நித்தியானந்தா விவகாரம் தொடர்பில் தமிழக காவல்துறைக்கு ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது என்ற தோற்றம் உண்டு. அதை உறுதி செய்வது போல, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், மதுரை ஹைகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுமீது வழக்கு தாக்கல் செய்யாமல் ‘கம்’மென்று இருந்து வந்தது மதுரை போலீஸ்.
சோலை கண்ணனின் மனு என்ன சொல்கிறது?
மே 12-ம் தேதி அவரும், நண்பர்களும் மதுரை ஆதீன மடத்துக்கு சென்றிருக்கின்றனர். அங்கேயிருந்த ‘இளைய ஆதீனம்’ நித்யானந்தா அவர்களைத் தனியாக அழைத்து, சமாதானம் பேசியிருக்கிறார். “எனது பூஜைகளில் கலந்துகொண்டால் ‘பேரின்பம்’ கிட்டும்” என்றும் சொன்னாராம்.
‘பேரின்பத்தை’ காணும் ஆவலில் இவர்களும் பூஜையில் கலந்து கொண்டனர்.
முத்த ஆதீனம் வந்தார், இளைய ஆதீனம் வந்தார். இளம் பெண்கள் வந்தார்கள். ரஞ்சிதா வந்தார். பூஜை ஆரம்பமானது.
மூத்த ஆதீனத்துக்கு பெரிய சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. (பூஜை அவரது ஹோம்-கிரவுண்டில் நடந்ததால்!) பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மூத்த ஆதீனத்தின் கால்களை வைஷ்ணவி வருடிக் கொண்டிருந்தார். சிறிய சிம்மாசனத்தில் நித்தி சுவாமிகள் அமர்ந்திருக்க, அவரருகே ரஞ்சிதா நின்று கொண்டார்.
அனைவருக்கும் ‘பரிசுத்த தீர்த்தம்’ வழங்கப்பட்டது. அதை குடித்ததும் லேசான போதை ஏற்பட்டது. ஆங்கில பாடல் இசையுடன் ஒலிக்க துவங்கியது. அங்கிருந்தவர்கள் இசைக்கு ஏற்ப ஆடினர். ஆனந்த தாண்டவத்தில் அணைந்து கொள்ளுமாறு இவர்களையும் அன்புடன் அழைத்த நித்தியானந்தா, புலித்தோலில் படுத்துக் கொண்டார்.
இதற்கு மேலும் பேரின்பத்தைக் காண்பதில் ஆர்வமில்லாமல், மடத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக சோலை கண்ணன் தமது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த பேரின்பமே ஃபவுல்-கேம் என்ற ரீதியில் உள்ள அவரது மனுவில், “நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிமன்றம் வருவதற்கு முன் இதே மனுவை அவர், விளக்கத்தூண் காவல் நிலையத்திலும் புகாராக கொடுத்திருந்தார்.
விளக்கத்தூண் காவல் நிலையத்தில் இருந்த போலீஸாருக்கு, இவர்களது மனு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “என்னய்யா இந்தாள்.. பேரின்பம் அடைந்ததை குற்றம் சொல்கிறார்” என்று நினைத்தார்களோ, என்னவோ, மனுவை பரணில் தூக்கி போட்டுவிட்டு பஜ்ஜி சாப்பிட போய்விட்டார்கள்.
அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே, நீதிமன்றக் கதவைத் தட்டியிருந்தார் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சோலை கண்ணன்.
மதுரை ஹைகோர்ட் கிளையில் இந்த மனுவை நீதிபதி ஏ.செல்வம் நேற்று விசாரித்தார். சோலை கண்ணன் கொடுத்த புகார்மீது விளக்கத்தூண் காவல் நிலையத்தில் கேஸே பதிவாகவில்லை என்பதை தெரிந்து கொண்டதும் கோபம் கொண்ட நீதிபதி, அரசு வக்கீலிடம், “மனுதாரர் புகார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்கிறார்களா? அல்லது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா?” என காட்டமாகவே கேள்வி கேட்டார்.
போலீஸ் பஜ்ஜி செஷனில் இருந்து திரும்பி வழக்கு பதிவு செய்ய அவகாசம் கொடுக்கும் நோக்கத்துடன், விசாரணையை பிற்பகல்வரை ஒத்தி வைத்தார்.
நீதிபதியின் கோபம் பற்றி தகவல் அறிந்த விளக்குதூண் போலீசார், அலறியடித்துக் கொண்டு வழக்கு பதிவு செய்து கொண்டனர்.
பிற்பகல் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் அன்பரசன், “விளக்குதூண் போலீசார், துரித கதியில் செயற்பட்டு, நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்றார் பெருமிதத்துடன்.
அரசு வக்கீல் பெருமிதம் அடைவது நியாயம்தானே!
Aucun commentaire:
Enregistrer un commentaire