அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-வின் ஏஜென்டுகள், போராளிகளுக்கு ரகசியமாக எந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை சப்ளை செய்யும் ‘ரகசியத்தை’ அம்பலப்படுத்தியுள்ளது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. வழங்கப்பட்ட ஆயுதங்களில் டாங்கிகளை தாக்கும் சிறிய ரக ஏவுகணைகளும் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
சிரியாவில், அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிகளுக்கு, சிரியா நாட்டு எல்லையில் வைத்து இந்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டதாக, அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.
உளவு வட்டாரங்களில் அடிபடும் கதைகளில் இருந்து, பத்திரிகைச் செய்தி நிஜம்தான் என்று தெரியவருகிறது. ஆனால், சி.ஐ.ஏ.-வின் இந்த ரகசிய சப்ளை விவகாரம் பற்றி பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6. தமது அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும் தகவல் உண்டு.
சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரிவது, குறிப்பிட்ட ஒரு போராளி இயக்கம் அல்ல. அவர்களுக்குள் வெவ்வேறு போராளி இயக்கங்கள் கலந்து போய் உள்ளார்கள். இந்த இயக்கங்களில் சில அமைப்புகளுக்கு அல்-காய்தாவுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிரிய அரசை எதிர்ப்பதற்காக சி.ஐ.ஏ. கொடுக்கும் இந்த ரகசிய ஆயுதங்கள், நாளையே அல்-காய்தாவினரின் கைகளில் போய் சேர்ந்து விடலாம் என்பதே, பிரிட்டிஷ் உளவுத்துறையின் அதிருப்திக்கு காரணம்.
ஆனால், இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் உளவுத்துறையால் பெரிதமதாக ஏதும் செய்ய முடியாது என்ற நிலையே தற்போது உள்ளது. காரணம் என்னவென்றால், சிரியாவின் எல்லையில் வைத்து ஆயுத சப்ளை செய்யும் ரகசிய நடவடிக்கை, துருக்கி நாட்டின் தென்பகுதியில் வைத்தே ஆபரேட் செய்யப்படுவதாக தெரிகிறது.
துருக்கியில் சி.ஐ.ஏ.-யின் செயல்பாடு, வேறு எந்த உளவுத் துறையையும்விட பெரியது. அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய ஆபரேஷன் சென்டரே உள்ளது. துருக்கி அரசின் ஆதரவும் உண்டு. பிரிட்டிஷ் உளவுத்துறையும் துருக்கியில் இருந்து இயங்குகிறது என்றாலும், அவர்களது துருக்கி ஆபரேஷன் மிக சிறியது.
இதனால், துருக்கியில் வைத்து சி.ஐ.ஏ. செய்வதை, ‘சூரியன் அஸ்தமிக்காத நாட்டுசாம்ராஜ்யத்தின்’ ஏஜென்டுகள் சும்மா வேடிக்கைதான் பார்க்க முடியும்!
தற்போது வெளியாகியுள்ள இந்த ரகசிய சப்ளை விவகாரம் குறித்து, சி.ஐ.ஏ. இதுவரை வாய்திறந்து கருத்து எதையும் சொல்லவில்லை! அநேகமாக நாளை மறுப்பு அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire