mardi 26 juin 2012

மக்களின் நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன



 மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காணிகளை மறைமுகமாக ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மடுப் பிரதேச செயலர் பிரிவினுள் அடங்கும் குஞ்சுக்குளம் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதுடன் இதற்கான அறிவிப்புப் பலகையையும் நட்டுள்ளனர்.
இத்தகைய காணி அபகரிப்பு மூலம் மடுச்சந்திக்கு அடுத்ததாக ஒரு தனிச்சிங்களக் கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
 
ஏற்கனவே குஞ்சுக்குளம் தொங்கு பாலத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ள காடுகளை அண்டிய பெரியதொரு நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் உட்பிரவேசிக்க இயலாதவாறு வேலியிடப்பட்டு அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
 
பொது மக்களுக்குச் சொந்தமான இந்தப் பகுதியைக் கடற்படையினர் உரிமை கொண்டாடுவது தொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகளும், உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகளும் மௌனம் காத்து வருகின்றனர்.
 
இவ்வாறு பல ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வருகின்றது. மாந்தை மேற்குப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள சன்னார்ப் பகுதியில் பெருமளவு நிலத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர் முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்விடங்களைக் கடற்படையினர் பறித்தெடுத்துள்ளனர்.
 
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத் திட்டக் கிராமமும் கடற்படையினர் வசம். இவ்வாறு திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் மூலமாக சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி நிலப்பரப்பை மாற்றி தமிழ் மக்களின் இருப்பைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி இடவேண்டுமென சமூக ஆர்வலர்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire