mercredi 25 avril 2012
தனித் தமிழ்ஈழத்திற்கு குறைவான எதையும் ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்
தனித் தமிழ்ஈழத்திற்கு குறைவான எதையும் ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கே.ரங்கராஜனுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவின் தலைவர் சுஸ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ரி.கே. ரங்கராஜன், இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப் போல சொல்லியிருக்கிறார்.
1987ல் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகார பரவல் ஏற்படுத்தி கொடுக்க முடியும்.
ஆனால் அந்த திருத்தத்தை அரை மனதுடன் ஏற்று கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவாக்கி வருகிறது.
அதனால் தான் இன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இலங்கையில் தமிழர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும் இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும் சாத்தியம் தானா என்று வினவியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
கடந்த ஜனவரியில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்படுமென அதிபர் ராஜபக்ச உறுதியளித்து விட்டு கிருஸ்ணா இந்தியாவுக்கு திரும்பும் முன்பே அப்படியொரு உறுதியை தான் அளிக்கவில்லையென ராஜபக்ச மறுத்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முழுமையான பேச்சுக்களுக்குப் பிறகு, நாடாளுமன்றக் குழுவை அமைத்து ஒப்புதல் பெறலாமென்று ராஜபக்ச கூறியிருந்தும் கூட அவர் சொன்னதற்கு மாறாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுக்களிலிருந்து இலங்கை அரசு தன்னிச்சையாக விலகிக் கொண்டதென்றும் இப்படி வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினையும் சுட்டிக்காட்டி சுரேஸ் பிறேமச்சந்திரன் விவரித்திருக்கிறார்.
இலங்கை சென்று வந்த இந்த இந்தியக் குழு வெளியிட்டிருக்கும் செய்திகளில் இருந்து முள்வேலி முகாம்களிலும் சிறைக் கொட்டடிகளிலும் ஆயிரமாயிரம் தமிழர்கள் இன்னமும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பற்றிய தகவல்கள் கூட இல்லை என்பதும் தெரிகிறது.
இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள் என்று ரங்கராஜன் சொல்லியிருக்கிறார்.
தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே.ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன்.
1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து தனித் தமிழ் ஈழம் தான் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில் போட்டியிட்டார்கள்.
தமிழ்ப் பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். தனித் தமிழ் ஈழம் தான் என்பது 1977ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு.
ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.
இலட்சக்கணக்கான தமிழர்கள் சொந்த நாட்டில் தமது உடைமைகளை இழந்து, உறவுகளைத் துறந்து, உலக நாடுகளின் தெருக்களில் அனாதைகளாகவும், அகதிகளாகவும் கதி கலங்கி கண்ணீர் சிந்தியும் மிகப் பெரிய விலையைத் தந்து விட்டதாலும் இலங்கைத் தமிழர்கள் தனித் தமிழ் ஈழத்திற்குக் குறைவான எதற்கும் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதற்கோ, சமாதானப்படுத்திக் கொள்வதற்கோ ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள்.“ இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire