vendredi 29 juin 2012

சர்ச்சையில் ஆண்டாள் பற்றிய கதை


தமிழ்நாட்டின் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், இளங்கலை முதலாண்டு தமிழ்ப் பாடத்திட்டத்தில், வைணவத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பிறப்பைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லும் சிறுகதை ஒன்று இணைக்கப்பட உத்தேசிக்கப்பட்டதாக வந்த செய்திகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
'திருப்பாவை' எழுதிய ஆண்டாள் , பெரியாழ்வாரால், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் துளசிச்செடி அருகே கண்டெடுக்கப்பட்டு, அவரால் வளர்க்கப்பட்டவர் என்று வைணவச் சம்பிரதாயங்கள் கூறுகின்றன.
அவரது பிறப்பைப் பற்றிய ஒரு மறு வாசிப்பு என்று கூறும் “ நோன்பு” என்ற சிறுகதை அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் டி.செல்வராஜ் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு, பிரசுரிக்கப்பட்டது.
இந்த தொகுப்பை முதலில் தனது பாட த்திட்டத்தில் இணைப்பது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பரீசிலித்ததாகவும், ஆனால் இந்த குறிப்பிட்ட சிறுகதை பிரச்சினைக்குரிய கதை என்பதால் அதை மட்டும் தவிர்த்து, அதில் உள்ள பிற கதைகளை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்று முடிவுக்கு வந்த்தாகவும், செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இதற்கிடையே, பல்கலைக்கழகம் இந்த சிறுகதைத் தொகுப்பை தனது பாடத்திட்டத்தில் சேர்ப்பதை ஆட்சேபித்து, ஹிந்து முன்னணி இன்று பல்கலைக்கழகப் பதிவாளரிடம் மனு ஒன்றைத் தந்தது.
இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஹிந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர், வி.பி.ஜெயக்குமார், இந்துக்களால் தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படும் ஆண்டாளை அவதூறாக எழுதிய இந்தப் புத்தகத்தைப் பாடப்புத்தகத்தில் வைப்பது பற்றி தாங்கள் ஆட்சேபம் தெரிவித்த்தாகவும், இது குறித்து தங்களுக்கு பல்கலைக்கழக் நிர்வாகம் உறுதி மொழி தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்துக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் இந்தப் புத்தகத்தையே தடை செய்யவேண்டும் என்று மாநில அரசுக்குக் கோரிக்கை வைப்பதாகவும், இதற்காக, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் அருகே நேற்று பக்தர்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire