dimanche 1 avril 2012
11.88 லட்சம் வீடுகளில் ஆட்களே இல்லை
திருவனந்தபுரம்: யாருமே வசிக்காமல், கேரளாவில் 11 லட்சத்து 88 ஆயிரம் வீடுகள் பூட்டியே கிடக்கின்றன என, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.கேரளாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, இயக்குனர் டாக்டர் வி.எம்.கோபாலமேனன் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கேரளாவில் 1 கோடியே 12 லட்சம் வீடுகள் உள்ளது தெரியவந்தது. கடந்த பத்தாண்டுகளில் மாநிலத்தில் வீடுகளின் எண்ணிக்கை 19.9 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. மாநிலத்தில் கிராமப்புறங்களில் 58 லட்சத்து 57ஆயிரத்து 785 வீடுகளும், நகர்ப்புறங்களில் 53 லட்சத்து 60 ஆயிரத்து 68 வீடுகளும் உள்ளன. இதில், ஆள் நடமாட்டம் இல்லாது 11 லட்சத்து 88 ஆயிரத்து 144 வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதில் அதிகமாக, எர்ணாகுளம் நகரில் மொத்தமுள்ள 11 லட்சத்து 74 ஆயிரத்து 691 வீடுகளில், 1 லட்சத்து 36 ஆயிரத்து 722 வீடுகள் ஆட்கள் வசிக்காமல் பூட்டிக் கிடக்கின்றன.இதற்கு
அடுத்தப்படியாக, திருவனந்தபுரத்தில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 968 வீடுகள் காலியாக கிடக்கின்றன. மாநிலத்தில், 90 சதவீதம் வீடுகளில் வீட்டு உரிமையாளர்களே வசித்து வருகின்றனர். பத்து சதவீதம் வீடுகள் மட்டுமே குடியிருப்பு, வணிகம் போன்றவற்றிற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், வாடகை வீடுகள் அதிகளவில் எர்ணாகுளத்தில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் திருவனந்தபுரம் உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள வீடுகளில் 30 சதவீதம் வீடுகளில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், ஒன்பது உறுப்பினர்களை கொண்ட அதிகளவு வீடுகள் மலப்புரம், காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் காணப்படுகின்றன. மாநிலத்தில் 74.2 சதவீத வீடுகளில் வசிப்போருக்கு வங்கி கணக்கு வசதி உள்ளது. மேலும், 90 சதவீத வீடுகளில் தொலைபேசி வசதியும் உள்ளது.இவ்வாறு கோபாலமேனன் தெரிவித்தார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire