அமைதியும் சமாதானமும் ஓரளவு நிலைகொண்டு மக்கள் தமது மாமூல் வாழ்க்கையை தொடரும்போது மக்களுக்காக தலைமை தாங்குவது அல்லது தலைவர்களாக வலம் வருவது பெரும் சாதனை அல்ல. மக்கள் அல்லல்படும் போது அல்லது ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்படும் போது அதன் ஆபத்துகளை மிக ஆரம்பத்திலேயே அதனை தனது நுண் அறிவால் புரிந்து அவற்றிற்கு எதிராக தனது சுய நலன்களுக்கு அப்பால் யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களே மக்களின் தலைவர்களாவார்கள். விடுலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலைப்புலிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர்களையே காவு கொண்டபோது அவர் தனது உயிருக்குப் பயந்து வாயை மூடி இருந்ததில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எனவும், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் உரிமை உடையவர்கள் எனத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்தியவர்கள் இவ் வன்முறையின் பாதிப்புக் குறித்து அதாவது எந்த மக்களின் பிரதிநிதிகள் என தம்மை அழைத்தார்களோ அந்த மக்கள் தமது பிள்ளைகள் பலாத்காரமாக ஆயுத வன்முறையை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, அப் பிரதேசமே பிணக் குவியல்கள் ஆகியபோது அவை பற்றி மௌனித்து அவ் வன்முறையாளர்களிடம் மண்டியிட்டுக் கிடந்த போது தனிக் குரலாக ஏகப் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தமிழ் மக்களை விற்பனைப் பொருளாக்கும் அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஓரு மனிதன் என்ற வகையில் கட்சி என்ற சுயநல அரசியலுக்கு அப்பால் குரல் கொடுக்கும் துணிவு அவருக்கு இருந்தது. அவரது ஆரம்ப இடதுசாரி அரசியல் வாழ்வின் அத்திவாரமே தனது மக்களின் இக்கட்டான காலத்திலே குரல் கொடுக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியிருக்கலாம் என நம்புகிறேன். தனது மனச் சாட்சியின் வழிநடத்திலின் பிரகாரம் அவர் செயற்பட்டபோது கட்சியிலிருந்து அகற்ற சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை யாவுமே தோல்வியில் முடிந்த அத்தியாயங்களாக உள்ளன.
தமிழ் மக்களினதும் ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களினதும் ஜனநாயக உரிமைகளைப் பேணவும் இலங்கையில் அமைதியான, நிலையான ஆட்சியும் ஏற்பட வேண்டுமெனில் இந்தியாவில் செயற்படும் சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை அவசியமென தொடர்ந்து கூறி வருகிறார். அது மட்டுமல்லாமல் இலங்கையில் அமைந்துள்ள ஒற்றை ஆட்சி அமைப்பினால் இனப் பிரச்சனை மட்டுமல்ல ஏனைய பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது என தெளிவாக வரையறுத்து தொடர்ச்சியாக கூறி வருகிறார். அவரைப் பொறுத்த மட்டில் சமஷ்டி ஆட்சி என்பது தமிழர்களுக்கான தீர்வாக மட்டும் பார்க்கவில்லை. தேசத்தின் ஒட்டுமொத்தமான ஜனநாயக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவ்வாறான அரசியல் வடிவமைப்பே பொருத்தமானது என வற்புறுத்துகிறார். அவரது அரசியல,; உள்ளுராட்சி மன்ற நிர்வாகத்திலிருந்தே ஆரம்பமாகியது. மக்களின் இறைமை அதிகாரம் அந்த மக்களிடம் சென்றடைய வேண்டுமெனில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கமே பொருத்தமானது என்பது அவரது அனுபவபூர்வமான சிந்தனையாக உள்ளது. அவர் இதனை மேடைகளில் பேசுவதன் மூலமோ அல்லது பத்திரிகைகளில் அறிக்கை விடுவதன் மூலமோ மாற்றங்கள் ஏற்படாது என்பதை தெளிவாக புரிந்திருந்தார். அதன் காரணமாகவே தனக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சிங்கள அரசியல் தலைவர்களை, மத குருமார்களை சந்தித்து அதன் தேiயை வலியுறுத்தினார். தமிழ் மக்கள் மத்தியிலே காணப்படும் அரசியல் மூத்த தலைவர்களில் இவர் மட்டுமே சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியிலே இன்னமும் நம்பிக்கை பெற்றவராக உள்ளார்.
போருக்குப் பின்னதான நிலமைகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. ஒரு புறத்தில் சிங்கள தேசியவாதம் முன்னரை விட மிக மோசமான சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் தனது தலையை புதைத்துள்ளது. இலங்கையை ஓர் சிங்கள பௌத்த நாடாக பிரகடனம் செய்யும் அளவுக்கு நிலமைகள் மாறி வருகின்றன. மறுபக்கத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலே ஒற்றுமை குன்றி குழுவாதம், சந்தர்ப்பவாதம் என்பன தலையெடுத்துள்ளன. அரசியல் என்பது சுயநலன் கொண்டதாக, பாராளுமன்ற பதவிகளை நோக்கியதாக மாறி வருகிறது. தேர்தல் வரும்போது மட்டும் மக்களுக்காக கவலைப்படுவதாக அறிக்கைகளை விடுவதும் அதன் பின்னர் தமது பதவிகளை பயன்படுத்தி தத்தமது வாழ்க்கைiயை பெருக்கிக் கொள்வதுமான அரசியல் காணப்படுகிறது.
இவ்வாறான குழப்பமான அரசியலிலிருந்து மக்கள் மீட்கப்பட வேண்டுமெனில் அண்ணன் ஆனந்த சங்கரி போன்றோர் இந்த நிலமைகளை நன்கு புரிந்து கொண்டவர் என்ற வகையில் நிலமைகளைத் திருத்தும் விதத்தில் ஆக்க பூர்வமான முயற்சிகளில் இறங்கவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர் கூட்டணியின் அரசியல் பொறுப்புகளை இளைய சந்ததியிடம் ஒப்படைத்து சகலரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் அவர் இறங்க வேண்டும். தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டமைப்பு என்பவற்றிற்கிடையே மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வினை நோக்கிச் செல்ல தயாராகி வருகிறது. தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் மத்தியிலே கணிசமான மதிப்பினை வைத்திருக்கும் அவர,; கட்சி விமர்சனங்களுக்கு அப்பால் சென்று பிரச்சனைகளைக் கையாளும் திறன் அவரிடம் உண்டு.
சர்வதேச அரசியல் தலைவர்கள் மத்தியிலும் சிறந்த மதிப்பினை பெற்றிருக்கும் அவர் தற்போது காணப்படும் மாற்றங்களை துரிதப்படுத்தும் வகையில் தம்மை இணைத்துக் கொள்வது காலத்தால் பொருத்தமானது என நம்புகிறோம். கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து மக்களை நம்பிக்கையோடு மீட்டெடுப்பதற்கு தலைவர்கள் மத்தியிலும் மாற்றங்கள், விட்டுக் கொடுப்புகள் அவசியம் என நம்புகிறோம். அண்ணன் ஆனந்த சங்கரி அவர்கள் கடந்த பல காலமாக எவ்வாறான அரசியல் தீர்வை முன் மொழிந்தாரோ இன்று அவை மிகவும் வெளிப்படையாக முன்வைக்கப்படுகின்றன. தமிரசுக் கட்சியின் மாநாட்டில் அதன் தலைவர் இரா சம்பந்தன் அவர்களின் உரை இவற்றை உணர்த்தி நிற்கிறது. நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றங்களையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது என்ற போதிலும் மாற்றத்திற்கான ஒளி ஏற்படும்போது அதனைக் கெட்டியாக பிடிப்பது அவசியமாகிறது.
அண்ணன் ஆனந்த சங்கரி அவர்கள் தனது 79 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் இவ் வேளையில் ஓர் மூத்த அனுபவம் வாய்ந்த தலைவர் என்ற வகையில் எமது எதிர்பார்ப்புகள் இவைகளாகவே உள்ளன. காலத்தோடு போட்டிபோடும் ஓர் சூழலில் உள்ள அவர் தமிழ் மக்கள் மத்தியிலே என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. எனவேதான் அவரது பணிகளில் மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கிறோம். உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire