பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளை அவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் 24 மணி நேரமும் தங்கள் நேரடிப் பாதுகாப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகி வாழ்நாள் பூராவும் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க பெற்றோருக்கு அபாய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இன்று தொலைக்காட்சிகள், கையடக்கத் தொலைபேசிகள் ஊடாகவும் அனைவருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகளை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சமூகத்தில் தற்போது ஒழுக்கம் சீர்குலைந்து போயுள்ளது.10 முதல் 12 வயதான சிறுவர்கள் கூட இந்த தொலைக்காட்சி படங்களைப் பார்த்து தங்கள் அயல்வீட்டு தங்கைமாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் அளவுக்கு இன்று நிலைமை மோசடைந்துள்ளது என்று திருமதி திஸாநாயக்க தெரிவித்தார்.இப்போது நடைமுறையில் உள்ள சட்டம் வலுவில்லாமல் இருப்பதனால் தான் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்த அனோமா திஸாநாயக்க தற்போதைய சட்டத்தின் படி பாலியல் குற்றமிழைத்த ஒருவர் இரண்டு வாரங்களில் பிணையில் செல்வதற்கு சட்டம் இடமளிக்கிறது.
சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றமிழைத்தவர்களை கைது செய்து அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலதா மதப்படுத்துவதை விட நேரடியாக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு தயவு தாட்சண்யமும் இன்றி மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அதன் மூலமே எமது நாட்டின் சிறுவர் சமுதாயத்தை நாம் பாலியல் ரீதியில் காமுகர்களிடம் இருந்து காப்பாற்ற முடியுமென்றும் அனோமா திஸாநாயக்க கூறினார்.
தற்போது கவனிப்பாரற்ற நிலையில் உள்ள சிறு பிள்ளைகளை பிடித்துச் செல்லும் காமுகர்களின் கொட்டம் அதிகரித்திருக்கிறதென்றும் அவர்களில் இந்தப் பிள்ளைகளை ஏற்றிச் சென்று அவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த பின்னர் பாதைகளில் இறக்கிவிட்டு செல்கிறார்கள் என்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.இத்தகைய கொடியவர்களிடம் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire