dimanche 22 avril 2012
இந்திய நாடாளுமன்றக் குழுவின் கிழக்குப் பயணமானது எம்மைப் பொறுத்தவரையில் அர்த்தமற்ற ஒன்றாகவே போய்விட்டது
இந்தியாவில் இருந்து வருகைதந்த இந்திய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பிற்கு வந்து பாதிக்கப்பட்ட எந்தப் பொதுமக்களையும் சந்திக்காது இரண்டு வைபவங்களில் மட்டும் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்றமை கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
இந்திய குழுவினர் இந்தியாவில் இருந்து வெளியேறும் போது 'வடக்கு , கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களையும் மீளக்குடியேற்றப்படாதவர்களையும் பார்வையிட்டு அவர்களின் நலன்களை விசாரிக்க வருகின்றோம்" என அறிவித்து இங்கு வந்தனர். ஆனால் கிழக்கிற்கு விஜயம் செய்த இவர்கள் பொதுமக்கள் எவரையும் சந்திக்காது இரண்டு வைபவங்களில் பங்கேற்று விட்டு திரும்பி விட்டனர். இது எம்மைப் பொறுத்தவரை கவலையளிக்கின்ற விடயமாகும்.
குறிப்பாக கிழக்கிற்கு வரும்போது திருகோணமலையில் முதூர் பிரதேசத்தின் சம்பூரில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் நலன்புரி முகாம்களிலும்;, இடைத்தங்கல் முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 1268 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி, பட்டிதிடல், மணற்சேனை ,கட்டைப்பறிச்சான் ஆகிய கிராமங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலேயே கடந்த 3 வருடங்களாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களையாவது இந்திய நாடாளுமன்றக்குழு பார்வையிட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குத் தவறிவிட்டார்கள். இந்திய நாடாளுமன்றக் குழுவின் கிழக்குப் பயணமானது எம்மைப் பொறுத்தவரையில் அர்த்தமற்ற ஒன்றாகவே போய்விட்டது என்றார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire