jeudi 5 avril 2012
நார்வேயில் வாழும் இலங்கைத் தமிழ்க் குடும்பமொன்று, தமது குழந்தைகளை அந்நாட்டு சிறார் பராமரிப்பு அதிகாரிகள் தம்மிடம் திருப்பித் தரமறுப்பதாக முறைப்பாடு செய்திருக்கிறது.
தமது 12 வயது பெண்பிள்ளையை அடித்து தண்டித்த சம்பவத்தின் பின்னரே, பள்ளிக்கூடத்திலிருந்து தமது மூன்று பிள்ளைகளையும் அதிகாரிகள் அழைத்துச் சென்றுவிட்டதாக நார்வே குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 3 குழந்தைகளின் தாயான ஜெக்லின் டிலாந்தினி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுவது, ஒரே அறையில் உறங்கச் செய்வது போன்ற பழக்கங்கள் தவறானவை என்றும் அதிகாரிகள் கூறுவதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூர் நீதிமன்றமொன்று, தமது பிள்ளைகளை சிறார் பராமரிப்பு நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ் கலாசார முறைப்படியே வளர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், பல வாரங்களுக்கு ஒரு தடவையே தமது குழந்தைகளை பார்க்க அனுமதிக்கப்படுவதாகவும் பிள்ளைகளின் தாய் தெரிவித்தார்.
தமது 12 வயது மற்றும் 8 வயது பெண்பிள்ளைகளும் 6 வயது ஆண்பிள்ளையும் இவ்வாறு 5 மாதமாக தம்மிடமிரு்து பிரிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர்.
பிள்ளைகள் நார்வே பிரஜைகள் என்ற போதிலும் தான் இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் நார்வேயிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஜெக்லின் டிலாந்தினி கூறினார்.
கலாசார ரீதியான கருத்துமுரண்பாடு தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்றும் அவர் முறையிட்டார்.
ஆனால், இந்தியப் பெற்றோர் சம்பந்தப்பட்ட இவ்வாறான பிரச்சனையொன்றின் போது, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்ட பின்னரே தாம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக நார்வேயின் சிறார் நல பாதுகாப்புத் துறையினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire