mardi 26 juin 2012

எமது வரலாறு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கூறினாலும் கூட அதற்கான ஆதாரங்களை எம்மால் காட்ட முடியாத நிலைமை காணப்படுகின்றது.


தமிழ் மக்களுடைய வரலாறு 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் கொண்ட வரலாறாகும். ஆனாலும் கூட இதனை ஆதாரப்படுத்தும் வகையில் நாம் உரிய ஆதாரங்களைச் சேகரித்து வைக்காமலும் பாதுகாக்காமலும் கைவிட்ட நிலையில் இருக்கின்றமை வேதனைக்குரிய விடயமாகும் இவ்வாறு கூறினார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி புஸ்பரெட்ணம்.
 
யாழ். மாநகர மரபுரிமைக் கழக அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை தென் ஆசியாவிலேயே வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்ட ஒரு நாடாகும். இதிலும் வட இலங்கை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றை தொடர்ச்சியாகக் கொண்ட பகுதியாகும்.
 
 வட இலங்கை தவிர்ந்து தென்னிலங்கையை எடுத்துக் கொண்டால் வரலாற்றுச் சின்னங்களும் தொல் பொருள் சின்னங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலைமை, சூழ்நிலை இங்கு காணப்படவில்லை.
 
தென்னிலங்கையில் இருந்து வரும் தொல் பொருளியலாளர்களுடன் எமது பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கோட்டை அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
 
அவர்கள் மாணவர்களிடம் வரலாறு கேட்டால் எமது வரலாறு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கூறினாலும் கூட அதற்கான ஆதாரங்களை எம்மால் காட்ட முடியாத நிலைமை காணப்படுகின்றது.
 
 எமது பொருளாதார அரசியல் அபிவிருத்தியைக் காண வேண்டுமாக இருந்தால் எமது தொன்மையைக் காட்ட மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தென்னிலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுச் சின்னங்கள் மரபுகளைக்காட்டக் கூடிய நிலையில் காணப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முந்திய சங்கிலியன் காலத்து வரலாற்றைக் கூடப் பேண முடியாதவர்களாகக் காணப்படுகின்றோம் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire