செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று புதிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திறப்பு விழா இன்று (02.04.2012) வைத்தியஅதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு இவ் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந் நிகழ்வில் முதல்வர் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டுவருகின்ற இவ்வேளையில் கிராமப்புறங்கள் நோக்கியும் சுகாதார சேவைகள் விரிவுபடுத்தப்படவேண்டும். அதனடிப்படையில் நாம் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் எமது கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் இவ்வேளையில் எமது மக்களின் சுகாதார நலன் விடயங்களிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது அதன் அடிப்படையிலேதான் நாமும் செயற்பட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களை நோக்கிய சுகாதார வசதிகளை மேம்படுத்துகின்ற நடவடிக்கைகள் இன்றைய தேவையாக இருக்கின்றது. கடந்த காலங்களில் கிராமப்புறங்களிலே வாழ்கின்ற எமது மக்கள் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்ததனை நாம் அறிவோம். கிராமப்புறங்களிலே பல கர்ப்பிணித் தாய்மார்கள் தமது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக நீண்டதூரம் பயணம் செய்து வெயிலிலே அலைந்து திரிகின்ற நிலைமை கடந்த காலங்களில் இருந்தது. அவ்வாறான நிலை இனிமேலும் எமது மக்களுக்கு ஏற்படக்கூடாது. இதில் நாமும் உறுதியாக இருக்கின்றோம். அதனடிப்படையில் நாம் ஜனாதிபதிக்கும் நன்றி கூறவேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது மக்களுக்காக சுகாதாரத்துறை சார்ந்த பல திட்டங்களை ஜனாதிபதி அவர்கள் செயற்படுத்தி வருகின்றார். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நகரப் புறங்களில் எவ்வாறு சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ அதே போன்று கிராமப்புறங்களிற்கும் விஸ்தரிக்க வேண்டும் என்பதற்காக நாமும் செயற்பட்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சதுர்முகம் பிரதேச செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகளும் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire