mercredi 6 juin 2012

தமிழருக்கு உரிமைகளை வழங்குவதே ஒரே தீர்வு அடித்துக் கூறுகிறது ஜே.வி.பி.

<>
தமிழருக்கு உரிமைகளை வழங்குவதே ஒரே தீர்வு அடித்துக் கூறுகிறது ஜே.வி.பி.
news
 தேசிய இனப்பிரச்சி னைக்கு அதிகாரப்பகிர்வு ஒருபோதும் தீர்வாகாது. இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், தமிழ்மக்களின் நியாயமான உரிமைகளை அரசு அவர்களுக்கு வழங்கவேண்டும். அத்துடன், நாட்டில் ஜன நாயகத்தையும் அரசு நிலை நாட்ட வேண்டும் என ஜே.வி.பி. தெரிவித்தது.

தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான யோசனைத்திட்டம் ஒன்றை நாம் தயாரித்து வருகின்றோம். அதுவே இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் எமது நிலைப்பாடாகும். இதைத் தவிர்த்து அரசினால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவில் நாம் ஒருபோதும் பங்கேற்கமாட்டோம். அது காலத்தை வீணடிக்கும் செயல் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஜே.வி.பியின் நிலைப்பாடு குறித்து "சுடர் ஒளி'யிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது ஒருபோதும் தீர்வாகாது. மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது. இது சாத்தியமற்ற ஒரு விடயமாகும். அத்துடன், அதிகாரப்பகிர்வு இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஆகாது. இது மேலும் சில பிரச்சினைகள் உருவாகுவதற்கே வலுச் சேர்க்கும்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அரசால் அமைக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொய்யானது காலங்கடத்துவதுமாகும். தெரிவுக்குழு மூலம் அரசு தமது நயவஞ்சகப் போக்கையே கையாளத்துடிக்கின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நாம் யோசனைத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகின்றோம். அதை இன்னும் சில நாட்களில் நாட்டில் பகிரங்கப்படுத்துவோம். அத்துடன், அரசிடமும் சமர்ப்பிப்போம். அரசு அதை ஏற்கின்றதோ இல்லையோ என்பது குறித்து எமக்குப் பிரச்சினை இல்லை.
இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் குறித்த எமது நிலைப்பாட்டையே இந்த யோசனைத்திட்டத்தின் மூலம் நாம் முன்வைக்கின்றோம். இந்த யோசனைத் திட்டம் மிகவும் சிறந்ததாகும். இதனை அரசு ஏற்காவிடின், இத்திட்டம் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவோம்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நாம் ஏற்கனவே பல அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்திருந்தோம். அரசு அவற்றைக் கருத்திற்கொள்ளவில்லை. இந்த அறிக்கையையும் நாம் அரசிடம் சமர்ப்பிப்போம். அரசு இதை ஏற்பது குறித்து எமக்குக் கவலையில்லை. மக்கள் மத்தியில் எமது அறிக்கைக்கு ஆதரவு கிடைக்கவேண்டும். அதுவே எமக்கு கிடைக்கும் வெற்றி என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire