vendredi 15 juin 2012

அனாதை ஆசிரமங்களையும் தொழிற் பயிற்சி நிலையங்களையும் நடத்தி வருகிறேன்” என்கிறார் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் கே.பி.


ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் உலகளாவிய ஆயுதக் கொள்வனவாளரும்,நிதிக் கட்டுப்பாட்டாளருமாக விளங்கிய பத்மநாதன் என்கிற கே.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு இந்த நாட்டிலுள்ள தமிழ் இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டியதோடு, ஒரு காலத்தில் யுத்தத்தினால் சீரழிந்த இடங்களில் அரசாங்கம் சமாதானத்தை நிலைநாட்டிய பின்னரும், தமிழ் அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புகளோடு வாழ்வதற்கு தவறியுள்ளதையிட்டு வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.
த நேசனுக்கு வழங்கிய ஒரு பிரத்தியேக நேர்காணலில், பத்மநாதன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் இருந்தபோதும். தனது தற்போதைய நிலையைக் குறித்து விளக்குவதற்கு மறுத்துவிட்டார்.
தான் ஒரு பயங்கரவாத சந்தேக நபரா, ஒரு அரசியல் கைதியா, அல்லது ஸ்ரீலங்காவின் அபிவிருத்திப் பணிகளில் ஒரு பங்குதாரரா, என்பதை அவர் தெளிவு படுத்தவில்லை. ஒரு காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது நிபுணத்துவத்தை பயன்படுத்தும் உயர்ந்த கருத்தை உருவாக்கிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை முற்றாகப் புகழ்வதிலேயே பெரிதும் கவனம் செலுத்தினார்.
மிகவும் நிதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படும் பத்மநாதன்,கீழ்வரும் கேள்விகளுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
  • கேள்வி: மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  நீங்கள் உங்கள் மௌனத்தைக் கலைத்துள்ளீர்கள். உங்கள் நிலைப்பாடு என்ன? நீங்கள் ஒரு பயங்கரவாத சந்தேக நபரா,அரசியல் கைதியா, ஸ்ரீலங்கா அபிவிருத்திப் பணிகளில் ஒரு பங்காளியா எந்த நிலையை எடுத்துள்ளீர்கள் என்பதை தெளிவு படுத்த முடியுமா?
பதில்: எனது நகர்வுகள் மற்றும் செயல்பாடுகள் யாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நான் ஒரு கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்துக்குள் இருக்கிறேன். எனக்கு ஒரு கட்டுப்பாடான சுதந்திரமே உள்ளது. ஆனால் எனக்கு எந்தளவு சுதந்திரம் கிடைத்துள்ளதோ அதை மக்களுக்கு உதவுவதற்காகவே பயன்படுத்துகிறேன். என்னை மக்களுக்கு உதவி செய்ய முடியாதபடி ஒரு சிறைக்கைதியாக வைத்திருக்காமல் எனது அனுபவங்களை மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியது பாதுகாப்புச் செயலாளரே. இப்போது நான் எனது அனுபவங்களையும் மற்றும் அறிவினையும் எனது மக்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்த இயலக்கூடியதாக  உள்ளது. நான் ஒரு கைதியாக இருந்திருந்தால் என்னால் எதுவுமே செய்யமுடியாமல் இருந்திருக்கும்.
இந்த வகையான ஒரு காட்சி வெளிநாடுகளில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கும். ஆனால் இது அப்படியாகவில்லை ஏனெனில் இது நடப்பது ஸ்ரீலங்காவில் என்பதால். உண்மையில் இது ஒரு உயர்வான உதாரணம். தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் நான் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றுவதாக நினைக்கலாம். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக தமிழர்களின் பிரச்சினைக்கு காரணமான போராட்டத்தை நான் காட்டிக் கொடுத்துவிட்டதாக மற்றும் சிலர் நினைக்கலாம். எனக்கு இவைகளைச் செய்வதற்கான வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்று அவர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்கலாம்.
ஆனால் நான் சொன்னதைப்போல எனது நிபுணத்துவத்தை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்துவதற்கு வழியமைத்தது பாதுகாப்புச் செயலாளரின் உன்னத செயற்பாடே.
  • கேள்வி: நீங்கள் ஒரு அரசியல் கைதி என்று சிலர் சொல்கிறார்கள்.உங்களைப்போல வேறு சில அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா?
பதில்: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது, ஏனெனில் நான் கைது செய்யப்பட்டபோது இப்படியான ஒரு நிலையில் நான் இருப்பேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனது மக்களுக்கு உதவ இந்தமாதிரியான ஒரு வாய்ப்பு எனக்கு வழங்கப்படும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இது ஒரு புதுயுகம் அங்கு சகல மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
  • கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அநேகமானவர்கள் தடுப்புக் காவலில் உள்ள அதேவேளை உங்களுக்கு மட்டும் ஓரளவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
பதில்: ஆயிரக்கணக்கான போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி நான் அரசாங்கத்திடமும் மற்றும் அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைவதை உறுதிசெய்ய அரசாங்கம் விரும்புகிறது.
யுத்த முடிவில் ஆயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு வழங்கப் பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப் பட்டுவிட்டார்கள்.
அவர்களை விடுதலை செய்வதைப் பற்றிய சந்தர்ப்பம் வந்தபோது, அதற்கு தடையாக அரசாங்கம் அவர்களை விடுதலை செய்வதை தடுக்கும்படியான பல விடயங்கள் எழுந்தன .தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள தீவிரவாத சக்திகள் போன்றவற்றின் எதிர்மறையான பிரச்சாரங்கள் என்பன அவர்களின் விடுதலைக்கு தடையாக நின்றன.
முன்னாள் போராளிகளை விடுதலை செய்த பின்னர் அவர்களின் எதிர்காலம் பற்றிய சந்தேகம் அரசாங்கத்துக்குள்ளேயே ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. சமீபத்தில் திருகோணமலையில் நடந்த ஒரு சம்பவத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் விநாயகம் குழவினரால் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர் குழுவினரால் ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இப்படியான சிறிய குழப்பங்கள் மட்டுமே அவர்களின் விடுதலையை தாமதப்படுத்துகிறது.
தமிழ் அரசியல்வாதிகளை நீங்கள் கவனித்தால், தவறான பிரச்சாரங்கள் மூலமாக ரி.என்.ஏ தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்த முயலுகிறது. இப்படியான நடவடிக்கைகளால் முன்னாள் போராளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அரசாங்கத்துடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களில் சிலரை விடுதலை செய்திருக்கிறோம், மீதமுள்ளவர்களையும் விடுவிப்பதற்காக நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்.
அரசாங்கத்துக்கும் குறிப்பிட்டளவு நம்பிக்கை தேவைப்படுகிறது. அரசாங்கம் மொத்த 3000 பேரையும் விடுவிப்பதற்கு தயாராக இருந்தபோதும், தற்பொழுது நிலவும் சூழ்நிலை காரணமாக அப்படி செய்ய முடியாமல் உள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் அனைவரும் நல்லுறவுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது.
இந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து இளைஞர்களை கலக்கி அவர்களை எதிர்ப்பு மற்றும் சத்தியாக்கிரகம் என்பனவற்றை செய்யத்தூண்டி அமைதியின்மையை உருவாக்குமானால், அரசாங்கம் நிச்சயம் நம்பிக்கையை இழந்துவிடும். அரசாங்கம் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தையிட்டு கவலை கொண்டுள்ளது. அவர்கள் விடுதலையானதும் இத்தகைய சக்திகளால் அவர்கள் தவறாக வழி நடத்தப்படாமல் இருக்க வேண்டியது, மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அவர்கள் விடுதலை செய்யப் படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
  • கேள்வி: உங்கள் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைபட்டுள்ள அதேவேளை நாடு முழுவதும் பயணம் செய்வதற்கு உங்களுக்கு சுதந்திரம் உள்ளதா?
பதில்: நான் ஒரு சாதாரண மனிதன். எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு வாழ்வதற்கு நான் என்னை நன்றாக பதப்படுத்தி உள்ளேன். நான் ஒரு சிறிய அறையில் இருந்தவாறு மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். சிலவேளைகளில் கொழும்பில் உள்ள சிறிய ஒரு அறையில் பல வாரங்களை கழிக்கிறேன். எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளது. எனக்கு தொலைபேசி, இணையத்தளம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலோ அல்லது ஸ்ரீலங்காவிலோ உள்ள யாராவது என்னை சந்திக்க விரும்பினால் அவர்களை நான் அதிகாரிகளின் அனுமதியுடன் சந்திக்கிறேன். அதேநேரம், எனது திட்டங்களை கண்காணிப்பதற்காக நான் வன்னிக்கும் செல்கிறேன். நான் இரண்டு அனாதை இல்லங்களையும் மற்றும் தொழில்பயிற்சி மையங்களையும் நடத்தி வருகிறேன். நான் அடிக்கடி அங்கு சென்று அவற்றின் முன்னேற்றங்களை மதிப்பிடுவதோடு, அங்குள்ள குழந்தைகள் மற்றும் பயனாளிகளுடன் பேசுவதற்காக குறைந்தது இரண்டு வாரங்களையாவது செலவிடுவேன். இந்தச் செயல்களைச் செய்வதற்கு எனக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நான் எளிய வாழ்க்கை வாழும் ஒரு எளிய மனிதன். நான் சொகுசு வாழ்க்ககை நடத்துவதாக சில அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
  • கேள்வி: நீங்கள் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் விசாரணை செய்யப் பட்டுள்ளீர்கள். இருந்தாலும் இன்னமும் உங்களை ஒரு நீதிமன்றத்தின் முன் நிறுத்தவில்லை. இத்தகைய ஒரு சூழ்நிலையில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?
பதில்: நான் கைது செய்யப்பட்ட முதல் ஆறு மாதங்களில் அவர்கள் தொடர்ந்து என்னோடு பேசி வந்தார்கள். என்னுடைய உடல்நிலை காரணமாக அவர்கள் என்னை விசாரணை செய்யவோ அல்லது தவறாக நடத்தவோ முயலவில்லை. நான் ஒரு இருதய நோயாளி. அவர்களுக்கு விளக்கம் தேவையாயிருந்த விடயங்கள் பற்றி அவர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்டார்கள். இந்த நடவடிக்கைகளின் பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வதற்கு பாதுகாப்பு செயலாளரினால் எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. நான் பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுக்கொண்ட ஒரே விடயம், எனது அறிவும் அனுபவமும் பயனற்று வீணாகப் போகும்படியாக என்னை சிறையில் போட வேண்டாம் என்பதையே.
  • கேள்வி: உங்களுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ள பட்சத்தில் உங்களை நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிக்கும்படி நீங்கள் அதிகாரிகளிடம் கேட்கவில்லையா?
பதில்: அதைப்பற்றி அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்களுக்கு உதவுவதே எனது தெரிவு.
  • கேள்வி: அந்தக் காட்சியின்படி, நீங்கள் இப்பொழுது அரசாங்கத்தின் ஒரு நண்பரைப் போலத் தெரிகிறீர்களே?
பதில்:  ஒரு நண்பன் என்று சொல்ல மாட்டேன். அரசாங்கத்துக்கும் எனக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்வேன்.
  • கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச வலையமைப்புடன் இன்னமும் உங்களுக்கு தொடர்புகள் உள்ளனவா?
பதில்: முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ  ஆட்கள் அநேகருடன் எனக்கு தொடர்புகள் உள்ளன. அவர்கள் களநிலையின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு, மக்களுக்கு உதவுவதற்காக முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் ஸ்ரீலங்காவுக்கு அடிக்கடி வந்து வன்னியில் உள்ள எனது நலன்புரி திட்டங்களுக்கு உதவி வருகிறார்கள்.
  • கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ யில்  எச்சங்களாக எஞ்சியிருப்பவர்கள் மீள்குழுவாக ஒன்றிணைந்து வேலுப்பிள்ளை பிரபாகரனின் நாட்களைப்போல எதிர்காலத்தில் அச்சம் தரும் வகையில்  மீண்டும் நடப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: அவைகள் வெறும் ஊகங்கள், தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள சில குழுக்களின் பிரச்சாரங்களின் ஒரு பகுதியே இது. அவர்கள் சுயநல எண்ணம் கொண்டவர்கள். இந்த குழுக்களை வழி நடத்துபவர்கள, மக்கள் மீது உண்மையான கரிசனை கொண்டிருந்தால் நாட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள். நான் சாதாரண மக்களைப்பற்றி பேசவில்லை. யுத்தத்தின் பல கட்டங்களின்போதும் நாட்டை விட்டு தப்பியோடிய விநாயகம் மற்றும் நெடியவன் போன்றவர்களைப் பற்றி பேசுகிறேன், மேலும் அவர்கள் இப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் முகவர்களைப்போல செயற்படுகிறார்கள். அவர்கள் வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவாறு, இந்த நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் உள்ள இளைஞர்களையும் மக்களையும் தவறாக வழிநடத்துகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் மூன்றாவது தலைமுறையை சேர்ந்த மக்களுக்கு இங்குள்ள கள யதார்த்தம் தெரியாது. என்ன நடக்கிறது என்பதைப்பற்றிய ஒரு ஊகம் அற்றவர்களாகவே அவர்கள் உள்ளார்கள். ஸ்ரீலங்காவுக்கு எதிராக அவர்களது மனதில் தொடர்ந்து விஷம் பாய்ச்சப் படுகிறது.ஒருவரும் வாழ முடியாத ஒரு நாடாகவே ஸ்ரீலங்கா அவர்களின் முன்னால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • கேள்வி: ஆனால் இந்த எச்சங்கள் மீள் குழுவாக இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளனவா?
பதில்: இல்லை ஒருபோதும் கிடையாது. அதிகபட்சம் அவர்களால் செய்யக்கூடியது, இளைஞர்களை ஒன்றுகூட்டி சிறிய குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக அவர்களை பயன்படுத்துவது மட்டுமே. ஆனால் அவை தனிமை படுத்தப்பட்ட சம்பவங்களாகவே இருக்கும். ஒரு இராணுவ அமைப்பாக அவர்களால் திரும்பவும் இணைய முடியாது. இராணுவமும் மற்றும் காவல்துறையினரும் விழிப்பாக உள்ளார்கள், மற்றும் அத்தகை நிலையை கட்டுப்படுத்துவதில் மிகவும் திறமையுடனும் உள்ளார்கள்.
  • கேள்வி: இந்த நாட்டில் ஒரு தனிநாடு உருவாகுவதை முற்றாக ஆதரித்தவர்களில் நீங்களும் ஒருவர். எல்.ரீ.ரீ.ஈ இப்போது இல்லை. இந்த நாட்டில் ஒரு தனிநாடு உருவாவதற்கு  சார்பாக இன்னமும் நீங்கள் வாதிடுகிறீர்களா அல்லது ஆதரவளிக்கிறீர்களா?
பதில்: முதலாவதாக தமிழீழம் என்பது ஒரு கலைந்த கனவு. இரண்டாவதாக சர்வதேச சமூகத்தால் பின்துணை வழங்கப்படாத ஒன்றை எங்களால் அடைய முடியாது. யதார்த்தத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுக்கே நான் ஆதரவு வழங்குவேன்.
  • கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ யின் நாட்களில் அவர்களின் கப்பல்கள் விடயம் மற்றும் நிதி விவகாரங்கள் என்பனவற்றை கையாண்டது மூலமாக நீங்கள் பெரும் செல்வம் குவித்திருந்தீர்கள். இந்த செல்வங்கள் எல்லாம் எங்கே? இப்பொழுது அதற்கு என்ன நடக்கிறது?
பதில்: 2003ல் நான் அந்த அமைப்பை விட்டு வெளியேறியபோது, எனது செல்வங்கள் மற்றும் கப்பல்கள் உட்பட சகலதையும் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் ஒப்படைக்கும்படி சொன்னவரிடத்தில் நான் ஒப்படைத்து விட்டேன். 2003க்கும் மற்றும் 2009க்கும் இடையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. அந்த நேரத்தில் என்வசம் எந்த செல்வத்தையும் நான் வைத்திருக்கவில்லை. நான் 2009ல் கைது செய்யப்பட்டேன். பிரபாகரன் உயிரோடிருந்த காலத்தில் எனது மாதாந்த செலவுகளுக்காக சுமார் 1000 டொலர்களை அனுப்பி வந்தார். நான் பெற்றதெல்லாம் அவ்வளவு மட்டுமே. நான் கைது செய்யப்பட்டபோது என்னிடம் கிட்டத்தட்ட 1000 றிங்கிற்ஸ் வரை இருந்திருக்கும். சில நபர்கள் குறிப்பிடுவதைப்போல  என்னிடம் எந்த செல்வமும் இல்லை. எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச வலையமைப்பின் முக்கிய செயற்பாடுகளுக்கு நான் பொறுப்பாக இருந்தபடியால்  நான் ஏராளமான செல்வத்துக்கு அதிபதியாக இருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தவறான ஒரு கருத்தாகும்.
மக்கள் மத்தியில் நான் நலன்புரி திட்டங்களை அமைத்த வேளையில், என்னிடம் எக்கச்சக்கமான செல்வம் குவிந்திருப்பதாக பொதுவான ஒரு கருத்து நிலவியது. உண்மையில் பல்வேறு நாடுகளிலுள்ள நண்பர்களாலும் நலன் விரும்பிகளாலுமே எனக்கு இந்த நலன்புரி நடவடிக்கைகளை சீராக நடத்திச் செல்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
  • கேள்வி: உங்கள் திட்டங்கள் என்ன? இங்கும் மற்றும் வெளிநாடுகளிலுமுள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்களினால் நீங்கள் அச்சுறுத்லை எதிர்கொள்வதால்,இப்போது நீங்கள் சௌகரியமானதும் மற்றும் பாதுகாப்பானதும் எனக் கருதும் இடத்திலேயே உங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தை களிப்பீர்களா?
பதில்: இது என்னுடைய கைகளில் இல்லை. இதை யார் முடிவு செய்ய வேண்டுமோ அவர்கள்தான் இதைப்பற்றி முடிவெடுக்க வேண்டும். எனது கவனமெல்லாம் மக்களுக்கு உதவி செய்வதிலேயே உள்ளது. எனக்கு இன்னும் அதிக சுதந்திரம் வழங்கப்பட்டால், என்னால் திறமையான ஒரு பணியை செய்யமுடியும் என நான் உணருகிறேன். ஆனால் அது அதிகாரிகளின் கையிலேயே உள்ளது.
  • கேள்வி: ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்களால் நீங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் என்று நீங்கள் உணருகிறீர்களா?
பதில் : இல்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.ஆனால் நான் சாவைக் கண்டு அஞ்சவில்லை. அது எந்த நேரத்திலும் வரலாம்.எனது வாழ்க்ககையில், இது போன்ற சூழ்நிலைகளை நான் அடிக்கடி அனுபவித்துள்ளேன்.
நன்றி: த நேசன்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Aucun commentaire:

Enregistrer un commentaire