இனி தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு - அதற்காக சர்வதேச ஆதரவினைத் திரட்டுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இலங்கையில் ஈழத் தமிழர்கள் சுமார் 30 விழுக்காட்டினர் உள்ளனர். 70 விழுக்காடு சிங்களவர்கள் என்பதாலும், பெரும்பான்மைப் பலத்தையே மூலாதாரமாகக் கொண்டு, அந்த மண்ணின் மைந்தர்களாகவும், அந்த நாட்டின் வளத்திற்காகவும் தங்கள் ரத்தம், வியர்வை இவற்றை தம் உழைப்பின் மூலம் தந்த ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, சிங்கள அரசுகள்மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டது.
கல்வி வாய்ப்புகள் ஈழத் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது; மொழி உரிமை நசுக்கப்பட்டது. அரசுப் பணிகளில் உத்தியோக வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தப் பட்டது. வடக்கு, கிழக்கு முதலிய முக்கிய பகுதிகளில் வாழ் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைத் திட்டமிட்டே பறித்தது சிங்கள அரசுகள்.
தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும்!
ஒரு கட்டத்தில் தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று தலைநகர் கொழும்பிலேயே விளம்பரப் பலகை வைக்கப்படும் அளவுக்கு சிங்கள இனவாதமும் அதன் விளைவான இனப் படுகொலை (Genocide)யும் நடந்தேறின. இதனால் உருவான உரிமைக் குரல் ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் முழக்கமாகக் கிளம்பியது.
ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் நாடாளு மன்றத்திற்குள் நுழைந்த ஈழத் தமிழரின் பிரதிநிதிகளுக் குள்ள உரிமைக் குரல்வளை நெரிக்கப்பட்டது.
அதனால்தான் - வோட்டு முறையைப் பயனற்றதாக்கிய சிங்களப் பேரினவாதம் - ஈழத் தமிழர் இளைஞர்களில் பிரபாகரன்களை உருவாக்கக் காரணமாகியது.
பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி, ஈழத் தமிழரின் தாகத்தை அடக்கிவிட, இராணுவ பலத்தின் மூலம் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது!
பிரதமர் இந்திரா காந்தியின் சரியான அணுகுமுறை!
இந்த நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட அந்நாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு - கலாச்சாரத் தொடர்புடையது என்பதாலும், ராஜதந்திர நோக்கில் வல்லரசுகளின் வல்லாண்மைக்கு நீர்ப் பாய்ச்சிட, இலங்கை திரிகோணமலை போன்ற பகுதிகளை மற்ற நாடுகளுக்குத் தளங்களாகப் பயன்படுத்தும் பேராபத்து உருவாகி, இந்தியாவின் இறையாண்மைக்கேகூட அச்சுறுத்தலாக அது அமைந்து விடக் கூடும் என்று கருதியதால் - மிகுந்த தொலைநோக்குணர்வுடன், இலங்கையில் ஜெயவர்த்தனே ஆட்சி நடைபெற்ற நிலையில், அங்குள்ள இளைஞர்கள் இந்திய மண்ணிற்கு வந்து ஆயுதப் பயிற்சி உட்பட பெறுவதற்கு அனுமதிக்கப் பட்டனர்.
தம்பி பிரபாகரன் தலைமை உருவானது எப்படி?
இது காலத்தின் கட்டாயமாகிறது. பல குழுக்களும் பயன் பெற்றன என்றாலும் தெளிவான சிந்தனை உறுதி, ஆற்றல் திறமை - தம்பி பிரபாகரன் தலைமையில் அமைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கே உண்டு என்பதை இறுதியில் உறுதி செய்து, ஈழத் தமிழர்கள் பெரும்பா லோரால் இயல்பாகவே இவர் மூலம் தான் தமிழ் ஈழம் தங்கள் தாகம் - தீர்வு என்பது உருவானது.
இதற்கிடையில் இலங்கையில் அரசு மாற்றங்கள் நிகழ்ந்தன. இராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அதிபர் ஜெயவர்த்தனே - ராஜீவ்காந்தி ஒப்பந்தம் (இந்திய - இலங்கை ஒப்பந்தம்) போடப்பட்டது. அப்போதே நம்மைப் போன்றவர்கள் இந்த ஒப்பந்தத்தினால் காதொடிந்த ஊசியளவும் பயன் ஏற்படப் போவதில்லை என்பதை விளக்கி, ஒப்பந்தத்தினை எரித்துப் போராட்டம் நடத்தினோம்.
விடுதலைப்புலிகளை அடக்க வேண்டியும், ஈழத் தமிழர்களின் உரிமைகளை நசுக்கவும் இலங்கை அரசியல் சட்டம் பலமுறை திருத்தப்பட்டு, பிரிவினை கேட்க முடியாது என்று சட்டம் செய்தனர். அதே பிரச்சினையில் தேர்தலுக்கு நின்ற கூருடுகு TULF என்ற தமிழர் அய்க்கிய முன்னணி 16இல் 15 இடங்களை வென்றும்கூட குரல் கொடுக்க முடியாத நிலை!
பிரதமர் ராஜீவுக்குத் தவறான வழிகாட்டுதல்கள்
பிரதமர் இராஜீவ்காந்திக்கு வழி காட்டியவர்கள் அந்நாள் பிரதமர் இந்திராகாந்தி அணுகுமுறைக்கு நேர் எதிரானதாகவே ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைத்தனர்.
ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க இயலாத வண்ணம் இந்திய அமைதிப்படை வடகிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு இந்திய அரசால் அனுப்பப்பட்ட தானது - ஒரு அதீதமானது. இதனைச் சரியாக பின்னர் உணர்ந்தே பிரதமராக இருந்த வி.பி. சிங் அவர்கள் அந்தப் படையை திரும்ப அழைத்த துணிவான முடிவை எடுத்தார்!
(எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற வெளிநாடுகள் தலையிடுவதா என்று கொக்கரிக்கும் சிங்கள அரசின் வீராதிவீரர்கள், இந்திய இராணுவத்தை அழைத்து, தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்கிட ஆயுதப் பறிப்பு முதல் பல்வேறு நிகழ்வுகளை அவை நடத்திட அனுமதித்ததை எவ்வாறு நியாயப்படுத்திட முடியும்?)
ராஜீவும் உணர்ந்தார் ஒரு கட்டத்தில்
ராஜீவ் காந்தி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, ஈழத்தில் நடைபெற்று வருவது இனப் படுகொலை தான் என்பதை அங்கே நாப்பாம் நெருப்புக் (Napalm) குண்டுகளை தமிழர் பகுதிகளில் வீசிய செய்திகளைக் கேட்டு, அதை தடுக்கும் மனநிலைக்கு வந்தார்; உண்மை நிலை அறியும் கால கட்டத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டது - மிகப் பெரிய கொடுமை மட்டுமல்ல; வரலாற்றுப் பிழையும், அதன் மூலம் தமிழர் வாழ்வுரிமைப் போரின் பின்னடைவும் ஏற்பட்டது. பிறகு இடையில் எத்தனையோ சங்கடங்களை எதிர்கொண்டாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வில் ஒருவகையான தேக்க நிலையும் உண்டானது என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.
வெண்ணெய் திரண்ட நேரத்தில்...
இதுவரை உலகில் எந்த ஒரு இராணுவத் தளபதியும் பெறாத ஆற்றலை மாவீரன் பிரபாகரன் பெற்று, கட்டுப்பாட்டாக தனது விடுதலைப்புலி இயக்கத்தின்மூலம் ஈழ உரிமைப் போரினை நடத்தினார். ஆனால் உலக அளவில், சர்வதேசிய மட்டத்தில் தேவையான ஆதரவைப் பெற வேண்டிய நேரத்தில், வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில் தாழி உடைந்தது போன்ற ஒரு விரும்பத்தகாத நிலையில், பல்வேறு தடைகள், பின்னடைவுகள், தவறான பிரச்சார மூட்டங்கள் சிங்களப் பேரின விதிகளைப் பலப்படுத்திடும் சூழல்கள் உருவாகின. இந்திய அரசு உட்பட பற்பல நாடுகள் - பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம், ஒழிக்க முயலுகிறோம் என்ற சாக்கில், ராஜபக்சே அரசு பல சர்வதேச உதவிகளைப் பெற்று, தமிழின ஒழிப்பை, ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பறிப்பை, தீவிரவாத ஒழிப்பு முகமூடியைப் போட்டுக் கொண்டு, மிகவும் லாவகமாக நடத்தி, இன்று பல லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசு. இராணுவக் கொடுமை உச்ச கட்டத்திற்குச் சென்று முள் வேலிக்குள்ளும், சிறைகளுக் குள்ளும் சிக்கியுள்ளவர்களுக்கு விரைவில் அரசியல் தீர்வு தருவோம் என்று பல நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, இந்திய மத்திய, அரசும் ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, சிங்கள அரசை வற்புறுத்தாது, மயிலே மயிலே இறகு போடு என்று கூறி இருதலைக் கொள்ளி எறும்பானது; தமிழின விரோத உணர்வாளர் களே இப்பிரச்சினையால் மத்திய அரசின் ஆலோசனைக் குழுவாக ஆனார்கள்.
இந்தப் பின்னணிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் நிகழ்கால, வருங்கால ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு இனி நாம் எத்தகைய ஆதரவு - வியூகம் வகுக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்!
ஜெனிவா தீர்மானம்
இனி அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; இனப் படுகொலை - மனித உரிமைகள் பறிப்பு - இவை இன்றைய உலக சூழ்நிலையில் எங்கே நடந்தாலும், சர்வதேச சமூகம் தன் கண்களை மூடிக் கொண்டு வாய்களைப் பொத்திக் கொண்டு, கைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் நிலை கிடையாது என்பது நடைமுறை உண்மை.
அதன் வெளிப்பாடு அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி.மூன் மூலம் மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசுமீது மேற்கொள்ளப்பட்ட ஜெனிவா தீர்மானம் போன்றதாகும். இது ஒரு துவக்கம்; சர்வதேசப் பார்வையும், பரிவும் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையின் மீது பட்டுள்ளன என்பதும் ஒரு திருப்பமே!
இதற்குப் பிறகும் இராஜபக்சேவின் மனப் போக்கும், அணுகுமுறையும் துளிகூட மாறவில்லை என்பது அவரது ஆணவம் கொப்பளிக்கும் அறிவிப்புகள் மூலம் தெளிவாக உலகத்தார்க்கும் இந்திய அரசுக்கும் புரிந்தாக வேண்டும்.
இனி கடைசித் தீர்வு என்ன?
ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தரவில்லை இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் என்று கூறி விட்டாரே!
இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசால் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றப்பட்ட (இலங்கை) அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி மாகாணக் கவுன்சில்களுக்கு (தமிழர் களுக்கு) முழு அதிகாரம் வழங்குவதாக இராஜபக்சே உறுதியளித்தார். இந்தத் திருத்தம்பற்றி இலங்கை அதிபரே என்னிடம் கூறினார் என்று இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இப்போது அறவே அதை மறுத்து விட்டார் ராஜபக்சே! இந்தக் குழுவால் எந்த ஒரு நல்ல விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை.
எனவே, இனி கடைசித் தீர்வு - தமிழ்யீழம் அமைக்கப்பட வெளியில் உள்ளவர்கள் சர்வதேச ஆதரவைத் திரட்டும் வகையில் செயல்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
மூன்றில் ஒரு பகுதியினர் தமிழர்கள்; அம்மக்களின் உரிமைகள் மதிக்கப்படவில்லை; சிங்களக் குடியேற்றம் ஒரு பக்கம்; தமிழர்கள் முள்வேலிகள் அகற்றப்படாமல் தொடர்ந்து வாடுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
வெறும் மருந்துகளால் முடியாத சிகிச்சையை சற்று மாற்றி, அறுவை சிகிச்சையாக நடத்தியாவது நோயாளியைக் காப்பாற்றிட வேண்டியது எப்படி மருத்துவர்களின் மனிதாபிமானக் கடமையோ, அதுபோல நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்புக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான் என்று முழங்கிட, முன் எடுத்துச் செல்ல தயங்கிடவே கூடாது.
இதை நாம் 25.3.2012 அன்றே ஒரு அறிக்கை வேண்டுகோளாக வைத்தோம்.
சர்வதேச சமூகத்தின் பார்வை இப்பிரச்சினைமீது (அய்.நா. தீர்மானம் மூலம்) விழுந்துள்ளதை ஒரு நல்வாய்ப்பாக எடுத்து, முதற்கட்டமாக ஒரு அறவழிப் பிரச்சாரத்தை அடைமழையாகச் செய்ய வேண்டும்.
மூத்த தலைவர் கலைஞரின் கருத்து முக்கியமானது
நேற்று முதல் நாள் (25.4.2012) தி.மு.க.வின் தலைவரும் இந்தியாவில் உள்ள மூத்த தலைவர் களில் ஒருவருமான நமது கலைஞர் அவர்கள், தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு உருவாக வேண்டியது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம்.
நமது குறி - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு நிரந்தரப் பரிகாரம் தேடுவதில்தான் இருக்க வேண்டும். தேவையற்ற விமர்சனங்களுக்கு இடம் தரக்கூடாது. இன எதிரிகளுக்குத் தான் அது தீனியாகி பிரச்சினை திசை திருப்பப்படும் ஆபத்து ஏற்பட்டு விடக் கூடும்.
எனவே விரைவில் துவக்கும் நல்ல முயற்சிக்கு தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள். நம்மிடை தேவையற்ற வாத - பிரதிவாதங்கள் தேவையில்லை; நாம் எடுத்துக் கூறும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்தை விரைவுபடுத்து வதாக இருக்கட்டும்!
தமிழ் ஈழமே தமிழர் தாகம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்