ராஜிவ் காந்தி கொலைக்கு, வி.பி.சிங் பொதுக்கூட்டத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது மே 7-ம் தேதி (அந்த விபரம் தெரியாதவர்கள் கடந்த அத்தியாயத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) அதிலிருந்து இரண்டு தினங்களில், மே 9-ம் தேதி காலை, யாழ்ப்பாணத்தில் இருந்து சிவராசனுக்கு தகவல் ஒன்று வந்தது.
“முருகனை தொடர்ந்தும் தமிழகத்தில் தங்க விட வேண்டாம். உடனடியாக அவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கவும்” என்று இருந்தது அந்த தகவல்.
இந்த தகவல் சிவராசனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், முருகனும் நளினியும் நெருக்கமாக பழகுகின்றனர் என்ற தகவலை சிவராசன்தான் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவருக்கு அனுப்பியிருந்தார். அப்படியான சூழ்நிலையில், இயக்க ரகசியங்கள் முருகன் மூலம் நளினிக்கு தெரிய வந்து விடலாம் என்ற சாத்தியம் இருந்தது.
அதனாலேயே, முருகனை சென்னையில் இருந்து அகற்றும் முடிவு யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டது. முருகனை வேதாரண்யம் செல்லுமாறும், அங்கேயிருந்து முருகனை அழைத்துச் செல்ல இலங்கையில் இருந்து ஒரு படகு அனுப்புவதாகவும் சிவராசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மே 9-ம் தேதி காலையே முருகனை யாழ்ப்பாணத்துக்கு போகுமாறு சிவராசன் சொல்லிவிட்டார். மறுநாள் மாலை சென்னையில் இருந்து கிளம்பிச் செல்வதாக முருகனும் கூறிவிட்டார். இந்தியர்களாக அறிவு, பாக்கியநாதன் ஆகிய இருவருக்கும், “முருகன் ஒரு அவசர வேலையாக இலங்கை செல்கிறார்” என்ற தகவல் மட்டும் கூறப்பட்டது. (மற்றொரு இந்தியரான முத்துராசா, ஏற்கனவே யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்)
பாக்கியநாதனும், அறிவும், பேபி சுப்பிரமணியத்துக்கு முருகன் மூலம் பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பினார். விடுதலைப் புலிகளுக்காக சென்னையில் தாம் செய்து வரும் பணி விவரங்கள் பற்றிய சுருக்கத்தை எழுதி அனுப்பினார் பாக்கியநாதன்.
இவற்றைத் தவிர, வேறு முக்கியமான இரு கடிதங்களும் முருகனிடம் கொடுக்கப்பட்டன. அவை மனித வெடிகுண்டாக மாறி ராஜிவ் காந்தியை கொல்வதற்காக அழைத்து வரப்பட்ட தனு எழுதிய கடிதங்கள். முருகன் யாழ்ப்பாணம் செல்வதால், அவரிடம் அந்தக் கடிதங்கள் கொடுத்து விடப்பட்டன.
மே 11-ம் திகதி கடலோரப் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற முருகன், இரண்டு நாட்கள் அங்கே காத்திருந்தார். தமிழகத்தின் தெற்கு கரையோர நகரங்களில், புலிகளுக்கு பாதுகாப்பான வீடுகள் அந்த நாட்களில் இருந்தன. அவை பெரும்பாலும், புலிகளுக்கு பொருட்களை கடல் மூலம் அனுப்பி வைக்கும் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானவை.
அப்படியொரு வீட்டில்தான் தங்கியிருந்தார் முருகன். அவர் வந்து இரு தினங்கள் ஆகியும், அவரை அழைத்துச் செல்வதற்காக இலங்கையில் இருந்து வரவேண்டிய விடுதலைப் புலிகளின் படகுகள் வரவில்லை. படகு எப்போது வருகிறது என்று விசாரிக்க ஒயர்லெஸ் செட் ஏதும் அவரிடம் இருக்கவில்லை. (அந்த நாட்களில் செல்போன் கிடையாது)
முருகன் அதற்கு மேலும் சில தினங்கள் தாமதித்து படகு வருகிறதா என்று பார்த்திருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
இரண்டாவது நாள் படகு வரவில்லை என்றவுடன், தாம் சென்னை திரும்ப போவதாக வீடு கொடுத்த கடத்தல்காரரிடம் கூறினார் முருகன்.
“சென்னை திரும்பி, படகு வரும் தேதியை உறுதி செய்துகொண்டு மீண்டும் வருகிறேன். நான் கொண்டுவந்த ட்ராவலிங் பேக் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறி, யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக சென்னையில் இருந்து கொண்டுவந்த ட்ராவலிங் பேக்கை கடத்தல்காரரிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பிவிட்டார் முருகன்.
இந்த கடத்தல்காரரிடம் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் சில பொருட்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறி கொடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவர், கரையோரக் கிராமத்தின் தோப்பு ஒன்றில் புதைத்து வைத்திருந்தார். முருகன் தனது ட்ராவலிங் பேக்கை விட்டுவிட்டு செல்லவே, அதையும் அதே தோப்பில் கொண்டுபோய் புதைத்து வைத்தார் கடத்தல்காரர்.
இந்த பேக்கினுள் முருகனின் ஓரிரு உடைகள், பாக்கியநாதனும், அறிவும், பேபி சுப்பிரமணியத்துக்கு கொடுத்து அனுப்பிய பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன், ராஜிவ் காந்தியைக் கொல்லப்போகும் தனு எழுதிய இரு கடிதங்களும் இருந்தன.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின், இந்த ட்ராவலிங் பேக் புலனாய்வுக் குழுவின் கைகளில் சிக்கிக் கொள்ளப்போகிறது என்றோ, அவர்களது விசாரணைக்கு முக்கிய ஆதாரங்களை கொடுக்கப் போகிறது என்றோ முருகனுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், அந்த பேக்கை விட்டுவிட்டு சென்றிருக்க மாட்டார்.
அது மட்டுமல்ல. இரு நாட்கள் படகுக்காக காத்திருந்துவிட்டு முருகன் சென்னை திரும்பிய தினத்துக்கு மறுநாள் இரவு, அவரை அழைத்துச் செல்ல வேண்டிய படகு இலங்கையில் இருந்து வந்து சேர்ந்தது.
முருகன் கரையில் தயாராக இல்லாத காரணத்தால், படகு உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டது.
இரண்டு நாட்கள் காத்திருந்த முருகன், மூன்றாவது நாளும் படகுக்காக வெயிட் பண்ணியிருந்தால், அவர் அன்று இந்தியாவை விட்டே வெளியேறியிருப்பார். ராஜிவ் கொலை கேஸில் கைதாகியிருக்க மாட்டார். இப்போது தமிழகத்தில் ஒரு தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்திருக்க மாட்டார்.
24 மணி நேரத்தில் வாழ்க்கையே மாறியதுதான், அவரது விதி!
முருகனை இந்தக் காட்சிக்குள் கொண்டுவந்தவர் நிக்சன். முத்துராஜா இலங்கைக்கு புறப்பட்டு செல்லுமுன், நிக்சன் என்பவரை பாக்கியநாதனுக்கு அறிமுகம் செய்து வைத்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம் (அத்தியாயம் 21). இந்த நிக்சன் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய முக்கிய தளபதி. அவரால் பாக்கியநாதனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு நபர், காந்தன் என்பதையும் அதே அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.
இந்த காந்தனும், புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்தான். காந்தன் ராஜிவ் காந்தி ஆபரேஷனில் இல்லை.
காந்தனும் பாக்கியநாதனை அவ்வப்போது சந்தித்து வந்தார். அவர் பாக்கியநாதனை சந்திக்க வரும்போது, மற்றொரு இளைஞரையும் தம்முடன் அழைத்துவர தொடங்கினார். ரமணன் என்று அந்த புதிய இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார். ரமணனுக்கும் யுத்தத்தின்போது ஏற்பட்ட காயத்தால் ஒரு கண் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த ரமணன்தான், அந்த நாட்களில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்த புலிகளின் தொலைத் தொடர்பு மையத்துக்கும் இடையே, ஒயர்லெஸ் ஆபரேட்டராக இருந்தவர்.
காந்தனும், ரமணனும், சென்னையில் வசித்து வந்த இலங்கைப் பிரஜையான ராபர்ட் பயஸ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தனர். ராபர்ட் பயஸ் புலிகளின் நேரடி உறுப்பினர் அல்ல. ஆனால், தன்னுடன் தங்கியிருந்தவர்கள் யார் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. காந்தன், ரமணன், பயஸ் ஆகிய மூவரும் பாக்கியநாதன் வீட்டுக்கும், நளினி அலுவலகத்துக்கும் அடிக்கடி சென்று வந்தனர்.
புலிகளின் உளவுப் பிரிவில் காந்தன், ரமணன், ஆகிய இருவரையும் விட உயர்ந்த பதவிநிலையில் இருந்த சிவராசன், இவர்களுடன் வருவதில்லை. பாக்கியநாதனையும் அறிவுவையும் தனியே வந்துதான் சந்திப்பார். காரணம், அவர் ‘ராஜிவ்’ ஆபரேஷனில் இருந்தார். காந்தன், ரமணன் ஆகியோர் வேறு ஆபரேஷனில் இருந்தனர். (கடைசியில் எல்லோரையும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு படுத்தியது சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு)
பாக்கியநாதனை சிவராசன் ஒருதடவை சந்தித்தபோது, சென்னையில் தான் சென்று வருவதற்கு ஒரு மோட்டார் சைக்கிளும், வேறு பணிகளுக்காக ஒரு கார் பெட்டரியும் தேவை என்று கூறியிருந்தார். சென்னையில் பாக்கியநாதனும், அறிவும், தமக்கு தெரிந்தவர்கள் ஊடாக சிவராசனுக்காக ஒரு ‘கவாஸாகி பஜாஜ்’ மோட்டார் சைக்கிள் வாங்க உதவி செய்தனர்.
சிவராசன் பணம் கொடுத்த போதிலும், மோட்டார் சைக்கிள் அறிவு பெயரில், பத்மாவின் முகவரி குறிப்பிட்டு வாங்கப்பட்டது. ஒரு கார் பெட்டரியையும் அறிவு வாங்கி சிவராசனிடம் அளித்தார்.
பின்னாட்களில் ராஜிவ் கொலை விசாரணையின்போது, புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்பு கொள்வதற்காகவே கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. சிவராசன் இலங்கையிலிருந்து வரும்போது, லேட்டஸ்ட் ஒயர்லெஸ் கருவி ஒன்றை தம்முடன் எடுத்து வந்திருந்தார். அதை இயக்குவதற்காகத்தான் இந்த கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.
சிவராசன் பணம் கொடுத்த போதிலும், மோட்டார் சைக்கிள் அறிவு பெயரில், பத்மாவின் முகவரி குறிப்பிட்டு வாங்கப்பட்டது. ஒரு கார் பெட்டரியையும் அறிவு வாங்கி சிவராசனிடம் அளித்தார்.
பின்னாட்களில் ராஜிவ் கொலை விசாரணையின்போது, புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்பு கொள்வதற்காகவே கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. சிவராசன் இலங்கையிலிருந்து வரும்போது, லேட்டஸ்ட் ஒயர்லெஸ் கருவி ஒன்றை தம்முடன் எடுத்து வந்திருந்தார். அதை இயக்குவதற்காகத்தான் இந்த கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.
ஆனால், குறிப்பிட்ட பெட்டரி எதற்காக வாங்கப்படுகிறது என்பது அறிவுக்கோ, பாக்கியநாதனுக்கோ தெரியாது. இருந்தபோதிலும், கார் பெட்டரி வாங்கிக் கொடுத்ததும் ஒரு குற்றமாக, அறிவு பேரில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் பதிவாகியது.
அதேபோல, வேறு ஒரு விஷயத்திலும் அறிவு தம்மை அறியாமல் சிக்கிக் கொண்டார். சிவராசன், கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள் வாங்க வேண்டும் என்று சொன்னபோது, அதை வாங்கிக் கொடுத்ததும் அறிவுதான். 9 வோல்ட் பெட்டரிகளை சென்னையில் எந்த மின்சார உபகரணங்கள் விற்கும் கடையிலும் சிவராசனே வாங்கியிருக்க முடியும். ஆனால், அறிவு சிவராசனிடம் பணத்தை வாங்கிச் சென்று பெட்டரிகளை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார் என்பதும் விதிதான்.
காரணம், கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள்தான், தனு தனது உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் கருவிக்கு மின்சக்தி ஊட்டப் பயன்படுத்தப்பட்டது.
இந்த கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள் வாங்கிய விவகாரமும் ராஜிவ் கொலை வழக்கில் அறிவுக்கு எதிராக பதிவாகியது.
ராஜிவ் கொலை நடந்த பின்னர் சிவராசனை புலனாய்வுக் குழு தேடத் தொடங்கியபோது, கவாஸாகி பஜாஜ் மோட்டார் சைக்கிளை பாக்கியநாதனிடம் விட்டுச் சென்றுவிட்டார் சிவராசன். இந்த மோட்டார் சைக்கிளை பாக்கியநாதனின் பி.பி.எல். ஆல் ரவுண்டர்ஸ் அச்சக வளாகத்திலிருந்து புலனாய்வுக் குழு கைப்பற்றியது.
மோட்டார் சைக்கிளை வைத்திருந்த குற்றம் பாக்கியநாதன் மீது விழுந்தது.
ராஜிவ் காந்தி மே 21, 1991-ல் கொல்லப்பட்டார். அதற்கு முன் தினம், சிவராசன் இறுதி ஏற்பாடுகளை சரிபார்க்க தொடங்கினார்.
மே 20-ம் தேதி, பாக்கியநாதன், அறிவு, நளினி, ஹரிபாபு ஆகியோர் பாக்கியநாதன் இல்லத்தில் சிவராசனைச் சந்தித்தனர். போட்டோக்கள் எடுப்பதற்காக, ஹரிபாபுவிடம் கோடக்ஃ பிலிம் ரோல் அளிக்கப்பட்டது. அடுத்த நாள், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி பேசவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அங்கு முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கலாம் என்றும் தெரிவித்தார் சிவராசன்.
போட்டோ எடுப்பதற்காக ஹரிபாபு மட்டும் தம்முடன் வந்தால் போதும் எனவும், பாக்கியநாதன், அறிவு ஆகியோர் வரத் தேவையில்லை என்றும் கூறிவிட்டார். ஏதோ நடக்கப் போகிறது என்பதைத் தவிர அவர்கள் இருவருக்கும் வேறு ஏதும் தெரியாது.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி பேசவிருக்கும் பொதுக்கூட்டம் மே 21-ம் தேதி இரவு நடக்கவிருந்தது. பாக்கியநாதன், அறிவு ஆகிய இருவரும் நைட் ஷோ சினிமா பார்க்க சென்றுவிட்டனர். மறுபுறம், முருகன் இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டார்.
சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்ததையும், ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதையும் பாக்கியநாதனும், அறிவும் அறிந்து கொண்டனர். வீட்டுக்குச் சென்றதும் முருகனை எழுப்பி இந்தச் செய்தியைத் தெரிவித்தனர்….அத்தியாயம் 24
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை
மே 21-ம் தேதி இரவு ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். மே 22-ம் தேதி தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மோசமான நாள்.
அன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.-வினர் மற்றும் அவர்களது உடமைகளுக்கு எதிரான வன்செயல்கள் நடந்துகொண்டிருந்தன.
தி.மு.க.-வுக்கும் ராஜிவ் கொலைக்கும் என்ன தொடர்பு? இந்தக் குண்டுவெடிப்பை செய்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சிலரின் கோபம், தி.மு.க. மீது திரும்பியிருந்தது. காரணம், அதுவரை ஆட்சியில் இருந்தது தி.மு.க. அரசுதான்.
ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று காரணம்கூறி, தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதனால், இந்தக் கொலைக்கும் தி.மு.க.-வுக்கும் இடையே ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று சிலருக்கு ஏற்பட்ட கோபம்தான் தி.மு.க.-வுக்கு எதிரான வன்முறையாக மாறியிருந்தது.
சென்னையின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பாக்கியநாதன், அறிவு, முருகன் ஆகியோர் எதுமே நடக்காதது போல, தங்களது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ராஜிவ் கொலையின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவரான முருகனுக்கு தெரிந்திருந்தது. இந்தியப் பிரஜைகளான பாக்கியநாதன், அறிவு ஆகியோருக்கு ஊக அடிப்படையில் தெரிந்திருந்தது. சிவராசனும் அவருடன் சென்றவர்களும் அதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என்பதை ஊகிப்பது அவர்களுக்கு அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியமாக இருந்திருக்காது.
பாக்கியநாதன் இல்லத்திலிருந்து தனது விடியோ கேசட் ரிக்கார்டர்கள், விடியோ கேசட்டுகள், மற்றும் விடுதலைப் புலிகளின் பிரசுரங்களை மூட்டை கட்ட ஆரம்பித்தார் அறிவு.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்த நளினி, ஹரிபாபு, சிவராசன் ஆகியோர் பற்றி அன்று (22-ம் தேதி) முழுவதுமே ஒரு தகவலும் இல்லை. அவர்கள் வந்தால்தான் நிஜமாக என்ன நடந்தது என்பது தெரியும் என்பதால், அவர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள் இந்த மூவரும்.
மே 23-ம் திகதி பாக்கியநாதன் வீட்டுக்கு வந்தார் சிவராசன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட குண்டுவெடிப்பில், தனுவும், ஹரிபாவும் இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
ஹரிபாபு தவறுதலாக இறந்து விட்டதாக கூறிய சிவராசன், ஹரிபாபு குடும்பத்துக்கு ஏதேனும் பண உதவி செய்ய வேண்டும் என விரும்பினார். உடனடிச் செலவுகளுக்காக ஹரிபாபுவின் தாயாரிடம் கொடுக்குமாறு பாக்கியநாதனிடம் கொஞ்சம் பணம் கொடுத்தார். யார் பணம் கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கு (ஹரிபாபு குடும்பத்தினருக்கு) தெரிய வேண்டாம் என்றும் கூறினார்.
“ஸ்ரீபெரும்புதூரில் என்ன நடந்தது?” என்று அறிவு கேட்டதற்கு சிவராசன் விளக்கமாக பதில் கூறவில்லை. “ராஜிவ் காந்தியை கொன்றதன் மூலம் தனு சரித்திரத்தில் இடம்பெற்று விட்டார்” என்று மட்டுமே சொன்னார் சிவராசன்.
அதற்குமேல், பாக்கியநாதன், அறிவு ஆகியோருக்கு ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்ற விபரங்களை சிவராசன் தெரிவிக்கவில்லை.
அன்று மாலை நளினியும் வீடு திரும்பி விட்டார். ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது நடந்தவற்றை அவர் விவரித்தார். அப்போதுதான், ஹரிபாபு, அறிவு ஆகிய இருவருக்கும் விபரங்கள் முழுமையாக தெரியவந்தன.
சரி. நளினிக்கு எந்தளவுக்கு விஷயங்கள் தெரியும்? தம்முடன் ஸ்ரீபெரும்புதூர் வரை வந்தவர்கள் ராஜிவ் காந்தியைக் கொல்லும் திட்டத்துடன்தான் வருகிறார்கள் என்ற விஷயம், கொலை நடப்பதற்கு முன்னரே அவருக்கு தெரியுமா?
அதை தெரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கிச் செல்லலாம். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினமான மே 21-ம் தேதி நடந்த சில சம்பவங்களைப் பார்க்கலாம். இதோ, அந்த பிளாஷ்பேக்-
மே 21-ம் தேதி காலை.
வழமைபோல அடையாறில் உள்ள அலுவலகத்துக்கு நளினி புறப்பட்டபோது, அன்று ராஜிவ் காந்தியை கொல்லும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது என்பது அவருக்கு தெரியாது. நளினி அலுவலகம் புறப்படுமுன் அவரை அணுகிய சிவராசன், அலுவலகத்தில் அன்று அரை நாள் விடுப்பு எடுக்குமாறு கூறினார். அன்று மாலை ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவுள்ள ராஜிவ் காந்தியின் பிரசாரக் கூட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்தார்.
சிவராசன் விரும்பியவாறே நளினி, மே 21-ம் தேதி அலுவலகத்தில் அரை நாள் விடுப்புச் சொல்லிவிட்டு வந்துவிட்டார். அவர் வீடு திரும்பியபோது மணி 3 ஆகி விட்டது. வீட்டில் தனு, சுபா ஆகிய இருவரும் வெளியே கிளம்ப தயாராக உடையணிந்து காணப்பட்டனர்.
தனு பச்சை ஆரஞ்சு சல்வார் கமீஸ் அணிந்திருந்தனர். (ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் தனு அணிந்திருந்த அதே சல்வார் கமீஸ்)
நளினியின் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுபா, “உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என்று ரூமுக்குள் வருமாறு நளினியை அழைத்தார். நளினி உள்ளே சென்றபோது, தனுவும் அந்த ரூமுக்குள் இருந்தார்.
சுபா, மிகத் தெளிவாக நளினியிடம், “இன்றைய தினம் எமக்கு முக்கியமான தினம். இன்று, தனு வரலாறு படைக்கப்போகிறாள். தனு இன்று தனது உயிரைக் கொடுத்து ராஜிவ் காந்தியை கொல்லப் போகிறாள். இந்த நடவடிக்கையில் நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.
நளினியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
தனு ஏதோ கருவியை தனது உடலில் இணைத்து இருப்பதை நளினி கவனித்தார். ஆனால், அது பற்றிய விபரஙகள் டெக்னிகலாக அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
இவர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியே வந்தபோது, சிவராசன் இவர்களுக்காக காத்திருந்தார். சிவராசன் வெள்ளை குர்தா பைஜாமாவும் அணிந்திருந்தார்.
இவர்கள் நால்வரும் சென்னை பாரிஸ் கார்னருக்கு சென்றனர். அங்கு கேமிரா மற்றும் சந்தன மாலையுடன் ஹரிபாபு காத்திருந்தார். பாரிஸ் கார்னரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்காக இவர்கள் பஸ் பிடித்தனர். பாரிஸ் கார்னரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்ற டவுன் பஸ்ஸில், ராஜிவ் காந்தியைக் கொல்லப் போகும் வெடிகுண்டும் பயணித்தது.
ஸ்ரீபெரும்புதூரை பஸ் சென்றடைந்தபோது, இரவு 7.30 மணி.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் அது. அன்றைய தினம்தான், ஈழப் போராட்டத்தில் முக்கியமான திருப்பு முனை. 18 ஆண்டுகளின்பின் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரப்போகும் குண்டு வெடிப்பு, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய நாள்.
பல சமயங்களில், விடுதலைப் புலிகளால் வெடிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டுகள், அவர்களது ஆயுதப் போராட்டத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி வெடித்த ஒற்றை வெடிகுண்டு, 18 ஆண்டுகளின் பின் 2009-ம் ஆண்டு அதே மே மாதத்தில், அந்த விடுதலை இயக்கத்தையே படு குழியில் தள்ளியது.
இரவு 7.30-க்கு இவர்கள் ஐவரும் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கி, ராஜிவ் காந்தியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்தபோது, அங்கே பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொதுக்கூட்ட மைதானத்தில் இவர்கள் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிந்து கொண்டனர்.
உடலில் வெடிகுண்டு பொருத்தியிருந்த தனு, சுபா, மற்றும் நளினி ஆகிய மூவரும், முதலில் பெண்களுக்கான பகுதிக்குச் சென்றனர். அங்கு லதா கண்ணனையும், அவரது மகள் கோகிலாவையும் சந்தித்தனர். இந்த மூவரும், லதா கண்ணன், கோகிலாவுடன் சேர்ந்து கொண்டனர்.
சிவராசனும், ஹரிபாபுவும் ராஜிவ் காந்தி நடந்து வருவதற்காக விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்துக்கு சற்று அருகே வரை செல்லக்கூடியதாக இருந்தது. அப்போது அந்த இடத்தில் காவல் பலமாக இருக்கவில்லை. ஹரிபாபு தன்னிடமிருந்த கேமராவால், போட்டோக்களை எடுக்கத் துவங்கினார். அந்த போட்டோக்கள்தான் பின்னாட்களில் இவர்கள் அனைவரையும் மாட்டிவிடப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
சிவராசன் ஹரிபாபு அருகே முதலில் நின்றிருந்தவர், பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று, தனுவுக்கு அருகே சென்றார். சிவராசன், தனு அருகே நிற்கும் காட்சியையும் ஹரிபாபு தனது கேமராவில் பதிவு செய்து கொண்டார். அந்த ஒற்றை போட்டோதான் பின்னாட்களில், சிவராசனின் உருவத்தை புலனாய்வுக் குழுவுக்கு காட்டிக் கொடுத்தது.
விடுதலைப் புலிகளுக்கும், தனுவுக்கும், குண்டுவெடிப்புக்கும், ராஜிவ் கொலைக்கும் இருந்த தொடர்பை பின்னாட்களில் நிரூபிக்கும் பிரதான சாட்சியமாக இருந்தது எது தெரியுமா? ஹரிபாபுவுக்கு அருகே நின்றிருந்த சிவராசன் நகர்ந்து சென்று தனு அருகே நின்றபோது, ஹரிபாபு தனது கேமராவின் கிளிக் பட்டனை தட்டி பதிவு செய்த சிங்கிள் போட்டோதான்!
(இந்த சிங்கிள் போட்டோவில் இருந்து, அனைத்தையும் எப்படி தொடர்பு படுத்தினார்கள் என்பது இந்தத் தொடரின் பின் பகுதியில் வரும்)
தனுவை சிவப்பு கம்பள பகுதியில் விட்டுவிட்டு, நளினியும், சுபாவும் பெண்கள் பகுதிக்கே திரும்பிச் சென்றிருந்தனர். அவர்கள் பெண்கள் பகுதியில் இருப்பதையும் தனது கேமராவில் பதிவு செய்துகொண்டார் ஹரிபாபு. இந்த விவகாரத்தில் நளினியை தொடர்பு படுத்தியது அந்த போட்டோ ஆதாரம்தான்!
தனுவை சிவப்பு கம்பள பகுதியில் விட்டுவிட்டு, நளினியும், சுபாவும் பெண்கள் பகுதிக்கே திரும்பிச் சென்றிருந்தனர். அவர்கள் பெண்கள் பகுதியில் இருப்பதையும் தனது கேமராவில் பதிவு செய்துகொண்டார் ஹரிபாபு. இந்த விவகாரத்தில் நளினியை தொடர்பு படுத்தியது அந்த போட்டோ ஆதாரம்தான்!
ராஜிவ்காந்தி வருவதற்கான நேரம் நெருங்கியது. தனுவுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினார் சிவராசன். ராஜிவ்காந்திக்கு அருகில் சென்று மாலை அணிவிக்க அனுமதி பெற்றவர்களை வரிசையாக நிற்குமாறு அறிவித்தார்கள். அப்போது தனு அந்த வரிசைக்கு செல்லவில்லை. சிவராசனுக்கு அருகிலேயே நின்றிருந்தார்.
காரணம், தனுவுக்கு தனிப்பட்ட அனுமதி கிடைத்திருக்கவில்லை. அனுமதி பெற்ற லதா கண்ணனுடன் கடைசி நேரத்தில் சேர்ந்து கொண்டு ராஜிவ் காந்தியை நெருங்குவதுதான், அவரது திட்டமாக இருந்தது.
தனுவும், சிவராசனும் நின்றிருப்பதை பெண்கள் பகுதியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் நளினியும், சுபாவும். இன்னமும் சிறிது நேரத்தில் தனு வெடித்துச் சிதறப் போகிறார் என்பது அவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்தது.
குண்டு வெடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று சுபாவுக்கும் நளினிக்கும் சிவராசன் கூறியிருந்தார். “குண்டு வெடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 மீட்டருக்கு அப்பால் நின்று கொள்ளுங்கள். குண்டுவெடிப்பு அதைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தாது. குண்டு வெடித்த மறு நிமிடமே அந்த இடத்தில் தாமதிக்காமல், இந்திரா காந்தி சிலை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுங்கள். (பொதுக்கூட்ட மைதானத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தது இந்திரா காந்தி சிலை) அங்கே எனக்காக காத்திருங்கள்” என்பது அவர் கொடுத்திருந்த விளக்கமான இன்ஸ்ட்ரக்ஷன்.
ராஜிவ் காந்தி வந்திறங்கினார்.
முதலில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடந்து வரத் துவங்கினார்.
தனுவும் சிவராசனும் நின்றிருந்த இடத்தில் இருந்து, ராஜிவ் காந்தி நடந்து வருவதை பார்க்கக் கூடியதாக இருந்தது. நளினியும் சுபாவும் இருந்த இடத்தில் இருந்து ராஜிவ் காந்தி வருவதையும் பார்க்க முடிந்தது. சிவராசன், தனு நின்றிருந்த இடத்தையும் காண முடிந்தது.
ராஜிவ்காந்தி வருவதைக் கண்டவுடன் தனு தயாராகி விட்டார். ஒரு தலையசைப்பின் முலம் சிவராசனிடமிருந்து விடைபெறுவதையும், சிவராசனை அந்த இடத்தில் இருந்து அகன்று விடுமாறு தனு சைகை செய்வதையும், நளினியும் சுபாவும் கண்டனர். குண்டு வெடிப்பதற்கு இன்னமும் சில நிமிடங்களே இருந்ததால், 50 மீட்டருக்கு அப்பால் சென்று விடுவதற்கு தனு சிவராசனுக்கு கொடுத்த கால அவகாசம் அது.
அந்தப் பதட்டத்தில் ஹரிபாபுவுக்கு இப்படி ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கவில்லை. குண்டு வெடிக்கப் போவதே அவருக்கு தெரிந்திருக்கவில்லை. தனு சைகை செய்தவுடன் விரைவாக அந்த இடத்தைவிட்டு அகன்ற சிவராசனும், கடைசிநேர அவசரத்தில் ஹரிபாபுவைக் கவனிக்கவில்லை. ஹரிபாபு, குண்டுவெடிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு நெருக்கமான தொலைவில் நின்று, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
குண்டு வெடிக்கும் நேரம் நெருங்கி விட்டதை தெரிந்துகொண்டு சிவராசன் அங்கிருந்து அகன்றபோது, ஹரிபாபுவையும் அழைத்துச் சென்றிருந்தால் அவர் உயிர் தப்பியிருப்பார். அவரது கையில் இருந்த கேமராவும், அதில் இருந்த பிலிம் ரோலும் புலனாய்வுக் குழுவின் கைகளில் சிக்காது போயிருக்கும்!
ஆனால், கடைசி நிமிடத்தில் சிவராசன், ஹரிபாபுவை மறந்தவராக அங்கிருந்து அகன்றார். ராஜிவ் காந்தி தனு இருந்த இடத்தை நெருங்கினார். குண்டு வெடித்தது.
பெண்கள் பகுதியில் இருந்த சுபாவும், நளினியும் இந்திராகாந்தி சிலையை நோக்கி ஓடத் துவங்கினார்கள்….அத்தியாயம் 25
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை
மே 21-ம் தேதி இரவு. ராஜிவ் காந்திக்கு அருகே குண்டு வெடித்ததும், ஏற்கெனவே திட்டமிட்டபடி நளினியும், சுபாவும் இந்திரா காந்தி சிலையை நோக்கி ஓடினர். குண்டு வெடித்த அதிர்ச்சியில் மைதானத்தில் இருந்த பலரும், இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டு இருந்ததால், இவர்கள் ஓடுவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
இந்திரா காந்தி சிலையருகே இவர்கள் சில நிமிடங்கள் காத்திருந்த நிலையில், வந்து சேர்ந்தார் சிவராசன்.
“திட்டம் நிறைவேறிவிட்டது. எதிர்பார்த்தபடி தனுவும் இறந்து போனார். ஆனால், துரதிருஷ்டமாக ஹரிபாபுவும் இறந்து விட்டார்” என்று தணிந்த குரலில் சுருக்கமாக தெரிவித்தார் சிவராசன்.
விரைவாக அங்கிருந்து அகன்று, சென்னைக்கு திரும்பலாம் என்று சிவராசன் கூறினார். இவர்கள் நின்றிருந்த இடம், அப்போதுதான் குண்டு வெடித்த மைதானத்துக்கு அருகில் இருந்தது. அந்த இடத்தில் எந்த வாகனமும் கிடைக்காது. எனவே நடக்கத் தொடங்கினார்கள். உடல் சோர்வு, பதற்றம், ஆகியவற்றால் அவர்களுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. ஏதாவது வாகனம் வருமா எனப் பார்த்துக் கொண்டே நடந்தனர்.
நடந்த பாதையில், ஒரு மூதாட்டி தனது வீட்டு வாசலில் காத்திருந்ததைப் பார்த்தனர். அந்த மூதாட்டி அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். தண்ணீரைக் குடித்துவிட்டு தொடர்ந்து நடந்தபோது, சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஆட்டோ கிடைத்தது.
ஆனால், ஆட்டோகாரர் பூந்தமல்லி வரை மட்டுமே வரமுடியும் என்று கூறிவிட்டார். பூந்தமல்லியில் இறங்கிக் கொண்டனர். சென்னை புறநகர் பகுதியான கொடுங்கையூரில் சிவராசனின் நண்பர் வீட்டுக்குப் போவதற்குள் மேலும் 2 ஆட்டோக்களை மாற்ற வேண்டியதாயிற்று.
கொடுங்கையூரில் நண்பர் வீட்டுக்குப் போன பின்னரே, என்ன நடந்தது என்பதை சிவராசன் நளினியிடம் விளக்கினார். “தனுவின் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு இரு சுவிட்சுகளை ஆன் செய்ய வேண்டும். தனு, முதல் சுவிட்சை அழுத்தியதும்தான் என்னை (சிவராசனை) அங்கிருந்து விலகிப் போய்விடுமாறு கூறினார்” என்றார் சிவராசன்.
மே 22-ம் தேதி.
முதல் நாள் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், வெளியே பதட்டமான சூழ்நிலை நிலவியது. பகல் முழுவதும் இவர்கள் வெளியே செல்லவில்லை. சிவராசனின் உதவியாளர்களில் ஒருவரான சாந்தன் என்கிற சுதந்திர ராஜா, பல்வேறு பத்திரிகைகளை அங்கு கொண்டு வந்தார். அவற்றில் வெளியான ராஜிவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளைப் படித்தனர்.
கொடுங்கையூரில் நண்பர் வீட்டில் டி.வி. கிடையாது. சிவராசன், சுபா, நளினி ஆகிய மூவரும், பக்கத்து வீட்டில் டி.வி. செய்திகள் பார்க்க சென்றனர். ராஜிவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளை கேட்டனர்.
அன்று இரவும் கொடுங்கையூர் வீட்டிலேயே தங்கினர். மறுநாள் 23-ம் தேதி காலையில், நளினியை அவரது அலுவலகத்தில் கொண்டுபோய் விட்டு வந்தார் சிவராசன். அன்று மாலை அனைவரும் கொடுங்கையூரை விட்டு கிளம்பி, தத்தமது வீடுகளுக்கு வந்து விட்டனர். 23-ம் தேதி இரவு தத்தமது பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அதுவரை எல்லாமே சிக்கல் இல்லாமல் நடந்தன.
அதற்கு அடுத்த நாள்தான் சிக்கல் தொடங்கியது.
மே 24-ம் தேதி காலையில் வெளியான, ஹிந்து ஆங்கில நாளிதழில், தனுவின் போட்டோ முதல்முதலாக பிரசுரமாகியிருந்தது! அதன் பின்னர்தான், ஓட்டம் தொடங்கியது.
இப்போது பிளாஷ்-பேக்கில் இருந்து விலகி, தொடரை நாம் எங்கே விட்டோமோ, அங்கே செல்லலாம். (இந்தத் தொடரில் வரும் சம்பவங்களை முன்னும் பின்னுமாக நாம் மாறிமாறி தருவதற்கு காரணம் உள்ளது. ராஜிவ் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் அதிகம். 2-ம் அத்தியாயத்தில் வரும் ஒருவர் அடுத்து 22-ம் அத்தியாயத்தில்தான் வந்தால், அவர் யார் என்றே மறந்துபோகும். அதனால், முடிந்தவரை ஒவ்வொரு குரூப் குருப்பாக கான்சாலிடேட் பண்ணியிருக்கிறோம். இந்த பாணி, புரிவதற்கு சுலபமாக இருக்கும்)
தொடர், பிளாஷ்-பேக்குக்கு செல்லுமுன், நளினியும், முருகனும் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு புலனாய்வுக்குழு வலை விரித்தது. அவர்கள் இருவரைப் பற்றியும் எந்த தகவலும் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. இதனால், அவர்களுடன் தொடர்புடையவர்களை முதலில் கைது செய்து விசாரிப்பது என்ற முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. குழு.
ஜூன் 11-ம் தேதி பாக்கியநாதனும், பத்மாவும் கைது செய்யப்பட்டனர்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு, சரியாக 3 வாரங்கள் முடிந்தபின், இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நாள் கணக்கை ஏன் சொல்கிறோம் என்றால், ராஜிவ் கொலை வழக்கில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவால் செய்யப்பட்ட முதலாவது கைது நடவடிக்கை இதுதான்! (தஞ்சாவூர் அருகே கைது செய்யப்பட்ட ரூசோ, மற்றும் கடத்தல்காரர் ஆகியோர் தமிழக போலீஸால் கைது செய்யப்பட்டவர்கள்)
நளினியின் குமுடும்பத்தைச் சேர்ந்த இவர்களில், பாக்கியநாதனுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளதை புலனாய்வுக்குழு ஏற்கனவே அறிந்திருந்தது. ஆனால், பத்மா பற்றி ஏதும் தெரியாதிருந்தது. அப்படியிருந்தும் பத்மாவை கைது செய்த காரணம், தற்செயலாக தெரியவந்த ஒரு விஷயம்தான்.
சென்னையில் உள்ள நர்ஸிங் ஹோம் ஒன்றின் நிர்வாக இயக்குனரிடம் இருந்து கிடைத்த தகவல் அது.
பத்மா அந்த நர்ஸிங் ஹோமில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். கைது செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன் அவர் பணிபுரிந்த நர்ஸிங் ஹோமில் உடன் பணியாற்றிய தனது தோழியான மற்றொரு நர்ஸிடம் ஒரு கவரை பத்திரமாக வைத்திருக்கும்படி பத்மா கொடுத்து வைத்திருந்தார். ராஜிவ் காந்தி கொலை விசாரணையில் நளினியை போலீஸ் தேடுகிறது என்று தெரிய வந்தவுடன், கவரை பத்திரமாக வைத்திருந்த நர்ஸ், பயந்து விட்டார்.
தன்னிடமுள்ள கவரில் ஏதாவது சிக்கல் இருக்குமோ என்று பயந்த அந்த நர்ஸ், நர்ஸிங் ஹோம் தலைமை அதிகாரியிடம் பத்மாவின் கவர் பற்றி தெரிவித்தார். அந்த விபரம், நர்ஸிங் ஹோமின் நிர்வாக இயக்குனருக்கும் கூறப்பட, அவர் பத்மா கொடுத்த கவரை எடுத்துச் சென்று ‘மல்லிகை’யில் இயங்கிய சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஆபீஸில் ஒப்படைத்தார்.
தன்னிடமுள்ள கவரில் ஏதாவது சிக்கல் இருக்குமோ என்று பயந்த அந்த நர்ஸ், நர்ஸிங் ஹோம் தலைமை அதிகாரியிடம் பத்மாவின் கவர் பற்றி தெரிவித்தார். அந்த விபரம், நர்ஸிங் ஹோமின் நிர்வாக இயக்குனருக்கும் கூறப்பட, அவர் பத்மா கொடுத்த கவரை எடுத்துச் சென்று ‘மல்லிகை’யில் இயங்கிய சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஆபீஸில் ஒப்படைத்தார்.
அந்த கவரில் ஒயர்லெஸ் ரகசியக் குறியீட்டுச் செய்திகள் இரண்டு இருந்தன.
இந்த இரு செய்திகளும் டீகோட் செய்யப்படாமல் இருந்தன. ஆனால், அவை எழுதப்பட்ட கடதாசியில் அவை யாருக்கு அனுப்பப்பட்டவை என்று ஒரு பெயர், பென்சிலால் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்த பெயர் – “இந்து மாஸ்டர்”
யார் இந்த இந்து மாஸ்டர் என்று தலையை உடைத்துக் கொண்டது சி.பி.ஐ. ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ரூசோவிடம் விசாரித்தார்கள். அத்துடன், தமிழக அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த விடுதலைப் புலிகளிடமும் (இவர்கள் ராஜிவ் கொலைக்கு முன்னரே கைது செய்யப்பட்டவர்கள்) இந்து மாஸ்டர் பற்றி விசாரித்தார்கள்.
கிடைத்த விபரங்களில் இருந்து, இந்து மாஸ்டர் என்ற பெயருடைய ஒரு நபர், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகளில் இருந்தார் என்று தெரிய வந்தது. அவரது உருவம் தொடர்பாக மேலும் விசாரணையைத் தொடரவே, ஒரு கட்டத்தில் இந்து மாஸ்டர் யார் என்பது புரிந்து விட்டது.
யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகள் வட்டாரத்தில் இந்து மாஸ்டர் என அழைக்கப்பட்டவர் முருகன்தான் என்று தெரிந்து கொண்டார்கள்.
முருகன், நளினியுடன் தலைமறைவாகி விட்டார். அவருக்கு வந்த ஒயர்லெஸ் ரகசியக் குறியீட்டுச் செய்திகளை, பத்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்ற கோணத்தில், ஜூன் 11-ம் தேதி பாக்கியநாதனுடன், பத்மாவும் கைது செய்யப்பட்டார். பத்மாவை விசாரித்தபோது, நளினி எங்கே என்ற விபரம் அவருக்கு நிஜமாகவே தெரியாது என்று புரிந்தது.
மறுநாள் ஜூன் 12-ம் தேதி, சி.பி.ஐ. புலனாய்வுக் குழு இரு போட்டோக்களை பத்திரிகைகளுக்கு கொடுத்து, பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டது.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினத்தில், பொதுக்கூட்ட மைதானத்தில் ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட 2-வது போட்டோவில் இருந்து, நளினியையும், சுபாவையும் பெரிதுபடுத்தி, அவர்களுடைய முகங்கள் தெளிவாக தெரியுமாறு செய்யப்பட்ட போட்டோக்கள் இவை.
இந்த போட்டோக்கள் பத்திரிகைகளில் வெளியாகின. இதிலுள்ள இருவரில் யாரையாவது கண்டால் உடனே தெரிவிக்கவும் என்று மல்லிகை அலுவலக போன் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து சென்னை மல்லிகை அலுவலகத்துக்கு வந்த முதலாவது போன் கால் மதுரையில் இருந்து வந்தது.
மதுரையில் வசித்த, நளினியின் நண்பர் ஒருவரது வீட்டுக்கு நளினியும், அவருடன் மொட்டையடித்த இளைஞர் ஒருவரும் வந்ததாக அந்த தகவல் சொல்லியது. இதை விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஒரு பிரிவு மதுரை விரைந்தது.
அந்தப் பிரிவு ‘மல்லிகை’ அலுவலகத்திலிருந்து புறப்படுப்பதற்கு முன் மற்றொரு போன்கால் வந்தது. நளினியும், அவருடன் மொட்டையடித்த ஒரு இளைஞரும் விழுப்புரத்தில் உள்ள மற்றொரு நண்பரின் வீட்டுக்குப் போனதாகத் தகவல் கிடைத்தது. இரண்டாவது டீம் விழுப்புரத்துக்கு அனுப்பப்பட்டது.
இவர்கள் போய் சேர்வதற்குமுன், விழுப்புரத்தில் இருந்தும் நளினியும், முருகனும் புறப்பட்டு விட்டனர். அப்படியிருந்தும், மதுரைக்கும் விழுப்புரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்ட டீம்களை அங்கேயே தங்கியிருக்குமாறு மல்லிகையில் இருந்து உத்தரவு போனது. ஒருவேளை நளினியும் முருகனும் மீண்டும் அங்கே வந்தால் பிடிக்கலாம் என்ற நினைப்பில் செய்யப்பட்ட ஏற்பாடு அது.
ஜூன் 14-ம் தேதி மாலை. விழுப்புரம் சென்றிருந்த சிறப்பு புலனாய்வுக் குழு டீமிடம் இருந்து சென்னை மல்லிகை அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நளினியும், முருகனும் மீண்டும் ஒரு முறை விழுப்புரம் வந்திருப்பதாக தெரிவித்தார்கள்.
அவர்களை கைது செய்ய சென்னையில் இருந்து ஆட்களை அனுப்புவதா, அல்லது விழுப்புரம் போலீஸின் உதவியுடன் கைது செய்வதா என்று மல்லிகையில் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்க, விழுப்புரம் டீமிடம் இருந்து அடுத்த போன் கால் வந்தது. “நளினியும், முருகனும் சற்றுமுன் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பஸ் ஒன்றில் ஏறியிருக்கிறார்கள்”
அவர்கள் பயணம் செய்த பஸ் இலக்கம் தெரிந்தும், பஸ்ஸை மறித்து அவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு விரும்பவில்லை. பெரிய பப்ளிசிட்டி கொடுக்காமல், காதும் காதும் வைத்தது போல கைது செய்ய விரும்பினார்கள்.
அதையடுத்து, சென்னையில் உள்ள பல்வேறு பஸ் நிலையங்களுக்கும், நளினி வீட்டுக்கும், விழுப்புரம்-சென்னை பஸ் வழித்தடத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களுக்கும் பல குழுக்களை அனுப்பி வைத்தது மல்லிகை.
இரவு 10 மணிக்குப்பின் சென்னை நகருக்குள் பிரவேசித்தது அந்த பஸ். அதுவரை நளினியும், முருகனும் பஸ்ஸில் இருந்து இறங்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட புலனாய்வுக் குழு, அந்த பஸ்ஸின் பின்னாடியே தமது வாகனம் ஒன்றில் பின்தொடர்ந்தனர்.
இரவு 11 மணியளவில், சென்னை சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது, நளினியும், முருகனும் இறங்கினர். இறங்கிய இருவரும் ஆட்டோ ஒன்றை அழைத்து ஏறிக் கொண்டனர். அந்த ஆட்டோ கிளம்புவதற்குமுன், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினர் ஆட்டோவை சூழ்ந்து கொண்டனர்…அத்தியாயம் 26
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை
விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட பஸ் இரவு 11 மணியளவில், சென்னை சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது, நளினியும், முருகனும் இறங்கினர். இறங்கிய இருவரும் ஆட்டோ ஒன்றை அழைத்து ஏறிக் கொண்டனர். அந்த ஆட்டோ கிளம்புவதற்குமுன், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினர் ஆட்டோவை சூழ்ந்து கொண்டனர்.
இருவரையும் அங்கிருந்து ‘மல்லிகை’ அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்கள் இருவரும் முறைப்படி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டபோது, நளினி இரு மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரியவந்தது.
மறுநாள் காலை இருவரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். இருவரும் கூறிய தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொண்ட விபரங்கள்:
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் புலனாய்வுக் குழுவின் சந்தேகம் தம்மீது வீழ்ந்து விட்டது என்பதை தெரிந்து கொண்டவுடன் இருவரும் தப்பிச் செல்வது என்று முடிவு செய்தனர். அதற்குமுன் திருப்பதி சென்று திருமணம் செய்து கொள்வது என்றும் திட்டமிட்டனர்.
சென்னையிலிருந்து திருப்பதிக்கு தப்பிய அவர்கள், நளினிக்கு சில நகைகளை வாங்கினர். பின்னர் திருமணமும் செய்துகொண்டனர். அதன் பின்னர் நளினியின் முன்னாள் தோழியைச் சந்திக்க மதுரை சென்றனர். அந்தத் தோழிக்குச் சந்தேகம் எழுந்ததால், மதுரையிலிருந்து புறப்பட வேண்டியதாயிற்று.
ராஜிவ் கொலை தொடர்பாக நளினியின் போட்டோ பத்திரிகைகளில் வெளியாகத் துவங்கிய நேரம் அது. தமிழகம் முழுவதிலும் நளினியைப் பற்றி தெரியவந்திருக்கும் என்பதால், தமிழகத்தை விட்டு வேறு மாநிலம் செல்வது என்று முடிவு செய்தனர். தாவண்கரேவில் நளினியின் மற்றொரு நண்பர் இருந்தார்.
இருவரும் மதுரையில் இருந்து பெங்களூர் வழியாக தாவண்கரே சென்றனர். அங்கு நளினியின் நண்பரைச் சந்தித்தனர். அவரோடு பேசியபோது, ராஜிவ்காந்தி கொலையில் நளினி தேடப்படுகிறார் என்ற விஷயம் அந்த நண்பருக்குத் தெரிந்துவிட்டது என்பது இவர்களுக்கு புரிந்தது. அவர் நளினிக்கும் முருகனுக்கும் இடமளிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து விழுப்புரம் வந்து மற்றொரு நண்பரைப் பார்த்து உதவி கேட்டனர். அவரும் உதவ மறுத்து விட்டார். வேறு எங்கும் போகமுடியாத நிலையில், இருவரும் சென்னை திரும்பினர். சைதாப்பேட்டையில் இறங்கியபோது புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்ப விசாரணையில் இந்த விபரங்களை தெரிந்து கொண்டபின், அடுத்த கட்ட விசாரணை துவங்கியது.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினத்தன்று, பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு தாம் சென்றது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார் நளினி. பொதுக்கூட்ட மைதானத்தில் ஹரிபாபு எடுத்த போட்டோவில் நளினி அமர்ந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது என்பதால், அதை மறுக்க முடியாது.
தற்கொலைத் தாக்குதல் மூலம் ராஜிவ் காந்தியைக் கொன்ற தனு, சிவராசன், சுபா ஆகியோருடன் பொதுக்கூட்ட மைதானத்துக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹரிபாபு எடுத்த போட்டோக்களைக் காட்டி, இந்த போட்டோக்களில் இருந்து வேறு எதையாவது சொல்ல முடியுமா என்று கேட்டபோது, “போட்டோவில் தனு அணிந்திருக்கும் ஆரஞ்சு, பச்சை நிற சல்வார் கமீஸ், காலணிகள் ஆகியவற்றை வாங்குவதற்கு தனுவை நான்தான் அழைத்துச் சென்றேன்” என்றார்.
இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுக்குழு அதிகாரிகள் நளினியை சென்னையிலுள்ள சில கடைகளுக்கு அழைத்துச் சென்றனர். ஆரஞ்சு, பச்சை நிற சல்வார் கமீஸ், காலணிகள் ஆகியவற்றை வாங்கிய கடைகளை அடையாளம் காட்டினார் நளினி.
ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை நடந்த நாளன்று தனு அணிந்திருந்தது இந்த உடைகளைத்தான்.
புலனாய்வுக் குழுவின் ஒரு டீம் நளினியை விசாரித்துக் கொண்டிருக்க, மற்றொரு டீம், முருகனை விசாரித்துக் கொண்டிருந்தது.
“நளினியை பார்க்க வந்த நாட்களில் நீங்கள் தங்கியிருந்த இடம் எது?” என்று விசாரித்தபோது, சென்னை புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டைக் காட்டினார். வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. வீட்டைத் திறந்து சோதனையிட்டபோது, போலியாகத் தயாரிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கான அங்கீகார அட்டை முருகன் பெயரில் இருந்தது கைப்பற்றப்பட்டது.
உள்ளூர் பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அவரது டைரிகள், வயர்லெஸ் ரகசியக் குறியீட்டு (டீகோடிங்) அட்டைகள், வெற்றிவேல் சிவஸ்ரீ என்ற பெயரில் இருந்த இலங்கை பிரஜைக்கான அடையாள அட்டை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இலங்கை பிரஜைக்கான அடையாள அட்டையில் சிவஸ்ரீயின் போட்டோ ஒட்டப்பட்டிருந்தது. அது முருகனின் போட்டோ அல்ல. முருகனை விசாரித்தபோது, அது அவரது அண்ணனின் அடையாள அட்டை என்று சொன்னார்.
சிவராசன் மற்றும் சுபா ஆகிய இருவரும் சென்னையில் இருந்து எங்கே சென்றனர் என்ற விஷயம், முருகனுக்கோ, நளினிக்கோ தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சென்னையில் இருந்து தப்பிச் செல்வதற்குமுன், இவர்கள் இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.
அதனால், முருகளும், நளினியும் சென்னையை விட்டு கிளம்பிச் சென்றபின் அவர்களுக்கு என்ன ஆனது என்பதை, இவர்கள் இருவரும் நிஜமாகவே அறிந்திருக்கவில்லை என்பதை புலனாய்வு அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.
இந்த விசாரணைகள் ஒருபுறமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறமாக சிவராசன் பற்றிய செய்திகள் தமிழ் பத்திரிகைகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. அதிக சர்க்குலேஷன் உள்ள பத்திரிகை ஒன்று சிவராசனை ஒற்றைக்கண் மாயாவி எனப் பிரபலமாக்கி விட்டிருந்தது.
சிவராசனை பற்றித் தகவல் தருமாறு புலனாய்வுக்குழு செய்திருந்த விளம்பரத்துக்கு ஓரளவு பலன் கிடைத்தது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர் ஒருவர், சிவராசன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக தமது அலுவலகத்துக்கு வந்திருந்ததாக தகவல் கொடுத்தார்.
அவர் குத்துமதிப்பாக கொடுத்த தேதிகளில் பதிவான டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததில், சிவராசனின் விண்ணப்பம் சிக்கியது. சிவராசன் கொடுத்த விண்ணப்பப்படிவம் பதியப்பட்ட இலக்கத்துக்கு அடுத்தடுத்த இலக்கங்களில் பதிவான விண்ணப்பங்களையும் ஆராய்ந்தனர் புலனாய்வுக் குழுவினர்.
அப்போது, சிவராசனின் விண்ணப்பத்துக்கு அடுத்து பதிவு செய்யப்பட்ட ஒரு விண்ணப்பமும், சிவராசனின் விண்ணப்பமும் ஒரே பேனாவால், ஒரே கையெழுத்தில் நிரப்பப்பட்டிருந்ததை கண்டு பிடித்தார்கள். ராபர்ட் பயஸ் என்ற பெயரில் இருந்தது அந்த விண்ணப்பம்.
சிவராசன், ராபர்ட் பயஸ் ஆகிய இருவருக்கும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டிருந்தது. இரண்டு பேரின் டிரைவிங் லைசென்சிலும் ஒரே முகவரிதான். போரூரில் உள்ள ராபர்ட் பயஸ் வீட்டு முகவரிதான் கொடுக்கப்பட்டிருந்தது.
இருவரின் போட்டோக்களும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன.
இதற்குமேல் என்ன வேண்டும்? அடுத்து, கைது செய்யப்படப் போகிறவர் இந்த ராபர்ட் பயஸ்தான்.
அதற்குமுன் மிகச் சிறியதாக ஒரு பிளாஷ்-பேக். தஞ்சாவூருக்கு அருகே ரூசோ என்ற விடுதலைப்புலி உறுப்பினர் கைது செய்யப்பட்ட விபரம் பற்றி எழுதியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அப்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை இரு துண்டுச்சீட்டுகள். அவற்றில் ஒன்றில் நளினி, தாஸ் (முருகன்) என்ற இரு பெயர்களும், தொலைபேசி எண்களும் இருந்தன என்றும் எழுதியிருந்தோம்.
இரண்டாவது துண்டுச் சீட்டில் யாருடைய பெயரும் இல்லாமல், ஒரு போன் நம்பர் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அந்த போன் நம்பர் எழுதப்பட்ட துண்டுச் சீட்டை தம்மிடம் யார் கொடுத்தார்கள் என்பது சரியாக ஞாபகமில்லை, நீண்ட நாட்களாக தன்னுடைய பர்ஸில் அது இருந்தது என்று ரூசோ சொல்லியிருந்தார்.
புலனாய்வுக்குழு அந்த தொலைபேசி எண்ணுக்குரிய போன் எங்கே இருக்கிறது என்று ட்ரேஸ் பண்ணியது. அது, போரூரில் உள்ள ஒரு பலசரக்குக் கடை தொலைபேசி எண்!
செல்போன் ஏதுமற்ற அந்த நாட்களில் இந்த போரூர் பலசரக்குக் கடை போன் நம்பரை அந்த ஏரியாவில் வசித்த பலர் தமது தொடர்பு இலக்கமாக கொடுத்திருந்தனர். இதனால், ரூசோவுக்கு அதை யார் கொடுத்தார்கள் என்பதை புலனாய்வுக் குழுவால் கண்டுபிடிக்க முடிந்திருக்கவில்லை.
இப்போது சிவராசன் உட்பட, மூவருக்கும் வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸில் குறிப்பிடப்பட்டிருந்த ராபர்ட் பயஸ் இல்ல முகவரியை தேடிப் போனால், அந்த வீடு, போரூர் பலசரக்குக் கடைக்கு அருகில் இருந்தது.
புலனாய்வுக் குழுவினரின் தலைக்குள் ஒரு மணி ஒலித்தது! …அத்தியாயம் 27
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை
ராபர்ட் பயஸை கைது செய்து மல்லிகைக்கு கொண்டுபோய் சிவராசனைப் பற்றி விசாரித்தது சிறப்பு புலனாய்வு பிரிவு டீம். அவருடன் ஒன்றாகச் சென்று டிரைவிங் லைசென்ஸ் எடுத்த சிவராசனை எப்படித் தெரியும் என்று பயஸிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில், “எனது மைத்துனர் ஜெயக்குமாரின் வீட்டில் சிவராசன் தங்கியிருந்ததால் ஏற்பட்ட பரிச்சயம்”
இதையடுத்து, பயஸின் மைத்துனர் ஜெயக்குமாரும் கைது செய்யப்பட்டார்.
இந்த ஜெயக்குமார், இந்தியாவில் செட்டிலாகியிருந்த ஒரு இலங்கைத் தமிழர். 1984-ம் ஆண்டிலேயே இந்தியாவுக்கு வந்துவிட்டார். இந்தியாவில் தங்கியிருந்தபோது, இந்தியரான சாந்தி என்பவரைச் சந்தித்து 1987-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்பின் ஜெயக்குமாரும் சாந்தியும் யாழ்ப்பாணம் சென்றனர். அங்கேயே வாழத் துவங்கினார்கள்.
ஜெயக்குமாரின் சகோதரியின் பெயர் பிரேமா. அவரும் யாழ்ப்பாணத்தில்தான் வசித்தார். பிரேமாவின் கணவர்தான், ராபர்ட் பயஸ்.
இவர்கள் அங்கு வசித்த காலத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் சென்று இறங்கியது. ஏற்கனவே இந்தியாவில் வசித்த ஜெயக்குமாரும், இந்தியரான சாந்தியும் இந்திய அமைதிப்படை இலங்கை வந்ததை ஆரம்பத்தில் ஆதரித்தார்கள். ஆனால், இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் யுத்தம் துவங்கியபோது, அவர்களது மனப்போக்கு மாறியது.
யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில், விடுதலைப் புலிகள் என்ற ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய இருவருமே இந்திய அமைதிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்திய அமைதிப் படையினர், தாம் கைது செய்து வைத்திருந்தவர்களை விசாரித்து விசாரித்து, அவர்கள் புலிகள் உறுப்பினர்கள் அல்ல என்று தெரிந்தால், விடுவித்துக் கொண்டிருந்தனர். உண்மையிலேயே புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இல்லாத இவர்கள் இருவரும் விடுதலை ஆயினர்.
இந்திய அமைதிப் படையால் அடித்து, உதைத்து, விசாரிக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரும், ராபர்ட்டும், முற்று முழுதாக விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். லோக்கல் லெவலில் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். புலிகளுக்கு உதவிகளை செய்யவும் துவங்கினர்.
1989-ம் ஆண்டு இறுதியில் இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்து படிப்படியாக வெளியேறத் துவங்கியது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தமது தமிழக ஆபரேஷனை முற்றாக மாற்றினார்கள். இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களில், பேபி சுப்ரமணியம் மற்றும் அவருடன் இருந்த பலரும் சென்னையில் இருந்து இலங்கைக்கு அழைத்துக் கொள்ளப்பட்டதை எழுதியிருந்தோம்.
அந்த விதத்தில், தமிழகத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்து போனது.
இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு கிளம்புவது உறுதியானதும், புலிகளின் உளவுப் பிரிவு, புதிதாக தமிழகத்தில் தமது மறைவிடங்களை (சேஃப் ஹவுஸ்களை) ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அதற்காக, புலிகளின் நேரடி உறுப்பினர்களாக இல்லாத, ஆனால் ஆதரவாளர்களாக உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தது. அப்படியான நபர்களுக்கு, ஏற்கனவே தமிழகத்தில் தொடர்பு இருந்தால் நல்லது என்றும் நினைத்தது.
இந்த ரிக்கொயர்மென்ட்ஸில் கச்சிதமாக பொருந்தினார்கள், ஜெயக்குமாரும், ராபர்ட்டும். ஜெயக்குமார் ஏற்கனவே தமிழகத்தில் வசித்தவர். அவரது மனைவி சாந்தி இந்தியர். ராபர்ட், அவரது தங்கையின் கணவர்.
தமிழகத்தில் போய் தங்கியிருந்து தமக்கு செய்யும் உதவிகளை தொடருமாறு இவர்களை கேட்டுக்கொண்டது புலிகளின் உளவுப் பிரிவு.
இந்திய அமைதிப்படையின் கடைசி படைப்பிரிவு இலங்கையில் இருந்து 1990-ம் ஆண்டு, மார்ச் மாதம் வெளியேறியது. அதிலிருந்து 6 மாதங்களின்பின், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் படகு மூலம் தமிழகம் புறப்பட்டனர். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 1990, செப்டெம்பர் 20-ம் தேதி ராமேஸ்வரம் வந்திறங்கி, தம்மை இலங்கை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர்.
ராமேஸ்வரத்தில் அகதிகளாக பதிவு செய்தபின் அவர்கள் அங்கிருந்த அகதி முகாமுக்கு செல்லவில்லை. நேரே சென்னைக்கு புறப்பட்டனர்.
சென்னையில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கும், இதர செலவுகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கம் இவர்களுக்கு பணம் கொடுத்தது. ஜெயக்குமாரும், ராபர்ட்டும் வெவ்வேறு இடங்களில் வீடுகளை எடுத்துக்கொண்டு வசிக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டிருந்தது. (வெவ்வேறு ஏரியாக்களில் சேஃப் ஹவுஸ்களை வைத்திருப்பதற்காக இந்த ஏற்பாடு)
முதலில் போரூரில் ஒரு வீட்டைப் பிடித்தார்கள். பயஸும், ஜெயக்குமாரும் போரூரில் வீடு பிடித்தவுடனே, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நிக்சனுடன் தொடர்பு கொண்டனர். அவரும் ஏற்கெனவே, சென்னை வந்திருந்தார். (பயஸும், நிக்சனும் உறவினர்கள் என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையா என்பது சரியாக தெரியவில்லை)
இலங்கையில் இருந்து தமிழகம் வந்திருந்த, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நிக்சனும் போரூர் அருகேதான் மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார். சரவணன் என்பவரின் வீடு அது.
விடுதலைப் புலிகளின் ஆரம்பகால வரலாறு தெரிந்தவர்களுக்கு, இந்த சரவணன் யார் என்பது யார் என்று இலகுவாகப் புரியும். சரவணனுக்கும் புலிகளுக்கும் இடையிலுள்ள தொடர்பு என்னவென்றால், இவரது மைத்துனர்தான் கலாபதி.
விடுதலைப் புலிகள் இயக்கம் துவங்கப்பட்ட நாட்களில் பிரபாகரன், ஒரேயொரு கைத்துப்பாக்கியை வைத்து அப்போதைய யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை சுட்டுக் கொன்றார். பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்ட முதலாவது நபர் இவர்தான். அந்த இயக்கத்தின் முதலாவது தாக்குதலும் அதுதான். இது நடந்தது, 1975-ம் ஆண்டு ஜூலையில்.
துரையப்பாவைக் கொல்வதற்காக பிரபாகரனுடன் கூட சென்றவர் கலாபதி! புலிகளின் ஆரம்பகால உறுப்பினர். அவருடைய மைத்துனர்தான் போரூரில் வசித்த சரவணன்.
பயஸும், ஜெயக்குமாரும் போரூர் பகுதியில் வீடு எடுக்கும் முன்னரே அங்கு வசித்தவர் சரவணன். போரூரில் இருந்த பலசரக்குக் கடை உரிமையாளர் மூலம் இவர்களுக்கு வாடகை வீடு கிடைக்க உதவிய நபரும் சரவணன்தான். ஜெயக்குமாரின் பெயரில் அந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது.
போரூரில் இருந்த இந்த வீடுதான், விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் ஆட்களான நிக்சன், காந்தன், அவரது ஒயர்லெஸ் ஆபரேட்டர் ரமணன், முருகன், சிவராசன் ஆகியோர் சந்தித்துப் பேசும் இடமாக இருந்தது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் உளவுப் பிரிவின் புதிய ஆட்களும் முதலில் இந்த வீட்டுக்குத்தான் வந்தனர். மொத்தத்தில் இந்த வீடு கிட்டத்தட்ட உளவுப் பிரிவின் பிரதான முகாம் போலவே இயங்கியது.
எனினும், உளவுப் பிரிவின் மற்றைய உறுப்பினர்களுக்கே தெரிந்திராத படு ரகசியமான “ராஜிவ் காந்தி ஆபரேஷனுக்கு” மற்றொரு இடம் தேவை என சிவராசன் கருதினார். அங்கு அவர் மட்டுமே தங்கி நடவடிக்கைகளைத் திட்டமிடலாம் என எண்ணினார்.
மீண்டும் சரவணனின் உதவியுடன், போரூர் பகுதியில் இருந்த பலசரக்குக் கடை உரிமையாளர் மூலம் 1990 டிசம்பரில் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தார்கள். இந்த வீடு ஜெயக்குமாரின் மாமானார் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டது. 1990 டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஜெயக்குமாரும், அவரது மனைவியும் இந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர்.
அந்த வீடுதான் சிவராசனின் செயல்பாட்டு மையமாக இருந்தது.
1990-ம் ஆண்டு முடியும் முன்னரே, புலிகளின் உளவுப் பிரிவினர் சென்னையில் இரு தளங்களை ஏற்படுத்திவிட்டனர். ஒன்று போரூரில், உளவுப் பிரிவின் போராளிகள் அனைவருக்கும் பொதுவான இடம். மற்றொன்று முத்தமிழ் நகரில், உளவுப்பிரிவில் இருந்த பலரும் அறிந்திராத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த வீடு.
ராஜிவ் ஆபரேஷனுக்கென பிரதியேகமாக ஏற்படுத்தப்பட்ட வீடு அது. சிவராசன் தங்கியதும் அந்த வீட்டில்தான்.
வெளிப் பார்வைக்கு அந்த வீட்டில் ஜெயக்குமாரும், இந்தியரான அவரது மனைவி சாந்தியும் அங்கு வசித்தனர். ஜெயக்குமாரை சாதாரண நபராகக் காட்டுவதற்காக அந்த ஏரியாவில் காபி கொட்டை அரவைக் கடை வைக்கவும், புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு பண உதவி செய்தது.
1990 டிசம்பரில் ஜெயக்குமார் அந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அவரது உறவினர் போல சிவராசன் தங்கியிருந்தார். 1991 மே மாதத்தில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். எனவே கிட்டத்தட்ட 5 மாதங்கள், இந்த முத்தமிழ் நகர் வீடுதான், ராஜிவ் கொலை திட்டமிடலின் ரகசிய ஆபரேஷன் சென்டராக விளங்கியது.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மே மாதம் வரை வேறு யாரையும் அந்த வீட்டுக்கு சிவராசன் அழைத்து வந்ததில்லை. புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த தமது சகாக்களைக்கூட அழைத்து வந்ததில்லை. மே மாதத் துவக்கத்தில் முதல் தடவையாக, தனு, சுபா ஆகிய இருவரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்.
மனித வெடிகுண்டாக மாறி ராஜிவ் காந்தியை கொல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட தனுவும், ஒருவேளை தனுவால் முடியாமல் போய்விட்டால் என மாற்று நபராக அனுப்பி வைக்கப்பட்ட சுபாவும், இலங்கையில் இருந்து படகில் கோடியக்கரைக்கு வந்தனர். அங்கிருந்து மே மாதம், 2-ம் தேதி, சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
மே 2-ம் தேதி அப்போதுதான் சென்னை வந்திறங்கிய சுபாவையும் தனுவையும், கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து வந்தார் சிவராசன்.
ராஜிவ் காந்தி மே 21-ம் தேதி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படவதற்கு 19 நாட்களின் முன்னர்தான், தனு சென்னையில் காலடி எடுத்து வைத்தார். தனு சென்னைக்கு வந்திறங்கிய போது, ராஜிவ் காந்தி சென்னைக்கு 21-ம் தேதி வரப்போகிறார் என்று சென்னையில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட தெரியாது……அத்தியாயம் 28
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை
ராஜிவ் காந்தி மே 21-ம் தேதி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படவதற்கு 19 நாட்களின் முன்னர்தான், அவரைக் கொல்ல மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய தனு சென்னையில் காலடி எடுத்து வைத்தார். சென்னைக்கு புதிதாக வந்திறங்கிய சுபாவையும் தனுவையும், நேரே கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து வந்தார் சிவராசன்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மே மாதம் வரை வேறு யாரையும் அந்த வீட்டுக்கு சிவராசன் அழைத்து வந்ததில்லை. புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த தமது சகாக்களைக்கூட அழைத்து வந்ததில்லை. மே மாதத் துவக்கத்தில் முதல் தடவையாக, தனு, சுபா ஆகிய இருவரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அதன் பின்னரே தனக்கு மிக நெருக்கமான சிலரை அந்த வீட்டுக்கு அழைத்து வரத் துவங்கினார். மே 16-ம் தேதி, சிவராசனின் உதவியாளரான சுதந்திர ராஜாவும், ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் சும்மா விசிட் வரவில்லை, அங்கேயே தங்க வைக்கப்பட்டார்.
அதன்பின் புலிகளின் இந்திய ஆதரவாளர் ரவி, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த வேறு ஒருவர் (இவரது பெயர், ஜெயக்குமாருக்கே தெரியாது) ஆகியோரும் சிவராசனை சந்திப்பதற்காக இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர்.
கொடுங்கையூர் இல்லத்தில் இரண்டு தினங்கள்தான் தனுவும், சுபாவும், தங்க வைக்கப்பட்டனர். 4-ம் தேதி மதியம் அவர்கள் அங்கிருந்து நளினி வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். அதன் பின்னரும், சிவராசன் தனது உதவியாளர் சுதந்திர ராஜாவுடன் தொடர்ந்து இந்த வீட்டில்தான் தங்கியிருந்தார். ராஜிவ் காந்தி நடந்த மே 21 -ம் தேதிவரை ஜெயக்குமார் வீட்டில்தான் சிவராசன் தங்கியிருந்தார்.
இதனால், ராஜிவ் காந்தி கொலைத் திட்டம், அந்த வீட்டில்தான் உருவானது, அல்லது, மெருகூட்டப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.
ராஜிவ் கொலை முடிந்து, சிவராசனும் தலைமறைவான பின்னரே படிப்படியாக விசாரித்துக் கொண்டு கொடுங்கையூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தது, வி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு. வந்தவர்கள் ஜெயக்குமாரை கைது செய்தார்கள். வீட்டை தலைகீழாகப் புரட்டி தேடினார்கள். ராஜிவ் கொலை தொடர்பாக எந்த தடயமும் அங்கு கிடைக்கவில்லை.
மொத்தத்தில், சிவராசனையும் சுபாவையும் கைது செய்தால்தான் கேஸ் மேற்கொண்டு நகரும் என்ற சூழ்நிலை.
சிவராசன் தொடர்பாக தகவல் ஏதாவது தெரிந்தால் தெரிவிக்கும்படி சிறப்பு புலனாய்வுக் குழு கொடுத்த விளம்பரம், வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், பயனுள்ள துப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் வசித்துவந்த ஈழத் தமிழர்கள் சிலருக்காவது சிவராசன், மற்றும் சுபாவின் மறைவிடம் எது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நம்பியது புலனாய்வுக் குழு. ஆனால், யாரைக் கேட்பது? சிவராசனை தெரிந்தவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?
தமிழகத்தில் அப்போது சுமார் இரண்டு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் வசித்து வந்தனர். அவர்களில் மிகச் சிலரே தம்மை அகதிகளாகப் பதிவு செய்து கொண்டவர்கள். ஏராளமானோர் அகதிகளாகப் பதிவு செய்துகொள்ளவில்லை. இதையடுத்து புலனாய்வுக்குழு புதிய அறிவித்தல் ஒன்றை செய்தது. தமிழக அரசு ஊடாக செய்யப்பட்ட அந்த அறிவிப்பில், தமிழகத்தில் தங்கியிருந்த அனைத்து இலங்கைத் தமிழர்களும் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
திடீரென ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தம்மை பதிவு செய்துகொண்டனர்.
அந்தப் பட்டியல்கள் கத்தை கத்தையாக மல்லிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தபோது, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தது சி.பி.ஐ.! ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை விசாரிக்கும் அளவுக்கு அவர்களிடம் போதிய ஆட்கள் கிடையாது. யோசிக்காமல் செய்யப்பட்ட அறிவிப்பு அது.
சிறப்பு புலனாய்வுக் குழு மீடியாவில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்த விளம்பரத்துக்கு வந்த ரெஸ்பான்ஸ்கள் மேலும் தலைசுற்ற வைத்தன.
சிவராசனையும், சுபாவையும் நேரில் பார்த்ததாக, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் வேறு பல இடங்களில் இருந்தும் மல்லிகை அலுவலக தொலைபேசி இலக்கத்தில் தகவல்கள் அருவியாகக் கொட்டத் துவங்கின. புது டில்லியில் சிவராசனை பார்த்ததாகவும், விசாகப்பட்டினத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் அதே நாளில் சிவராசனை பார்த்ததாகவும் தகவல்கள் வந்தன.
சிவராசன் ஒரே நாளில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் தலைகாட்டக் கூடிய மாயாவியா?
இந்த போன் அழைப்புகள் போதாதென்று, பத்திரிகைகளில் சிவராசன் தொடர்பான கற்பனைக்கும் அப்பால்பட்ட கதைகள் வெளியாகின. தற்போதும் தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள பத்திரிகை ஒன்று, “வேதாரண்யம் கடற்கரையில் இலங்கை செல்ல தயாராக நின்றிருந்த சிவராசனை புலனாய்வுக்குழு சுற்றி வளைத்து சுட்டது. காலில் குண்டு பாய்ந்த நிலையிலும் சிவராசன் கடலில் பாய்ந்து இலங்கையை நோக்கி நீந்திச் சென்றுவிட்டார்” என்று பரபரப்பாக கவர் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டு, சென்சேஷனை எகிற வைத்தது.
புலனாய்வுக் குழு, சுவரில் தமது தலையை மோதிக் கொள்ளாத குறை!
சுருக்கமாக சொன்னால், ராஜிவ் கொலை புலன்விசாரணை இந்தக் கட்டத்தில் பாய் போட்டு படுத்தே விட்டது.
இப்படியான நேரத்தில் ஜூன் மாத இறுதியில், புலனாய்வுக் குழுவுக்கு ஒரு பிரேக் கிடைத்தது. மத்திய உளவுத்துறை ஒன்றிடமிருந்து முக்கியமான தகவல் கிடைத்தது. சென்னையில் உள்ள ரகசிய ஒயர்லெஸ் நிலையத்திலிருந்து இலங்கையில் உள்ள ஒயர்லெஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்ட ஒயர்லெஸ் தகவலைக் குறுக்கிட்டு அறிந்து அனுப்பப்பட்ட தகவல் அது.
ராஜிவ் கொலைக்குப்பின், புலிகளின் ஒயர்லெஸ் உரையாடல்களை இந்திய உளவுத்துறை றோ மானிட்டர் பண்ணிய விவகாரம் சுவாரசியமானது. அதை இந்த தொடருக்குள் கொண்டுவந்து குழப்பாமல், பாக்ஸ் நியூஸாக தருகிறாம். இங்கே கிளிக் செய்து படிக்கவும்.
ஜூன் முதல் 3 வாரங்களில் சென்னைக்கு அருகே இயங்கிய ரகசிய நிலையத்துக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையத்துக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல்களை, இந்திய உளவுத்துறை றோ குறுக்கிட்டு அறிந்து கொண்டது. அதில் ஒரு முக்கிய தகவல் இருந்ததை பார்த்த றோ, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தது.
றோ அனுப்பி வைத்த (டி-கோட் செய்யப்பட்ட) ஒயர்லெஸ் தகவல்களில் இருந்து தெரியவந்தவை:
1) புலிகளுக்கு இடையிலான ஒயர்லெஸ் உரையாடல்களில் தனு, ‘அன்பு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அதேபோல சுபா, ‘நித்யா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
2) ‘பெண் ஆபிஸர்’ என்பவரைப் பற்றிய தகவல்களும் அனுப்பப்பட்டிருந்தன. அடையார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததால் நளினி ‘பெண் ஆபிஸர்’ எனக் குறிப்பிடப்பட்டார்.
3) ஜூன் முதல் 3 வாரங்களில், சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல் பரிமாற்றங்களில் இடம்பெற்ற மற்றைய பெயர்கள் ராபர்ட் பயஸ், பிரகாசம் (இந்திய ஆதரவாளர் ரவியின் சங்கேதப் பெயர்), இந்து மாஸ்டர் (முருகன்), ராதா ஐயா (சபாபதி பிள்ளை), நீலன், ரமணன், இந்திரன் குட்டி, சொக்கன், குண்டப்பா.
4) சிவராசன் தனது பெயரில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில் ராஜிவ்காந்தி கொலை குறித்து விசாரணை செய்யும் சிறப்புப் புலனாய்வின் முக்கிய அதிகாரிகளான விஜய் கரண், கார்த்திகேயன் ஆகியோரது பெயர்களையும் அனுப்பியிருந்தார்
5) சிவராசனும், சுபாவும் தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர், அவர்களுக்காக இலங்கையில் இருந்து பாக் நீரிணையைக் கடந்து, தமிழகத்தின் கரையோர நகரம் ஒன்றுக்கு படகுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்த இறுதித் தகவல், சிறப்பு புலனாய்வுக் குழுவை நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்தத் தகவலின்படி, சிவராசனும், சுபாவும், விரைவில் தமிழகத்தின் தென் கடற்கரைக்கு செல்லக்கூடிய தொலைவில்தான் எங்கோ மறைந்திருக்கிறார்கள் என்ற ஊகமே அதற்கு காரணம்.
“சிவராசனையும் சுபாவையும் தமிழகம் முழுவதும் விளம்பரப்படுத்தி தேடும் நிலையில், அவர்கள் தமிழக கடற்கரை நகரம் ஒன்றில் தேவையில்லாமல் காத்திருக்க விரும்ப மாட்டார்கள். இலங்கையில் இருந்து படகு புறப்பட்டு விட்டது என்ற தகவல் கிடைத்த பின்னரே கடற்கரையை நோக்கிச் செல்வார்கள் என்று ஊகித்த புலனாய்வுக் குழு, இதை வைத்துக்கொண்டு செய்த முடிவு-
வேதாரண்யம், ராமேஸ்வரம் அல்லது கோடியக்கரையை 3 மணி நேரத்தில் சென்றடையும் தொலைவில் தான், சிவராசனும், சுபாவும் மறைந்திருக்கிறார்கள்! …த்தியாயம் 29
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், ஜூன் முதல் 3 வாரங்களில் சென்னைக்கு அருகே இயங்கிய ரகசிய நிலையத்துக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையத்துக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல்களை, இந்திய உளவுத்துறை றோ குறுக்கிட்டு அறிந்து கொண்டது. அதில் ஒரு முக்கிய தகவல் இருந்ததை பார்த்த றோ, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தது.
இந்த தகவல் கிடைத்ததும், சென்னையிலிருந்து இயங்கிய புலிகளின் ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தைக் கண்டுபிடிக்க சிறப்புப் புலனாய்வுக்குழு களத்தில் குதித்தது.
விடுதலைப் புலிகளின் ஒயர்லெஸ் தகவல் தொடர்பு நிலையத்தை, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் இந்த வார பாக்ஸ் நியூஸில் இடம்பெறுகின்றன. தொடரைப் படிக்கும் முன்னர், இந்த வார பாக்ஸ் நியூஸையும் படித்து விடுங்கள். (இந்த வார பாக்ஸ் நியூஸை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
புலனாய்வுக் குழுவி, டில்லியிலிருந்து உயர் அலைவரிசை திசைகாட்டிச் சாதனங்கள் சிலவற்றை, குறிப்பாக நடமாடும் (மொபைல்) சாதனங்களை பெற்றார்கள். அவற்றை ஒரே இடத்தில் டெஸ்ட் பண்ணாமல், பெங்களூர், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இயக்கிப் பரிசோதித்துப் பார்த்தார்கள்.
அதில் பெரிதாக பலன் ஏற்படவில்லை. காரணம், டில்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாதனங்கள் 30 ஆண்டுகள் பழமையானவை. தகவல் சென்றுகொண்டு இருக்கும்போது புலிகள் செய்யும் அலைவரிசை மாற்றங்களை, இவற்றால் கண்டறிய இயலவில்லை.
புலனாய்வுக் குழுவுக்கு உதவ வந்த நிபுணர்கள், விடுதலைப் புலிகள் தகவல் அனுப்பும் முறையில் இருந்து, அவர்களிடம் உள்ளவை அதி நவீன ஒயர்லெஸ் சாதனங்கள் என்றார்கள். இந்திய அரசின் உளவுத்துறைகளிடமே அந்தளவு லேட்டஸ்ட் சாதனங்கள் இருக்கவில்லை. இவர்கள் நாடு முழுவதும் தேடி, இரவல் பெற்றுவந்த கருவிகள், விடுதலைப் புலிகளின் கருவிகளுக்கு இணையாக இல்லை.
இந்தியாவில், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் இருந்த நாட்கள் அவை. விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இருந்து புதிதுபுதிதாக கருவிகளை பெற்றார்கள். இந்திய உளவுப் பிரிவுகளுக்கு அந்தக் கருவிகளை வாங்க, ஏகப்பட்ட இடங்களில் அனுமதி பெறவேண்டியிருந்தது.
இதனால், ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தை தேடும் இவர்களது முயற்சி முடியாமல் இழுத்துச் சென்றது. ஆனால், சென்னை ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தில் இருந்து புலிகள் அனுப்பிய தகவல்களை உளவுப்பிரிவு றோ ஒட்டுக்கேட்டு பதிவு செய்ய முடிந்தது.
அந்தப் பதிவுகளில் இருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.
சென்னையில் எங்கோ ஒரு இடத்தில் இருந்து இயங்கிய ரகசிய ஒயர்லெஸ் நிலையம் ‘ஸ்டேஷன்-910’ மூடப்படுவதற்கு முன்னர், புலிகள் அனுப்பிய ஒயர்லெஸ் தகவல் ஒன்றை றோ ஒட்டுக் கேட்டது. முக்கிய அந்தத் தகவலை றோ, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தெரிவித்தது.
சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இலங்கைத் தமிழரான பொறியாளர் ஒருவரது வீட்டில், ஜூன் 21, அல்லது 22-ம் தேதி முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கப் போகின்றது என்பதே அந்த தகவல்.
றோ ஒட்டுக்கேட்டது, புலிகளின் ‘ஸ்டேஷன் 910’ யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய தகவல். சென்னையில் தலைமறைவாக இருந்த சிவராசனிடம் இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்த பொட்டு அம்மானுக்கு (புலிகளின் உளவுப்பிரிவு தலைவர்) அந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
சிவராசன், தாமும் சுபாவும் தமிழகத்தில் இருந்து தப்பிச் செல்வதில் சிரமங்கள் இருப்பதாகவும், தமிழகத்தில் ரகசியமாக இயங்கிய (புலிகளின்) அரசியல் பிரிவின் உதவியை கோரியுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது. அதற்காக சிவராசன், தமிழகத்தில் இருந்து ரகசியமாக இயங்கிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திருச்சி சாந்தனை சந்திக்கப் போகிறார். அந்தச் சந்திப்பே என்பதுதான் அந்தத் தகவல்.
சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இலங்கைத் தமிழரான இஞ்ஜினியர் ஒருவரது வீட்டில், ஜூன் 21, அல்லது 22-ம் தேதி, சாந்தனை சந்திக்கப் போவதாக சிவராசன், பொட்டு அம்மானுக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
மேலேயுள்ள தகவல் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். “தமிழகத்தில் இருந்து இயங்கும் புலிகள், தமக்கிடையே சந்திப்பது தொடர்பாக ஏன் யாழ்ப்பாணத்துக்கு அறிவிக்க வேண்டும்?” என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம். அதற்கு சிறியதாக ஒரு விளக்கம்:
ராஜிவ் கொலை தொடர்பாக தேடப்பட்ட சிவராசன், சுபா ஆகியோரும், மனித வெடிகுண்டாக செயல்பட்டு கொல்லப்பட்ட தனுவும், புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவினர் ரகசிய ஆபரேஷன்களுக்காக அனுப்பி வைக்கப்படும்போது, புலிகளின் மற்றைய பிரிவினருக்குகூட தெரியாமல் ரகசியம் காக்கப்படும். இரு பிரிவினரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள்.
முக்கிய தேவை கருதி உளவுப் பிரிவு, மற்றைய பிரிவிடம் உதவி கோர வேண்டியிருந்தால், உளவுப் பிரிவின் தலைமைக்கு அறிவிப்பார்கள்.
ராஜிவ் கொலை தொடர்பாக தமிழகம் எங்கும் வலைவீசித் தேடப்பட்ட சிவராசன், தமிழகத்தில் இருந்து தப்பி யாழ்ப்பாணம் செல்வது சிரமமாக இருந்தது. அதற்காக அரசியல் பிரிவு தலைவர் திருச்சி சாந்தனின் உதவியை நாடப் போவதையே பொட்டு அம்மானுக்கு ஒயர்லெஸ் மெசேஜில் தெரிவித்திருந்தார்.
சிவராசன், திருச்சி சாந்தனை சந்திக்க திட்டமிட்டிருந்த சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்துவந்த இலங்கைத் தமிழ் இஞ்ஜினியர், புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பது உளவு அமைப்புகளுக்குத் தெரியும். அவர் புலிகளின் அரசியல் பிரிவினருடன் மட்டும் தொடர்பு வைத்திருந்த காரணத்தால், ராஜிவ் கொலை தொடர்பான கண்காணிப்பு வளையத்தில் அதுவரை அவர் இருக்கவில்லை.
இந்த ஒயர்லெஸ் தகவல் கிடைத்தவுடன், அவரது வீடு இருந்த பகுதியில் இரவும் பகலும் தொடர்ந்து கண்காணிப்பு துவங்கியது.
செல்வந்தர்கள் வாழும் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் அந்த இஞ்ஜினியரின் வீடு இருந்தது. அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் பல குடியிருப்புகள் இருந்தன. ஏராளமானோர் வந்து போய்க்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும், குறிப்பாகப் பகல் நேரத்தில் இடைவிடாமல் கவனிப்பது சுலபமான காரியம் அல்ல.
செல்வந்தர்கள் வாழும் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் அந்த இஞ்ஜினியரின் வீடு இருந்தது. அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் பல குடியிருப்புகள் இருந்தன. ஏராளமானோர் வந்து போய்க்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும், குறிப்பாகப் பகல் நேரத்தில் இடைவிடாமல் கவனிப்பது சுலபமான காரியம் அல்ல.
விடுதலைப் புலிகளின் உளவுத்துறை ஆட்கள் மிகுந்த புத்திசாலிகள். ஓர் இடத்துக்குச் செல்வதற்கு முன் நன்கு அலசி ஆராய்ந்த பின்பே செல்வார்கள். அவர்களை கண்காணிப்பது என்றால், அதிகாரிகளின் எந்தவொரு நடமாட்டமும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்கள் வர மாட்டார்கள்.
அந்த வீட்டுக்குள் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய ‘சென்னை மெட்ரோ வாட்டர்’ ஊழியர்கள் சிலரை அனுப்பியது புலனாய்வுக் குழு. அங்கே வீட்டுக்காரர்களை தவிர புதிதாக யாரும் இருந்ததாக தெரியவில்லை.
சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பல அதிகாரிகள் அந்த அடுக்குமாடி கட்டடத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்தார்கள். பில்டிங்கின் முன்புறம், பின்புறம், அனைத்து வாயில்கள் எல்லாமே கண்காணிக்கப்பட்டன. அந்த அடுக்குமாடி கட்டடத்துக்கு உள்ளே செல்லும் அனைவரையும், அவர்கள் அறியாமலேயே, இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
இதிலுள்ள ஒரேயொரு சிக்கல், இவர்களிடம் இருந்தது சிவராசன் மற்றும் சுபாவின் போட்டோக்கள் மட்டுமே. அந்த போட்டோக்களை வைத்துக் கொண்டு சிவராசன் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
ஜூன் 21, 22-ம் தேதிகளில், 24 மணிநேரமும் கண்காணிப்பு இருந்தது. ஆனால், சிவராசன் அங்கு வரவில்லை.
வேறு வழியில்லாமல், 23-ம் தேதி, இஞ்ஜினியரின் வீட்டுக்குள் புகுந்தனர் புலனாய்வுக் குழு அதிகாரிகள். இஞ்ஜினியரிடமும் அவரது மனைவியிடமும் பேசினார்கள். டிக்சன் என்ற இளைஞர் ஒருவர்தான் ஜூன் 22-ம் தேதி தங்கள் வீட்டுக்கு வந்ததாகப் பொறியாளரின் மனைவி கூறினார்.
டிக்சன் யார் என்று புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனால், “வேறு யாரும் வரவில்லையே” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு, மல்லிகை அலுவலகத்துக்கு திரும்பியது புலனாய்வு டீம்.
அலுவலகம் திரும்பிய சி.பி.ஐ. அதிகாரிகள், இஞ்ஜினியரின் வீட்டுக்கு டிக்சன் என்பவர் மட்டுமே வந்தார் என்று சொன்னபோது, அங்கு வந்திருந்த றோ அதிகாரி ஒருவர் தலையில் கையை வைத்தார். “டிக்சன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர். திருச்சி சாந்தனுக்கு கீழ் பணிபுரிந்து வந்தார். ஒயர்லெஸ் தகவல் தொடர்பில் நிபுணர் இந்த டிக்சன்” என்றார்.
அத்துடன் தமது சென்னை அலுவலகத்தில் இருந்து டிக்சனின் போட்டோ ஒன்றையும் தருவித்துக் கொடுத்தார்.
இப்போது, சிவராசன், சுபா ஆகியோரின் போட்டோக்களுடன், டிக்சனின் போட்டோவையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, மீண்டும் அடுக்குமாடி கட்டடத்தை கண்காணிக்க கிளம்பியது புலனாய்வு அதிகாரிகள் டீம்.
இம்முறை அவர்களுக்கு அதிஷ்டம் அடித்தது. அன்று மாலையே, டிக்சன் அடுக்குமாடி கட்டடத்துக்குள் செல்வதை புலனாய்வுக்குழு அதிகாரிகள் கண்டார்கள். ஆனால், சிவராசன் வரவில்லை. இவர்கள் கைது செய்ய வந்ததோ, சிவராசனைத்தான். அதனால், டிக்சனை தடுக்கவில்லை.
அத்துடன், டிக்சன் யாரென்று இப்போது தெரிந்து விட்டதால், அவரை வெளியே விட்டு வைத்திருந்தால்தான், அவர் யார் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பதை கண்காணிக்க முடியும். அப்படித்தான், சிவராசனையும் பிடிக்க முடியும்.
அடுக்குமாடி பில்டிங்குக்குள் சென்ற டிக்சன், சுமார் அரை மணி நேரத்தின் பின் வெளியே வந்தார். அவருடன் மற்றொரு நபரும் இருந்தார். புதிய நபர் யார் என்று புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கவில்லை.
என்னதான் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள புலனாய்வுக் குழுவுக்கு ஒரெயொரு சாய்ஸ்தான் இருந்தது. மீண்டும் இஞ்ஜினியரின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டியதுதான். டிக்சனும், மற்றைய நபரும் வெளியேறி ஒரு மணி நேரத்தின்பின், இஞ்ஜினியரின் வீட்டில் போய் விசாரித்தார்கள்.
அங்கே கிடைத்த தகவலில் இருந்து, அன்று காலையே, திருச்சி சாந்தனைத் தேடி இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் வந்தார். சாந்தன் அங்கு வரவில்லை என்று இஞ்ஜினியரின் மனைவி கூறியதும், சாந்தன் வருவதாக சொல்லியிருக்கிறார் என்று கூறி காத்திருந்தார். திருச்சி சாந்தன் வரவில்லை, ஆனால் அவரது உதவியாளர் டிக்சன் வந்தார். காத்திருந்த பெண்ணுக்கு டிக்சனை தெரிந்திருந்தது.
அந்த பெண், டிக்சனிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். டிக்சன் பதிலுக்கு தாமும் ஒரு கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். கடிதத்தை பெற்றுக்கொண்டு அந்தப் பெண் வெளியேறிவிட்டார். சிறிது நேரத்தில் புதிய அளைஞர் ஒருவர் டிக்சனை தேடி வந்தார். அவரது பெயர் ராஜா என்பது, டிக்சன் அவரை அழைத்ததில் இருந்து இஞ்ஜினியர் தெரிந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து டிக்சனும், ராஜாவும் சேர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த விபரங்களை இஞ்ஜினியரிடமும் அவரது மனைவியிடமும் இருந்து தெரிந்து கொண்டது புலனாய்வுக்குழு. டிக்சனுடன் ஒன்றாக வெளியேறிய நபர் ராஜாதான் என்பதை புலனாய்வுக்குழு அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.
இப்போது இவர்களுக்கு கதைச் சுருக்கம் சுமாராகப் புரிந்தது.
திருச்சி சாந்தனின் பிரதிநிதியாக டிக்சன் இருந்ததால், சிவராசனின் பிரதிநிதியாக அங்கு வந்த இலங்கைப் பெண் இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெண் சுபா அல்ல. சிவராசனும், திருச்சி சாந்தனும் நேருக்கு நேர் சந்திக்காமல், தத்தமது பிரதிநிதிகளை அனுப்பி கடிதங்களை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.
இதற்குள் புதிதாக வந்து சேர்ந்த நபரான ராஜா, யார் என்று தெரியவில்லை.
விடுதலைப் புலிகளின் உளவு அமைப்பு செயல்படும் விதம் எப்படியென்றால், அவர்களது ஆள் ஒருவர் ஒரு இடத்துக்கு சென்றால், வேறு ஒருவர் அதற்கு முன்னும், பின்னும், அந்த இடத்தை கண்காணிப்பார்கள். இந்த விஷயம் சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமல்கூட இருந்திருக்கலாம்.
அவர்களது ஆள் இஞ்ஜினியர் வீட்டுக்கு போய் திரும்பிய அரை மணி நேரத்திலேயே, புலனாய்வுக் குழு அதிகாரிகள் அங்கு விசிட் அடித்ததை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். சரி. புலிகள் அதைத் தெரிந்து கொண்டதை புலனாய்வுக் குழு எப்படி தெரிந்து கொண்டார்கள்?
மறுநாள் காலை, றோ அதிகாரி ஒருவர் பரபரப்பாக மல்லிகை அலுவலகத்துக்கு வந்தார். புலிகள் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் அனுப்பிய புதிய ஒயர்லெஸ் மெசேஜ் ஒன்றை அவர் கொண்டுவந்தார்.
சிவராசன், பொட்டு அம்மானுக்கு அனுப்பிய அந்த மெசேஜ், “மல்லிகை அலுவலகம்மீது திடீர் தாக்குதல் நடத்தி, குறைந்தது ஒரு டஜன் ஆட்களையாவது கொல்ல திட்டமிட்டிருக்கிறோம்”…அத்தியாயம் 30
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை
யாழ்ப்பாணத்தில் உள்ள பொட்டு அம்மானுக்கு, சிவராசன் சென்னையில் இருந்து அனுப்பிய மெசேஜில், “மல்லிகை அலுவலகம் மீது திடீர் தாக்குதல் நடத்தி, குறைந்தது ஒரு டஜன் ஆட்களையாவது கொல்ல திட்டமிட்டிருக்கிறோம்” என்று எழுதப்பட்டு இருந்ததில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு டீம் உஷாரடைந்தது. இதையடுத்து, ‘மல்லிகை’க்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புலிகளால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் இந்த மெசேஜ் விவகாரம், எப்படியோ மீடியாக்களுக்கும் கசிந்தது. “சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் மல்லிகை அலுவலகம் புலிகளால் தாக்கப்படலாம்” என்று பத்திரிகை தலைப்புச் செய்திகள் அலறின.
மல்லிகை அலுவலகத்தின் பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு பொலீஸ் படையுடன், இந்திய பாதுகாப்புப் படையின் 2 குழுக்களும், ஒரு தீயணைப்பு இன்ஜினும் வழங்கப்பட்டன. (ஆனால், இறுதிவரை அலுவலகத்தை தாக்குவதற்கு யாரும் வரவில்லை)
பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருந்தாலும், புலனாய்வுக் குழுவினரின் விசாரணைகளில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இருக்கவில்லை. ஒற்றைக்கண்’ சிவராசன் பற்றிய விவரம் அறிய புலாய்வுக் குழு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் இருந்தன. பாக்கியநாதன், பத்மா, நளினி, முருகன், அறிவு, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரிடம் விசாரித்ததிலும், சிவராசன் இருக்கும் இடம் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததை புலனாய்வுக் குழுவால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்துவதற்கான தடயங்கள் ஏதும் இல்லை.
அவர்கள் வெறும் சாட்சிகளாக வேண்டுமானால் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு புலனாய்வுக்குழு வந்திருந்தது. அவர்கள் அனைவருக்கும் சிவராசனை தெரிந்திருந்தது. ஆனால், சிவராசனின் நடமாட்டங்கள் குறித்து அவர்களுக்கு நிஜமாக ஏதும் தெரியாது என்பதை புலனாய்வுக்குழு புரிந்து கொண்டது.
இதனால், புதிய கோணம் ஒன்றில் விசாரணையை துவங்க முடிவு செய்த புலனாய்வுக் குழு, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கடந்தகால தொடர்புகள் பற்றிய விபரங்களை சேகரிக்க துவங்கியது. விடுதலைப்புலி போராளிகளின் கடந்தகால நடமாட்டங்கள் பற்றிய விபரங்களை சேகரித்த போது, புலிகள் இலங்கையில் இருந்து படகுகளில் வருகையில், பெரும்பாலும் நாகப்பட்டினம் அருகேதான் கரையிறங்கியது தெரியவந்தது.
ராமேஸ்வரம், தொண்டி ஆகிய மற்ற இடங்களிலும் புலிகளின் படகுகள் வந்து சேர்ந்த விபரங்கள் கிடைத்தாலும், நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையில் கரையிறங்கியதுதான் அதிகம் என்பதை சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு நோட் பண்ணியது.
இதையடுத்து, சி.பி.ஐ. டீம் ஒன்று கோடியக்கரை சென்று, சந்தேகம் ஏற்படாத வகையில் தகவல்களை திரட்டியது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் தரையிறங்குவதற்கு புலிகள் கோடியக்கரையை பெரிதும் விரும்பியதன் காரணம், அந்தப் பகுதியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்குதான் என்பதை புரிந்து கொண்டனர்.
புலிகளுக்கு கோடியக்கரையில் இருந்த செல்வாக்குக்கு காரணம், சண்முகம் என்ற தனி மனிதர் ஒருவர்தான்.
இந்த சண்முகம், அந்த நாட்களில் கோடியக்கரையில் மிக முக்கிய நபராக இருந்தார். அவரது தொழில் கள்ளக் கடத்தல்தான் என்ற போதிலும், ஊரே அவருக்கு கட்டுப்பட்டு இருந்தது. அவர்தான் புலிகளுக்கு கோடியக்கரையில் பெரும் பலமாகவும், ஆதரவாகவும் இருந்தார் என்பதை புலனாய்வுக் குழு தெரிந்து கொண்டது.
இதற்கிடையே கோடியக்கரையில், புலனாய்வுக் குழுவின் ஆட்கள் வந்த விசாரித்ததை, சண்முகம் தெரிந்து கொண்டார். உடனே அவர் தலைமறைவாகி விட்டார்.
சண்முகத்தை மடக்கலாம் என்று புலனாய்வுக்குழு மீண்டும் கோடியக்கரை சென்றபோது அவர் அங்கே இல்லை. அவரது இடங்களை சோதனையிட்டது புலனா்வுக்குழு. அப்போதுதான், சண்முகம் எவ்வளவு பெரியதொரு நெட்வேர்க்கை அங்கு வைத்திருந்தார் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
தொழில் முறையில் கடத்தல்காரரான வண்முகம் பல படகுகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். அவரிடம் பலர் ஊழியர்களாக இருந்தனர். படகுகளை செலுத்தும் நபர்களைத் தவிர, சண்முகத்தின் கடத்தல் பொருட்களை கோடியக்கரைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பொருட்களை கோடியக்கரைக்கு கொண்டு வருவதற்கும் என பல ஊழியர்கள் சண்முகத்திடம் இருந்தனர்.
இவர்களை சி.பி.ஐ. புலனாய்வுக்குழு விசாரித்தபோது, சண்முகத்தின் ஊழியர்களில் சிலர் இலங்கைத் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களில் ஒருவர் மகாலிங்கம். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் என்ற இடத்தைச் சேர்ந்த கடத்தல்காரர். சண்முத்தின் படகுகளை செலுத்தும் ஊழியர்களில் அவரும் ஒருவர். அவரை விசாரித்தபோது, சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன.
இந்த மகாலிங்கம், இலங்கையில் 1983-ம் ஆண்டு இனப் பிரச்னை ஏற்பட்டபோது, படகு மூலம் தமிழகம் வந்தவர். 1984-ம் ஆண்டிலிருந்து சண்முகத்திடம் வேலை பார்த்து வந்தார். நன்கு படகு ஓட்டத் தெரிந்த அவர், சண்முகத்திடம் பணியில் சேருமுன், விடுதலைப் புலிகளின் படகுகளை அடிக்கடி ஓட்டி வந்துள்ளார்.
அதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரல்ல, அவர்களது சிவிலியன் ஊழியராக இருந்திருக்கிறார்.
அந்த வகையில் தமிழகத்துக்கு வந்து போன புலிகளில் அநேகமான ஆட்களை இந்த மகாலிங்கம் தெரிந்து வைத்திருந்தார். அத்துடன் கோடியக்கரைக்கு வரும் புலிகள் சில மணிநேரம் களைப்பாறிச் செல்ல கடற்கரை ஓரமாக இரண்டு வீடுகளை ஒதுக்கி கொடுத்திருந்தார் சண்முகம். அந்த இரு வீடுகளையும் பராமரிக்கும் பணியைச் செய்தது இலங்கைத் தமிழரான மகாலிங்கம்.
இதனால், கோடியக்கரைக்கு வரும் புலிகளில் யார் எப்போது வந்தார்கள், யார், யாருடன் வந்தார்கள் என்ற விபரங்களும் மகாலிங்கத்துக்கு தெரிந்திருந்தது. சண்முகத்தைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அகப்பட்ட மகாலிங்கத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது புலனாய்வுக்குழு. அவரிடம் இருந்து கிடைத்த தகவல்கள், புலிகளின் தமிழக நடவடிக்கைகள் பற்றிய சில விபரங்களை புலனாய்வுக்குழுவுக்கு தெரிய வைத்தது.
விடுதலைப்புலிகளின் கடல்புலிகள் பிரிவைச் சேர்ந்த டேவிட், மற்றும் சிலருடன், முதல்தடவையாக சிவராசனைச் சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் மகாலிங்கம். சிவராசனும் மற்றையவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதற்காக மகாலிங்கமும், இரு படகோட்டிகளும், படகு செலுத்தி வந்தபோதே முதல் சந்திப்பு நடந்தது.
தமிழகம் வந்த அவர்கள், சில தினங்களிலேயே யாழ்ப்பாணம் திரும்பியபோது, அவர்களை படகில் அழைத்துச் சென்றதும் மகாலிங்கம்தான்.
அப்போது நடைபெற்ற உரையாடல்களில் இருந்து, டேவிட் மற்றும் சிவராசன் டீம் தமிழகம் வந்ததே, ஈ.பி.ஆர்.எல்.எஃப் (மற்றொரு ஈழ விடுதலை இயக்கம்) தலைவர் பத்மநாபாவை கொல்வதற்கு என்பதை மகாலிங்கம் தெரிந்து கொண்டார். பத்மநாபாவை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த டீம் யாழ்ப்பாணம் திரும்புகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.
பத்மநாபாவை கொன்றவர்களை தமிழக போலீஸ் வலைவிரித்து தேடிவருகிறது என்ற செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த கொலையை செய்தவர்கள் கோடியக்கரையில் இருந்து சாவகாசமாக யாழ்ப்பாணம் புறப்பட்டுச் சென்றிருந்தனர். தமிழகத்தில் அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அது 1990-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சம்பவம். பத்மநாபாவும், அவரது கட்சி முக்கியஸ்தர்கள் 14 பேரும் ஜூன் 19-ம் தேதி, சென்னை சூளமேடு பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி உதவவில்லை என்று தற்போது கூறும் ஆட்களில் எத்தனை பேருக்கு, பத்மநாபாவை கொன்றவர்களை தமிழகத்தில் மடக்காமல், தப்பிச் செல்ல அனுமதிக்கும்படி அன்றைய தி.மு.க. ஆட்சியில் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரியுமோ, தெரியவில்லை. தற்போது ஓய்வு பெற்றுள்ள சில தமிழக உளவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டு அதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் புலிகளுக்கு உதவி செய்ததையும் ஒரு காரணமாக வைத்துதான், அன்றைய தி.மு.க. ஆட்சி பாதியில் கலைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்று காரணம்காட்டி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356-ம் பிரிவின்படி தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, பிரதமர் சந்திரசேகர் தலைமையில் இருந்த மத்திய அரசால் 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டது.
பத்மநாபாவை கொலை செய்த டீமை யாழ்ப்பாணத்தில் கொண்டுபோய் விட்ட பின்னர் மகாலிங்கம், புலிகளுக்காக படகு ஓட்டவில்லை. கோடியக் கரையில் நிரந்தரமாக தங்கிவிட்டார். சண்முகத்தின் ஊழியராக இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் புலிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
கருணாநிதி ஆட்சி கலைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் 1991 ஜனவரியில், இந்த தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நிக்சன் (புலிகளின் உளவுப் பிரிவு), சென்னையில் இருந்து கோடியக்கரை வந்தார். இலங்கையில் இருந்து படகு வருவதற்காக இரு தினங்கள் கோடியக்கரையில் காத்திருந்தார்.
சண்முகம் புலிகளுக்காக ஏற்பாடு செய்து கொடுத்திருந்த வீட்டில்தான் நிக்சன் தங்கியிருந்தார். அவரது தேவைகளை கவனித்துக் கொண்டார் மகாலிங்கம்.
நிக்சன் வந்து 2 தினங்களில், அவரை ஏற்றிச் செல்ல யாழ்ப்பாணத்தில் இருந்து படகு வந்து சேர்ந்தது. அந்தப் படகு, யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவரை கொண்டுவந்து இறக்கிவிட்டு, நிக்சனை ஏற்றிச் சென்றது. படகில் வந்து இறங்கியவரையும் மகாலிங்கத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர், இந்தத் தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த ரமணன். (காந்தனின் ஒயர்லெஸ் ஆபரேட்டர்)
ரமணன் தம்முடன் ஒரு பெட்டியை கொண்டு வந்திருந்தார்.
படகில் இருந்து இறங்கியபின், சண்முகத்தில் வீட்டில் வைத்து அந்த பெட்டியை திறந்து, அதற்குள் இருந்த பொருள் ஈரம் படாமல் வந்திருக்கிறதா என்று ரமணன் செக் பண்ணிப் பார்த்தபோது, மகாலிங்கமும் அருகில்தான் இருந்தார். அந்தப் பெட்டியில் இருந்த பொருள், ஒரு புத்தம் புதிய லேட்டஸ்ட் ஒயர்லெஸ் கருவி.
ராஜிவ் கொல்லப்பட்டபின், புலிகள் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒயர்லெஸ் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தது இந்தக் கருவியின் மூலமாகத்தான்! (கடந்த அத்தியாயத்தில் விபரங்களை பார்க்கவும்)
அதன்பின் சிறிது காலத்துக்கு புலிகளின் படகுகள், மகாலிங்கத்துக்கு தெரிந்து கோடியக்கரைக்கு வரவில்லை.
மே 1-ம் தேதி, புலிகளின் படகு ஒன்று, 8 பேருடன் கோடியக்கரைக்கு வந்தது. படகு வந்த அந்தத் தேதி மகாலிங்கத்துக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. காரணம், அன்று கோடியக்கரையில் மே தின ஊர்வலம் ஒன்று சிறிய அளவில் நடைபெற்றது அவருக்கு ஞாபகம் இருந்தது.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு வந்த படகில் இருந்த 8 பேரில்தான், ராஜிவ் காலை ஆபரேஷனுக்காக அனுப்பப்பட்ட டீமும் இருந்தது.
மகாலிங்கம் கூறிய தகவலின் அடிப்படையில் இவர்கள்தான் அந்த 8 பேர்:
1) சிவராசன்
2) ரூசோ
3) கீர்த்தி
4) நேரு
5) சுதந்திர ராஜா
6) மகாலிங்கத்துக்கு பெயர் தெரியாத, ஒரு கால் மட்டும் உடைய இளைஞர்
இவர்களுடன் வந்த மற்றைய இருவரும், மகாலிங்கத்துக்கு அறிமுகமில்லாத இரு இளம் பெண்கள்.
2) ரூசோ
3) கீர்த்தி
4) நேரு
5) சுதந்திர ராஜா
6) மகாலிங்கத்துக்கு பெயர் தெரியாத, ஒரு கால் மட்டும் உடைய இளைஞர்
இவர்களுடன் வந்த மற்றைய இருவரும், மகாலிங்கத்துக்கு அறிமுகமில்லாத இரு இளம் பெண்கள்.
“இந்த 8 பேரும், சண்முகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் சில மணிநேரம் தங்கி ஓய்வெடுத்து விட்டு, சென்னை புறப்பட்டுச் சென்றனர்” என்றார் மகாலிங்கம்.
படகில் வந்த 8 பேரில் இருந்த இளம் பெண்களும் யார் என்று மகாலிங்கத்துக்கு தெரியவில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன் ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்களை மகாலிங்கத்திடம் காட்டியபோது, அதில் இருந்த தனுவும், சுபாவும்தான் படகில் வந்த இரு பெண்கள் என்பதை அடையாளம் காட்டினார் அவர். (தனு, சுபா ஆகிய இருவரது போட்டோக்களும் அதற்கு முன்னரே பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. ஆனால், தாம் பத்திரிகை படிப்பதில்லை என்றார் மகாலிங்கம்)
ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக வந்திறங்கிய டீமுடன் வந்த ஒரு கால் மட்டும் உடைய இளைஞர் யார் என்பது, எந்தவித முயற்சியும் இல்லாமல், மறுநாளே சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தெரியவந்தது.
புலனாய்வுக் குழுவின் ஒரு டீம் கோடியக்கரைக்கு சென்றபோது, மற்றொரு டீம், ஏற்கனவே கைது செய்யப்பட்ட முருகன் அடையாளம் காட்டிய வீடுகளை சோதனையிட்டுக் கொண்டிருந்தது. அந்த ரெயிடுகளில், சென்னை மடிப்பாக்கத்தில் முருகன் மறைந்திருந்த இடத்திலிருந்து நிறையக் கட்டுரைகளும், ஆவணங்களும் சிக்கின.
அவற்றில் ஒன்று, முகவரி எழுதப்பட்ட ஒரு துண்டுக் கடிதம். அதில் எழுதப்பட்டிருந்த முகவரி: சுரேஷ்குமார், கோல்டன் ஹோட்டல், ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் மாநிலம்).
சென்னை மல்லிகை அலுவலகத்தில் இருந்து உடனடியாக சி.பி.ஐ.யின் ஜெய்ப்பூர் கிளையை தொடர்பு கொண்டு, கோல்டன் ஹோட்டலை செக் பண்ணச் சொன்னார்கள். சுரேஷ்குமார் என்ற நபர் அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு, பின் அறையை காலி செய்துகொண்டு, அருகில் உள்ள விக்ரம் ஹோட்டலுக்கு மாறிச் சென்றது தெரியவந்தது.
விக்ரம் ஹோட்டலில், சுரேஷ்குமாரின் அறையை தட்டியபோது, அவரே கதவைத் திறந்தார்.
அவருக்கு ஒரு கால் கிடையாது.
சி.பி.ஐ., அவரது அறையை சோதனையிட்டபோது, டைரி ஒன்றில் எழுதப்பட்டிருந்த இரு சென்னை தொலைபேசி எண்கள் கிடைத்தன. அத்துடன் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட இன்லேன்ட் லெட்டர் ஒன்றும் கிடைத்தது.
ராஜிவ் காந்தி, மே 21-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். ஜெய்ப்பூர் ஹோட்டலில் கிடைத்த இன்லேன்ட் கடிதம், ராஜிவ் கொல்லப்பட்டதற்கு மறுதினம் மே 22-ம் தேதி எழுதப்பட்டிருந்தது. மிகச் சுருக்கமான அந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்கள்:
“குடும்பத்தில் ‘நல்ல காரியம்’ நேற்று நடந்தது. விருந்தினர்கள் தேடிவரலாம் என்பதால், நீ உடனே இடத்தை மாற்றுவது நல்லது” …… (தொடரும்)
Aucun commentaire:
Enregistrer un commentaire