தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நடவடிக்கைகள் எமக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை” என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளது இலங்கையிலுள்ள புத்த துறவிகளின் பலமான கட்சி.
புத்த துறவிகள் கட்சியின் தலைவர் டில்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் (மத்திய அரசு) சரியாகத்தான் செயல்படுகிறீர்கள். ஆனால், கருணாநிதியின் நடவடிக்கைகள்தான் விஷமத்தனமாக உள்ளன” என்று எழுதப்பட்டுள்ளது. கருணாநிதி, டெசோ மாநாடு நடத்த உள்ளது குறித்தே புத்த துறவிகளின் தலைவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் நாம், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டதில்லை. ஆனால், இந்தியாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதை நீங்கள் அனுமதிக்க போகிறீர்களா? இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஈடுபடுவதை நீங்கள் அறிவீர்களா?” என்றும் தமது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் புத்த துறவிகளின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரோ!
இலங்கையில் புத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய (சுமாரான தமிழ் மொழிபெயர்ப்பு: தேசிய பண்பாட்டு கட்சி), ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை அரசில் அமைச்சர்களாக உள்ளார்கள் (இந்தியா தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக ரணவாக்க, இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான்)
தமது கடிதம் நேரடியாக பிரதமரின் அலுவலகம் செல்வதைவிட, அதற்கு ராஜதந்திர அழுத்தம் கொடுக்க விரும்பிய துறவிகள் தலைவர், தமது கடிதத்தை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கொடுத்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சின் பதிவுகளுடன் கடிதம், பிரதமர் அலுவலகத்துக்கு போய் சேரும் என்பதே இதிலுள்ள சூட்சுமம்.
துறவிகள் தலைவர், “தமிழீழ ஆதரவு இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் கருணாநிதி, ஆகஸ்ட் 5-ம் தேதி மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக அறிகிறோம். இலங்கையை உடைத்து, தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றை பிரித்துக் கொடுக்கும் எண்ணத்தோடு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று 1976-ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பு தீர்மானம் போட்டதால், 30 ஆண்டுகள் எமது நாட்டில் ரத்த ஆறு ஓடியது. தற்போது யுத்தம் முடிவடைந்து இங்கு அமைதி திரும்பியுள்ள நிலையில், மற்றுமொரு அத்தியாயத்தை துவங்க நினைக்கிறார் கருணாநிதி” என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிராக கருணாநிதி போன்றவர்கள் மேற்கொள்ளும் ‘தேச விரோத’ நடவடிக்கைகளை நீங்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும்” என முடியும் இந்தக் கடிதம், புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது கொழும்பிலுள்ள இந்திய தூதரகம்!
சமீப காலமாக ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய துவங்கியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, எதிர்பாராமல் அடித்த லாட்டரி இந்தக் கடிதம். இதை, அரசியல் ரீதியாக, அட்டகாசமாக உபயோகிக்க அவரால் முடியும்! என்ன செய்கிறார் பார்க்கலாம்!
Aucun commentaire:
Enregistrer un commentaire