்களின் முக்கியத்துவம்,  லேபில் இருந்த ஒருவருக்குத்தான் முதலில் தெரிய வந்தது.
ஆனால், அதை காவல்துறை மேலதிகாரிகளுக்கு உடனே அறிவிக்க முடியாதபடி, அப்போது இரவாகிவிட்டது. இதனால், மறுநாள் காலையில்தான் இந்த போட்டோக்கள், மேலதிகாரிகளின் கைகளை முதல் முறையாகச் சென்றடைந்தன.

ஹிந்து பத்திரிகையில் வெளியான ‘எடிட் செய்யப்பட்ட’ போட்டோ
இந்த இடத்தில் யாரும் எதிர்பாராத மற்றொரு திருப்பம்!
அன்று இரவோடு இரவாக, இந்த போட்டோக்கள் லேபிலிருந்து வெளியே வந்தன.  அவை போய்ச் சேர்ந்த இடம், சென்னையிலிருந்த  ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையின் அலுவலகம்!
மறுநாள் காலை ஹிந்து பத்திகையின் முதல் பக்கத்தில் இந்த போட்டோதான், பரபரப்பான டாபிக்!
பத்திரிகையில் பிரசுரமான போட்டோவில், கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண் ஒருவர்,  கையில் சந்தன மாலையுடன் நிற்கிறார். அவருக்கு இருபுறமும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் லதா கண்ணனும், அவரது மகள் கோகில வாணியும் (கோகிலா)  நின்றிருந்தனர்.
அந்தப் படத்துக்காக ஹிந்து பத்திரிகை கொடுத்திருந்த  விளக்கத்தில் “ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜிவ் காந்தி வருகைக்காக மாலையுடன் காத்திருந்த இளம்பெண்தான் கொலையாளி எனச் சந்தேகிக்கப்படுகிறது!” என்று பிரசுரமாகியிருந்தது.

இதுதான் ஒரிஜினல் போட்டோ. மூவரிடமிருந்து சற்று விலகியே சிவராசன் நிற்கிறார்
அத்துடன், சல்வார் கமீஸ் பெண்ணின் உடல் உறுப்புகள் சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு படமும் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அந்தப் படத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.
ஹிந்து பத்திரிகையில் வெளியான முதலாவது போட்டோ பற்றிய முக்கிய விஷயம் ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஹிந்துவில் பிரசுரிக்கப்பட்ட  போட்டோவில்,  சல்வார் கமீஸ் பெண்,  காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் லதா கண்ணன், அவரது மகள் கோகிலா ஆகியோரே இருந்தனர்.
அதன் ஒரிஜினல் போட்டோவில், வேறு ஒருவரும் இருந்தார்.  இந்த மூவருக்கும் சற்று தொலைவில்,  குர்தா பைஜாமா அணிந்திருந்த நபர் ஒருவர் நிற்பது ஒரிஜினல் போட்டோவில் இருந்தது. அவர்தான் சிவராசன்.
‘ஒற்றைக் கண் சிவராசன்’ என்று பின்னாட்களில் அறியப்பட்டவர்.  ராஜிவ் கொலைத் திட்டத்தின் சூத்ரதாரியும், அதை நிறைவேற்றி வைத்தவரும் இவர்தான் என்கிறது புலனாய்வு அறிக்கை.  இவரைப் பிடிப்பதற்குத்தான், சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, பின்னாட்களில் மிகவும் கஷ்டப்பட்டது.  அவர்களது கைகளில் அகப்படும் முன்னர் சிவராசன் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்.
ஹிந்து பத்திரிகை முதல்முதலில் இந்த போட்டோவை வெளியிட்டபோது, அதிலிருந்த சிவராசன் யார் என்பதோ, அவருக்கு உள்ள முக்கியத்துவமோ,  யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
குறிப்பிட்ட போட்டோவை ஹிந்து பத்திரிகையில் லே-அவுட் செய்யும் ஒருவரிடம் கொடுத்து,  அதை முதல் பக்கத்தில் பிரசுரிக்கும்படி கூறினார் அலுவலகத்திலிருந்த உதவி ஆசிரியர் ஒருவர். லே-அவுட் செய்பவர் போட்டோவைப் பார்த்தார். அதில் மூன்று பெண்கள் நெருக்கமாக நிற்கின்றனர்.  இந்த மூவருக்கும் சற்று தொலைவில்,  குர்தா பைஜாமா அணிந்திருந்த நபர் ஒருவர் நிற்கிறார்.
படம் அழகாக பிரசுரமாக வேண்டும் என்பதே லே-அவுட் செய்பவரின் ஒரே குறிக்கோள். அவர் என்ன செய்தாரென்றால், போட்டோவில் விலகி நின்றிருந்த குர்தா பைஜாமா அணிந்திருந்த நபரை படத்திலிருந்து வெட்டிவிட்டு, லே-அவுட் செய்தார்! அதுவே பத்திரிகையிலும் பிரசுரமானது!
போட்டோக்களை புலனாய்வு உயரதிகாரிகள் பார்ப்பதற்கு முன்பே, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே, ஒரு போட்டோ ஹிந்து நாளிதழில் வெளியானது, புலனாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது!
அத்தியாயம் 09
ராஜிவ் கொல்லப்படுவதற்கு சற்று முன், அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ (கடந்த அத்தியாயம்), ஹிந்து நாளிதழில் வெளியானதுதான், இந்த கொலை வழக்கில் ஏற்பட்ட முதலாவது திருப்பம். சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கும் முன்பே, போட்டோ வெளியாகிவிட்டது.
ராஜிவ் காந்தியின் வருகைக்காக மூன்று பெண்கள் காத்து நிற்கும் அந்த போட்டோ வெளியானது, சி.பி.ஐ.யை உலுக்கித்தான் விட்டது. அந்த போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தனர். இதனால், போட்டோவின் முக்கியத்துவம் உடனடியாக உணரப்பட்டது.
தமிழக காவல்துறையினரிடமிருந்த 10 போட்டோக்களின் நெகட்டிவ் பிலிம் ரோல்களையும், போட்டோ எடுக்க உபயோகிக்கப்பட்ட கேமராவையும் பெற்றுக் கொண்டது சி.பி.ஐ.
தமக்குக் கிடைத்த போட்டோக்களை சி.பி.ஐ. ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்கியது.
முதலாவது போட்டோவில், லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே, யார் என்று அடையாளம் காணப்படாத பெண், நின்றிருந்தார். மனித வெடிகுண்டு என்று ஹிந்து பத்திரிகையால் சந்தேகம் கிளப்பி விடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சற்று தொலைவில், பைஜாமா-குர்தா அணிந்த மற்றொரு நபர் நின்றிருந்தார்.
போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் இறந்துவிட்டனர். ஆனால், அதில் நின்றிருந்த நான்காவது நபரான ஆண், சம்பவம் நடந்த இடத்தில் இறந்து போனவர்கள் பட்டியலில் இல்லை. காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும்  அவர் காணப்படவில்லை. யார் அந்த நபர்?
பிலிம் ரோலில் இருந்த முதலாவது போட்டோவே, இரு முக்கிய மர்மங்களை ஏற்படுத்தி விட்டது.
லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே நின்றிருந்த பெண், மற்றும் அதே போட்டோவில் இருந்த ஆண் ஆகிய இருவரின் அடையாளமும் தெரியவில்லை என்பது முதலாவது மர்மம். அந்த ஆண், கொல்லப்பட்ட மர்மப் பெண்ணுடன் தொடர்புடைய நபரா? இது, இரண்டாவது மர்மம்.
கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், இந்த முதலாவது போட்டோவை ஹோல்டில் வைத்துக்கொண்டு, மற்றைய ஒன்பது போட்டோக்களையும் ஆராய்ந்தது சி.பி.ஐ.
இரண்டாவது போட்டோவில், பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியில் இருந்தவர்கள் காட்சியளித்தனர்.
மூன்றாவது போட்டோவில் சினிமா இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் ஆதரவாளரும், காண்ட்ராக்டருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த மூன்று போட்டோக்களும், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தன.
நான்காவது போட்டோவிலிருந்து எட்டாவது போட்டோ வரையில், ராஜிவ் காந்தி வருகை, பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தது, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ராஜிவ் காந்திக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்தது ஆகியவை காணப்பட்டன.
ஒன்பதாவது போட்டோவில், ராஜிவ் காந்தியிடம் கோகிலவாணி (கோகிலா) கவிதை வாசித்துக் காண்பிப்பது பதிவாகியிருந்தது. அது நடைபெற்ற ஓரிரு நிமிடங்களிலேயே குண்டு வெடித்திருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.
அந்த வகையில், ராஜிவ் காந்தியை கடைசியாக உயிருடன் எடுக்கப்பட்ட போட்டோ, அந்த ஒன்பதாவது போட்டோதான்!
இந்த போட்டோவில், பச்சை, ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் பெண், ராஜிவ் காந்தியை நோக்கி நகர்ந்து வந்தது தெரிந்தது.
பத்தாவது போட்டோ, குண்டுவெடிப்பையே காட்டியது.
ராஜிவ் காந்தியும், மற்றையவர்களும் உயிரிழந்த அந்த விநாடி, ஹரிபாபுவின் கேமராவில் பத்தாவது போட்டோவாகப் பதிவாகியிருந்தது. அந்த விநாடியில், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஹரிபாபுவும், அவரது கேமரா பதிவு செய்த அதே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.
எனவே, அதுதான் அந்த பிலிம்ரோலில் இருந்த இறுதிப் படம்.
ராஜிவ் கொலை சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன. அது நடைபெற்ற காலத்தில், தற்போது உள்ளதுபோல, எல்லோருடைய கைகளிலும் கைக்கடக்கமான கேமராக்கள் கிடையாது. இதனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்துக்கு முன்னால், வரிசையாக எடுக்கப்பட்ட போட்டோக்கள், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட இந்த 10 போட்டோக்களும்தான்!
பொதுக்கூட்டத்தை கவர் பண்ண வந்திருந்த பத்திரிகை கேமராமேன்கள், பிரதான மேடைக்கு அருகே, மற்றொரு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த மேடைக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பு, கூட்டத்தின் தள்ளுமுள்ளில் அறுந்து போகவே, அவர்கள் யாரும் போட்டோ எடுத்திருக்கவில்லை.
ஹரிபாபு எடுத்த போட்டோக்களைவிட, சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் இசைக்குழுவுடன் வந்த மற்றொரு போட்டோகிராபர் 6 போட்டோக்களை எடுத்திருந்தார். ஆனால், அந்த 6 போட்டோக்களில், ஒரேயொரு போட்டோ மத்திரமே குண்டு வெடிப்புக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தது. அதுவும், இசைக்குழுவின் பக்கமாக எடுக்கப்பட்டிருந்தது.
ஹரிபாபு எடுத்த போட்டோக்கள், ராஜிவ் காந்தியையும், அவருடன் கொல்லப்பட்டவர்களையும், குண்டு வெடித்த சரியான இடத்தையும் மையப்படுத்தி, ‘குண்டு வெடிக்கப் படுவதற்கு முன்பே’ எடுக்கப்பட்டிருந்தன. இதனாலேயே, இந்த போட்டோக்கள் புலனாய்வாளர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பின.
இந்த போட்டோக்களில் இருப்பவர்கள் பற்றி தெரிய வேண்டுமானால், குண்டு வெடித்த அந்த நிமிடத்தில், ஸ்பாட்டில் இருந்த மற்றையவர்களிடம் விசாரிக்க வேண்டும். அந்த இடத்தில் மிக அருகில் நின்றிருந்தவர்களில் குண்டுவெடிப்பில் இறந்து போகாதவர்கள், நிச்சயம் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பார்கள் என்ற கோணத்தில் இதை அணுகியது, கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு.
சிறப்புப் புலனாய்வுக்குழுவைச் சேர்ந்த ஒரு அணியினருடன், கார்த்திகேயனும் சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குதான், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்த அதிஷ்டம், அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தவர்களில் ஒருவராக இருந்தார், அனுசுயா.
ராஜிவ் காந்தியின் பொதுக்கூட்டத்துக்காக பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு, ஸ்பாட்டில் நின்றிருந்த சப் இன்ஸ்பெக்டர்  அனுசுயா பற்றி, கடந்த அத்தியாயங்களில் எழுதியிருந்தோம். அதில், ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்:
….கோகிலாவுக்கு பின்னால் நின்றிருந்த கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், ராஜிவ்காந்தியை நோக்கி அடியெடுத்து வைத்தார். வரிசையில் நிற்காமல், பின்னாடி நின்றிருந்த பெண் ஒருவர் மாலையுடன் முன்னே வருவதைக் கவனித்து விட்டார்  சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா. உடனே வேகமாகச் செயற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க முயன்றார்.
சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா செய்ய முயன்றதைச் செய்திருந்தால், அன்று கதையே மாறியிருக்கும். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது. கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க வேண்டாம் என ராஜிவ்காந்தி சைகை காட்டினார்.
ஒரு கணம் தாமதித்த அனுசுயா, ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, அந்தப் பெண்ணைத் தடுக்காமல் இரண்டு அடிகள்  பின்னால் எடுத்து வைத்து, நின்று கொண்டார்.
அடுத்த நிமிடமே, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், மனித வெடிகுண்டாக மாறி வெடித்துச் சிதறினார்!
நாம் முன்பு குறிப்பிட்ட அதே அனுசுயாதான் இவர். ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, மனித வெடிகுண்டாக வந்த பெண்ணில் இருந்து விலகி இரண்டு அடிகள்  பின்னால் எடுத்து வைத்து, நின்று கொண்ட காரணத்தாலேயே உயிர் தப்பியிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா.
ஆனால், குண்டுவெடிப்பில் படுகாயமடைந்திருந்தார்.
சென்னை, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த அவரது முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. வலது கையில் 3 விரல்களை இழந்துவிட்ட நிலையில் காணப்பட்டார் அவர்.
அப்படியிருந்தும் அவரால், நடந்த சம்பவங்களைத் தெளிவாகவும், கோர்வையாகவும் கூறக்கூடியதாக இருந்தது. அது போலிஸ் பயிற்சியில் பெற்ற அவரது உஷார் தன்மை காரணமாக இருக்கலாம்.
ஹரிபாபு எடுத்த முதல் போட்டோவை அவரிடம் காட்டினார் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன். அந்த போட்டோவில் இருப்பவர்கள் பற்றி அனுசுயாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டார்.
சம்பவ இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்குச் சற்று முன்னர்தான், பைஜாமா-குர்தா அணிந்த நபரும், சல்வார் கமீஸ் பெண்ணும், இளம் போட்டோகிராபரும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாக அனுசுயா நினைவு கூர்ந்தார்.
இதில் சந்தேகம் உள்ளதா என்று, அவரிடம் மீண்டும் மீண்டும் அதுபற்றிக் கேட்கப்பட்டது.  அப்போதும் அவர் தான் கூறிய தகவலை உறுதிப்படுத்தினார்.
புலனாய்வின் முக்கியக் கட்டத்தில், அனுசுயா தெரிவித்த இந்த தகவல்தான், அதுவரை குழப்பமாக, வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்த புலனாய்வை, ஒரு திசையில் திருப்பியது.
அனுசுயா தெரிவித்த தகவலில் இருந்து,  மனித வெடிகுண்டாக வந்து வெடித்த சல்வார் கமீஸ் பெண்ணும், பைஜாமா-குர்தா அணிந்த நபரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டது புலனாய்வுக் குழு. அவர்களால் அழைத்து வரப்பட்ட நபர்தான், போட்டோகிராபர் ஹரிபாபு என்பதும் புரிந்தது.
இதுதான் ராஜிவ் கொலை வழக்கில் கிடைத்த முதலாவது பிரேக்கிங் பாயின்ட்.
இதற்கிடையே, ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று கூறினோமல்லவா? அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகையில் பார்த்த சென்னை பத்திரிகையாளர் ஒருவர், அதிர்ந்து போனார். காரணம், அவருக்கு அது தொடர்பாக மற்றொரு முக்கிய விஷயம் தெரிந்திருந்தது.
உடனே, புலனாய்வுக் குழுவினரைத் தொடர்பு கொண்டார் அந்த பத்திரிகையாளர். அவர் கூறிய தகவல், கேஸின் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியது!அத்தியாயம் 10

• இந்த ஒரு பதில்தான், ராஜிவ் கொலை வழக்கில் புலிகளை உள்ளே கொண்டுவந்தது.  இந்தப் பதில் வந்திராவிட்டால், கேஸ் வேறு விதமாகப் போயிருக்கும்! ஒருவேளை புலிகளில் சம்மந்தம்கூட தெரிய வந்திராது!

ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை,  ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று கடந்த அத்தியாயம் ஒன்றில்   (கடந்த அத்தியாயங்களை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்)  கூறினோமல்லவா? அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகையில் பார்த்த சென்னை பத்திரிகையாளர் ஒருவர், அதிர்ந்து போனார்.
காரணம், அவருக்கு அந்த போட்டோவில் இருந்த ஒருவர்  தொடர்பாக முக்கிய விஷயம் தெரிந்திருந்தது.
ஹிந்து பத்திரிகை,  முதலில் தனக்கு கிடைத்த போட்டோவை எடிட் செய்து,  மூன்று பெண்கள் மாத்திரமே போட்டோவில் இருக்கும்படி வெட்டி,  லே-அவுட் செய்திருந்தது.  ஆனால்  மறுநாள்,  ஹிந்து ஆசிரியர் குழு என்ன நினைத்தார்களோ, எப்படி ஊகித்தார்களோ தெரியாது, அதே போட்டோவை வெட்டாமல், முழுமையாக பிரசுரித்திருந்தது.
இரண்டாவது நாள் பிரசுரித்த முழுப் படத்துக்கான விளக்கத்தில்,  “முன்று பெண்களில் இருந்து சற்றே தள்ளி நிற்கும் குர்தா- பைஜாமா நபர் யார்?”  என்றும்  கேள்வி எழுப்பியிருந்தது.
இரண்டாவதாக பிரசுரமான  போட்டோவில், மூன்று பெண்களில் இருந்து சற்றே தள்ளி நின்ற  குர்தா- பைஜாமா நபர்  பற்றியே இந்த சென்னைப் பத்திரிகையாளருக்கு தெரிந்திருந்தது.  (குர்தா- பைஜாமா நபர்தான், பின்னாட்களில் சிவராசன் என்று அறியப்பட்டவர்)
தகவல் தெரிந்தவர் ஒரு பத்திரிகையாளர் என்பதால், யாரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விஷயம் அவருக்குத் தெரிந்திருந்தது.  இதனால் அவர், லோக்கல் போலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளாமல், நேரே ‘மல்லிகை’யில் இருந்த சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவின் அலுவலகத்தை, போனில் தொடர்பு கொண்டார்.
“ஹிந்து பத்திரிகையில் வெளியாகியுள்ள புகைப்படத்திலுள்ள நபரை நான் சந்தித்திருக்கிறேன்.  அதுவும், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே தினத்தில், குண்டுவெடிப்பு நடந்த அதே மைதானத்தில் வைத்து அவரைச் சந்தித்திருக்கிறேன்” என்று போனில் தெரிவித்தார்,  இந்த பத்திரிகையாளர்.
இந்தத் தகவலால் பரபரப்படைந்தது புலனாய்வுக்குழு.
காரணம், அந்த நிமிடம்வரை,  போட்டோவில் உள்ள குர்தா- பைஜாமா நபர் பற்றிய தகவல்கள் ஏதும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை. அவர் யார் என்பதை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
உடனடியாக இந்த பத்திரிகையாளரை அழைத்து விசாரித்தது கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வுக் குழு.  அந்த பத்திரிகையாளர் கூறிய தகவல்கள்தான், கேஸின் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியது!
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம்,  மிக ரகசியமாகத் திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்.  அதை திட்டமிட்டவர், குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில்  நிறைவேற்றியவர்கள், யாரையுமே, யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருந்தால்தான், அது துல்லியமான திட்டமாக இருக்கும்.
ஆனால் இங்கு நடந்ததைப் பாருங்கள்.
புலனாய்வுக் குழுவினரிடம்,  முதலாவது நபரின் அடையாளம் தனக்கு தெரியும் என்று,  வலிய வருகிறார்  ஒரு பத்திரிகையாளர்.   கொலையைத் திட்டமிட்டவர்களின் திட்டமிடலில்,  இந்தச் சறுக்கல் எப்படி ஏற்பட்டது?
இதற்கு ஒரேயொரு பதில்தான் உள்ளது. கொலையைத் திட்டமிட்டவர் (சிவராசன்) தனக்கு உதவி செய்ய பிடித்த நபர்களில் ஒருவர், பலராலும் அறியப்பட்டவர். அதுவும், பத்திரிகையாளர் வட்டத்தில் அந்த நாட்களில் ஓரளவுக்கு பிரபலமானவர்.
அவர்தான், ராஜிவ் காந்தியைக் கொல்வதற்காக சென்றவர்களால் போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்ட போர்ட்டோகிராபர் ஹரிபாபு.
ஹரிபாபுவை சென்னையில் பத்திரிகையாளர்கள் அறிவார்கள். அவர்  ஃபிரீலான்ஸ் போட்டோகிராபராக இருந்ததால், பல பத்திரிகையாளர்கள் தமது அலுவலக போட்டோகிராபர் இல்லாத தருணங்களில் போட்டோ எடுக்க  ஹரிபாபுவைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.  இந்த வகையில்தான் அவருக்கு அறிமுகம் உண்டு.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினத்தன்று  குர்தா-பைஜாமா நபர்,  தற்கொலை  குண்டுதாரியை  ராஜிவ்காந்தி பொதுக்கூட்டத்தில் பேசவிருந்த மைதானத்துக்கு அழைத்துச் சென்றபோது, ஹரிபாபுவையும் அழைத்துச் சென்றிருந்தார்.
ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் இந்த இருவரும் பொதுக்கூட்ட மைதானத்தின் ஒன்றாகக் காணப்பட்டனர்.
ராஜிவ் காந்தி அன்றிரவு கொல்லப்படவுள்ள விஷயம் தெரிந்திராத ஹரிபாபு, பொதுக்கூட்ட மைதானத்தில் நின்றிருந்த, தனக்கு அறிமுகம் இருந்த மற்றைய பத்திரிகையாளர்களை கண்டவுடன் போய்ப் பேசுவது, இயல்புதானே?
அப்படித்தான் இந்த சென்னை பத்திரிகையாளரிடமும் போய் பேசியிருக்கிறார் ஹரிபாபு.
புலனாய்வுக் குழுவினரிடம் அந்த விபரங்களைத்தான்  கூறினார்  சென்னை பத்திரிகையாளர் “போட்டோவில் உள்ள  குர்தா- பைஜாமா நபர், மைதானத்தில் ஹரிபாபுவுடன் நின்றிருந்தார்.  ஹரிபாபுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்” என்றார் பத்திரிகையாளர்.
இதைக் கேட்டதும், புலனாய்வுக் குழுவினருக்கு, தமக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைக்கப் போகின்றது என்பது புரிந்துவிட்டது. காரணம், ஹரிபாபுவும் அந்தக் குண்டுவெடிப்பில் இறந்திருந்த விஷயம் அவர்களுக்கு தெரியும். அவர் எடுத்த  10 போட்டோக்கள்தான் அப்போது இருந்த ஒரே தடயம்.
அந்த போட்டோக்களில் இருந்த குர்தா- பைஜாமா நபர், ஹரிபாபுவுக்கு முன்பே அறிமுகமானவர் என்பது தற்போது தெரிந்து விட்டது!
“ஹரிபாபு அந்த குர்தா- பைஜாமா நபரை ஏன் உங்களுக்கு அறிமுகப்படுத்தினார்?” என்ற கேள்வி புலனாய்வு அதிகாரி ஒருவரிடமிருந்து வந்தது.
“பொதுக்கூட்ட மைதானத்தில் என்னைக் கண்டவுடன் வலிய வந்து வணக்கம் சொன்னார் ஹரிபாபு. அதையடுத்து நானும் அவரும் ஓரிரு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான், அவருடன் கூடவே நின்றிருந்த குர்தா- பைஜாமா நபரை நான் கவனித்தேன். அவர் யார் என்று விசாரித்தேன்”
“அதற்கு ஹரிபாபு என்ன சொன்னார்?”
“குர்தா- பைஜாமா நபர், தனது நண்பர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.”
“அவரது பெயரைச் சொன்னாரா?”
“பெயரைச் சொல்லவில்லை.  ஆனால், வேறு ஒரு விஷயம் சொன்னார்.  குர்தா- பைஜாமா நபர்,  பிரபல போட்டோ ஸ்டூடியோ ஒன்றின் பங்குதாரர் என்று சொன்னார். அந்த ஸ்டூடியோ உரிமையாளர் எனக்கும் தெரிந்தவர்.  எனக்கு மாத்திரமல்ல, தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்தான்”
“யார் அந்த ஸ்டூடியோ உரிமையாளர்? அவரது பெயர் என்ன?”
இந்தக் கேள்விக்கு சென்னைப் பத்திரிகையாளர் கொடுத்த பதில்தான், அவரை விசாரித்துக் கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரை தூக்கிவாரிப் போட்டது. “சுபா சுந்தரம்” என்பதுதான் அந்தப் பதில்.
கேள்வி கேட்டுக் கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர், சென்னைக்காரர். சி.பி.ஐ.யின் சென்னை  அலுவலகத்தில் நீண்டகாலம் பணிபுரிந்தவர்.  அந்த வகையில் அவருக்கு, சுபா சுந்தரம்  யார் என்பது தெரிந்திருந்தது.
அவரது அதிர்ச்சிக்கு காரணம்,  சுபா சுந்தரம்,  விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்தவர் என்பது இந்த அதிகாரிக்குத் தெரியும்.
அவருக்கு எப்படி தெரியும்? அதற்கு சிறியதாக ஒரு பிளாஷ்-பேக் உண்டு.
தமிழகத்தில் ஈழ விடுதலை இயக்கங்கள் செல்வாக்காக இருந்த 1980களில், இந்திய உளவு அமைப்புகள்  அனைத்துமே (றோ,  ஐ.பி., சி.பி.ஐ., கியூ பிராஞ்ச்)  விடுதலை இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தன.  அந்த வகையில் இந்த சி.பி.ஐ. அதிகாரி பணியில் இருந்தபோது,  விடுதலைப் புலிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
அப்போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மற்றும்  பத்திரிகைத் தொடர்புகளை சென்னையில் கவனித்து வந்தவர்,  பேபி சுப்ரமணியம் (பேபி அண்ணன் என்று அழைப்பார்கள்).  அவரைத்தான், இந்த அதிகாரி சந்திக்க வேண்டியிருந்தது.
இவர் அவரைத் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட இடம் ஒன்றுக்கு வருமாறு கூறியிருந்தார். இவரும் அந்த இடத்துக்குச் சென்றுதான் அவரைச் சந்தித்தார். அதன் பின்னரும் சில தடவைகள் அதே இடத்தில் வைத்துத்தான், பேபி சுப்ரமணியத்தைச் சந்தித்தார் இந்த சி.பி.ஐ. அதிகாரி.
இவர்கள் சந்தித்த அந்த இடம், சுபா சுந்தரத்தின் போட்டோ ஸ்டூடியோ!
இந்த இடத்தில் தொடருக்கு சம்மந்தமற்ற மற்றொரு விஷயம். இங்கு குறிப்பிடப்பட்ட பேபி சுப்ரமணியம், புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின்போது (மே, 2009), வன்னியில்  உயிருடன் இருந்தார். யுத்தம் முடிவுக்கு வந்தபின்,  மக்களோடு மக்களாக இவரும் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றார் என்று சிலர் கூறுகின்றனர். அதன்பின்,  அவருக்கு என்ன ஆனது என்று தகவல் இல்லை.
சென்னைப் பத்திரிகையாளரிடமிருந்து சுபா சுந்தரத்தின் பெயர் வெளியானபோதுதான், இந்தக் கொலைக்கும், புலிகளுக்கும் தொடர்பு  இருக்கலாமோ என்ற சந்தேகம்,  சி.பி.ஐ.க்கு முதன்முதலில் ஏற்பட்டது. சென்னை பத்திரிகையாளர் கூறிய மற்றைய தகவல்கள் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தின.
இதோ அவர் தெரிவித்த தகவல்கள்: “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், ஹிந்து பத்திரிகையில் வெளியான போட்டோவில்  குர்தா- பைஜாமா நபர் இருப்பதை நான் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.  அவர் சுபா சுந்தரத்தின் பார்ட்னர் என்று அறிமுகம் செய்து வைக்கப் பட்டதால்,  நான் சுபா சுந்தரத்துக்கு போன் பண்ணினேன்”
“சுபா சுந்தரம் என்ன சொன்னார்?”
“குர்தா- பைஜாமா நபர் தனது பார்ட்னர் அல்ல என்றார்.  அவர் யார் என்றே தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறிவிட்டார்.  ஆனால்,  ஹரிபாபு பற்றி ஒரு தகவலைக் கூறினார்.”
“என்ன தகவல்?”
ஹரிபாபு தன்னிடம் இருந்த கேமரா ஒன்றை இரவல் வாங்கியதாகவும், அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் சொன்னார். அந்த கேமராவை அவர் தேடிவருவதாகவும் சொன்னார்”
“கேமராவா? அது என்ன கேமரா என்று அவர் சொன்னாரா?”
“சொன்னார்.  ‘சினான்’ கேமரா என்று சொன்னார்” என்றார் பத்திரிகையாளர்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் கிடைத்த ஒரு கேமரா பற்றி எழுதியிருந்தோம் அல்லவா?  அதில் இருந்த பிலிம்ரோலில் இருந்துதான், ராஜிவ் கொல்லப்பட்ட இறுதிக் கணங்களின் 10 போட்டோக்களும் கிடைத்தன என்றும் சொன்னோம் அல்லவா?
அதுவும் ஒரு ‘சினான்’ கேமராதான்!அத்தியாயம் 11
சென்னை பத்திரிகையாளர், சுபா சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு, குர்தா-பைஜாமா நபரைப் பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் சுபா சுந்தரமோ, “குர்தா- பைஜாமா நபர்  எனது பார்ட்னர் அல்ல. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று கூறியபோதுதான், பத்திரிகையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதில் ஏதோ மர்மம் இருப்பதாக அவருக்குத் தோன்றியது.  அதையடுத்தே சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரை அவர் தொடர்பு கொண்டிருந்தார்.
அந்த நாட்களில் பத்திரிகையாளர் மத்தியில் சுபா சுந்தரம் பிரபலமானவர். பத்திரிகை உலபோடும், சினிமா உலகோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்.  அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்புடனும், அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்புகள், பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.
சில பத்திரிகைகள்,  விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் யாருடைய பேட்டி தேவையென்றாலும்,  சுபா சுந்தரத்தை நாடும் அளவுக்கு அவர் புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்.
இங்குள்ள மற்றொரு விஷயம்,  1990ன் ஆரம்பத்தில் சுபா சுந்தரம் யாழ்ப்பாணம் சென்று திரும்பியிருந்தார்.  அவரை அங்கே அழைத்துச் சென்றவர்கள் விடுதலைப் புலிகள்.  அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் சந்தித்திருக்கிறார்.
இந்த விஷயங்கள் பல பத்திரிகையாளர்களுக்கு தெரிந்திருந்தது. இந்தத் தொடரில் குறிப்பிடப்படும் சென்னை பத்திரிகையாளருக்கும் தெரிந்திருந்தது.  அத்துடன், சுபா சுந்தரத்தின் ஆள்தான் ஹரிபாபு என்பது அந்தப் பத்திரிகையாளருக்குத் தெரியும்.
சென்னை பத்திரிகையாளர் தெரிவித்த தகவல்கள் புலனாய்வுக் குழுவுக்கு புதிய கதவு ஒன்றைத் திறந்து விட்டன.
புலிகளுடன் நெருக்கமான சுபா சுந்தரத்தின் ஆள்தான் ஹரிபாபு.  அந்த ஹரிபாபு, தனது நண்பராகவும், சுபா சுந்தரத்தின் பார்ட்னராகவும் அறிமுகப்படுத்திய குர்தா- பைஜாமா நபரை யாரென்றே தெரியாது என்கிறார் சுபா சுந்தரம்.  குர்தா- பைஜாமா நபர், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் மாயமாக மறைந்து விட்டார்.
இந்தத் தரவுகள் எல்லாமே,  சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளன.
குண்டுவெடிப்பில் இறந்த (கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும்) சல்வார் கமீஸ் பெண்,  இறந்த புகைப்படக்காரர் ஹரிபாபு,  காணாமல்போன குர்தா- பைஜாமா நபர் ஆகிய மூவருக்கும்இடையே இருந்த தொடர்பு என்ன? அதைக் கண்டுபிடித்தாலே, கொலைக்கான காரணம் தெரியவந்துவிடும் என்று நம்பியது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு.
ஆனால், அது சுலபமாக இல்லை.
சல்வார் கமீஸ் பெண்,  குர்தா- பைஜாமா நபர் ஆகிய  இருவரது பெயர்கள்கூட தெரியாது. அடையாளம் தெரிந்த ஒரே நபரான ஹரிபாபு  இறந்துவிட்டார்.  சுபா சுந்தரத்துக்கு ஓரளவுக்கு விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.  ஆனால், அவரை உடனடியான அணுக விரும்பவில்லை புலனாய்வுப் பிரிவு.
காரணம், சுபா சுந்தரம் மிக இலகுவில்  இந்த விவகாரத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று கூறிவிடலாம். “ஹரிபாபுவை மாத்திரம்தான் தெரியும், மற்றைய இருவரையும் தெரியாது. அவர்கள் ஹரிபாபுவின் நண்பர்களாக இருக்கலாம்” என்று கூறிவிட்டால்,  எதுவும் செய்ய முடியாது.
இதனால், சுபா சுந்தரத்தை உடனடியாக அணுகுவதில்லை என்றும்,  அவரைக் கண்காணிப்பது என்றும் முடிவாகியது.
கேஸில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், சென்னைக்கு வந்த  சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன், புலனாய்வுக்கான சில நெறிமுறைகளை அளித்தார்.  அவற்றை வைத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஒரு செக்-லிஸ்ட்டை தயாரித்தது.
1. ராஜிவ் காந்தி கொலைக்கு நிச்சயமாக ஒரு நோக்கம் இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள், அல்லது சீக்கிய விடுதலை அமைப்புகள், அல்லது பிற தீவிரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உண்டா?
2. புலனாய்வாளர்களைவிட, சில பத்திரிகையாளர்களுக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருக்கிறது.  புலனாய்வுப் பிரிவிடம் போட்டோ போகும் முன்னரே, ஹிந்து பத்திரிகையில் வெளியாகிறது.  ஹரிபாபு, சுபா சுந்தரம் என்று பத்திகைத் துறையுடன் சம்மந்தப்பட்ட ஆட்களின் பெயர்கள் இதில் தொடர்பு படுகின்றன. அதற்கு காரணம் என்ன?
3. சென்னை, டில்லியிலிருந்து வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும் ராஜிவ் தொடர்பாக வரும் செய்திகளை படித்து ஆராய்ந்து,  முக்கிய பகுதிகளைச் சேகரிக்க வேண்டும். தொடர் அம்சங்களுக்குரிய செய்திகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
4. ராஜிவ் கொலை நடந்த இடத்தில், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார் எடுத்த புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் ஏதாவது உள்ளனவா?  இருந்தால் அவற்றைச் சேகரித்து, வழக்கு தொடர்பான தடயங்கள் உள்ளனவா  என்று பார்க்க வேண்டும்.
5. குண்டுவெடித்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி குற்றவாளிகளை  அடையாளம் காணக்கூடிய  ஏதாவது  தடயம் உண்டா எனப் பார்க்க வேண்டும்.
6. கொலை நடந்த இடத்தில், சம்பவத்திற்கு முன்பும், சம்பவத்தின்போதும், சம்பவத்திற்குப் பின்னரும் இருந்த அனைத்து நபர்களையும் அடையாளம் கண்டறிந்து, அவர்கள் அங்கே இருந்ததற்கான காரணங்களை விசாரித்து அறிய வேண்டும்.
7. சம்பவத்துக்குச் சற்று முன்பும், பின்பும், சென்னையிலிருந்து பேசப்பட்ட சர்வதேச தொலைபேசி அழைப்புகள் மற்றும் சென்னைக்கு வந்த சர்வதேசத் தொலைபேசி அழைப்புகள் விவரத்தைக் கண்டறிந்து, இந்த அழைப்புகளுக்கும், ராஜிவ் காந்தி கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
இவைதான் அவர்கள் தயாரித்த செக்-லிஸ்டின் முக்கிய பகுதிகள்.
இவற்றின் அடிப்படையில், புலனாய்வு நடாத்துவதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒரு குழு,  ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோ சகிதம்,  ஆட்களைச் சந்திக்க அனுப்பப்பட்டனர். ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களில் எத்தனை பேரிடம் விசாரிக்க முடியுமோ அத்தனை பேரிடம், குறிப்பாக காயமடைந்தவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்பது இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி.
ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் அன்று இருந்த சிலரிடம் சொல்வதற்கு விவரம் இருந்தும், அவற்றை வெளியிட அஞ்சினர்.  குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் நிலை அதற்குத் தலைகீழாக இருந்தது. அவர்களை பத்திரிகையாளர்கள் மொய்த்தவண்ணம் இருந்தனர்.
‘குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் வழங்கிய பேட்டி’ என்ற தலைப்பில் தினம் ஒரு பேட்டியாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தது.  இந்தப் பேட்டிகளில் சில நேரங்களில் மனம்போனபடி கட்டுக்கதைகள்கூட இருந்தன.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் பற்றிய செய்திகள்தான், பிரதானமாக இருந்தன. ‘இந்த நூற்றாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலை’ என சிலர் வர்ணித்தனர்.
இந்தக் கொலையை யார் செய்திருக்கலாம் என்ற ஊகங்கள், கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிகைகளாலும் செய்யப்பட்டிருந்தன.
இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான ஆரம்பகால ஊகங்கள் எதுவுமே, விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி சீரியசாக குறிப்பிடவில்லை.  ராஜிவ் காந்தி மீது சீக்கியர்களுக்கும் இருந்த வெறுப்பைப் பற்றியே அநேக வெளிநாட்டுப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.
சில பிரிட்டிஷ் பத்திரிகைகள்,  ஹிந்துத்துவ தீவிரவாதிகளையும் தங்கள் ஊகங்களில் குறிப்பிடத் தவறவில்லை.  ‘பரம்பரையின் மரணம்’ என்ற தலைப்பில் ‘இண்டிபென்டெண்ட்’ பத்திரிகை ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது.
மொத்தத்தில், மிகக் குழப்பமான காலப்பகுதியாக அது அமைந்திருந்தது. பல்வேறு ஊகங்கள் நிலவின. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காயமடைந்தவர்களின் பேட்டிகள் தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகின. ஒவ்வொருவரும் இந்த வழக்கை வெவ்வேறு திசைகளுக்குத் திருப்பும் வகையில் கருத்துகளைக்கூறிக் கொண்டிருந்தனர்.
கொலைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது எமக்குத் தெரியும் என்று கூறி அமெரிக்காவில் இருந்துகூட மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
இந்தச் சமயத்தில்தான்,  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்  பிரசுரிக்கப்படும்  ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  தொலைபேசியில் பேசிய நபர்,  ராஜிவ் காந்தி கொலை குறித்துதமக்கு முக்கியமான விபரம் ஒன்று தெரியும் என்றார்.
புலனாய்வுக் குழுவினரைப் பொறுத்தவரை,  அந்தத் தகவல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகதான்  இருந்தது.  அந்தத் தகவலோடு  புலனாய்வின் தன்மையையே திசை திருப்பியது.  அதை அடுத்த வாரம் பார்க்கலாமா?அத்தியாயம் 12
கிட்டுவுக்கு இதில் உள்ள தொடர்பு அநேகருக்கு தெரியாது!
ராஜிவ் காந்தி கொலை புலனாய்வில் சி.பி.ஐ. குழு சென்னையில் தடயங்களைத் தேடிக்கொண்டிருக்க, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்  பிரசுரிக்கப்படும்  ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
தொலைபேசியில் பேசிய நபர்,  ராஜிவ் காந்தி கொலை குறித்து தமக்கு முக்கியமான விபரம் ஒன்று தெரியும் என்றார்.
“என்ன விஷயம்?” என்று அந்தப் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் கேட்டபோது, எதிர்பாராத பதில் ஒன்று வந்தது. “ராஜிவ் காந்தியைக் கொலை செய்தது எமது அமைப்புதான். நாங்கள் அந்தக் கொலைக்கு உரிமை கோரவுள்ளோம். உங்களுடைய பத்திரிகைக்குதான் இதை முதலில் தெரிவிக்கின்றோம்”
“உங்கள் அமைப்பு என்பது எது? அதற்கு என்ன பெயர்?”
“தமிழீழ விடுதலைப் புலிகள்” என்று கூறிவிட்டு எதிர்முனை நபர் போனை கட் பண்ணி விட்டார்.
‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் கிறுகிறுத்துப் போனார்கள். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் குறித்து தமது பத்திரிகைக்கு எதற்காக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ரமென்டோ நகரில் இருந்து வெளியாகும் சிறிய பத்திரிகை அது. சக்ரமென்டோ நகரில் அந்த நாட்களில் வசித்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தது.
இது நிஜமான ஒரு உரிமை கோரலாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு.
ஆனால், இதிலுள்ள ஆச்சரியமான விஷயத்தைக் கவனியுங்கள். இந்த தொலைபேசி அழைப்பு வந்த சில நாட்களின் பின்னரே, ராஜிவ் கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிவித்தது.
புலிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்பதை புலனாய்வுப் குழு எஸ்டாபிளிஷ் பண்ணும் முன்னரே, பல்லாயிரம் கி.மீ. தொலைவில் அமெரிக்காவில் உள்ள,  ஈழத்தமிழர் அதிகம் வசிக்காத பகுதியிலுள்ள, அதிகம் பிரபலமற்ற பத்திரிகை ஒன்றுக்க, கொலைக்கான உரிமை கோரல் செல்கின்றது!
மிகவும் ஆச்சரியமான சம்பவம் இது அல்லவா?
அதேபோல, மற்றொன்றையும் பாருங்கள்.
ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு, மே 21ம் திகதி மாலை 4 மணி அளவில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கேட்ட கேள்வி, “ராஜிவ் காந்தி உயிருடன் இருக்கிறாரா?” என்பது!
ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே வந்த அழைப்பு என்பதால், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி, அதை ‘முட்டாள்தனமாக யாரோ உளறுகிறார்கள்’ என்று நினைத்து ஒதுக்கி விட்டார்.
ஒருவேளை கொழும்பு தூதரக அதிகாரி இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சின் ஊடாக மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால், ஒருவேளை ராஜிவ் காந்திக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கும்.
இதுவும் ஆச்சரியமான ஒரு சம்பவம் அல்லவா?
மற்றொன்றையும் பாருங்கள். ராஜிவ் காந்தி கொலை நடந்த மறுநாள் காலையே,  ஸ்ரீலங்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை, “கொலையின் பின்னணியில் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம்தான்” என்று அடித்துக் கூறியது.
விசாரணையே தொடங்குமுன் இந்தப் பத்திரிகைக்கு எப்படித் தெரியும்?
பின்னாட்களில் குறிப்பிட்ட பத்திரிகையை அதுபற்றி விசாரித்த போது, ராஜிவ் காந்தி கொலையிலும், தற்கொலைத் தாக்குதல் (மனித வெடிகுண்டு) நடந்துள்ளதால், இக்கொலையின் பின்னணியில் புலிகள் இருக்கக் கூடும் என்ற ஊக அடிப்படையில் செய்தி வெளியிட்டதாகக் கூறிவிட்டார்கள்.
ஆனால், செய்தி எழுதப்பட்ட விதம், ஊக அடிப்படையில் இருக்கவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட தன்மையிலேயே இருந்தது! மற்றொரு விஷயம், குறிப்பிட்ட கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை, எந்தவொரு காலத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பத்திரிகையாக இருக்கவில்லை.
இதுவும் ஆச்சரியமான சம்பவம் தான், இல்லையா?
இத்துடன் தொடர்பான வேறு ஒரு விஷயத்தையும் இங்கே கூறலாம். இது தனி ட்ராக்கில் ஓடிய விவகாரம் என்பதால், தொடரில் இருந்து சற்றே விலகிச் சென்றுவிட்டு மீண்டும் வரலாம், வாருங்கள்.
ராஜிவ் காந்தி கொலை நடைபெற்ற தினத்துக்கு மறுநாள், லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசச் செயலகத் தலைவர் சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), ”இதில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை” என்று அறிவித்தார்.
கிட்டு கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகும் முன்னர், இந்திய உளவுத்துறை றோவுக்கு, கிட்டுவால் நேரில் கூறப்பட்டிருந்தது. அதை றோவும் நம்பியது. கிட்டுவின் கூற்றை றோ நம்புவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.
அதுதான், வில்லங்கமானது!
இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் கூறிவிடலாம்.  இந்திய உளவுத்துறைக்கு ஏற்பட்ட மகத்தான சறுக்கல் என்பதால், நாம் கூறப்போகும் விஷயம் பல வருடங்களாகவே அடக்கி வாசிக்கப்பட்டது.
ராஜிவ் கொல்லப்படுவதற்கு முன்பே, விடுதலைப் புலிகள் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமாக இருந்த தளபதி கிட்டு. அவரது பிரபல்யம் உச்சத்தில் இருந்தபோது, அவர்மீது, யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டுவீச்சு ஒன்று நடைபெற்றது. (ராணுவமோ, வெளி ஆட்களோ செய்யவில்லை. புலிகள் இயக்கத்தின் உள் விவகாரம் அது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்)
அதில் காயமடைந்த கிட்டு தனது ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் சென்ற இடம், தமிழகம்! தமிழகத்தில் கிட்டு தங்கியிருந்த காலத்தில், அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது இந்திய உளவு அமைப்பு றோ.
ஒரு கட்டத்தில், கிட்டுவை தமது ஆளாகவே நினைத்துக் கொண்டது றோ. இதில்தான் ஏற்பட்டது இந்திய உளவுத்துறையின் மகத்தான சறுக்கல். கிட்டுவை தமது நிரந்தர இன்போர்மராக வேலையில் சேர்த்துக் கொண்ட றோ, அவருக்கு மாதா மாதம் சம்பளமும் வழங்கியது.
கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்தபோது, றோவுக்கும் அதில் சந்தோஷமே. புலிகளின் வெளிநாட்டு டீலிங்குகள் பற்றிய முழு விபரங்களும் கிட்டு மூலமாகத் தமக்கு தெரியவரும் என்று நினைத்துக் கொண்டது இந்திய உளவுத்துறை.
கிட்டு லண்டனில் இருந்தபோதும், றோவினால் மாதாமாதம் வழங்கப்பட்ட சம்பளம் அவருக்கு போய்க் கொண்டு இருந்தது.
இப்படியான நிலையில்தான், ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது!
இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய கிட்டு, அடுத்த சில மணி நேரத்தின் பின், றோவின் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டார்.
“நான் விசாரித்து விட்டேன். இதில் புலிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது” என்றார் கிட்டு.
“இது மிகவும் முக்கியமான விஷயம். மீண்டும் ஒருமுறை உங்கள் தொடர்புகளிடம் நன்றாக விசாரியுங்கள். ராஜிவ் கொலையை, இந்தியாவில் தங்கியுள்ள  புலிகளின் உறுப்பினர்கள் யாராவது செய்திருப்பார்களா என்று கேட்டுப் பாருங்கள்” என்று  வற்புறுத்தினார் றோ அதிகாரி.
அதற்கு கிட்டு கூறிய பதில்தான் கிளாசிக்!
“நான் விசாரித்ததே புலிகளின் தலைமையிடம்தான் (பிரபாகரன்) அவரது அனுமதி இல்லாமல் இப்படியான பெரிய காரியம் ஏதும் புலிகள் இயக்கத்தில் நடக்க முடியாது. இதில் புலிகளின் தொடர்பு இல்லை என்று அவர் அடித்துக் கூறுகின்றார் தலைவர். உண்மையைச் சொல்லப் போனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு அவரே அதிர்ந்து போய் இருக்கிறார்” என்பதே கிட்டு கூறிய பதில்!
கிட்டுவின் பதிலுடன், ராஜிவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று  கன்வின்ஸ் ஆகியது றோ.
சி.பி.ஐ.யின் விசேட புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியபோது, இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் உளவுத்துறை என்ற வகையில் றோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு றோ கூறிய பதில், “இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லை” என்பதே!
இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். எமது தொடருக்கு அவ்வளவுதான் தேவை. ஆனால், கிட்டு விவகாரம் இத்துடன் முடிவடையவில்லை.   மிகுதியையும் ஓரிரு வரிகளில் கூறிவிடுகிறோம்.
தமது ‘இன்போர்மர்’ கிட்டுவின் சேவையில் முழு திருப்தியடைந்த றோவின் கண்கள் எப்போது திறந்தன என்றால், ராஜிவ் கொலை வழக்கில் புலனாய்வு விரிவடைந்து செல்ல, அதில் சிவராசனின் (குர்தா-பைஜாமா நபர்) பங்கு தெரியவந்த போதுதான்! (சிவராசனுக்கும், கிட்டுவுக்கும் உள்ள தொடர்பு பற்றி, இந்த தொடரின் பின் பகுதியில் விளக்கமாக  கூறுவோம்)
அப்போதுதான் றோவுக்குப் புரிந்தது, கிட்டு தம்மை நன்றாக ஏமாற்றியிருக்கிறார் என்ற விஷயம். கிட்டு நிஜமாகவே தமது விசுவாச இன்போர்மராக இருக்கவில்லை, அப்படி இருப்பதுபோல நடித்தார் என்று புரிந்து கொண்ட றோ, கிட்டுவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.
இந்த இடத்தில் நிறுத்தி விடுவோமா? வேண்டாம், இன்னமும் ஒரேயொரு வாக்கியம்.
கிட்டு தம்மை ஏமாற்றிய வடுவை நீண்ட காலம் மனதில் வைத்திருந்த றோ, பின்னாட்களில் என்ன செய்தது? கிட்டு கப்பல் மூலம் வன்னி செல்கையில் இந்து சமுத்திரத்தில் வைத்து இந்திய கடற்படையால் தடுக்கப்பட்டார். நடுக்கடலில் நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளின்பின்,  கிட்டு சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்து, கப்பலையும் அழித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், றோவும் முக்கிய பங்கு வகித்தது.
சரி. இனி மீண்டும் சரியான ட்ராக்குக்கு வருவோம்.
ராஜிவ் கொலையில் தமக்கு சம்மந்தம் இல்லை என்று, விடுதலைப் புலிகள் அமைப்பு கிட்டு மூலம் தெரிவித்திருந்தது.  ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.எல்.எப்.) தலைவர் அமானுல்லாகான், ராவல்பிண்டியிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை என மறுத்தார். இதேபோல, சீக்கிய தீவிரவாதத் தலைவர் ஜகஜித்சிங் சௌகான், இந்தக் கொலை தமது அமைப்பின் வேலை அல்ல என்று, லண்டனிலிருந்து அறிக்கை விடுத்தார்.
இந்தக் கட்டத்தில், எல்லோருக்கும் குழப்பம். ராஜிவ் காந்தியை யார்தான் கொலை செய்தது?
இப்படி குழப்பமான இடத்தில் மீண்டும் காட்சிக்குள் வருகின்றது ‘தி ஹிந்து’ பத்திரிகை. ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்குமுன், அவரை ரகசியமாகச் சந்தித்த ஒருவரைப் பற்றி செய்தி வெளியிட்டு, மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, ஸ்கூப் அடித்தது தி ஹிந்து. ‘தி ஹிந்து’ பத்திரிகை மீண்டும் ஒருமுறை காட்சிக்குள் வந்தது.  ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்குமுன், அவரை ரகசியமாகச் சந்தித்த ஒருவரைப் பற்றி செய்தி வெளியிட்டு, மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, மீடியா சர்க்கிளில் மகத்தான ஸ்கூப் அடித்தது தி ஹிந்து.
மே 25 ஆம் திகதி, ‘இந்த மார்ச் மாதம் ராஜிவ் காந்தியை ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் சந்தித்தார்’ என்ற தலைப்பில் ஹிந்து ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியானது.
அந்தச் செய்தி என்ன சொன்னது? இதோ, இதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்-
10, ஜன்பத், புதுடில்லியில் உள்ள ராஜிவ் காந்தி இல்லத்தில், மார்ச் 25ம் தேதி,  விடுதலைப்புலி உறுப்பினருக்கும், ராஜிவ் காந்திக்கும் இடையிலான  ஒரு ரகசியச் சந்திப்பு நடைபெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே  இச்சந்திப்பு நடந்துள்ளது.
ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்  அமைதியை நிலைநாட்ட 1987ல் இந்திய அமைதிப்படை அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அங்கே,  விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக இந்திய அமைதிப்படையை யுத்தம் புரிந்ததில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்னால், முதல்முறையாக ராஜிவ் காந்திக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு இதுதான். இரு தரப்புக்கும் இடையே இந்தச் சந்திப்பின்பின்  சுமூக உறவு உருவானது.
மேலேயுள்ள செய்தியை வெளியிட்ட ஹிந்து பத்திரிகை,  மார்ச் மாதச் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றுள்ள நிலையில், ராஜிவ் காந்தியை கொல்வதற்கான நோக்கம் விடுதலைப் புலிகளுக்கு  இருந்ததாகக் கூறுவது சரிதானா? என்று கேள்வியும் எழுப்பியிருந்தது.
சுருக்கமாகச் சொன்னால், ராஜிவ் காந்தியை கொல்வதற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் கொன்றிருக்க முடியாது என்ற டோனில் இருந்தது அப்பத்திரிகை அன்று வெளியிட்டிருந்த செய்தி.
ஆனால், வெளியே ஈழத் தமிழர் மத்தியில் வேறு ஒரு விதமான நியூஸ் லைன் இதற்கு பாரலலாக அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
இந்த இடத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீடியா ஹான்டிலிங் பற்றி சில வரிகள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக இரு நியூஸ் லைன்கள் ஓடுவது எவ்வாறு சாத்தியம் என்பது புரியும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒருவித ‘மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை’ அனுமதிக்கும் அமைப்பு.  அதற்காக அவர்களே அப்படியான செய்திகளை வெளியிடுவார்கள் என்று அர்த்தம் அல்ல.  வன்னியில் அவர்கள் லேசாகத் தும்மினால், “இந்து சமுத்திரத்துக்கு அப்பால் இடியோசை கேட்டது. புலிகளின் கோபக் கர்ஜனையால் சிங்கள தேசமே குலை நடுங்கியது” என்று எழுத ‘பிரைவேட் ஆய்வாளர்கள்’ உள்ளார்கள்.
ஈழத்தமிழர் மீடியாக்களில் ஈயடிச்சான் காப்பி அதிகம் என்பதால், இந்த ‘இடியோசை’  வெவ்வேறு வர்ஷன்களில் சுற்றிச் சுற்றி வரும்.  ஒருகட்டத்தில் வன்னியில் இருப்பவர்களே, அப்படியொரு இடியோசை கேட்டதாக ஃபீல் பண்ணத் தொடங்கி விடுவார்கள்.
இப்படியான இடியோசைகள் எழுவதை விடுதலைப்புலிகள் மறுப்பதில்லை. வெளிநாடுகளில் அதனால் அவர்களுக்கு வேறு விதமான பலன் உண்டு என்பது வேறு விஷயம்.
1980களின் இறுதியில், தமிழகத்தின் பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றில், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், வேதாரண்யம் கடற்கரையில் படகு ஏறச் செல்லும்போது யாரோ துப்பாக்கியால் சுட்டார்கள். துப்பாக்கி தோட்டா வலது கையில் பாய்ந்த நிலையிலும், கடலில் குதித்து இடது கையை உபயோகித்து நீந்திச் சென்று, இலங்கை கரையை அடைந்தார்” என்றும் ஒரு தகவல் வெளியானது.
அதை எழுதிய ஆசாமியை வேதாரண்யம் அழைத்துச் சென்று, “இதுதான்யா சமுத்திரம். நல்லா பாத்துக்க” என்று யாரும் சொன்னதும் கிடையாது. புலிகளும் ஒருகை நீச்சல் விஷயத்தை மறுக்கவும் இல்லை.
இப்படியான ‘டூ-டயர்’ மீடியா ரிப்போர்ட்டிங் சிஸ்டம் இருந்த காரணத்தால், ராஜிவ் காந்தி கொலையான அடுத்த வாரமே, ஈழத் தமிழர் மீடியாக்கள் பலவற்றில், ராஜிவ் கொலையை புலிகள் செய்த வீர சாகசச் செயலாக வர்ணித்து நியூஸ் ஸ்டோரிகள் வரத் தொடங்கின.
“புலிகள் ஏன் அதைச் செய்தார்கள்?” என்று அரசியல் ஆய்வுகள் ஒரு பக்கம் வந்தன. “ராஜிவ் கொலையால் சர்வதேசமே புலிகளை பிரமிப்புடன் பார்க்கிறது” என்ற உசுப்பேற்றல் ஆய்வுகள் மறுபக்கம் வந்தன.
இந்த வகையில், ராஜிவ் காந்தி கொலை பற்றிய புலனாய்வு தொடங்கி, புலனாய்வாளர்கள் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னமே, ஈழத் தமிழர் மத்தியில், “ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள்” என்பது அப்பீல் இல்லாத கதையாக மாறிவிட்டது.
ராஜிவ் கொலையைப் புலனாய்வு செய்த குழுவின் தலைவர் கார்த்திகேயன், பின்னாட்களில் கொடுத்த பேட்டி ஒன்றில், “ராஜிவ் காந்தி கொலையில் புலிகளின் பங்கு உள்ளது என்ற முடிவுக்கு நாம் (சிறப்பு புலனாய்வுக் குழு) வருவதற்கு முன்னரே, தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் இருந்த ஈழத் தமிழ் அகதிகள், ராஜிவ் காந்தி கொலைக்கு புலிகள்தான்  பொறுப்பு என்று நாம் விசாரித்தபோது குறிப்பிட்டனர். தமிழகத்தில் பரவலாக வசித்துவந்த ஈழத் தமிழர்களும் அதையே சொன்னார்கள்” என்று கூறினார்.
அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த நாட்களில் ஈழத்தமிழர் மத்தியில், “புலிகள் இதைச் செய்யவில்லை” என்று கூறுபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இதனால், ராஜிவ் கொலை பற்றிய புலனாய்வே, “புலிகள்தான் கொன்றார்கள் என்று ஈழத் தமிழர்களே சொல்கிறார்கள்” என்ற இம்பிரெஷனுடன் ஆரம்பமாகியது.
இப்படியான சமயத்தில், ஹந்து பத்திரிகை வெளியிட்ட நியூஸ் ஸ்டோரி, தமிழகத்தில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது.
“விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ராஜிவ் காந்தியுடன் ரகசியமாகச் சந்தித்தபின், புலிகள் ஏன் ராஜிவ்வைக் கொல்ல வேண்டும்?” என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஆனால், ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் ஹிந்து பத்திரிகை படிப்பதில்லை என்பதால், இது அந்த சர்க்கிளில் பெரிதாக கேள்வியை எழுப்பவில்லை.
மற்றொரு பக்கமாக, ‘பிரைவேட் ஆய்வாளர்கள்’ சிலர், “புலிகள் ரகசிய நடவடிக்கை ஒன்றைச் செய்வதற்குமுன், எதிராளிக்கு சந்தேகம் ஏற்படாதவாறு தமது ஆளை சமாதானம் பேச அனுப்புவது வழக்கம்தானே. அதற்கு பல உதாரணங்கள் உள்ளனவே. இதெல்லாம் புலிகளில் ராஜதந்திரம்… தாக்குதல் தந்திரோபாயம்..” என்றெல்லாம் மீடியாவில் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படியான காட்டு வீசல்கள், பின்னாட்களில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க சான்ஸ் இல்லை.
‘ராஜிவ் காந்தியை ரகசியமாகச் சந்தித்த புலிகளின் உறுப்பினர்’ என்று ஹிந்து பத்திரிகையில் குறிப்பிடப்பட்டவர் காசி ஆனந்தன் என்று பின்னாட்களில், ‘புலிகளுடன் தொடர்புடைய ஊடகம்’ என்று வர்ணிக்கப்பட்ட ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியது. அதையும், புலிகள் உட்பட யாரும் மறுத்ததாக தெரியவில்லை.
இப்படியான நிலையில், சென்னையிலிருந்து வெளிவரும் ‘நியூஸ் டுடே’ என்ற மாலை நாளிதழ் மே 22ம் தேதி புதிய கதை ஒன்றுடன் வந்தது.  “ஒரு சாட்சியின் ‘திடுக்’ தகவல்” என்பதே அந்தக் கதையின் தலைப்பு.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்தில், அந்த இடத்தில் இருந்த ஒருவர் தமக்கு தெரிவித்த தகவல் என்றது அந்தப் பத்திரிகை. அவர்களது தகவல், “ராஜிவ் காந்தி மேடையை நோக்கிச் செல்லும்போது, ஒரு பெண் முன்னால் வந்து அவர் அருகே சென்றார். அவருடன் மற்றொரு பெண்ணும் கூடவே சென்றதை நான் பார்த்தேன். முதலில் சென்ற பெண், தனது சேலைக்குள் இருந்து வெடிகுண்டு போன்ற பொருளை எடுத்தார்.  மறு விநாடியே,  மறு கையில் வைத்திருந்த ரிமோட் மூலம் அதை இயக்கி வெடிக்க வைத்தார்” என்று பிரசுரம் ஆகியிருந்தது.
எனினும், தமிழகத்தில் வெளியான அநேக தமிழ் பத்திரிகைகள், தமது தலைப்புச் செய்தியில், ‘வெடிகுண்டு மாலை’ என்று அலறின.
“ராஜிவ் காந்திக்கு போடுவதற்காக வைத்திருந்த மாலை ஒன்றுக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை அவருக்கு போடும்போது மாலைக்கு உள்ளே இருந்த குண்டு வெடித்தது” என்பதே கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளும் வெளியிட்ட ஸ்டோரி லைன்.
இப்படியொரு குண்டு வெடிப்பை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டு என்ன சைஸில் இருக்கும் என்பதே தெரியாமல், இந்தக் கதை தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.
வேறு ஒரு பத்திரிகை, “வெடிகுண்டு பூக்கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்ததார்” என்று செய்தி வெளியிட்டது.  பூக்கூடைக்குள் எட்டிப் பார்த்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதை அந்தப் பத்திரிகை குறிப்பிடவில்லை.
இப்படியாக எல்லோருமாக முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, பத்திரிகையாளர் டீம் ஒன்று கர்நாடக மாநிலத்  தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட்ட வெடிப்பொருள் பற்றி பேட்டி கண்டது.
அந்தப் பேட்டியில் வேறு ஒரு கதை வெளியாகியதை அடுத்த வாரம் படியுங்களேன்.அத்தியாயம் 14
சி.ஐ.ஏ.தான் ராஜிவ்வை கொலை செய்தது என்ற குற்றச்சாட்டு!
ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி த்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட்ட வெடிப்பொருள் பற்றி பேட்டி கண்டது.
பேட்டி அளித்த வி்ஞ்ஞானி, “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டு இருந்தாலும் பயனில்லை. காரணம், இந்தக் குண்டில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிப்பொருளை, மெட்டல் டிடெக்டர் சோதனையில் கண்டுபிடிக்க முடியாது” என்று கூறியதாக அந்தப் பேட்டி வெளியாகியது.
இந்தப் பேட்டி முற்று முழுதாக ஒரு விஷயத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது. அது என்னவென்றால், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அல்ல. எவ்வளவு டைட்டான செக்யூரிட்டி போடப்பட்டு இருந்தாலும், மனித வெடிகுண்டு ராஜிவ் காந்தியை நெருங்குவதை தடுத்திருக்க முடியாது”
விஷயம் தெரிந்தவர்களுக்கு, இந்த பேட்டி மத்திய ஏஜென்சி ஒன்றின் ஏற்பாட்டில் வெளியானது என்பது புரிந்து போனது.
“பிளாஸ்டிக் ஒயரினால் மின்சாரம் கொடுக்கப்பட்ட 5 கிலோ டி.என்.டி. வெடிப்பொருள் சக்தி வாய்ந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில், ஒரு நபரையும், அவரைச் சுற்றி சில மீட்டர் தொலைவில் உள்ள சகல ஆப்ஜெக்ட்களிலும் சேதத்தை விளைவிக்க, இந்த அளவு வெடிபொருள் போதுமானது” என்றும் அந்தப் பேட்டியில் விஞ்ஞானிகள் கூறினார்கள்.
“ராஜிவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டைத் தயாரிக்க உபயோகித்த வெடிப்பொருளை மைக்ரோ சிப்பில் உள்ள கருவி ஒன்றால் எளிதாக இயக்கி வெடிக்கச் செய்யலாம்” என்றும் தெரிவித்த இந்தப் பேட்டி ஹைலைட் பண்ணிய மற்றொரு விஷயம், ‘டிஸ்கவர்’ என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில், உலகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகள்தான் இந்த ரகத்திலான வெடிப்பொருளைப் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்”
குறிப்பிட்ட சஞ்சிகைக் கட்டுரை, லெபனானில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றியது. அந்தத் தாக்குதல்களில் நேர்ந்த பல்வேறு உயிரிழப்புகள், போராளி அமைப்புகளின் தற்கொலைக் குண்டுதாரிகளால் விளைந்துதான்.
இந்தப் பேட்டி, இதில் ‘வெடிகுண்டு தயாரிப்பில் மிகவும் தேர்ச்சி பெற்ற தீவிரவாத இயக்கம் ஒன்றைத் தவிர வேறு யாராலும் இதைச் செய்திருக்க முடியாது’ என்பதை, விஞ்ஞானிகளின் வார்த்தைகளுடன் வலியுறுத்தியது. கிட்டத்தட்ட ஒரு ‘ஒப்பினியன் செட்டிங்’ ரகத்திலான பேட்டி அது. மிகத் திறமையாக டிசைன் பண்ணப்பட்டிருந்தது.
பேட்டியில் குறிப்பிடப்பட்ட சகல டிஸ்கிரிப்ஷனுடன் தமிழகத்தில் அப்போது நடமாடிக்கொண்டிருந்த ஒரேயொரு தீவிரவாத இயக்கம், விடுதலைப்புலிகள் இயக்கம்தான்!
இதற்கிடையே கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையில் மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது. “இரு மாதங்களுக்கு முன், மட்டக்களப்பு நகரில் (ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணம்) சிறப்பு அதிரடிப்படை ரோந்து சென்றபோது, நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு, ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அதே பாணியில்தான் இருந்தது.
மட்டக்களப்பில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு டிரான்ஸ்சிஸ்ட்ர் வானொலி அளவிலான ரிமோட் கண்டரோலை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினர். அதைப் போன்ற ரிமோட்டை ஸ்ரீபெரும்புதூரிலும் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்த வகையில் பார்த்தால், ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னணியில் இருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்று ஸ்ரீலங்கா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினார்கள்”  என்று கொழும்புச் செய்தி கூறியது.
இந்தச் செய்தியை மொழிபெயர்த்து ஒரு தமிழக பத்திரிகை வெளியிட, மற்றைய பத்திரிகைகள் அதை ஆதாரமாக வைத்து மேலதிக செய்திகளை வெளியிட்டன. சிறிய அளவிலான பிளாஸ்டிக் வெடிப்பொருளை பூங்கொத்தில் எளிதாக மறைத்து வைக்கலாம். சுமார் 1000 மீற்றர் தொலைவிலிருந்து டிரான்ஸ்சிஸ்ட்ர் வானொலி அளவிலான ரிமோட் மூலம் இயக்கிக் குண்டு வெடிக்கச் செய்யலாம் என்றும் செய்தி வெளியிட்டன.
இந்த மீடியா அலை, ராஜிவ் காந்தியின் கொலையின் பின்னணியில் இருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்ற ஒரு தோற்றத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக ஏற்படுத்தியது.
இதற்கிடையே சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை, மற்றொரு ஸ்கூப் அடித்தது.
“ராஜிவ் காந்தியைக் கொலை செய்த மனித வெடிகுண்டு பெண், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகரின் விருந்தினர்” என்றது அந்தப் பத்திரிகை. “மரகதம் சந்திரசேகரின் இல்லத்தில்தான் அப்பெண் தங்கியிருந்தார். மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியகுமார், இலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை மணந்துள்ளார்” என்றும் அந்தச் செய்தி கூறியது. (பிரிய குமார என்பது, பொதுவான ஒரு சிங்களப் பெயர்)
இதை மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியகுமார் மறுத்தார். இந்த லதா பிரியகுமார்தான், ராஜில் கொலை நடந்த தினத்துக்கு சிறிது நாட்களின்பின் தமிழகத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.
இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும். லதா பிரியகுமார் கூறியது உண்மைதான். உண்மையில் லதா பிரியகுமாரின் கணவர் இந்தியர்தான். ஆனால், அவர்களது குடும்பத்துக்குள் ஒரு சிங்கள கனெக்ஷன் இருந்தது வேறு விஷயம். லதாவின் சகோதரரின் பெயர் லலித். இவர் ஒரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்திருந்தார்.
குறிப்பிட்ட பத்திரிகை இதைத்தான் சொல்ல வந்திருக்க வேண்டும். ஆனால், அப் பத்திரிகையில் நிருபர்கள் தங்களது ‘புலனாய்வு’ அவசரத்தில் தவறான தகவலை கட்டுரையாக்கி விட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் சாதாரணமாக விசாரிக்கக்கூட இல்லை.
இதனால், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பமும், பிரச்சினைகளும் ஏற்பட்டன.
எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல மற்றொரு செய்தி, சென்னைப் பத்திரிகை ஒன்றில் மே 25ம் தேதி வெளியானது. ‘கொலையாளியின் அடையாளத்தை மறைக்க முயற்சிகள்’ என்பது அந்தச் செய்தியின் தலைப்பு.
“ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு மேற்கொண்டுள்ள சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, கொலைக்குக் காரணமானவரின் அடையாளத்தை மறைக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கொலையாளி யார் என்று தெரிந்தால், 1984ல் (மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்) நடந்ததைப் போன்ற பெரும் கலவரம் தமிழகத்தில் வெடிக்கும் என்பதே இதற்குக் காரணம்” என்றது அப் பத்திரிகைச் செய்தி.
இந்தக் குழப்பங்கள் போதாது என்று இன்னொரு பத்திரிகை, ஸ்ரீலங்கா பற்றிய தமது ‘மிகச் சுமாரான’ அறிவுடன், “யார் இந்த பேகம்?” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது! அவர்களது நியூஸ் ஸ்டோரியின்படி, பேகம் என்று அழைக்கப்படும் சிங்களப் பெண்தான் கொலையாளி (ஸ்ரீலங்காவில் சிங்களப் பெண்கள் பேகம் என்று அழைக்கப்படுவதில்லை)
ஓர் இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட அப்பத்திரிகை, “மெல்லிய உடல்வாகுடைய, 20 வயதைத் தாண்டாத இந்தப் பெண்தான், சந்தன மாலையைக் கையில் ஏந்தியவாறு, ராஜிவ் காந்தி அருகே லதா கண்ணனுக்கும், கோகிலாவுக்கும் நடுவில் நின்றிருந்தார். இந்த மூவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்துவிட்டனர்.
இங்குள்ள (தமிழகத்தில்) இலங்கைத் தமிழர்களிடம் இந்த புகைப்படத்தைக் காட்டியபோது, அவர்கள் இந்தப் பெண் ஸ்ரீலங்காவின் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்த சிங்களப் பெண்களின் முகச் சாயலுடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டது அப்பத்திரிகை.
தமிழ் பத்திரிகைகள் இப்படி கன்னித்தீவு ஸ்டைலில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, ஆங்கிலப் பத்திரிகைகள் ஓரளவுக்கு சென்ஸ் ஏற்படுத்தக்கூடிய ஊகங்களை செய்தியாக்கிக் கொண்டிருந்தன.
ஒரு ஆங்கிலப் பத்திரிகை, ராஜிவ் காந்தி படுகொலையில், ‘அன்னியத் தலையீடு’ என்றது. “பிளாஸ்டிக் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஜேர்மனியில் மட்டுமே உள்ளது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ‘வெயிஸ்ட் ஜாக்கெட்’ வெளிநாட்டில் கைதேர்ந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு ஆங்கிலப் பத்திரிகை, “சி.ஐ.ஏ.யின் கைவரிசையா?” என்று கேட்டது. ‘கொடூரப் படுகொலைக்குப் பின்னணியில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.’ என்று அச்செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
“பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மை செய்வதற்காகவே (!) சி.ஐ.ஏ. ஜாதி, மத, பிராந்திய அரசியலை வைத்து சித்து விளையாட்டு நடத்துகிறது. அரசியல் சாராத நடுத்தர வகுப்பு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஜாதி, மத, வன்முறைகள் இல்லாத சென்னைக்கு அருகே உள்ள இடத்தைப் படுகொலை செய்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. இதைச் செய்தது சி.ஐ.ஏ. மட்டுமாகத்தான் இருக்க முடியும்” என்றும் அந்தச் செய்தி புதுவிதமான லாஜிக் ஒன்றைக் கூறியது.
(சி.ஐ.ஏ.யை இழுத்து எழுத வேண்டும் என்றால், அதை நம்பும் வகையில் வேறு விதமாக எழுதியிருக்கலாம் என்பது, பாவம் இந்தப் பத்திரிகைக்கு தெரிந்திருக்கவில்லை. ராஜிவ் கொலை பற்றி அப்படியொரு அட்டகாசமான கட்டுரை பிரிட்டிஷ் பத்திரிகையான ‘தி கார்டியனில்’ வெளியாகியது)
இத்தகைய தகவல்கள், கற்பனைகள், தனிப்பட்ட வெறுப்புகளுடன் வெளியான பத்திரிகைச் செய்திகளுக்கு இடையே, ராஜிவ் காந்தி கொலை வழக்கு புலன் விசாரணை தொடங்கியது. பத்திகைச் செய்திகளால் ஏற்கனவே குழப்பத்தின் உச்சியில் இருந்த பொதுமக்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு ஒரு வேண்டுகோள் விடுத்தது.
இதுதான், ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றி முதன்முதலில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.
மே 29ம் தேதி (ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டு 8 நாட்களுக்குப் பின்) தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக பொதுமக்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு விடுத்த வேண்டுகோள் என்ன? அதை அடுத்த வாரம் பார்க்கலாமா?  அத்தியாயம் 15
பத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்!
ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே 30ம் தேதி தமிழகம் எங்கும் விளம்பரமாக வெளிவந்தது.
விளம்பரத்தில் இரு போட்டோக்கள் இருந்தன. மனித வெடிகுண்டு என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணின் போட்டோ ஒன்று. குர்தா- பைஜாமா அணிந்திருந்த, அடையாளம் தெரியாத நபரின் போட்டோ இரண்டாவது. “இவர்களைப் பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் தகவல் அளிக்க்கவும்”  என்ற வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தன. தகவல் கொடுப்பதற்கு வசதியாக, புதிதாக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தொலைபேசி எண்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
“அடையாளம் தெரியாத மேற்கண்ட இருவர் பற்றித் தகவல் தெரிவிப்பவர்கள் யார் என்ற ரகசியம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும்” என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் வெளியான உடனே, யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், விளம்பரத்தில் வெளியான போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும்  தொடர்புகள் இருக்கக் கூடும் என பத்திரிகைகள் தமது ஊகத்தை செய்தியாக்கின.
முதல்நாள் இந்தச் செய்திகள் வெளியாக, மறுநாள் ஹிந்து பத்திரிகை அதற்கு தலைகீழான செய்தி ஒன்றைப் பிரசுரித்தது. ஹரிபாபுவுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லையென ஹரிபாபுவின் தந்தை மறுத்ததாக அந்தச் செய்தி வெளியானது.
இதற்கிடையே தமிழகத்தில் இந்த விளம்பரங்கள் வெளியான அதே நாளில் (மே 30) சி.பி.ஐ. டீம் ஒன்று கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதுவும் சாதாரண அதிகாரிகளை அனுப்பவில்லை. சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அந்த டீமில் இருந்தனர்.
ராஜிவ் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு சம்மந்தம் உள்ளது என்று எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், சி.பி.ஐ. முக்கியஸ்தர்கள் அடங்கிய டீம் கொழும்புவில் ஆதாரங்களைத் தேடிச் சென்றது ஆச்சரியம்தான்.
கொழும்பு சென்ற டீம், தாம் விளம்பரமாகக் கொடுத்திருந்த போட்டோக்களையும் எடுத்துச் சென்றிருந்தது. ஸ்ரீலங்கா சி.ஐ.டி. பிரிவு அதிகாரிகளைச் சந்தித்த இவர்கள், இந்த போட்டோக்களை அவர்களுக்கு காட்டினார்கள். ஸ்ரீலங்கா அதிகாரிகள், “மனித வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணின் உடலமைப்பு, ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் பெண்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றது” என்றார்கள்.
அத்துடன், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதமும், வெடிகுண்டு வைக்க கையாண்ட முறையும், இந்தக் கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உள்ளது என்பதைக் காட்டுகின்றது”  என்று கூறிய ஸ்ரீலங்கா அதிகாரிகள், “ஸ்ரீலங்காவில் விடுதலைப் புலிகளால் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சிலரது கொலைச் சம்பவங்களுடன், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதம் ஒத்துப் போகின்றது” என்றும் தெரிவித்தார்கள்.
இது நடைபெற்ற காலப்பகுதியில், விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசும் எதிரெதிர் அணிகளில் இருந்தனர். (அதற்கு சில மாதங்களின் முன், இந்திய அமைதிப்படையை ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒரே அணியில் இருந்தனர்)
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் டீம் கொழும்பில் இருந்து திரும்பியபோது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் மீதான பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்த ஆய்வு முடிவுகள் எதுவுமே, தமிழகத்தில் இதற்குமுன் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் பொருந்திவரும் விதத்தில் இருக்கவில்லை. எல்லாமே புதிதாக இருந்தன.
அதையடுத்து சிறப்புப் புலனாய்வுக்குழு மற்றொரு கோணத்தில் இந்தத் தடயங்களை ஆராய முடிவு செய்தது.
1980களில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு ஈழவிடுதலைப் போராளி இயக்கங்கள் இயங்கி வந்தன. அவர்கள் தமிழகத்தில் இருந்தபோது அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள், அவர்களது செயல்முறைகள், தமிழகத்தில் செய்யப்பட்ட குற்றச் செயல்களில் ஆகியவை தொடர்பான பழைய பைல்களை ஆராய்வதே புதிய கோணம்.  அவற்றில் ஏதாவது, ராஜிவ் கொலை தடயங்களுடன் ஒத்துப் போகின்றதா என்று பார்ப்பதே இதன் நோக்கம்.
பழைய சம்பவங்களில் முக்கியமானதும், பெரியதுமான சம்பவம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவம்.
ஈ.பி.ஆர்.எல்.எப். என்பது, 1980-களில் பிரபலமாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதன் தலைவர் பத்மநாபாவும் பல்வேறு ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணித் தலைவர்களும் 1990, ஜூன் 19-ம் தேதி, சென்னை ஜகாரியா காலனியில் இருந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
கொலையாளிகள் கையெறி குண்டுகளையும், ஏ.கே. 47 ரைபிள்களையும் பயன்படுத்தித் தாக்கியதால் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் தப்பிக்க வழியேதும் இல்லாமல் போனது.
கொலையாளிகள் அன்று காலை 6.30 மணியளவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்துள்ளனர். இவர்கள் நடத்திய தாக்குதலில் அவ்வழியே சென்ற அப்பாவிகள் சிலரும் உயிரிழக்க நேரிட்டது. தாக்குதல் நடத்தியவுடன் கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். தமிழக காவல்துறையினரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.
அவர்கள் வந்த வெள்ளை நிற அம்பாசிடர் காரை தேடிக் கொண்டிருந்தது தமிழக காவல்துறை. அந்தக் காரில் தப்பித்துக்கொண்டு அவர்கள் வேதாரண்யம்வரை செல்வார்களா? இந்தக் கேள்விக்குப் பதில் மறுநாளே கிடைத்தது. மறுநாள் இதே கொலையாளிகள், விழுப்புரம் அருகே ஒரு மாருதி வேனை கடத்தியது தெரியவந்தது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவன அதிகாரி, அவரது தாயார் மற்றும் டிரைவர் ஆகியோர் இந்த மாருதி வேனில் திருச்சி நோக்கிச் சென்றபோது,  கடத்தல் நிகழ்ந்தது. டிரைவரை தாக்கியதுடன் மற்ற இருவரையும் சாலையோரத்தில் இறக்கிவிட்டு, மாருதி வேனை கடத்திக்கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர்.
கீழே இறக்கிவிடப்பட்டவர்களை போலீஸ் விசாரித்தபோது, கடத்திய குழுவில் ஆறு பேர் இருந்ததாக கூறினார்கள். வேனை பறிகொடுத்த அதிகாரி, “கடத்திய ஆறு பேரில் நால்வர் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து இறங்கி வந்தே எமது வேனை மறித்து நிறுத்தினர்” என்று தெரிவித்தார்.
“நவீன ஆயுதங்கள் மட்டுமின்றி வாக்கி-டாக்கிகளையும் வைத்திருந்தனர். வாக்கி-டாக்கி மூலமே அவர்களிடையே தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். இந்த விடயத்தை நானோ, என்னுடன் வந்தவர்களோ காவல் துறையிடம் தெரிவித்தால், கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துவிட்டு சென்றனர்” என்றும் அவர் சொன்னார்.
இவ்வளவு விபரங்கள்தான், பத்மநாபா கொலை புலனாய்வு பைலில் இருந்தன. அதற்குமேல் இந்த கேஸில் மூவ் பண்ணுவது பற்றி அப்போதைய காவல்துறை தலைமை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
இது நடைபெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கொலைகளில் அதிகளவில் இன்வோல்வ்மென்ட் காட்டுவது அரசியல் ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்து, கேஸை இழுத்து மூடிவிட்டிருந்தார்கள் அவர்கள். அதுபற்றிய வேறு ஒரு ரகசிய டீல் உண்டு என்பதாகவும் ஒரு பேச்சு அந்த நாட்களில் இருந்தது.
பின்னாட்களில் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ‘சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்ற காரணமே பிரதானமாகக் கூறப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பட்டியலில் இந்தக் கொலைகளும் இருந்தது தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட பூமராங்!
(தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அட்டகாசமாக இருந்ததா? அட, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதே, இந்த கவர்னர் ஆட்சியில்தான்!)
இந்த பைலைப் பார்த்த ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வுக்குழு, இதில் தமக்கு பெறுமதி வாய்ந்த தடயங்கள் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டது.
பத்மநாபாவைக் கொன்ற முறைக்கும் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட முறைக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாதுதான். ஆனால், இரண்டுமே தமிழகத்தில் நடைபெற்ற அசாதாரண ஹை-டார்கெட் கொலைகள். இரண்டிலுமே பயன்படுத்தப்பட்ட முறைகள் தமிழகத்தின் சாதாரண குற்றவியல் சம்பவங்களைவிட மிக உயர்ந்த திட்டமிடலுடன் இருந்தன.
இதனால், பத்மநாபா கொலை வழக்கில் கொஞ்சம் கிளறிப் பார்க்க முடிவு செய்தது சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக் குழு.
பத்மநாபா கொல்லப்பட்ட நேரத்தில் தமிழக காவல்துறை திரட்டிய சில தடயங்களை மீண்டும் ஆராய்ந்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். பத்மநாபா குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதான அலுவலகம் இருந்தது. அதற்குள் வைத்துத்தான் அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த அலுவலகத்தின் மரக்கதவுகள் மீது உலோகத்திலான சிறு குண்டுகள் பாய்ந்திருந்தன. அந்தக் குண்டுகள் பற்றி தமிழக காவல்துறையின் தடயவியல் நிபுணர் எழுதியிருந்த குறிப்புகளை முதலில் படித்தது சி.பி.ஐ. தமிழக காவல்துறை பத்திரப்படுத்தி வைத்திருந்த இந்த குண்டுகளையும் தம்வசம் எடுத்துக் கொண்டார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
தமிழக காவல்துறை பத்மநாபா கொலை நடந்த இடத்தில் கிடைத்த மற்றொரு பொருளையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தது. அது, பத்மநாபா குழு மீது தாக்குதல் நடந்தபோது வீசப்பட்டு, ஆனால் வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டு. இந்த வெடிகுண்டில், SFG-87 என்ற எழுத்துக்கள் பெறிக்கப்பட்டிருந்தன.
உங்களுக்கு இந்த விவகாரங்களில் பரிச்சயம் இருந்தால், சென்னை சூளைமேட்டில் கிடைத்த வெடிகுண்டில் பொறிக்கப்பட்டிருந்த SFG-87 என்பதன் விரிவாக்கம், சிங்கப்பூர் ஃபிராக்மென்டேஷன் கிரானைட்-87 என்பது தெரிந்திருக்கும்!அத்தியாயம் 16
ராஜிவ் கொலையில் சினிமாக்காரர்களின் தொடர்பு!
“ஈழ விடுதலை இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவின் கொலையைச் செய்தது யார் என்ற மர்மம் தொடர்கிறது”  என்று கூறி, அந்த கொலை வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்தது, அப்போதைய தி.மு.க. அரசு. ஆனால், அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது, தமிழக காவல்துறைக்கும் தெரியும், இந்திய உளவுத்துறைகளுக்கும் தெரியும்.
விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட கொலை அது என்பது அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது.
இருந்தும் சில காரணங்களுக்காக, கொலை செய்தது யார் என்பது தெரியாது என பாசாங்கு பண்ண வேண்டிய நிலையில் தி.மு.க. இருந்த காரணத்தால், அப்போது கிடைத்த தடயங்களையும் சோதனைக்கு அனுப்பியிருக்கவில்லை. ஆனால், தடயங்கள் காவல்துறை வசம் இருந்தன.
இப்படியாக தமிழக காவல்துறை வசம் இருந்த ஒரு தடயம்தான், பத்மநாபா குழு மீது தாக்குதல் நடந்தபோது வீசப்பட்டு, ஆனால் வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டு. இந்த வெடிகுண்டில்தான், கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டதுபோல, SFG-87 (சிங்கப்பூர் ஃபிராக்மென்டேஷன் கிரானைட்-87) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மற்றைய தடயம், பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலக மரக்கதவில் பாய்ந்திருந்த உலோகத்திலானா சிறு குண்டுகள்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், இந்தத் தடயங்கள் மீண்டும் உயிர் பெற்றன. (இந்தக் காலகட்டத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இல்லை)
விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா? பத்மநாபாவைக் கொல்ல வீசப்பட்ட வெடிகுண்டு, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், கொலை செய்தவர்களுக்கு எதிரான தடயமாக மாறியது. இந்த வெடிகுண்டு சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவால் சோதனைக்காக தமிழகத் தடய அறிவியல் சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது.
பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலக மரக்கதவில் பாய்ந்திருந்த உலோகத்திலானா சிறு குண்டுகளைப் போலவே, வெடிக்கப்படாத வெடிகுண்டிலும் உலோகத்தாலான சிறு குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிபொருள் கலவையில் ஆர்.டி.எக்ஸ். மற்றும் டி.என்.டி. இருப்பது தெரியவந்தது.
சோதனைக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டில், 0.2 மில்லி மீற்றர் விட்டமும், 0.05 கிராம் எடையும் கொண்ட உலோகத்திலான 2800 சிறு குண்டுகள் இருந்தன. இதன் வெடிபொருள் கலவை 60% ஆர்.டி.எக்ஸ்., 40% டி.என்.டி. என அமைந்திருந்தது.
ராஜிவ் காந்தியை கொல்லப் பயன்படுத்திய வெடிகுண்டில் ஆர்.டி.எக்ஸ். மட்டுமே இருந்தது. ஆனால், அங்கு கிடைத்த உலோகத்தினாலான சிறு குண்டுகள், பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டிலிருந்த உலோகத்தாலான சிறு குண்டுகளைப் போலவே இருந்தது.
இந்தத் தரவுகள், இரு வெடிகுண்டுகளையும் தயாரித்தவர்கள் ஒரே ஆட்கள்தான் என்பதை சட்ட ரீதியாக நிரூபிக்க போதுமானவை அல்ல. “ஒரே ஆட்கள் தயாரித்து இருக்கலாம்” என்ற சந்தேகத்தை ஏற்படுத்த மட்டுமே போதுமானவை. தவிர பத்மநாபா கொலையில் விடுதலைப் புலிகளின் தொடர்பு அதுவரை நிரூபிக்கப்பட்டு இருக்கவில்லை என்பதால், இவற்றை வைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகளை காட்சிக்குள் கொண்டுவருவதில் சிரமங்கள் இருந்தன.
இப்படியான நிலையில், பத்மநாபா கொலை பற்றி சக உளவுத்துறைகளிடம் என்ன தகவல்கள் உள்ளன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டது சிறப்புப் புலனாய்வுக் குழு. பத்மநாபா கொலைச் சம்பவத்தில் டேவிட், ரகுவரன் ஆகிய இரு விடுதலைப்புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாக ஐ.பி. (இன்டெலிஜென்ஸ் பீரோ) தகவல் கூறியது. றோ வைத்திருந்த தகவலும் அதுதான்.
ஆனால், இந்த இருவரது போட்டோக்களையும் பெறுவதில் இந்த இரு உளவு அமைப்புகளும் தாம் வெற்றிபெறவில்லை என்று கூறிவிட்டன.
பத்மநாபா கொலையாளிகள் கடத்திச் சென்ற மாருதி வேன் உரிமையாளர்கூட, அவர்களது அடையாளங்கள் பற்றிப் பெரிய அளவில் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. “எனது கார் இரவு நேரத்தில் கடத்தப்பட்டது. அப்போது இருளாக இருந்ததால், யாரையும் அடையாளம் தெரியும் அளவுக்கு பார்க்க முடியவில்லை. காரை கடத்திய நபர்கள் அனைவரும் கறுப்பாகவும், ஒரே மாதிரியான தோற்றமளிப்பவர்களாகவும் இருந்தார்கள்” என்று அவர் கூறிவிட்டார்.
சிறப்பு புலனாய்வுக்குழு, எதற்காக பத்மநாபா கொலையாளிகளின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள விரும்பியது?
காரணம், பத்மநாபா கொலையை வெற்றிகரமாக நடாத்திக் கொடுத்து விட்டதலால், அதே குழுவிடம்தான் ராஜிவ் கொலை ஆபரேஷனையும் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தது புலனாய்வுக் குழு!
ராஜிவ் கொல்லப்பட்ட இடத்தில் குர்தா-பைஜாமா அணிந்த நபர் (சிவராசன்) நின்றிருந்தார் அல்லவா? பத்மநாபா கொலையை முடித்துக் கொடுத்த டேவிட், ரகுவரன் ஆகிய இருவரில் ஒருவர்தான் அவர் என்பதே புலனாய்வுக் குழுவின் ஆரம்ப தியரியாக இருந்தது!!
இதனால், பத்மநாபா கொலையைப் பார்த்த சாட்சிகளிடம், குர்தா-பைஜாமா அணிந்த நபரின் போட்டோவைக் காட்டி, பத்மநாபாவைக் கொல்ல வந்தவர்களில் இவரும் இருந்தாரா என திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது புலனாய்வுக்குழு. இந்த முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.
அடுத்தபடியாக புலனாய்வுக் குழுவின் பார்வை, ராஜிவ் கொலை நடந்த இடத்தில் போட்டோக்களை எடுத்த ஹரிபாபுவின்மீது திரும்பியது. ராஜிவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டு, அதை போட்டோ எடுக்க வந்த ஹரிபாபுவையும் கொன்றுவிட்ட போதிலும், அவரால் எடுக்கப்பட்ட போட்டோக்கள்தான், ராஜிவ் கொலையில் இருந்த ஒரேயொரு நேரடித் தடயமாம்.
போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும், பல்வேறு குழுக்கள் ஆராய்ந்தன. அதன் பின்னரும், ராஜிவ் கொலையைத் திட்டமிட்டவர்களுடன் ஹரிபாபுவுக்கு எந்த அளவுக்குத் தொடர்பு இருந்தது என்பது புலனாய்வுக் குழுவால் ஊகிக்க முடியவில்லை. ஹரிபாபு, ராஜிவ் காந்தி நிகழ்ச்சியை படம் எடுப்பதற்காக அமர்த்தப்பட்ட வெறும் போட்டோகிராபரா அல்லது ராஜிவ் காந்தியை குறிவைக்கும் சதித் திட்டத்தின் ஓர் அங்கமா என்று தெளிவாகத் தெரியவில்லை.
ஹரிபாபுவின் குடும்பம் ஏழ்மையானது. அவரது வீட்டுக்கு சில தடவைகள் புலனாய்வுக்குழு அதிகாரிகள் சென்றார்கள். அவர் தீவிரவாத அணி ஒன்றில் இருந்ததற்கான அறிகுறி எதுவும் அந்த வீட்டில் இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் அவருக்கும் சிறு பரிச்சயம்கூட் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை.
ஆனால், நிஜத்தில் அவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சிலருடன் தொடர்புகள் இருந்தன.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் ஹரிபாபுவும் கொல்லப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே, புலிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பு பற்றிய ஆதாரங்கள் அனைத்தும் அவரது வீட்டில் இருந்து அகற்றப்பட்டன. இந்த விஷயம் ஆரம்பத்தில் புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கவில்லை.
இதனால் அவரையும் விட்டுவிட்டு, அடுத்த நபர் பற்றி ஆராய நகர்ந்தது புலனாய்வுக்குழு.
இப்போது ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்களில் இருந்தவர்கள் பற்றி ஆராயத் தொடங்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு. அந்த போட்டோக்களில் பிரதானமாகக் காட்சியளித்தவர்களை, குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்ட போட்டோக்களில் காணப்படுபவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் அலசி ஆராய வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
முதல் போட்டோவில் இருந்த காங்கிரஸ்காரர் லதா கண்ணனுக்கும் அவரது மகள் கோகிலாவுக்கும் ராஜிவ் கொலை திட்டமிடலுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்துப் புலனாய்வு நடத்தினார்கள். அதில் ஒன்றும் சிக்கவில்லை.
இரண்டாவது போட்டோ, ராஜிவ் கலந்துகொள்ள இருந்த பொதுக்கூட்டத்தில், பெண்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி எடுக்கப்பட்டது. அதில் இருந்த பெண்களில், சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது உள்ளனரா என்று விசாரித்தார்கள். அதிலும் பலன் இல்லை.
மூன்றாவது போட்டோவில், சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு கான்ட்ராக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த போட்டோவை வைத்து, ராஜிவ் கொலையில் சினிமா தொடர்பு உடைய யாராவது சம்மந்தப்பட்டு உள்ளார்களா என்ற கோணத்தில் தொடங்கியது விசாரணை.
சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், ராஜிவ் கொலை நடப்பதற்கு முன்னும், பின்பும், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற விபரங்களை அவர் அறியாமலேயே திரட்டியது புலனாய்வுக் குழு. இந்த விசாரணையில் சுவாரசியமான விஷயம் ஒன்று வந்தது. விசாரணையில் கிடைத்த சிறிய சிறிய தகவல்கள், எப்படி ஒன்றுக்கொன்று பொருந்தி வந்தன என்று, இதோ பாருங்கள்:
• ராஜிவ் காந்தி படுகொலை நடந்ததற்கு முந்தைய நாள், லண்டனிலிருந்து இலங்கைத் தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருந்தார். சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கினார்.
• நீண்ட பயணத்தின்பின், அவர் சென்னையில் தொடர்பு கொண்ட முதலாவது நபர், சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்தான்!
• சென்னையில் இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷை தொடர்பு கொண்டபின், அன்றிரவே அந்த இலங்கைத் தமிழர் சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
• அவர் பயணம் செய்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் புறப்பட்டு 20 நிமிடத்தில், இரவு 8.20 மணிக்கு, விசாகப்பட்டினத்திலிருந்து ராஜிவ் காந்தி பயணம் செய்த தனி விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்திறங்கினார் ராஜிவ் காந்தி.
• சென்னை வந்திறங்கிய ராஜிவ் காந்தி, சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடக்க இருந்த இடத்துக்குச் சென்றார். அங்கே ராஜிவ் காந்தி வந்து சேரும்வரை மேடையில் இசை நிகழ்ச்சி நடாத்திக்கொண்டு இருந்தார் சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்.
• மனித வெடிகுண்டு பெண், பைஜாமா-குர்தா அணிந்த மர்ம நபர் ஆகியோரால் ராஜிவ் கொலைச் சம்பவத்தை போட்டோ எடுக்க அழைத்து வரப்பட்ட ஹரிபாபு எடுத்த போட்டோக்களிள் ஒன்று, சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷை போகஸ் பண்ணி எடுக்கப்பட்டிருந்தது.
• ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடக்க இருந்த மேடைக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், அதே மேடையில் இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கீழே இறங்கினார் இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ். அவர் மேடையைவிட்ட அகன்று செல்ல, மேடையை நோக்கி நடந்துவந்த ராஜிவ் காந்தியை அணுகினார் மனித வெடிகுண்டு பெண். குண்டு வெடித்தது. ராஜிவ் கொல்லப் பட்டார்.
இவ்வளவு விபரங்களும் கோர்வையாகக் கிடைத்த பின்னர், என்ன நடக்கும்?  வந்தது கிளைமாக்ஸ்! அத்தியாயம் 17
புலனாய்வுக் குழுவினருக்கு முதலாவது தடயம் கிடைக்கிறது
லண்டனில் இருந்து வந்து சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷுடன் தொடர்பு கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர்மீது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட 7 காரணங்கள் இருந்தன என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம். (அதைப் பார்த்து விட்டு மேலே படிக்க,  இங்கே கிளிக் செய்யவும்)
அந்த நபர் அன்றிரவே கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றார் என்ற தகவல் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்தது. இரு தினங்களில் அவர் மீண்டும் கொழும்புவில் இருந்து சென்னை வந்து இறங்கி, முன்பு தங்கியிருந்த அதே நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் என்ற விபரமும் சற்று தாமதமாக புலனாய்வுப் பிரிவுக்கு வந்து சேர்ந்தது.
அந்த இலங்கைத் தமிழர்தான், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் நின்றிருந்த பைஜாமா-குர்தா அணிந்த மர்ம நபராகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் புலனாய்வுப் பிரிவுக்கு எழுந்தது. ஆனால், கொழும்பு சென்ற அவர் ஏன் மறுபடியும் சென்னை வரவேண்டும்? இந்தப் பகுதிதான் புலனாய்வுப் பிரிவுக்குப் புரியவில்லை.
இருந்தபோதிலும், அவரைச் சுற்றி வளைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஆயுதம் தாங்கிய படையினர் உதவியுடன் அந்த நட்சத்திர ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தியது புலனாய்வுப் பிரிவு. அவர் எடுத்திருந்த அறை காலி செய்யப்படாமல் இருந்தது. அங்கு ஒன்றும் சிக்கவில்லை. மது பாட்டில்கள் மற்றும் பெண்களுடன் சினிமா உலகம் சம்மந்தப்பட்ட அவ்வளவு பிரபலமற்ற சிலர் அங்கு இருந்ததைத்தான் அங்கு இவர்களால் காண முடிந்தது.
இவர்கள் தேடிச்சென்ற இலங்கைத் தமிழர் அங்கே இல்லை.
அங்கிருந்தவர்களிடம் குறிப்பிட்ட இலங்கைத் தமிழர் எங்கே என்று விசாரித்தபோது, அந்த நபர் மீண்டும் கொழும்பு செல்வதற்காக விமான நிலையம் சென்றிருக்கிறார் என்ற தகவல் இவர்களுக்கு கிடைத்தது. பட்சி சிக்கியது என்று விமான நிலையத்துக்குப் பறந்தார்கள் இவர்கள்.
விமான நிலையத்தில் அந்த இலங்கைத் தமிழர் விமானம் ஏறுமுன் அவரைப்  பிடித்து விசாரித்தார்கள்.
அவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜை என்றும், இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக மே 20-ம் திகதியே சென்னைக்கு வந்துவிட்டார் என்றும் தெரிந்தது. சென்னைக்கு வந்த தினத்திலேயே சில சினிமா புள்ளிகளையும் அவர் சந்தித்திருக்கிறார். இசை நிகழ்ச்சித் திட்டத்தை இறுதி செய்வதற்காக, ஹோட்டல் அறையை காலி செய்யாமலேயே அவர் கொழும்புவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது.
விமானம் புறப்படும் முன்னர் அவசர அவசரமாக சினிமாத் துறையினர் சிலரிடம் விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த சினிமா கலைஞர்கள் குழு ஒன்று இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு போவது புலனாய்வுப் பிரிவுக்கு உறுதியானது. அதையடுத்து, இலங்கைத் தமிழரை கொழும்பு செல்ல அனுமதித்தார்கள்.
இதிலுள்ள தமாஷ் என்னவென்றால், இந்த விவகாரம் அத்துடன் முடியவில்லை.
இதெல்லாம் முடிந்து சில வாரங்கள் கழித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. “சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பிடித்து வைத்திருக்கிறோம். நீங்கள் இங்கு வந்து அவரை விசாரிக்க விரும்பினால் விசாரிக்கலாம்” என்று கொன்னார்கள்.
சந்தேகத்திற்குரிய நபர் வைக்கப்பட்டிருந்த இமிகிரேஷன் அலுவலகத்துக்கு இவர்களும் சென்றிருக்கிறார்கள். அங்கே இவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் ‘சந்தேக நபர்’. விவகாரம் என்னவென்றால், இதே நபரைத்தான் கொழும்பு செல்வதற்கு முன் இவர்கள் பிடித்து விசாரித்திருந்தார்கள்! இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அப்போது அவர் லண்டனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
விதியை நொந்தபடி அவரை இரண்டாவது தடவையாக விமானம் ஏற்றிவிட்டுத் திரும்பியது சிறப்பு புலனாய்வுக் குழு!
பொதுவாக அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் வசித்துவந்த இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகவே புலனாய்வுப் பிரிவினருக்கு ‘துப்புகள்’ கிடைத்துக் கொண்டிருந்தன. கொழும்புவில் இருந்தும் தகவல்கள் சென்னைக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
அப்படியாக புலனாய்வுப் பிரிவுக்கு கொழும்புவில் இருந்து வந்து சேர்ந்த ஒரு தகவல், ராஜிவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவராக இருக்கக்கூடும் என்பது! சுந்தரி என்று கூறப்பட்ட பெண்ணின் பெற்றோர் சென்னை, புறநகர் பகுதியான கொட்டிவாக்கத்தில் வசிக்கின்றனர் என்பதும் கொழும்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. கொட்டிவாக்கத்தில் ஒரு முகவரிகூட கொடுத்திருந்தார்கள்.
சுறுசுறுப்படைந்த புலனாய்வுப் பிரிவு, ஆயுதம் தாங்கிய படையுடன் கொட்டிவாக்கம் முகவரிக்குச் சென்றது. குறிப்பிட்ட முகவரியில் இருந்த வயதான தம்பதிக்கு 4 மகன்கள், 3 மகள்கள் இருந்தனர். இவர்களில் இரு மகள்கள் பெற்றோருடன் சென்னையில் இருந்தனர். மூத்த மகள் இந்தியாவில் இருக்கவில்லை. அவர் யாழ்ப்பாணத்தில் துணிக்கடை நடத்தி வந்தார்.
புலனாய்வுக் குழு விசாரித்ததில், ஒரு மகள் யாழ்ப்பாணத்தில் துணிக்கடை நடாத்தி வந்தது உண்மை என்று தெரியவந்தது. அவர் உயிருடன் இருப்பதால், ‘மனித வெடிகுண்டு’ அல்ல.
இப்படியான தகவல்கள் சில வந்துகொண்டிருந்த நிலையில்தான், புதிய தகவல் கொடுக்க வந்தவர்களில் ஒருவர், பின்னர் இந்த வழக்கில் புலனாய்வுக் குழுவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சாட்சியாக மாறிப்போனார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சிறையில் உள்ள நளினி ஆகியோரைப் பற்றி தகவல் கொடுத்த நபர்தான் அவர்.
சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த அந்த நபர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார். அந்த போட்டோவில் உள்ள பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் அணிந்த பெண்ணையும், குர்தா-பைஜாமா அணிந்திருந்த மர்ம நபரையும் தனது மனைவி தமது பக்கத்து வீட்டில் பார்த்திருப்பதாக தெரிவித்தார்.
“பக்கத்து வீட்டில் வசித்தவரின் பெயர் நளினி” என்றார் அவர்.
தகவல் கொடுக்க வந்தவரின் மனைவி மே 21-ம் தேதி, தமது பக்கத்து வீட்டில் வசித்த நளினி, மனித வெடிகுண்டு எனச் சந்தேகிக்கப்பட்ட பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் பெண், குர்தா-பைஜாமா அணிந்த நபர், மற்றும் வேறு ஒருவருடன் சேர்ந்து சென்றதைப் பார்த்ததாகத் தெரிவித்தார்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது, மே 21-ம் தேதிதான்!
இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனி வீடு ஒன்றில் இருந்துதான் அவர்கள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றிருக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைத்ததும் மீண்டும் சுறுசுறுப்பான புலனாய்வுக்குழு, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நளினி என்பவரைப் பற்றி அவரிடம் விசாரித்தது.
“நளினி இன்னமும் உங்கள் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறாரா?”
“இல்லை. 26ம் தேதி வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்ற நளினி, அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை”
“அவர் எங்கே போயிருக்க முடியும் என்று ஏதாவது ஊகம் உண்டா?”
“இல்லை. அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை”
“இந்த நளினி எங்காவது வேலை பார்க்கிறாரா?”
“ஏதோ கம்பனியில் வேலை பார்க்கிறார் என்று தெரியும். கம்பனியின் பெயர் தெரியாது. அது அடையாறில் இருக்கிறது என்று நினைக்கிறேன்”
“பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் பெண், குர்தா-பைஜாமா அணிந்த நபர் ஆகியோர் நளினியைத் தேடி அடிக்கடி வருவார்களா?”
“அவர்கள் அடிக்கடி வருவதை நான் காணவில்லை. ஆனால், தாஸ் என்ற பெயருடைய ஒருவர்தான் நளினி வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதுண்டு” என்று கூறினார் அவர்.
இவர் குறிப்பிட்ட தாஸ் என்ற பெயருடைய ஒருவர்தான், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன்! அத்தியாயம் 18
ஹரிபாபுவின் பெட்டியில் இருந்த பொருட்கள்
சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த ஒருவர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார். அவர் கொடுத்த தகவல்கள் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தில் நடந்த சம்பவங்களுடன் பொருந்தி வருவதுபோல இருந்தன.
அவர் கொடுத்த தகவல்களில் இருந்து புலனாய்வுக் குழுவுக்கு புதிய பெயர் ஒன்று கிடைத்திருந்தது – நளினி!
அதுவரை காலமும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சந்தேகப் பட்டியலில், குர்தா-பைஜாமா நபர் மாத்திரமே இருந்தார். ராஜிவ் கொல்லப்பட்ட தினத்தில் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடியதாக இவர்கள் கருதிய மனித வெடிகுண்டாக வந்து வெடித்த பெண் மற்றும் போட்டோகிராபர் ஹரிபாபு ஆகிய இருவரும் ராஜிவ் கொல்லப்பட்ட அதே தினத்தில் கொல்லப்பட்டு விட்டனர். மற்றொரு போட்டோகிராபரான சுபா சுந்தரத்தை, அவர் அறியாமலேயே இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
இதனால், சந்தேக நபர் என்ற விதத்தில் புலனாய்வுக் குழு தேடிக்கொண்டிருந்த ஒரே நபர், பெயர் தெரியாத, குர்தா-பைஜாமா நபர் மாத்திரமே. இப்போது நளினி என்ற மற்றொரு பெயர் கிடைத்திருக்கின்றது. ஆனால், அவரது பெயர் இவர்களுக்கு தெரியவந்த நேரத்தில், வில்லிவாக்கத்திலிருந்து நளினி மாயமாகிவிட்டார்.
நளினியைத் தேடுவதில் புலனாய்வுக் குழுவில் ஒரு பகுதியினர் ஈடுபட, கார்த்திகேயன் தலைமையில் மற்றைய பிரிவினர் விடுதலைப் புலிகளின் தமிழக நடவடிக்கைகள் பற்றிய தகவல் சேரிப்பில் இறங்கினர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய ஈழ விடுதலை இயக்கங்களில் நடவடிக்கைகள் தொடர்பாக சி.பி.ஐ.-யிடம் பெரியளவில் தகவல் ஏதும் அப்போது இருக்கவில்லை.
இந்திய உளவுத்துறைகளில் சி.பி.ஐ. முக்கியமான ஒன்றுதான் என்றாலும், அவர்களது போகஸ் முழுவதும் வெளிநாடு தொடர்பற்ற இந்தியப் புலனாய்வுகள் தொடர்பாகவே இருந்தது. ஈழ விடுதலை இயக்கங்கள் தொடர்பான விவகாரங்களை அதிகளவில் டீல் பண்ணியது மற்றொரு உளவு அமைப்பான றோ பிரிவுதான்.
அத்துடன், விடுதலைப் புலிகள் புலிகள் உட்பட ஈழ விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் தமிழகத்தை மையப்படுத்தியே இருந்து வந்த காரணத்தால், தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவான கியூ பிராஞ்ச், தமது பங்குக்கு நிறையவே தகவல்களை வைத்திருந்தது.
ராஜிவ் காந்தி கொலை புலனாய்வு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப் பட்டபோது, கார்த்திகேயன் உட்பட சி.பி.ஐ.-யின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் யாருக்கும், றோ அல்லது கியூ பிராஞ்ச் அதிகாரிகளுக்கு விடுதலைப் புலிகள் தொடர்பாக தெரிந்திருந்த அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கவில்லை. இதனால், இவர்கள் அந்த இரு உளவு அமைப்புகளிடமிருந்தும் தகவல்களை கோர வேண்டியிருந்தது.
விடுதலைப் புலிகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, தமது பாதையின் தொடக்கமாக எடுத்துக் கொண்ட சம்பவம், சென்னையில் நடைபெற்ற பத்மநாபா கொலைச் சம்பவம்தான்.
ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பயன்படுத்திய வெடிகுண்டில் இருந்த சிறு குண்டுகளும், பத்மநாபா கொலையுண்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட, வெடிக்காத எஸ்.எப்.ஜி.-87 கையெறிகுண்டில் காணப்பட்ட சிறு குண்டுகளும் ஒரே மாதிரியாக இருந்ததை புலனாய்வுக் குழு முதலில் உறுதி செய்து கொண்டது. அடுத்து, 1990 ஜூன் மாதம் பத்மநாபா மற்றும் அவரது ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களின் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் யார் என்ற விபரங்களை தமக்கு கொடுத்து உதவுமாறு றோ, மற்றும் கியூ பிராஞ்சிடம் கேட்டுக் கொண்டது சி.பி.ஐ. புலனாய்வுக் குழு.
றோ, மிகச் சுருக்கமாகப் பதில் கொடுத்திருந்தது. டேவிட், ரகுவரன் ஆகிய இரு விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் பெயர்களைக் கொடுத்து, “இவர்கள்தான் தலைமை தாங்கிச் செய்ததாக எம்மிடம் தகவல் உள்ளது. அதற்குமேல் ஏதுமில்லை” என்று ஒதுங்கிக் கொண்டது. அந்த இருவரது போட்டோக்கள்கூட தம்மிடம் கிடையாது என கைவிரித்து விட்டது.
பின்னாட்களில் றோ அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “நிச்சயமாக அவர்களது போட்டோக்கள் எம்மிடம் இருந்தன. ஆனால், சி.பி.ஐ.-யால் அவற்றை எம்மிடமிருந்து (றோ) பெற முடியாது. அதெல்லாம் உள்வீட்டு பாலிடிக்ஸ்” என்றார். “சி.பி.ஐ.-யும் உளவுத்துறைதானே.. அவர்களே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே” என்று கூறிச் சிரித்தார்.
தமிழக காவல்துறையின் கியூ பிராஞ்ச் வஞ்சகமில்லாமல், தகவல்களை நிறையவே கொடுத்தார்கள்.
ஜூன் 3-ம் தேதி, கியூ பிராஞ்ச்சிடமிருந்து கத்தை கத்தையாகக் காகிதங்களும், வேறு சில ஆவணங்களும் சிறப்புப் புலனாய்வுப்படைக்கு வந்தன. அந்த பைல்களையெல்லாம் படித்துப் புரிந்து கொள்ளவே புலனாய்வுக் குழுவுக்கு சில தினங்கள் பிடித்தன. அந்தத் தகவல்கள், தனிப்பட்டு பத்மநாபா கொலை மட்டும் என்று இல்லாமல், விடுதலைப்புலிகளின் தமிழ்நாட்டு நடவடிக்கைகள் என்று பொதுப்படையாக இருந்தன.
அவற்றில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, 1991-ம் ஆண்டு ஜனவரியில், சென்னை புறநகர்ப் பகுதியில் ரகசிய ட்ரான்ஸ்மிஷன் சென்டர் ஒன்று இயங்குவதை கியூ பிராஞ்ச் கண்டுபிடித்தது. இந்த ரகசிய ட்ரான்ஸ்மிஷன் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட மற்றொரு சென்டருடன் சிறப்பு அலைவரிசையில் தகவல்களைப் பறிமாறிக்கொண்டிருந்த விஷயமும் தெரியவந்தது.
இங்கிருந்து பரிமாறப்பட்ட தகவல்கள் அனைத்தும் ரகசிய கோர்டு-வேர்டுகளில் இருந்தன. அந்த கோர்டு-வேர்டுகளை கியூ பிராஞ்சால் அப்போது உடைக்க முடிந்திருக்கவில்லை.
அத்துடன், சென்னை புறநகர்ப் பகுதியில் இந்த ரகசிய தகவல் தொடர்பு நிலையம் இயங்குகின்றது என்பதுவரைதான் கியூ பிராஞ்சால் கண்டுபிடிக்க முடிந்திருந்தது. புறநகர்ப் பகுதியில் சரியாக எந்த இடத்தில் இருந்து இயக்கப்படுகின்றது என்பதையும் கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதிகள் கியூ பிராஞ்சிடம் இருக்கவில்லை.
குறிப்பிட்ட பைலில் கியூ பிராஞ்ச் எழுதியிருந்த குறிப்பில், “இலங்கையைச் சேர்ந்த, நவீன ஒயர்லெஸ் சாதனங்களைக் கையாள்வதில் திறமைசாலிகளான சிலரால் அந்த ட்ரான்ஸ்மிஷன் நடாத்தப்படுகின்றது என்பதை புரிந்து கொண்டோம். அதற்குமேல் எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று எழுதப்பட்டிருந்தது.
கியூ பிராஞ்சால் அனுப்பப்பட்டிருந்த பைல்களுடன் கத்தை கத்தையாக வந்திருந்த காகிதங்களில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் தேதி வாரியாக இருந்தன. ஆனால், அவற்றை புரிந்து கொள்ள கோர்டு-வேர்டுகளை டி-கோர்டு செய்யும் கோர்டு ஷீட் தேவை. இதனால், அந்தக் காகிதங்களால் எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் இருந்தன.
இந்தக் கட்டத்தில் மிக மோசமான நிலையில் இருந்தது ராஜிவ் காந்தி கொலை புலனாய்வு. புலனாய்வுக் குழு, மூன்று லீட்களில் புலனாய்வு செய்யத் தொடங்கியிருந்து, மூன்றுமே பாதி வழியில் பாதை தெரியாமல் தடுமாறி நின்றன.
முதலாவது, சுபா சுந்தரத்தை கண்காணித்ததில் புதிதாக ஏதும் தெரியவில்லை. இரண்டாவது, நளினியைக் காணவில்லை. மூன்றாவது, விடுதலைப்புலிகள் பற்றிய ஆய்வும் புரியாத காகிதங்களுடன் நின்றது.
இந்த நிலையில்தான் நான்காவதாக ஒரு லீட், புலனாய்வுக் குழுவுக்கு வலிய வந்து சேர்ந்தது.
குண்டு வெடிப்பில் இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கு தெரிந்தவர் ஒருவர் லோக்கல் போலீஸை தொடர்பு கொண்டிருந்தார். ஹரிபாபுவின் பெட்டி ஒன்று இவரது வீட்டில் இருந்தது. ஹரிபாபு குண்டு வெடிப்பில் இறந்ததும், அவரைப் பற்றிய சில சந்தேகங்கள் பத்திரிகைகளில் எழுப்பப்பட்டதும், இவரை உஷாரடைய வைத்திருந்தது.
இவர் பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறார். உள்ளே ஏராளமான காகிதக் கத்தைகள்.
அந்தக் காகிதக் கத்தைகளில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் போட்டோ, விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட காலண்டர், காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளின் பட்டியல், வேலூர் கோட்டையின் வரைபடம், ஹரிபாபுவுக்கு தனிப்பட்ட முறையில் வந்த சில கடிதங்கள் ஆகியவையும் இருந்தன.
வேலூர் கோட்டையில் என்ன முக்கியத்துவம்? இது நடைபெற்ற காலப்பகுதியில்,  வேலூர் கோட்டையில் உள்ள சிறையில், ஏராளமான ஈழ விடுதலைப் போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
ஹரிபாபுவுக்கு வந்த கடிதங்களில் ஒன்று, அவருக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கடிதம். ஹரிபாவு ஏதோ ஆபத்தான வேலையில் ஈடுபடப் போகிறார் என்பதும் அவ்வாறு ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் வகையிலும் அக்கடிதம் இருந்தது.
பாக்கியநாதன் என்பவர் ஹரிபாபுவுக்கு எழுதிய ஒரு துண்டுக் கடிதமும் அதில் இருந்தது. அதில், “முத்துராஜாவின் மின் கட்டணத்தைக் கட்டிவிட்டு, அதன் ரசீதை முருகனிடம் தந்துவிடவும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாகப் பார்த்தால் இதில் ஒன்றுமில்லைதான். ஆனால், பின்னாட்களில் பாக்கியநாதன், முத்துராஜா, முருகன் ஆகிய மூவரும் இந்த வழக்கில் சம்மந்தப்படப் போகிறார்கள்.
ஹரிபாபுவின் பொருட்களில் கிடைத்த மற்றொன்று, 1991, மே 21-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு பூம்புகார் கைவினைப் பொருள் கழகத்தின் ரசீது. ரூ.65 மதிப்புள்ள சந்தன மாலை வாங்கியதற்காக அது வழங்கப்பட்டிருந்தது.
ராஜிவ் காந்தியைக் கொன்ற மனித வெடிகுண்டு என்று இவர்கள் சந்தேகப்பட்ட பெண்ணை ஹரிபாபு எடுத்த போட்டோவில், ராஜிவ் காந்தியை நெருங்கிய நிலையில் அந்தப் பெண் நின்றிருந்தது ஞாபகமிருக்கிறதா?
அப்போது, அவரது கையில் இருந்ததும் ஒரு சந்தனமாலைதான்!அத்தியாயம் 19
நளினியின் போன் நம்பர் கிடைக்கிறது
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே குண்டு வெடிப்பில் இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் பெட்டிதான் புலனாய்வுக் குழுவுக்கு முதன்முதலாக உருப்படியான சில தகவல்களைக் கொடுத்தது. அந்தப் பெட்டிக்குள் இருந்த காகிதங்கள் புலனாய்வுக் குழுவை ஹரிபாபு விஷயத்தில் உஷார் படுத்தியது. அதையடுத்து ஹரிபாபு தொடர்பான சில தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது புலனாய்வுக் குழு.
“ஹரிபாபுவின் பெட்டி, ஹரிபாபுவின் நண்பரது வீட்டுக்கு எப்படிச் சென்றது?” இந்தக் கேள்விக்கான பதில், புலனாய்வுக் குழுவுக்கு அவசியத் தேவையாக இருந்தது.
காரணம், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே தினத்தில் வாங்கப்பட்ட சந்தன மாலை ஒன்றின் ரசீது, ஹரிபாபுவின் பெட்டியில் கிடைத்தது. அப்படியானால், குறிப்பிட்ட ரசீதை அவர் அன்றுதான் அந்தப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும். ரசீதை பெட்டிக்குள் வைத்துவிட்டு ராஜிவ்காந்தி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு போட்டோ எடுக்கச் சென்றிருக்கிறார்.
ராஜிவ் கொல்லப்பட்ட அதே தினத்தில் ஹரிபாபுவும் இறந்து போனார். அன்றைய தினம் தாமும் இறந்து போவோம் என்று ஹரிபாபுவுக்கு தெரிந்திருக்க முடியாது. அப்படியான நிலையில், ரசீதை ஒரு பெட்டியில் வைத்து, அதை தனக்கு தெரிந்த ஒருவரது பாதுகாப்பில் வைக்கச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இது கொஞ்சம் அசாதாரணமான விஷயமாக இருந்தது.
இப்படியொரு சந்தேகம் வந்தவுடன், ஹரிபாபுவின் பெட்டியைக் கொண்டுவந்து கொடுத்தவரை மீண்டும் அழைத்து விசாரித்தது புலனாய்வுக்குழு. “இந்தப் பெட்டியை ஹரிபாபு எப்போது உங்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்?”
அப்போது அவர் கூறிய பதில், புலனாய்வுக் குழுவுக்கு புதிய பாதை ஒன்றைக் காட்டிவிட்டது. “பெட்டியை ஹரிபாபு கொண்டுவந்து கொடுக்கவில்லை. அவர் கொல்லப்பட்ட செய்தி வந்த இரு தினங்களின்பின் அவரது அப்பா கொண்டுவந்து கொடுத்தார். இதற்குள் ஹரிபாபுவின் பொருட்கள் உள்ளன. உங்கள் வீட்டில் பத்திரமாக இருக்கட்டும் என்று ஹரிபாபுவின் அப்பா சொன்னார்”
இந்தப் பதில், ஹரிபாபு ஏதோ ஆபத்தான காரியங்களைச் செய்திருக்கின்றார் என்பது அவரது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்கின்றது என்ற கோணத்தில் புலனாய்வுக் குழுவை யோசிக்க வைத்தது. குண்டு வெடிப்பில் ஹரிபாபு கொல்லப்பட்டபின், அவரது வீட்டில் இருந்த சந்தேகத்துக்கு இடமான பொருட்களை அவரது வீட்டில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர் என்பது சுலபமாகப் புரிந்தது.
அதுவும் ராஜிவ் காந்தியைக் கொன்றது விடுதலைப்புலிகள் என்று உறுதி செய்யப்படும் முன்னரே, ஹரிபாபுவின் வீட்டில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகள் தொடர்பான பொருட்களை ஒரு பெட்டியில் போட்டு, அப்புறப்படுத்தி உள்ளனர். அப்படியானால், ஹரிபாபுவுக்கு விடுதலைப் புலிகளுடன் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும்!
இந்தச் சந்தேகம் ஏற்பட்டதும், ஹரிபாபு தொடர்பான விசாரணையில் புலனாய்வுக் குழுவின் ஒரு பிரிவு இறக்கி விடப்பட்டது. ஹரிபாபு யாரையெல்லாம் சந்திப்பார்? யாரெல்லாம் அவரைத் தேடி வருவார்கள்? அவரது நடவடிக்கைகள் எப்படியிருந்தன என்ற கோணங்களில் விசாரித்தது புலனாய்வுக்குழு.
இதில் முக்கிய துப்பு ஒன்று கிடைத்தது.
ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்கு இரு வாரங்களுக்குமுன், மே முதல் வாரத்தில் ஒருநாள் ஹரிபாபு மற்றொரு இளைஞரை தமது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அந்த இளைஞர் ஒரு வாரம் ஹரிபாபுவின் வீட்டிலேயே தங்கி இருந்திருக்கிறார். அந்த இளைஞரை தனது நண்பர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது பெயர் சாந்தன் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த சாந்தன் ஒருவாரம் ஹரிபாபு வீட்டில் தங்கிவிட்டுப் போய்விட்டார்.
சாந்தனைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அவர் ஒரு இலங்கைத் தமிழர் என்றார்கள். அவரது தோற்றத்தைப் பார்த்தபோது, சாந்தன் ஒரு போராளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
இதன் மூலம் ஹரிபாபுவுக்கும் ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் ஏதோ தொடர்பு இருந்தது என்று ஊகித்தது புலனாய்வுக் குழு. அந்தப் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதை, ஹரிபாபுவின் பெட்டியில் இருந்த விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் காட்டிக் கொடுத்தன.
ஹரிபாபு தொடர்பான விசாரணை இப்படிப் போய்க்கொண்டிருக்க, இதற்குள் சிறப்புப் புலனாய்வுக் குழு, கொழும்புவில் பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அந்த வகையில், ஸ்ரீலங்கா உளவுப் பிரிவினரிடம் இருந்து பல தகவல்கள் இவர்களுக்கு கிடைக்கத் தொடங்கின. ஸ்ரீலங்கா உளவுப் பிரிவு கொடுக்கத் தொடங்கிய தகவல்கள், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவை திகைப்பில் ஆழ்த்தின.
திகைப்புக்கு காரணம் என்னவென்றால், இந்தியாவுக்குள் நடக்கும் விஷயங்கள் பற்றி, இந்திய புலனாய்வுத் துறைக்கு தெரியாத பல விஷயங்களை, ஸ்ரீலங்கா உளவுப் பிரிவு விலாவாரியாகத் தெரிந்து வைத்திருந்தது.
சென்னையில் அச்சகம் நடத்தி வந்த கணவன்-மனைவி பற்றிய தகவல் ஒன்றைக் கொடுத்த ஸ்ரீலங்கா உளவுத்துறை, அந்தத் தம்பதி போராளிகளின் ஆதரவாளர்களுக்கு நெருக்கமானவர்கள் என்றது. அவர்களது அச்சகத்தில் விடுதலைப்புலிகளின் பிரசுரங்கள் சில அச்சிடப் படுகின்றன என்ற விபரத்தையும் கொழும்புவில் இருந்து கொடுத்திருந்தார்கள். அச்சகத்தின் பெயர், அது அமைந்துள்ள முகவரி என்று பக்காவாக சகல தகவல்களும் ஸ்ரீலங்கா உளவுத்துறையால் கொடுக்கப்பட்டது.
கொழும்பு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சென்னை அச்சகத்தை முற்றுகையிட்டது சிறப்பு புலனாய்வுக் குழு.
கொழும்பு கொடுத்த தகவல்கள் நிஜம் என்பதை அங்கு கண்டார்கள் சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினர். இரு தொகுதிகள் அடங்கிய ‘சாத்தானின் பலம்’ என்ற நூலின் சுருக்கம் அச்சிடப்பட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் அங்கு கிடைத்தன. இந்திய அமைதிப்படை ஸ்ரீலங்காவில் நடந்துகொண்ட விதம் தொடர்பான தகவல்கள் அந்தப் பிரசுரத்தில் காணப்பட்டன.
அத்துடன், ஸ்ரீலங்கா பிரச்னையில் அன்றைய இந்திய அரசின் கொள்கையை விமர்சித்து, இந்திய, வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாக அந்தப் பிரசுரம் இருந்தது. 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரையிலான காலத்தில் வெளியான கட்டுரைகள் அதில் தொகுக்கப்பட்டிருந்தன. இடையிடையே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கை விளக்கங்களும், விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன.
இவர்கள் ரெயிடு போகும் தகவல் கிடைத்து, இந்தப் பிரசுரங்களை வெளியிட்ட நபர் தலைமறைவாகி விட்டார்.
இந்த அச்சகத்தில் ராஜிவ் காந்தி கொலை தொடர்பான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், அங்கு கைப்பற்றிய பிரசுரத்தை வைத்து, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ராஜிவ் காந்தி மீது ஆழமான வெறுப்பு இருந்தது என்று பின்னாட்களில் விசாரணை முடிந்து இந்த வழக்கு நடைபெற்றபோது, சி.பி.ஐ. வாதாடியது.
இதே காலப்பகுதியில், தஞ்சாவூர் போலீஸ் தாம் கைது செய்து வைத்துள்ள ஒரு நபர் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை தொடர்பு கொண்டது. தமது கஸ்டடியில் உள்ளவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய நபராக இருக்கலாம் என்று தாம் சந்தேகப் படுவதாகவும் கூறியது.
தஞ்சாவூர் அருகே, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதாக தமிழக போலீஸ் கைது செய்து வைத்திருந்த அவரின் பெயர், சங்கர் கோணேஸ்வரன். ஆரம்ப விசாரணைகளின்போது, தாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்பதை ஒப்புக்கொண்ட அவர், இயக்கத்தில் தனது பெயர் ரூசோ என்றும் தெரிவித்திருந்தார்.
அவரிடம் இரு துண்டுக் காகிதங்கள் இருந்தன. அவற்றில் ஒரு காகிதத்தில் இரு பெயர்கள் இருந்தன. தாஸ், நளினி என்பவைதான் அந்தப் பெயர்கள். (இவர்கள் இருவரும் தற்போது ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கிறார்கள். நளினி யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தாஸ் வேறு யாருமல்ல, நளினியின் கணவர் முருகன்தான்.)
தகவல் கிடைத்ததும் தஞ்சாவூர் சென்ற புலனாய்வுக்குழு, ரூசோவை தமது கஸ்டடிக்குள் கொண்டுவந்தது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு துண்டுக் காகிதங்களில் ஒன்றில் தாஸ், நளினி ஆகியவர்களின் போன் நம்பர்களும் இருந்தன. மற்றொன்றில் சென்னைப் புறநகர்ப் பகுதியான போரூரில் உள்ள ‘எபனேசர் ஸ்டோர்ஸ்’ என்ற பலசரக்குக் கடையின் முகவரியும், போன் நம்பரும் இருந்தன.
சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த ஒருவர், மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்று கொடுத்த தகவல்களில் இருந்துதான் புலனாய்வுக் குழுவுக்கு முதல்முதலில் நளினியின் பெயர் தெரிந்திருந்தது (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  ஆனால், அவரது பெயர் இவர்களுக்கு தெரியவந்த நேரத்தில், வில்லிவாக்கத்திலிருந்து நளினி மாயமாகி விட்டார்.
புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் சொன்ன நளினியின் பக்கத்து வீட்டுக்காரருக்கு, நளினி அடையாறில் உள்ள ஏதோ ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்றார் என்பது மட்டுமே தெரிந்திருந்தது. அந்த நிறுவனத்தின் பெயர்கூட தெரிந்திருக்கவில்லை. புலனாய்வுக் குழு அடையாறு எங்கும் தேடியும், நளினி பணிபுரிந்த இடம் எது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கவில்லை.
அந்த வில்லிவாக்கம் நளினியும், தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி ரூசோவிடம் இருந்த துண்டுக் காகிதத்தில் இருந்த நளினியும் ஒரே நபரா? இந்தக் கேள்வி புலனாய்வுக் குழுவுக்கு எழுந்தது. அவர்கள் தஞ்சாவூரில் இருந்தே ரூசோவிடம் கைப்பற்றிய துண்டுக் கடிதத்தில் இருந்த போன் நம்பரை அழைத்தார்கள். அது ஒரு சென்னை நம்பர்.
“நளினியோடு பேச வேண்டும். அவர் இருக்கிறாரா?”
“அவர் இல்லையே. நீங்கள் யார் பேசுவது?”
“நாங்கள் சி.பி.ஐ. ஒரு என்கொயரி தொடர்பாக அவருடன் பேச வேண்டும். இந்த போன் நம்பர் இருப்பது வீடா, அலுவலகமா?”
“அலுவலகம்தான். ‘அனபான்ட் சிலிகான் பிரைவேட் லிமிடெட்’ என்று பெயர்”
“எங்கே இருக்கிறது உங்கள் அலுவலகம்?”
“அடையாறில்” என்று மறுமுனையில் பதில் வந்தது!அத்தியாயம் 20
முகம் தெரிந்த நபர்களின் பெயர்களும் தொடர்புகளும்
சென்னை அடையாறு பகுதியில் ‘அனபான்ட் சிலிகான் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நளினியும், வில்லிவாக்கம் நபர் தெரிவித்த அவரது பக்கத்து வீட்டு நளினியும், ஒரே நபர்தான் என்பதை புலனாய்வுக்குழு புரிந்து கொண்டது.
அதே நளினியின் பெயர் ஒரு துண்டுக் கடிதத்தில் எழுதப்பட்டு, தஞ்சாவூர் அருகே தமிழக போலீஸ் கைது செய்து வைத்திருந்த ரூசோ எனப்படும் சங்கர் கோணேஸ்வரன் வசம் இருந்த காரணத்தால், நளினிக்கு ராஜிவ் கொலையுடன் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டார்கள் புலனாய்வுக் குழுவினர்.
இதற்கிடையே விசாரணையின்போது ரூசோ, தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டார். அவர் தஞ்சாவூர் பக்கத்தில் நடமாடிய காரணத்தால், அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அவரை விசாரித்தார்கள்.
அந்த விசாரணையில் ரூசோ, மற்றொருவரைக் காட்டிக் கொடுத்தார்.
இந்த நபர், தஞ்சாவூரில் இருந்து அதிக தொலைவில் இல்லாத கடலோர கிராமமான திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். தொழில் ரீதியாக கடத்தல்காரர். விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைப்பதில் இவர் உதவுவதாக ரூசோ தெரிவித்தார்.
தமிழக போலீஸார் இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரரைக் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதற்கு உதவி செய்வதை அவர் ஒப்புக் கொண்டார். அதில் புலனாய்வுக்குழு அதிகம் அக்கறை காட்டவில்லை. காரணம் அந்தக் காலப் பகுதியில், தமிழகத்தின் கடலோரப் பகுதியில் வசித்த பலரது முழுநேர தொழிலே, புலிகளுக்கு பொருட்கள் அனுப்புவதுதான். மத்திய, மாநில அரசுகள் அதை கண்டும் காணாமலுமாக இருந்து வந்தன.
இதனால், புலிகளுக்காக பொருட்கள் கடத்துவதை பெரிய தண்டனைக்குரிய குற்றமாக கருதி அவரை விசாரிக்கவில்லை புலனாய்வுக்குழு. அவர்களது விசாரணை முழுவதும் ராஜிவ் கொலையை மையமாக வைத்தே இருந்தது. ராஜிவ் கொலையுடன் புலிகளுக்கு ஏதாவது தொடர்புகள் இருந்தனவா என்ற விபரங்களை அறியும் விதத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரருக்கு விடுதலைப்புலிகளுடன் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆனால், புலிகள் ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது மட்டுமே இவரைக் கடந்து செல்வார்கள். கடற்கரையில் இருந்து தமிழகத்துக்குள் சென்று சென்றுவிட்டால், அவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பது இவருக்கு தெரியாது. தமிழகத்தின் எந்த நகரத்துக்கு செல்கிறார்கள் என்றுகூட இவருக்கு தெரியாது.
இதனால் இந்தக் கடத்தல்காரரிடம் இருந்து உபயோகமான தகவல் ஏதும் புலனாய்வுக் குழுவுக்கு கிடைக்கவில்லை.
விசாரணையை முடித்துக்கொண்டு அவரை அனுப்பிவிடலாம் என இவர்கள் முடிவு செய்த நேரத்தில், என்ன தோன்றியதோ, புலனாய்வு அதிகாரி ஒருவர் தமது ஜீப்புக்குச் சென்று அதன் கிளவ் கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை எடுத்து வந்தார். அதனுள் சில போட்டோக்கள் இருந்தன. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை.
அந்த போட்டோக்களை கடத்தல்காரரிடம் காட்டிய புலனாய்வு அதிகாரி, “இந்த போட்டோவில் இருப்பவர்களில் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.
போட்டோக்களைப் பார்த்துவிட்டு கடத்தல்காரர், “இதோ இவரைத் தெரியும்” என்று காட்டிய நபரைக் கண்டதும் அதிகாரிகளுக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம் இவர்கள் ‘அடையாளம் தெரியாத மர்ம நபர்’ என ‘எக்ஸ்’ போட்டு வைத்திருந்த நபர் அவர். போட்டோவில் குர்தா-பைஜாமா அணிந்து கொண்டிருந்த அந்த நபர் யார் என்று அறிவதற்குதான் இவர்கள் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்து தலைகீழாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்!
“சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள். போட்டோவில் உள்ள இந்த நபரையா தெரியும் என்கிறீர்கள்?”
“ஆம். இவரேதான். இவர் கடல் வழியாக தமிழகத்துக்கு வரும்போது சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இவரும் விடுதலைப்புலிதான்”
“இவருடைய பெயர் தெரியுமா?”
“சிவராசன் என்று அழைப்பார்கள். இவருக்கு ஒரு கண் மட்டும்தான் உண்டு. மற்றைய கண் ராணுவத்துடன் யுத்தம் புரிந்தபோது பறிபோனதாக சொன்னார்”
இந்தக் கட்டத்தில்தான், ராஜிவ் கொலையின் மாஸ்டர்மைன்ட் என்று அறியப்பட்ட நபரின் பெயர் சிவராசன் என்பது புலனாய்வுக் குழுவுக்கு முதல் தடவையாக தெரியவந்தது.
தஞ்சாவூரில் இருந்து இந்த புதிய தகவலுடன் சென்னை திரும்பியது புலனாய்வுக்குழு.
அடுத்து, இவர்கள் மறைமுகமாக கண்காணித்துக் கொண்டிருந்த போட்டோகிராபர் சுபா சுந்தரத்தை அழைத்து விசாரிக்க முடிவு செய்தார்கள். அவரை கண்காணித்த வகையில் புதிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்பதால், நேரடியாக விசாரிக்கத் தொடங்கினார்கள்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது மரணமடைந்த போட்டோ கிராபர் ஹரிபாபு, தன்னுடைய உதவியாளர்தான் என்றார் சுபா சுந்தரம். ஹரிபாபுவின் பெட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட பிரசுரங்களில் இருந்த போட்டோக்களில் யார் யாரையெல்லாம் தெரியும் என்று கேட்டபோது, அந்த போட்டோக்களில் இருந்த ஒருவரை அடையாளம் காட்டினார் சுபா சுந்தரம்.
“இவரது பெயர் பாக்கியநாதன். சென்னையில் பி.பி.எல். ஆல் ரவுண்டர்ஸ் என்ற பெயரில் அச்சகம் நடத்தி வருகிறார். விடுதலைப்புலிகளின் பிரசுரங்கள் பலவற்றை பிரின்ட் செய்து கொடுப்பவர் இவர்தான்” என்றார் சுபா சுந்தரம்.
இந்த பாக்கியநாதனை விசாரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவரை அனுப்பினார்கள்.
அந்த அதிகாரி திரும்பி வந்து, “பாக்கியநாதன் தொழில்முறையில் விடுதலைப் புலிகளுக்கு பிரின்டிங் செய்து கொடுத்ததைத் தவிர தனக்கும் அவர்களுக்கும் வேறு தொடர்பு ஏதும் கிடையாது என்கிறார். ஆனால், அவரது வீட்டுக்கு போனபோது மற்றொரு தகவல் கிடைத்தது. அவர்களது வீட்டில் உள்ள பேமிலி போட்டோவில் பாக்கியநாதனின் தங்கையின் போட்டோ உள்ளது. அந்த தங்கை வேறு யாருமல்ல, நளினிதான்!” என்றார்.
இவர்கள் இப்படிச் சுற்றி வளைத்து நளினி யார் என்பதைக் கண்டு பிடிப்பதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நளினியின் அண்ணன் பாக்கியநாதனை விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அழைத்துச் சென்றது. அவர் கூறிய விவரங்களைச் சரிபார்க்க மிகுந்த நேரம் பிடித்தது. அவரையும் அழைத்துக்கொண்டு அவரது வீட்டை சோதனையிடச் சென்றார்கள்.. அவரது வீட்டுக்கு அருகே சென்றபோது பாக்கியநாதன் தப்பியோட முற்பட்டார். அது தடுக்கப்பட்டது.
அதன் பின் மனதளவில் உடைந்துபோன அவர், புலனாய்வுக் குழுவினருக்கு உபயோகப்படக்கூடிய சில தகவல்களைத் தெரிவித்தார்.
குர்தா பைஜாமா நபர்தான் சிவராசன்; போராளியான அவருக்கு ஒரு கண்பார்வை இல்லை என்று, திருத்துறைப்பூண்டியில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் தெரிவித்த தகவலை பாக்கியநாதன் உறுதிப்படுத்தினார். மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பெண்ணின் பெயர் தனு என்றும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணும் விடுதலைப்புலி உறுப்பினர்தான் என்றும், அவரது பெயர் சுபா என்றும் தெரிவித்தார்.
“சிவராசனை போராளிகள் வட்டாரத்தில் ரகு என்றும் ரகு அண்ணா என்றும் அழைப்பார்கள். அவரிடம் பயிற்சி பெற்ற சிலர் சிவராசன் மாஸ்டர் அல்லது ரகு மாஸ்டர் என்று சொல்வார்கள். பத்மநாபாவை கொலை செய்த ஆபரேஷனை தலைமை தாங்கிச் சென்றது சிவராசன்தான்” என்றும் பாக்கியநாதன் கூறினார்.
பத்மநாபா கொலையில் ரகுவரன், டேவிட் ஆகிய இரு போராளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக றோவும் தமிழக உளவுப்பிரிவு கியூ பிராஞ்சும் ஏற்கனவே புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்திருந்தன. இந்த ரகுவரனும் இவர்கள் கூறும் ரகுவும் ஒரே நபர்தான் என்ற முடிவுக்கு வந்தது புலனாய்வுக்குழு.
தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி ரூசோவிடம் கிடைத்த துண்டுச் சீட்டில் இருந்த தாஸ் என்பவர்தான் முருகன் என்று குறிப்பிட்ட பாக்கியநாதன், தலைமறைவாகிவிட்ட தனது தங்கை நளினியுடன் இந்த முருகனும் தப்பிச் சென்றுவிட்டார் என்றார்.
இந்தக் கட்டத்தில்தான் புலனாய்வுக் குழுவுக்கு பல பெயர்கள் கிடைத்திருந்தன. இந்தப் பெயர்களுக்கு உரியவர்களுக்கு இடையிலான தொடர்புகளும் தெரிய வந்திருந்தது. இனி இவர்களை தேடிப்பிடிக்க வேண்டும்.
சிவராசன், நளினி, சுபா ஆகியோரின் பெரிதுபடுத்தப்பட்ட போட்டோக்கள், கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட முருகனின் படம் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டப்பட்டன. ஏராளமான சுவரொட்டிகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன. சுவரொட்டியில் காணப்படும் நபர்களைப் பற்றியத் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது புலனாய்வுக் குழு.
இதற்கிடையே பாக்கியநாதனை விசாரித்ததில், விடுதலைப்புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பைத் தெரிவித்தார். அவரது தாயார் பத்மா, சென்னையில் உள்ள ஈ.வி. கல்யாணி நர்சிங் ஹோமில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்குப் பிரபல புகைப்படப் பத்திரிகையாளர் சுபா சுந்தரத்தை நன்றாகத் தெரியும். இந்தியாவில் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்தே சுபா சுந்தரத்தின் ஸ்டூடியோ, போராளிகளின் செயற்பாட்டு மையம் போல இருந்து வந்தது.
1980களின் இறுதியில், சுபா சுந்தரத்திடம் பயிற்சி போட்டோ கிராபராக சேர்ந்தார் பாக்கியநாதன். அங்குதான் போராளிகளின் செல்வாக்கு மிக்க, மக்கள் தொடர்புப் பிரமுகரான பேபி சுப்பிரமணியத்தை அவர் சந்தித்தார். பின்னர் அவரால் ஈர்க்கப்பட்டு அவரது உதவியாளர் போல செயற்பட்டார். பேபி சுப்பிரமணியத்தை அடிக்கடி காணவரும் ஏராளமான போராளிகளை பாக்கியநாதன் பார்த்தார்.
அவர்களில் முத்துராஜா என்பவருடன் நெருக்கமாகப் பழகினார்.
முத்துராஜா இந்தியராக இருந்தபோதிலும், ஈழ விடுதலை லட்சியத்துக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். முத்துராஜாவின் தாயும், தங்கையும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டை விடுதலைப்புலிகள்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர். அதில் ஓர் அறை மட்டும் பேபி சுப்பிரமணியத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் முத்துராஜா இல்லாமல் தமிழகத்தில் எதுவும் செய்வதில்லை என்ற நிலைமை இருந்துள்ளது.
பாக்கியநாதன், பேபி சுப்பிரமணியத்தை அடிக்கடி சந்திக்க வரும் மற்றொரு இளம் இந்தியரான அறிவு என்பவருடன் நட்பாகினார். அந்த இளைஞரும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். அறிவுவின் தந்தை, தீவிரமான திராவிடர் கழகத் தொண்டர்.
பாக்கியநாதன், அறிவு, ஹரிபாபு ஆகிய மூவருமே சுபா சுந்தரத்திடம் உதவியாளர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன் புலிகளின் பிரசுரங்களை அச்சிடுவதற்கு பேபி சுப்பிரமணியத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான அச்சகம், மிகச் சொற்ப விலைக்கு பாக்கியநாதனுக்குத் தரப்பட்டது.
அந்த அச்சகத்தை அவரது தொழிலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றபோதிலும், போராளிகள் தொடர்பான அச்சுப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாக்கியநாதனிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியாவில் பாக்கியநாதனின் அக்கா நளினி, அவரது தாயாருடன் சண்டையிட்டுக் கொண்டு வேறு இடத்தில் தனியாகத் தங்கப் போய்விட்டார். அவருக்கு விருப்பமென்றால், சில நாட்களுக்கு விடுதலைப்புலிகள் வாடகைக்கு எடுத்த வீட்டில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் தங்கியிருக்குமாறு நளினியை முத்துராஜா கேட்டுக் கொண்டார்.
சில நாட்கள் முத்துராஜா வீட்டில் தங்கியபின், நளினி அங்கிருந்து வெளியேறி மகளிர் விடுதி ஒன்றில் சேர்ந்தார். அதையடுத்து, வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் ஒரு வீட்டைப் பிடித்து வாடகைக்குக் குடியேறினார் நளினி.
இந்த வீட்டில்தான் ராஜிவ் கொலைக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கின என்கிறார்கள்!அத்தியாயம் 21
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 21
இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம் (கடந்த அத்தியாயங்களை தவறவிட்டவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)
தமிழகத்தில் இருந்து புலிகள் வெளியேறத் தொடங்கிய நேரத்தில், தமக்கு உதவிகரமாக இருந்த இந்தியர்களில் யாராவது இலங்கை சென்று வர விரும்பினால், அனுப்பி வைக்குமாறு புலிகள் தலைமையிடம் இருந்து தகவல் வந்திருந்தது.
1990-ம் ஆண்டு மே மாதம் பேபி சுப்பிரமணியம் இலங்கை திரும்பினார். அவருடன் இந்திய இளைஞர்களான அறிவு மற்றும் இரும்பொறை ஆகியோர் படகு மூலம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர். அதற்குச் சற்று முன்னதாக, முத்துராஜாவும் அங்கு சென்றிருந்தார்.
1990-ம் ஆண்டு அக்டோபரில் முத்துராஜா, அறிவு, இரும்பொறை ஆகியோர் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பினர்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் இவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தன. அங்கே எடுக்கப்பட்ட ஏராளமான போட்டோக்கள், மற்றும் விடியோ கேசட்டுகளை அவர்கள் தம்முடன் தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் பிரபாகரன், மாத்தையா, பேபி சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு விடுதலைப்புலிகளுடன் முத்துராஜா, அறிவு, இரும்பொறை எடுத்துக்கொண்ட பல போட்டோக்களும் இவற்றில் இருந்தன.
யாழ்ப்பாணத்தில் புலிகளைச் சந்தித்துவிட்டு திரும்பியபின், விடுதலைப் புலிகள் மீதான இவர்களது அபிமானமும் பிரமிப்பும் அதிகமாகியிருந்தது. முன்பைவிட முழுமூச்சாக விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைச் செய்யத் தொடங்கினர்.
1990-ம் ஆண்டு டிசம்பரில் முத்துராஜா புதிய நபர் ஒருவரை அழைத்து வந்து பாக்கியநாதனுக்கும், அறிவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவின் முக்கிய நபரான அவர்தான், நிக்சன்! முதல்நாள் இவர்களைச் சந்தித்துப் பேசிய நிக்சன் மறுநாள் மற்றொருவரையும் அழைத்து வந்தார். அவரது பெயர் காந்தன். அவரும் பொட்டம்மான் தலைமையிலான உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்.
இவை ஆச்சரியமான அறிமுகங்கள். காரணம், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மற்றையவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்படுவது வழக்கம். உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தம்மை விடுதலைப் புலிகள் என்றே அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. அநேக சமயங்களில் அரசியல் பிரிவில் உள்ள விடுதலைப் புலிகளுக்கே, தமது இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்களை தெரிந்திருப்பதில்லை.
இப்படியான நடைமுறை இருந்த போதிலும், நிக்சனும் காந்தனும் உளவுப் பிரிவின் ஆட்கள் என்றே பாக்கியநாதனுக்கும், அறிவுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதற்கு காரணமும் இருந்தது.
பாக்கியநாதனும், அறிவும் தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகளில் அநேகருடன் நேரடித் தொடர்பில் இருந்தனர். அவர்கள் அனைவருமே அரசியல் பிரிவு ஆட்கள். நிக்சன், காந்தன் ஆகிய இருவரும் உளவுப் பிரிவின் ஆட்கள் என்று கூறப்பட்டு, அவர்களைப் பற்றியோ அல்லது அவர்களது நடவடிக்கைகள் பற்றியோ சென்னையில் உள்ள மற்ற விடுதலைப் புலிகளிடம் தெரிவிக்கக் கூடாது என்று கூறப்பட்டது.
1991-ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிக்சன், மற்றொரு இளைஞரை பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அவரும் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளைஞர்தான், ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள முருகன்!
நிக்சன், பாக்கியநாதனிடம் முருகனை அழைத்து வந்ததற்கு காரணம் இருந்தது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்ததாக கூறப்பட்டு, 1991 ஜனவரியில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. கவர்னர் ஆட்சி ஆரம்பித்தது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், தமிழகத்தில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அறியப்பட்ட முத்துராஜாவை இந்திய உளவுப்பிரிவு கண்காணித்து வந்தது.
இதனால், முருகனை தனது வீட்டில் முத்துராஜாவால் வைத்திருக்க முடியவிலலை. இதனால் முருகனை, இந்தியர் வீட்டில் உறவினர் என்று தங்க வைப்பதே பாதுகாப்பானது என்று நிக்சன் முடிவெடுத்தார். அதற்காகவே பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். விடுதலைப்புலிகள் மீது உச்ச அபிமானத்தில் இருந்த பாக்கியநாதன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
அப்போது பாக்கியநாதனின் சகோதரி நளினி (ராஜிவ் கொலை வழக்கில் ஆயுட் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருப்பவர்) வில்லிவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு, அடையாறில் இருந்த ‘அனபான்ட் சிலிகான் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
முருகன் நளினியுடன் நன்கு பழகி, அவரது நம்பிக்கையைப் பெற்றார். நளினியின் அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வந்த முருகன், நளினிக்குப் பாதுகாப்பாக மார்க்கெட்டுக்கும் அவரது வீட்டுக்கும் உடன் சென்று வந்தார். பாக்கியநாதனின் தாயார் பத்மாவின் நம்பிக்கையையும் பெற்ற முருகன், அவரது வீட்டுச் செலவுக்கும், கடன்களை அடைப்பதற்கும் பண உதவி செய்து வந்தார்.
ஆரம்ப நாட்களில் முருகன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்ற விஷயம் அந்த வீட்டில் பாக்கியநாதனுக்கு மட்டுமே தெரியும். அவரது தாயாருக்கோ, சகோதரி நளினிக்கோ தெரியாது. முருகன் ஆங்கிலம் கற்கப் போவதாகக் காட்டிக்கொண்டு, சென்னையில் உள்ள இரு டியூட்டோரியல் கல்லூரிகளில் சேர்ந்திருந்தார்.
இப்படியே சில நாட்கள் கழிந்த பின்னர்தான் முருகன், தாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், விடுதலைப் புலிகள் வேலையாகச் சென்னைக்கு வந்திருப்பதாகவும் நளினியிடம் உண்மையைக் கூறினார்.
முருகனை பாக்கியநாதன் இல்லத்தில் தங்குவதற்காக கொண்டுவந்து விட்டு ஒரு மாதத்தில், நிக்சன் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவருடன் முத்துராஜாவும் சென்றுவிட்டார். அதற்குப் பின் தமிழகத்தில் அவர்களுடைய நடமாட்டமே இல்லை. அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை முருகன் செய்யத் தொடங்கினார்.
இந்தியரான முத்துராஜா, முதல் தடவை இலங்கை சென்று வந்தபின் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தானும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரை இணைத்துக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதி வருவதற்காக காத்திருந்த நிலையில், இயக்கத்தில் சேர அவரை அழைத்து வருமாறு தகவல் வந்தது. அதையடுத்தே நிக்சனுடன் யாழப்பாணம் புறப்பட்டுச் சென்றார் முத்துராஜா.
இலங்கையில் யுத்தம் புரிய வேண்டும் என்பதால் அதன்பின் தம்மால் தமிழகத்துக்கு வர முடியாதுகூட போகலாம் என்று யோசித்த முத்துராஜா, இலங்கைக்குப் புறப்படுவதற்கு முன் தாம் சேகரித்து வைத்திருந்த விடுதலைப்புலிகளின் பிரசுரங்கள், போட்டோக்கள், விடியோ கேசட்டுகள் அனைத்தையும் தமது வீட்டில் இருந்து அப்புறப்படுத்த விரும்பினார். பாக்கியநாதனை அழைத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வேறு பத்திரமான இடத்துக்கு அவற்றையெல்லாம் கொண்டு செல்லுமாறு கூறினார்.
அவர் விரும்பியதுபோல, பாக்கியநாதன், அறிவு, ஹரிபாபு ஆகியோர் மேற்கு மாம்பலம் வீட்டுக்குச் சென்று, அங்கு இருந்த விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்தையும் எடுத்துச் சென்று, செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவரின் வீட்டுக்கு மாற்றிவிட்டனர்.
நிக்சனும் முத்துராஜாவும் யாழ்ப்பாணம் கிளம்பிச் செல்லும்வரை, விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவின் சென்னை செயற்பாடுகள் அனைத்துக்கும் நிக்சனே பொறுப்பாக இருந்தார். அவர் கிளம்பிச் சென்றதும், தற்காலிகமாக முருகன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் வருவார் என்று முருகனிடம் கூறப்பட்டிருந்தது.
மார்ச் மாத தொடக்கத்தில் முருகன், புதிதாக ஒருவரை பாக்கியநாதன் வீட்டுக்கு அழைத்து வந்தார். விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் சென்னைச் செயற்பாடுகளுக்கு பெறுப்பேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருப்பவர் என அவரை பாக்கியநாதனுக்கும் நளினிக்கும் அறிமுகம் செய்து வைத்தார் முருகன்.
அந்த நபர்தான், சிவராசன்.
பின்னாட்களில், ராஜிவ் காந்தி கொலையை திட்டமிட்டு நடத்தி முடித்த நபராக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு ஆவணங்களில் ‘ஒற்றைக் கண் சிவராசன்’ என்று குறிப்பிடப்பட்ட அதே சிவராசன்தான்!அத்தியாயம் 22
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 22
ராஜிவ் காந்தி மே 21, 1991-ல் கொல்லப்பட்டார். அதற்கு 2 மாதங்களுக்கு முன், மார்ச் மாத தொடக்கத்தில் முருகன், புதிதாக ஒருவரை பாக்கியநாதன் வீட்டுக்கு அழைத்து வந்தார். விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் சென்னை செயல்பாடுகளுக்கு பெறுப்பேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருப்பவர் என அவரை பாக்கியநாதனுக்கும் நளினிக்கும் அறிமுகம் செய்து வைத்தார் முருகன்.
அந்த நபர்தான், சிவராசன். பின்னாட்களில், ராஜிவ் காந்தி கொலையை திட்டமிட்டு நடத்தி முடித்த நபராக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு ஆவணங்களில் ‘ஒற்றைக் கண் சிவராசன்’ என்று குறிப்பிடப்பட்ட அதே சிவராசன்தான்!
இந்தியரான பாக்கியநாதன் வீட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சிவராசன் வந்த நாட்களில், பாக்கியநாதன் வீட்டில் வசித்தவர்கள், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். அந்த வீட்டில் அவர்களது பிரதான பணிகளில் ஒன்று, இந்திய அரசாங்கத்தின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் இலங்கை தொடர்பான செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது!
இதற்காக விடியோ கேசட், ரெக்காடர்களையும் டி.வி. மற்றும் விடியோ கேசட்டுகளையும் அறிவு கொண்டுவந்தார்.
பதிவு செய்யப்படும் கேசட்டுகள் அவ்வப்போது படகுகள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. இது நடைபெற்ற காலத்தில் தற்போது உள்ளதுபோல இன்டர்நெட் வசதிகள் எதுவும் கிடையாது. தமிழகத்தில் இலங்கை தொடர்பான அரசியல் நிலைப்பாடு எப்படி உள்ளது என்பதை யாழ்ப்பாணத்தில் தெரிந்து கொள்ள ஒரே வழிதான் இருந்தது.
தமிழகத்தில் இருந்து படகுகள் மூலம் பத்திரிகைகளும், இது போல பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளும் அங்கு போய்ச் சேர்வதுதான் அந்த ஒரே வழி.
இதற்கிடையே, நளினியும் முருகனும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து சிவராசன் இரு பெண்களை அழைத்துவரத் திட்டமிட்டிருப்பதாக நளினியிடம் தெரிவித்தார் முருகன். அவர்களை நளினியுடன் தங்கவைக்கச் செய்யவே சிவராசன் விரும்புவார் என்பதையும் நளினியிடம் முன்கூட்டியே முருகன் தெரிவித்தார்.
நளினிக்கு அதில் ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை.
இரு பெண்கள் வரப்போவதாக நளினியிடம் மார்ச் மாத இறுதியில் கூறப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாதம் முழுவதும் அப்படி யாரும் வரவில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினத்துக்கு 3 வாரங்களுக்குமுன், மே 1-ம் தேதி, இரு பெண்களை அழைத்து வந்தார் சிவராசன். யாழ்ப்பாணத்திலிருந்து வருவதாக கூறப்பட்ட அந்த இரு பெண்களும்தான் சுபாவும், தனுவும்.
(இந்த இருவரில் தனு, பின்னாட்களில் ராஜிவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டாக மாறி வெடித்தவர். மற்றையவரான சுபா, ராஜிவ் கொல்லப்பட்டபின் சிவராசனுடன் தலைமறைவாகி, தேடுதலின்போது சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்.)
இந்த இரு பெண்களும் வில்லிவாக்கத்தில் உள்ள நளினியின் வீட்டில் தங்கிக் கொண்டனர். நளினி அவர்களுக்கு, சென்னையில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காண்பித்தார். அவர்களுடன் மிகவும் நெருக்கமானார்.
அது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், தேர்தல் பிரச்சாரத்துக்காக ராஜிவ் காந்தி எப்படியும் தமிழகம் வருவார் என்பதை சிவராசன் அறிந்திருந்தார். அப்போது அவர்மீது தாக்குதல் நடத்துவதுதான் சுலபமானது என்றும் திட்டமிட்டிருந்தார். ஆனால், சிவராசனுக்கு ஒரு விஷயத்தில் சந்தேகம் இருந்தது.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஒரு வட இந்திய தலைவரை, மனித வெடிகுண்டாக செயல்படும் ஒரு பெண் சுலபமாக நெருங்க முடியுமா? என்பதுதான் அந்த சந்தேகம். இதனால், ராஜிவ் காந்தி தமிழகம் வருவதற்குமுன், வேறு யாராவது வட இந்தியத் தலைவர்கள் தமிழகம் வருகிறார்களா என்று தினமும் செய்தித்தாள்களை பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவரை அதிக நாட்கள் தேட வைக்காமல், அப்படியொரு செய்தி கண்களில் பட்டது.
ராஜிவ் வருவதற்கு சரியாக 2 வாரங்களுக்குமுன், மே 7-ம் தேதி, சென்னை நந்தனத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி. சிங் பேசுவார் என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அன்றைய தினத்தில், ராஜிவ் கொலைக்காக ஒரு ட்ரயல் பார்க்க விரும்பினார் சிவராசன்.
சிவராசனின் திட்டப்படி, வி.பி. சிங் பொதுக்கூட்டத்தில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு உரிய முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். தற்கொலைத் தாக்குதலை நடத்த வேண்டிய பெண், வி.பி. சிங்கை நெருங்குவார். தனது உடலில் இருந்த சுவிட்சை அழுத்துவார். ஆனால், உடலில் வெடிகுண்டு இருக்காது. இறுதிக் கட்டமான குண்டு வெடிப்பு மட்டும் நடக்காது.
இந்த ட்ரயல் முயற்சியில் எல்லாமே சரியாக அமைந்து விட்டால், அதை அப்படியே ராஜிவ் காந்தி பொதுக்கூட்டத்திலும் செய்துவிடலாம்.
அங்கு வெடிகுண்டையும் நிஜமாகவே வெடிக்க வைத்து விடலாம்.
மனித வெடிகுண்டாக செல்லப்போகும் தனு, ராஜிவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்வது போலவே அவரை நெருங்க வேண்டும் என்று சிவராசன் திட்டமிட்டிருந்தார். இதனால், வி.பி.சிங் பொதுக் கூட்டத்திலும், கையில் மாலையுடன் தனுவால் வி.பி. சிங்கை நெருங்க முடிகிறதா என்று பார்க்க விரும்பினார்.
மே 7-ம் தேதி, வி.பி.சிங்குக்கு அணிவிக்க மாலை வாங்கப்பட்டது. சென்னை பொதுக்கூட்டத்துக்கு சிவராசன், சுபா, தனு, நளினி, முருகன், ஹரிபாபு, அறிவு ஆகியோர் சென்றனர். “தனு, வி.பி.சிங் அருகே சென்று அவருக்கு மாலையிட வேண்டும். சுபா அவருடன் துணைக்கு செல்ல வேண்டும். தனு மாலையிடுவதை நளினி போட்டோ எடுக்க வேண்டும்” என சிவராசன் விளக்கியிருந்தார்.
வி.பி.சிங் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தார். சுமாரான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கையில் மாலையுடன் தனுவும், கூடவே சுபாவும் பாதுகாப்பு வளையத்துக்குள் சுலபமாக செல்ல முடிந்தது. தனு, வி.பி.சிங் அருகே மாலையுடன் நெருங்க, தனுவிடமிருந்த மாலையை வி.பி.சிங் தமது கைகளால் வாங்கிக் கொண்டார்.
ட்ரயல் சக்ஸஸ். தனுவால் இவ்வளவு அருகில் ராஜிவ் காந்தியை அணுக முடிந்தால், கொலைத் திட்டம் பலித்துவிடும்.
ஆனால், சிவராசனின் இந்த லைவ் ட்ரயல் முயற்சியில் ஒரேயொரு சறுக்கல் ஏற்பட்டது. வி.பி.சிங்கை தனு நெருங்கி மாலை கொடுக்கும் காட்சியை போட்டோ எடுக்கும் நளினியின் முயற்சி தோல்வியடைந்தது. அனுபவம் இல்லாத காரணத்தால், நளினியால் சரியாக போட்டோ எடுக்க முடியவில்லை.
நாம் கூறிய சம்பவம் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அந்த காலத்தில் தற்போதுள்ளது போன்று டிஜிட்டல் கேமராக்கள் ஏதுமில்லை. ஆட்டோ ஃபோகஸ் வசதிகூட அநேக கேமராக்களில் கிடையாது. போட்டோ எடுப்பவரே ஃபோகஸ் செய்துவிட்டு, போட்டோ எடுக்க வேண்டும். நளினிக்கு கேமராவை சரியாக இயக்கவே தெரியவில்லை.
இதனால், சிவராசன் டென்ஷன் அடைந்தார்.
போட்டோ எடுப்பதற்கு அப்படி என்ன முக்கியத்துவம்? விடுதலைப்புலிகள் அமைப்பு தமது தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தையும் (முடிந்தவரை) போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம்.
(வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற நாட்களில், அனுராதபுரம் விமானப்படை தளம் தாக்குதலுக்கு தற்கொலைப் போராளிகளை அனுப்பியபோதுகூட, வீடியோ எடுக்கவும் ஆளை அனுப்பினார்கள். அந்த தாக்குதலுக்கு சென்ற தற்கொலைப் போராளிகள் அனைவரும் கொல்லப்பட்ட போதும், வீடியோ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வந்து சேர்ந்தது!)
பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து நளினியால் போட்டோ எடுக்க முடியாது என்று தெரிந்த பின்னரே, ராஜிவ் காந்தி கூட்டத்துக்கு செல்லும்போது, போட்டோ எடுக்க போட்டோகிராபர் ஹரிபாபுவை உபயோகித்துக் கொள்வது என்ற முடிவை எடுத்தார் சிவராசன்.
வி.பி.சிங் கூட்டத்துக்கும் ஹரிபாபுவை அழைத்துச் சென்ற போதிலும், அவரை வைத்து போட்டோ எடுக்க முயலவில்லை சிவராசன். காரணம், ஹரிபாபு, அறிவு, நளினி ஆகிய மூன்று இந்தியப் பிரஜைகளுக்கும், இது ராஜிவ் கொலைக்கான ட்ரயல் என்பதை சிவராசன் தெரிவித்திருக்கவில்லை. அந்தக் கட்டத்தில், சிவராசன், முருகன், தனு, சுபா ஆகிய நான்கு பேருக்கு மட்டுமே ராஜிவ் கொலைத் திட்டம் பற்றி தெரியும்.
நளினியை தம்முடன் சேர்த்துக் கொள்ளலாம் என முருகன் சிவராசனிடம் கூறியிருந்த காரணத்தாலேயே, வி.பி.சிங் கூட்டத்தில் நளினியை போட்டோ எடுக்குமாறு சிவராசன் கேட்டுக் கொண்டிருந்தார்.
அன்று மட்டும் நளினி சரியாக போட்டோ எடுத்திருந்தால், ராஜிவ் பொதுக்கூட்டத்துக்கு போகும்போது, ஹரிபாபுவையும், அறிவுவையும் அழைத்துச் செல்வதில்லை என சிவராசன் திட்டமிட்டிருந்தார். நளினியால் போட்டோ எடுக்க முடியாத காரணத்தால், ராஜிவ் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஹரிபாபுவையும் அழைத்துச் சென்று, அங்கு அவர் உயிரிழந்தார்.
நிஜ தாக்குதல் நடந்த அந்தக் கூட்டத்துக்கு அறிவு அழைத்துச் செல்லப்படவில்லை.
இதுவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஸ்டைல்தான். ஆபரேஷனுக்கு தேவையற்ற நபர்களையெல்லாம் காட்சியில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள். அநாவசியமாக அவர்களை அங்கு வைத்திருப்பதால், பிற்பாடு சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் இந்த நடைமுறை.
நளினிக்கு போட்டோ எடுக்க தெரிந்திராத காரணத்தால், ஹரிபாபு காட்சிக்குள் வந்து உயிரிழந்தார் என்று சொன்னோம் அல்லவா? அவர் விஷயத்தில் விதி விளையாடியது போல, இதில் தொடர்புடைய மற்றொருவர் விஷயத்திலும் விதி விளையாடியது.
அந்த நபர் யாரென்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். காரணம், ராஜிவ் கொலை வழக்கில் தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன்தான் அவர்!
முருகன் விஷயத்தில் விதி விளையாடாமல் இருந்திருந்தால், ராஜிவ் கொல்லப்பட்ட தினத்தில் அவர் இந்தியாவிலேயே இருந்திருக்க மாட்டார். ராஜிவ் கொலைக்குப் பின், புலனாய்வுக் குழுவிடம் சிக்கியிருக்கவும் மாட்டார். தற்போது தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து இருக்கும் நபராகவும் இருந்திருக்க மாட்டார்.
ராஜிவ் காந்தி மே 21, 1991-ல் கொல்லப்பட்டார். அதற்கு சரியாக 10 தினங்களுக்குமுன், மே 11-ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய முருகனுக்கு என்ன நடந்தது என்பது அடுத்த அத்தியாயத்தில் (தொடரும்)      

Aucun commentaire:

Enregistrer un commentaire