lundi 30 avril 2012

நெடுந்தீவை விடுவியுங்கள் ;ரணிலிடம் மக்கள் கோரிக்கை

நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்திருக்கும் கட்சி ஒன்று ஜனநாயக விரோத செயற்பாடுகள் மூலம் மக்களை அடிமைபோல நடத்துகிறது.

இந்த அடிமைத் தளையிலிருந்து நெடுந்தீவு மக்களை விடுவிக்க வேண்டும் என்று நெடுந்தீவு மக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் இந்தமுறை நடத்தவுள்ள மேதின நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று நெடுந்தீவுக்கு சென்றிருந்தனர். 

இதன்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கேட்டபோதே மேற்குறித்த கோரிக்கையை மக்கள் அவரிடம் முன்வைத்தனர்.

இதன்போது பொதுமக்கள் ரணிலிடம் தெரிவித்தவை வருமாறு: ஜனநாயக விரோத செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கட்சி ஒன்று நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்துக்கொண்டு மக்களை அடிமை போல நடத்தி வருகிறது.

இங்கு ஜனநாயகம் என்பது துளியளவும் இல்லை. குறித்த கட்சியின் உத்தரவுகளை மீறுபவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இதனால் நெடுந்தீவில் மக்கள் பீதியுடனேயே வாழ்கின்றார்கள்.

ஜனநாயகச் செயற்பாடுகளுக்காக இங்கு மாற்று அரசியல் கட்சிகள் வருவதைக் கூட அவர்கள் தடை செய்துள்ளனர். அதையும் மீறி வரும் கட்சிகள் மீது கடும் அழுத்தங்களை அவர்கள் மேற்கொள்வார்கள்.


இன்று எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் பயணிப்பதற்குக் கூட எவரும் வாகனங்களை கொடுக்கக் கூடாது என்று எம்மில் பலர் மிரட்டப்பட்டனர். இவ்வாறு அவர்களின் சொற்படி தலையாட்டும் மந்தைகளாகவே எம்மை நடத்துகிறார்கள். இல்லாவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

இப்போது இந்த உண்மைகளை உங்களிடம் தெரிவித்ததால் சில வேளைகளில் வெள்ளை வானிலோ அல்லது வெள்ளைப் படகிலோ நாங்கள் கடத்தப்படும் நிலையும் ஏற்படலாம். என்றனர். இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது, வடக்கில் குறிப்பாக நெடுந்தீவில் அரசியல் கட்சி ஒன்று மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதை நானும் அறிவேன்.

இங்கு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இந்த விடயம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனிவா மாநாட்டிலும் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையை நீக்க வழி செய்யுமாறு நெடுந்தீவுப் பொலிஸ் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன். நாடாளுமன்றத்திலும் இது பற்றி நான் தொடர்ந்தும் குரலெழுப்புவேன். வடக்கில் அபிவிருத்தி இடம்பெறுகிறது என்று வெற்றுப் பேச்சுக்காக மட்டும் கூறுவதை விடுத்து, உண்மையான அபிவிருத்தி இடம்பெற அரசு செயலாற்ற வேண்டும்.

தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறன. எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் ஆலோசனைகளை மதிக்காது மேற்கொண்டதாலேயே இந்தத் திட்டங்கள் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன.

மக்களை ஒன்றிணைப்பதன் மூலமே உண்மையான அபிவிருத்தியை அடைய முடியும். தென்பகுதி மக்களுக்கு உள்ள சுதந்திரம், உரிமையை வட பகுதி மக்களும் அனுபவிக்கவேண்டும். அதற்காகத் தான் மஹிந்த ராஜபக்ஷ என்ற அராஜக அரசுக்கு எதிராக மேதின ஆர்ப்பாட்டத்தை யாழில் நடத்துகின்றோம். நான் வடபகுதிக்கு அடிக்கடி வந்து செல்வதால் எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தென்னிலங்கையில் அரசு கதை கட்டி விடுகிறது.

இதன்மூலம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் பயங்கரவாதிகள் என்ற சாயத்தை அரசு பூசுவதன் மூலம் தென்பகுதி மக்களிடையே இனத்துவேசத்தை வளர்த்து மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்க அது முனைகிறது. தற்போதுள்ள விலைவாசியேற்றத்தை சமாளிக்கக் கூடிய வகையில் சம்பள உயர்வு, மக்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் இரு மாதங்களுக்குள் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளன.


சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு என்பது நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலமே பெறப்பட வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகள் இடம்பெற வேண்டுமாயின் அந்தக் குழுவில் அதற்கான சாதகமான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் மஹிந்த அரசு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேசியே இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியும். என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நெடுந்தீவுப் பயணத்தில் ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire