dimanche 17 juin 2012

ரி-56 ரக துப்பாக்கியுடன் நடமாடுவது ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நன்கு தெரியும் .மங்கள சரமவீர


ஹம்பாந்தோட்டை - கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு உயிர்கள் பலியெடுக்கப்பட்டமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக குழு ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பிரதேசம் ராஜபக்ஷ அரசியல் அதிகாரம் மிக்க பகுதி என்பதால் கூடிய அதவானம் செலுத்த வேண்டியுள்ளதாக மங்கள சரமவீர குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்த ஆயுதம் தாங்கிய குழு ரி-56 ரக துப்பாக்கியுடன் நடமாடுவது ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு எதிராக பொலிஸார் செயற்பட முடியாத வண்ணம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்ததும் இப்பிரதேசத்திலாகும். 

சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியும் இன்னும் எவரும் கைது செய்யப்படவில்லை. 

அரசுக்கும் சரி எதிர்கட்சிகளுக்கும் சரி ஜனநாயக ரீதியில் அரசியல் நடவடிக்கைகயில் ஈடுபட உரிமை உண்டு. அதேபோன்று நாட்டின் எந்த பகுதியிலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தேவையான சூழலை உறுதி செய்வது அரசின் கடமையும் பொறுப்புமாகும். 

இதுவரை இடம்பெற்ற கொலைகள், கடத்தல், காணாமல் போதல் குறித்து எதுவித சுயாதீன விசாரணைகளும் நடத்தப்படவில்லை. சட்ட ரீதியான இறுதி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த வரிசையில் இந்த இரட்டைக் கொலையும் இணையும் என்பது எமது நம்பிக்கை. 

இந்த பாதுகாப்புச் செயலாளரின் காலத்தில்தான் சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, கடத்தல், பொலிஸ் நிலையத்தில் கைதிகள் மரணம், பொது மக்கள் எதிர்ப்பு என்பன இடம்பெற்றுள்ளது. 

நிர்வாக சேவையில் தொடர்பில்லாத ஒருவர் முக்கிய அமைச்சின் செயலாளராக பணியாற்றி நாட்டின் சட்டத்திற்கு இழிவு ஏற்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. 

கட்டுவன சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை இடம்பெறும் என எமக்கு கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை உடனடியாக பதவி விலக்க வேண்டும். நாட்டில் சட்டம், நீதியை நிலைநாட்ட முதல் நடவடிக்கையாக பாதுகாப்புச் செயலாளர் பதவி நிர்வாக சேவையில் உள்ள உயர் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். 

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Dislike

Aucun commentaire:

Enregistrer un commentaire