இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அப்துல் கலாம் இன்று அறிவித்துள்ளார்.
இத்தேர்தலில் போட்டியிட தனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று அப்துல் கலாம் அவர்கள் திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது இன்னும் தெரியாத சூழலே நிலவுகிறது.
மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும் முதலில் கலாம் அவர்களின் பெயரை முன்மொழிந்தனர், எனினும் முலாயம் சிங் தமது கட்சியின் ஆதரவை பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானியுடனான தொலைபேசி உரையாடலின் போது , தனது மனசாட்சி குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கவில்லை என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்துல் கலாம் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளதை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது தரப்பு வேட்பாளர் குறித்து விவாதிக்க பா ஜ க வின் உயர்மட்டக் கூட்டம் இன்று(18.6.12) கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு முக்கியத் தலைவரான பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார, குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒருவர் தேர்தெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது கருத்து என்று கூறியுள்ளார்.
எனினும் அரசியலில் மாறுதல்கள் இடம்பெறுவது இயல்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அ இ அ தி மு க மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள வேட்பாளரான பி ஏ சாங்காவை தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரிக்குமா எனும் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire