‘இலங்கைத் தமிழரின் நிலைப்பாடுகள் குறித்த முடிவுகளை எடுக்க வேண்டியது யார் என்ற கேள்விக்குப் பதில் தேடிப் பார்த்தாலே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் எழும் எல்லா குழப்பங்களுக்கும் விடை கிடைத்து விடும்’ என்றார் ஒரு யாழ்ப்பாண பிரமுகர். அவர் வைத்த வாதங்கள் இவை.
“இலங்கைத் தமிழர் குறித்து முடிவெடுக்க வேண்டியது யார்? போருக்குப் பயந்து, உயிர் பயத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப் போய், அந்த நாடுகளின் இரக்கத்தில் சொகுசான வாழ்க்கையை மேலை நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களா? அந்தப் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, தமிழகத்தில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா? இலங்கையின் வரலாறு என்ன, போர்களில் தமிழர்கள் அடைந்த இழப்புகளுக்கு யார், யார் காரணம் என்பதெல்லாம் தெரியாமல், இலங்கை அரசு அழித்த தமிழர்களை விட, தமிழன் அழித்த தமிழர்கள்தான் அதிகம் என்ற உண்மை புரியாமல், தமிழன் என்ற ஒற்றை உணர்வில், அந்தப் பாசத்தில் தமிழகத்தில் போராடும் மாணவர்களா? அல்லது இலங்கையில் தங்கள் சொந்த மண்ணில் வாழும் நாங்களா? இவர்களில் முடிவெடுக்க வேண்டியது யார்?
“சந்தேகமில்லாமல் நாங்கள்தானே? எங்கள் முடிவு என்ன என்பதைத்தானே மற்ற எல்லோரும் ஏற்க வேண்டும்? ஏனென்றால், இங்கு வாழ்வது நாங்கள்தானே? ‘வாழ்க்கையை அழித்துக் கொண்டது போதும். இனியேனும் உயிர் தப்பி மிஞ்சியிருப்பவர்கள் தங்களின் மிஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க வேண்டும். அதற்கு யார் நல்லது செய்ய முடியுமோ அவர்கள் பக்கம்தான் போக வேண்டும்’ என்ற மனோ நிலையில் உள்ள எங்களின் முடிவுக்குத்தானே மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும்? இங்குள்ள தமிழர் அளித்துள்ள முடிவுகள் என்ன?
“2009 மேயர் தேர்தலில் யாழ்ப்பாணத் தமிழர்கள், ஆளுங்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குத்தான் மெஜாரிட்டி அளித்தனர். அந்தக் கட்சிதான் யாழ்ப்பாண மேயர் பதவியைக் கைப்பற்றியது. 2010 நாடாளுமன்றத் தேர்தலில், யாழ் மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கும் தமிழ்க் கட்சிகளுக்கே கிடைத்தன. வாக்களித்தது எல்லாமே தமிழர்கள்தான்; சிங்களர் இல்லை.
“விடுதலைப் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 2004 தேர்தலில் 23 இடங்களை வென்றது. இறுதிப் போருக்குப் பிறகு நடந்த 2010 தேர்தலில் 14 இடங்களை மட்டுமே வென்றது. கிழக்கு மாகாண சபையையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வெல்ல முடியவில்லை. தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்த பகுதிகளில் இதுதான் நிலைமை. ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் தமிழ்த் துரோகிகள் என்றால், அவர்களுக்கு வாக்களித்த ஈழத் தமிழர்களெல்லாம் யார்?
“இங்குள்ள மக்களின் மனோபாவம் தெரியாமல், வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்கள் ஆசையை எங்கள் மீது திணிக்க முனைபவர்கள்தான், உண்மையில் ஈழத் தமிழர்களின் விரோதிகள்” என்றார் அவர் ஆவேசமாக.
கட்டம் இடப்பட்ட செய்தி 2
போரின் சாட்சியங்கள்
இலங்கையில் அமைதி திரும்பி, அபிவிருத்திப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. சாலைகள், அரசுக் கட்டிடங்கள், மின்சார நிலையங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு ஃப்ரெஷ்ஷாக காணப்பட்டன. ஆனாலும் அந்த அமைதிக்கு இடையே மெல்லியதாய் ஒலிக்கும் சோக இசை மாதிரி ஊருக்கு ஊர் நிற்கின்றன சிதிலமடைந்த பல வீடுகள். போரின் காரணமாக இடம் பெயர்ந்த யார் யாருக்கோ சொந்தமான வீடுகள், உரிமையாளர் திரும்பி வராததால் சிதிலமடைந்து, கூரை இழந்து, செடி வளர்ந்து பரிதாபமாக நிற்கின்றன.
கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் இப்படிக் கிடக்கும் வீட்டு வெளிச் சுவர்களில் எல்லாம், சல்லடை மாதிரி புல்லட் மார்க்குகள் கடைசிக்கட்ட போரின் சாட்சியங்களாக நிறைந்திருக்கின்றன. ஒரு சில உரிமையாளர்கள் திரும்பி வந்தாலும், தங்களது வீட்டைச் சீர் செய்து கொள்ள நிதி வசதி இல்லாமல் வேறு குடிசைகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற வீடுகள் எல்லாம் ஜன்னல், கதவு, மேற்கூரை ஓடுகள் எதுவுமே இல்லாமல் வெறும் குட்டிச் சுவர்களாக உள்ளன.
அவையெல்லாம் எங்கே என்று விசாரித்தபோது, “போர் முடிந்து திரும்பி வந்த பல குடும்பங்கள் தங்கள் வீடுகளைச் செப்பனிட போதிய பொருளாதார வசதியில்லாமல் தவித்ததால், இப்படி ஆளில்லாமல் கிடக்கும் வீடுகளில் இருந்த தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். சிலர் உரிமையாளர்களின் அனுமதி பெற்று எடுத்தார்கள். சிலர் அனுமதியில்லாமலே களவாடிக் கொண்டனர்” என்று தெரிவித்தார்கள் அப்பகுதி மக்கள். சொந்தமாக ஒரு வீடு கட்டுவது ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கும் இருக்கும் மிகப் பெரிய கனவு. அப்படி கட்டிய வீட்டை விட்டு விட்டு ஓடும் அளவுக்கு காலச் சூழலில் சிக்கிக் கொண்டவர்களின் நிலை பரிதாபமானதுதான்.
கட்டம் இடப்பட்ட செய்தி 3
புலிகளால் ஏற்கப்படாத தமிழர்கள்
கிறிஸ்தவ தமிழர்களை ஏற்றுக் கொண்ட விடுதலைப் புலிகள், தமிழ் பேசும் முஸ்லிம்களை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கேள்வியை இலங்கையில் பல அரசியல்வாதிகளிடம் கேட்டும், சரியான பதில் கிடைக்கவில்லை. இந்தியாவில்தான் ஒரு முஸ்லிம் பெரியவர் அதற்கு எங்களிடம் பதில் சொன்னார். “விடுதலைப் புலிகள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை மட்டுமே தமிழர்களாக நினைத்தார்கள். அவர்கள்தான் ஈழத் தமிழர்கள்; அவர்களுக்கு மட்டுமே ஈழம் சொந்தம் என்று நினைத்தார்கள். எனவே, இந்திய வம்சாவழியில் வந்த எந்தத் தமிழர்களையும் (அவர்கள் எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) புலிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததில்லை.
நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி ஆகியோர், ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்திகளைச் சேகரித்து வந்துள்ளனர். இந்த இதழில் யாழ்ப்பாணம் பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்:
இலங்கையின் வட மூலையான யாழ்ப்பாணம், உண்மையில் யுத்தத்தைச் சந்தித்ததா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை முன்னேறியிருந்தது. பச்சை பசேல் என விவசாயம் நடந்து கொண்டிருந்தது. சாலைகள் பளபளவென இருந்தன. அரசுக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருந்தன. ஹிந்துக் கோவில்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. புத்தம் புது ஆட்டோக்கள் நகரமெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தன. எங்கும் அமைதியாகவும், இயல்பாகவும் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தியேட்டரில் புதுத் தமிழ்ப் படம் (கடல்) ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், ஆங்காங்கே சோகம் இழையோடும் வகையில் போர் நினைவுச் சின்னங்களாக சிதிலமடைந்த பல வீடுகளைப் பார்க்க முடிந்தது.
சாலையெங்கும் புதுப்புது கடைகள் ஏராளமாக இருந்தன. ‘போருக்குப் பிறகு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த இளைஞர்கள் எல்லாம், நாட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர். அவர்களுக்கு கடல் வேலைக்குச் செல்லும் வாய்ப்புதான் அதிகம். நிறைய வீடு கட்டும் பணி தற்போது நடப்பதால், பலர் கொத்தனார் வேலைக்குச் செல்கின்றனர். வசதி இருப்பவர்களும், வெளியிலிருந்து உறவினர்களின் மூலம் உதவி பெறுபவர்களும் கடை வைக்கிறார்கள். இதனால், பார்க்குமிடமெல்லாம் கடைகளாக இருக்கின்றன. “இவ்வளவு சிறிய பகுதிக்குள் ஐம்பதாயிரம் கடைகள் என்பது ரொம்ப அதிகம். எல்லோரும் கடை வைத்து விட்டால் வாங்க ஆள் வேண்டாமா?” என்றார் ஒரு பெரியவர்.
ஆங்காங்கே ராணுவ வீரர்கள் கண்ணில் பட்டாலும், அவர்கள் எந்த வாகனத்தையும் நிறுத்திச் சோதிக்கவில்லை. யாரையும் நிறுத்தி விசாரிக்கிற மாதிரியும் தெரியவில்லை. “அவர்கள் பாட்டுக்கு அவர்கள் நிற்பார்கள். நாங்கள் பாட்டுக்கு நாங்கள் போவோம்” என்று சாதாரணமாகச் சொன்னார் ஒரு இளைஞர்.
யாழ்ப்பாணம் பகுதியில் சிங்களவர்களைக் குடியமர்த்தியதாக அரசு மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தமிழர்கள் மத்தியில் அது பற்றி விசாரித்தோம். ஒரு சிலர் பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார்களே தவிர, ‘இந்தப் பகுதியில் இத்தனை சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்’ என்கிற வகையில் யாரும் சொல்லவில்லை.
“இங்கு ‘தேசிய வளமைச் சட்டம்’ என்று ஒரு சட்டம் அமலில் உள்ளது. வட பகுதித் தமிழர்களைத் தவிர, கொழும்புவிலோ அல்லது வேறு தென் பகுதி இலங்கையிலிருந்தோ யாரும் வட பகுதிக்கு வந்து சொத்துக்கள் வாங்க முடியாது. இங்கு கவர்மென்ட் ஏஜென்ட்டாக (கலெக்டர்) ஒரு தமிழர்தான் நியமிக்கப்பட்டுள்ளார். காணி (நிலம்) குறித்த கணக்குகள் அனைத்தும் அவரிடம்தான் உள்ளன. திடீரென யாரும், பல வருட ஆவணங்களை மாற்றி எழுதி விட முடியாது. சிங்களக் குடியேற்றம் சாத்தியமில்லாத விஷயம். புலிகளால் 1983-ல் துரத்தி விடப்பட்ட சில தமிழ் முஸ்லிம் குடும்பங்களிடம் மட்டும்தான், மீண்டும் அவர்கள் நிலம் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார் யாழ் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
யாழ்ப்பாணம் பகுதி ஆர்மி மேஜர் ஜெனரல் ஹித்துருசிங்க எங்களைச் சந்திக்க ஒப்புக் கொண்டார். அவரைச் சந்தித்துப் பேசினோம். “யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை. இலங்கையில் எங்குமே முள்வேலி முகாம்கள் இல்லை. போர் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னுமா மக்களை முகாமில் வைத்திருக்க முடியும்? அவரவர்கள் அவரவர் நிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். சாலைகள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எல்லாம் பல கோடி ரூபாய் செலவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என தெற்குப் பகுதி மக்கள் பொறாமைப்படும் வகையில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிங்களக் குடியேற்றம் என்பது பச்சைப் பொய்.
“பல ஆயிரம் சிங்களக் குடும்பத்தினர் 1983 வாக்கில் விடுதலைப் புலிகளால் இப்பகுதியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீண்டும் இங்கு குடியேறுவதாக இருந்தால், அவர்களைக் குடியேற்றி வைக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், சிங்களர் யாரும் இங்கு வந்து குடியேறத் தயாரில்லை. ஆனாலும், சிங்களக் குடியேற்றம் என்ற பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களக் குடும்பத்தை அரசு வலுக்கட்டாயமாகக் குடியேற்றி இருப்பதை நிரூபித்தால், நான் இந்த இடத்தை விட்டு உடனே வெளியேறத் தயார்” என்று சவால் விடுத்தார்.
அவரே தொடர்ந்து, “ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள்தான் இங்கு இருக்கின்றோம். போர் நேரத்தில் போர் வீரர்களாக இருந்த வீரர்கள் வேறு; தற்போது தேசியப் பாதுகாப்புப் படையினராய் இருக்கும் வீரர்கள் வேறு. மக்கள் எங்களோடு நட்புறவாக இருக்கிறார்கள். குடித்து விட்டு கணவர் அடிக்கிறார் என்று ஒரு பெண் ராணுவத்தில் வந்து புகார் செய்கிறார். அவர் போலீஸுக்குப் போகவில்லை. குழந்தைக்கு உடல்நலமில்லை என்று ஆம்புலன்ஸுக்குப் ஃபோன் செய்யாமல், எங்கள் கேம்ப்புக்குப் ஃபோன் செய்கிறார்கள் பெண்கள். அவ்வளவு நம்பிக்கை ராணுவத்தின் மீது ஏற்பட்டிருக்கிறது. பல ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் நாங்களே வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
ராணுவமே வீடு கட்டிக் கொடுத்த இடங்களுக்கும், பள்ளிக் கூடங்கள் கட்டிக் கொடுத்த இடங்களுக்கும் சென்று பார்வையிட்டோம். அங்கிருந்த தமிழர்கள், “ராணுவம் உதவியாகத்தான் இருக்கிறது” என்று சொன்னார்கள். ஆனாலும், அவர்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. பொருளாதார ரீதியில் அவர்கள் நலிந்து போய் இருக்கிறார்கள்.
“தற்போது இங்கு விடுதலைப் புலிகள் கிடையாது. ஆனால், அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இங்கு ராணுவ ஆட்சி நடக்கவில்லை. ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ (டி.என்.ஏ.) புலிகளுக்கு இணையாக ஆயுதமின்றி இங்கு அரசியல் செய்கிறது. அரசை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் இங்கு இயங்குகின்றன. சட்டத்தைக் கடைப்பிடிக்கச் செய்யும் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. வெளிநாட்டு அமைப்புகள் வந்த வண்ண முள்ளன. இங்கு பச்சையாகப் பொய் சொல்லி யாரையும் ஏமாற்றி விட முடியாது” என்றார் ஒரு ராணுவ அதிகாரி.
யாழ்ப்பாணத் தமிழ் மேயர் யோகேஸ்வரி, “போருக்குப் பிறகு துரித கதியில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுகின்றன. புலிகள் காலத்தில் இருண்ட கண்டம் போல் இருந்த யாழ்ப்பாணம், இப்போதுதான் பழைய கம்பீரத்தை மீண்டும் பெற்று வருகிறது. இங்கிருந்து கொழும்பு செல்ல 14 மணி நேரம் ஆகும். இப்போது 7 மணி நேரத்தில் சென்று விட முடிகிறது. வடபகுதியில் 18.6 சதவிகிதமாக இருந்த தமிழ் மக்களை 12.7 சதவிகிதமாக மாற்றியதுதான் புலிகளின் சாதனை. தங்கத் தாம்பாளத்தில் வைத்து இந்தியா அளித்த வாய்ப்புகளை உதாசீனம் செய்து, தங்களையும் அழித்துக் கொண்டு, ஏராளமான தமிழர்களையும் அழித்ததுதான் அவர்கள் கண்ட பலன்.
“இதே யாழ்ப்பாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தமிழ் மேயர்களைக் கொன்று குவித்த இயக்கம்தான் புலிகள் இயக்கம். கிளிநொச்சியிலும், முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்களைச் சந்தித்துக் கேளுங்கள்... போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் யார் செய்தது எனத் தெரிய வரும்” என்று உணர்ச்சி வசப்பட்டார். மேலும் அவர், “தமிழ் நாட்டில் ஆரம்ப காலம் தொட்டே, இலங்கைப் பிரச்னையை சரியான கோணத்தில் அணுகியவர் துக்ளக் ஆசிரியர் ‘சோ’தான். தனி ஈழம் சாத்தியமில்லை என்பதைச் சொன்னதோடு, விடுதலைப் புலிகளால் அழிவு மட்டுமே ஏற்படும் என்று சரியாகக் கணித்தவர் அவர்தான்” என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று யாழ்ப்பாண மருத்துவமனை. அதன் இயக்குனர் சிரிபவானந்தராஜாவை நாங்கள் சந்தித்தோம். “இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதிகம். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ரீதியான வைத்தியங்கள் எல்லாம் முடிந்து எல்லோரும் அனுப்பப்பட்டு விட்டனர். மன ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வைத்தியம் தொடர்கிறது. இந்தியாவிலிருந்து மருந்துகளும், உபகரணங்களும் நிறைய வந்தன” என்று கூறினார் அவர்.
மத்திய இலங்கையிலிருந்து வடக்கு நோக்கி, நான்கு வழிச் சாலையைச் சீனாவும், ரயில்வேயை இந்தியாவும் அமைத்து வருகின்றன. மதவாச்சியிலிருந்து காங்கேசன் துறை வரைக்கும் 800 மில்லியன் யு.எஸ். டாலர் செலவில் தண்டவாளம் அமைத்து வருகிறது இந்தியா. இதுபோக, 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புத் தரும் வகையில் ஒரு பெரிய தொழிற்பேட்டையும் இந்தியாவின் செலவில் உருவாகி வருகிறது.
ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை நடத்தி வரும் இலங்கை கேபினட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். “ஒரு கட்டத்தில் நானும் ஆயுதம் ஏந்திப் போராடியவன்தான். ஆனால், ஒரு காலகட்டத்தில் தனி நாடு சாத்தியமல்ல; அரசியல் தீர்வுதான் உகந்தது என்ற முடிவுக்கு வந்ததும், அரசியல் பாதைக்குத் திரும்பி விட்டேன். இந்தியா அரசியல் தீர்வுக்கு வழி வகுத்தது. புலிகள் ஏற்கவில்லை. இந்திய அமைதிப்படை இங்கு வந்தது. புலிகள் அதை ஏற்கவில்லை. பிரேமதாச, சந்திரிகா ஆகியோர் அரசியல் தீர்வுக்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், புலிகள் அவற்றையும் ஏற்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ கூடப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வந்தார். அதையும் புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
“அரசியல் தீர்வுக்குப் போகலாம் என்று சொன்ன தமிழ்த் தலைவர்கள் அத்தனை பேரையும் ‘தமிழ்த் துரோகிகள்’ என்று முத்திரை குத்தி கொன்று குவித்தனர் புலிகள். என்னைக் கொல்வதற்கு 12 முறைக்கு மேல் முயன்றனர். என் தம்பி உட்பட எனக்கு வேண்டிய பலர் இதனால் உயிரிழந்தனர். பிடிவாதத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டிருந்த பிரபாகரன், தன்னை நம்பிய தமிழ்ச் சமுதாயத்தையும் அழித்து, தானும் அழிந்து போனதுதான் மிச்சம். அவர்கள் ஏராளமான தமிழ்த் தலைவர்களை, அப்பாவி தமிழ் ஜனங்களை மட்டும் அழிக்கவில்லை. தமிழனின் கலாசாரம், தமிழனின் கல்வி, தமிழனின் பொருளாதாரம், தமிழனின் மன நிம்மதி, தமிழனின் மனோதைரியம் அத்தனையையும் அழித்து விட்டார்கள். இன்று இதே தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாங்கள் பதவியில் இருக்கிறோம்.
“தமிழ் மக்களுக்கு, அரசுடன் இணைந்திருந்து நல்லது செய்வதுதான் விவேகமான செயல். அரசுடன் இருப்பதால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொடுத்து, இங்கு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஹை செக்யூரிட்டி ஸோன்களைப் படிப்படியாக எடுக்கச் செய்திருக்கிறோம். காலம் போக போக, ராணுவம் முற்றிலுமாகத் தள்ளி வைக்கப்பட்டு தமிழ் மக்கள் மிகச் சுதந்திரமாக வாழ்வார்கள். அதில் ஐயம் தேவையில்லை. ஆனால், தமிழ் மக்களுக்காக உழைக்கும் கட்சி என்று கூறிக் கொள்ளும் டி.என்.ஏ., அரசு எடுக்கும் எந்த முயற்சிக்கும் உதவுவது இல்லை. பிறகு எப்படி தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும்? வெறும் அரசு விரோதப் போக்கு மட்டுமே இருந்தால், தமிழ் மக்களுக்கு நல்லது நடந்து விடுமா?
“போருக்குப் பிறகு அரசு நியமித்த எல்.எல்.ஆர். கமிட்டி தனது ரிப்போர்ட்டை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளது. அதன் பரிந்துரைகளை ஆலோசிக்க நாடாளுமன்ற தெரிவுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், டி.என்.ஏ. அதில் பங்கேற்கத் தயாராக இல்லை. தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த வேண்டாமா? தற்போது வட மாகாண சபைத் தேர்தல், இவ்வருட இறுதியில் வர இருக்கிறது. எனவே, தமிழ் மக்களின் இருண்ட காலம் முடிந்து போனது. இனி வசந்த காலம்தான். அதற்கு எங்கள் கட்சி துணை நிற்கும்” என்றார் அவர்.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நாங்கள் சந்தித்த கங்கா என்ற பஸ் ஆபரேட்டர், நாங்கள் துக்ளக் நிருபர்கள் என்றதும் மிகவும் சந்தோஷமாக எங்களை எதிர்கொண்டார். “உங்கள் ஆசிரியர் சோ இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் மட்டும் தீர்க்கதரிசியாக இருக்கவில்லை. இலங்கை அரசியல் குறித்தும் தீர்க்கதரிசியாக இருந்தவர். தமிழகமே உணர்ச்சிபூர்வமாக ஈழப் பிரச்னையை அணுகியபோதும், அவர் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். அதுதான் இன்றைக்குப் பலித்துள்ளது. துக்ளக் ஏட்டை புலிகள் இங்கு வரவிடாமல் செய்து விட்டார்கள். மீண்டும் துக்ளக் இங்கு கிடைக்க ஆவன செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் அவர்.
அதன் பிறகு நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஏ9 நெடுஞ்சாலையில் பயணமானோம். போகிற வழியில், நடைபெற்ற போரின் உச்சத்தையும், இன்னும் இருக்கும் மிச்சத்தையும் சொல்லும் சாட்சியாக அந்தக் காட்சி எங்கள் கண்களில் பட்டது.
(தொடரும்)
Aucun commentaire:
Enregistrer un commentaire