samedi 2 juin 2012

திருமுறிகண்டிப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள்


திருமுறிகண்டியில் 4 ஆயிரம் ஏக்கரில் மிகப்பெரும் சிங்களக் குடியேற்றம்; போர் வீட்டுத் திட்டம் என்ற பெயரில் ஏற்பாடுகள்
news
 முல்லைத்தீவு திருமுறிகண்டிப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
திருமுறிகண்டிப் பகுதிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட கிழக்குப் பக்கமாகவுள்ள காட்டுப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அந்தப் பகுதியில் ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
 
 மேற்படி 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியிலும் "போர் வீட்டுத் திட்டம்" என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் மேற்படி வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்த வீட்டுத் திட்டம் அமைக்கும் பணியானது கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதேவேளை சகல வசதிகளும் கொண்ட இந்த குடியிருப்புப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அங்கவீனமுற்ற படையினரைக் குடியேற்றம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த வீடுகளை அமைப்பதற்குரிய கட்டுமானப் பொருள்கள் கடந்த ஆண்டு திருமுறிகண்டி முதல் கொக்காவில் வரையான ஏ9 வீதியின் இரு மருங்கிலும் இறக்கப்பட்டிருந்தன. அதைவிட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் முறிகண்டிப் பகுதியில் தங்கவைக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றன. குறித்த பிரதேசத்தில் வீதிகள், மின்சாரவசதி, குடிதண்ணீர் வசதி என்பனவும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
 
மேற்படி ஆயிரம் சிங்களக் குடும்பங்களைப் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் குடியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
ஆனால் திருமுறிகண்டியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த சுமார் 126 குடும்பங்கள் இன்றுவரையும் அவர்களது சொந்தக் காணிகளில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாமல் 46 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் ஏனைய 80 வரையான குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire