mercredi 11 avril 2012
உயிருடன் இருந்தபோது பிரபாகரனால் பெற்றுத் தரமுடியாத தமிழீழத்தை, அவரது வெற்றுடலை வைத்துப் பெறலாம் என்று நினைக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
மருதமுனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ச அரசுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றியதாக புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப்பெரிய விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்த போது, தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்ட ரவூப் ஹக்கீம், கம்பன் விழாவில் உரையாற்றுவதா, அந்த விழாவைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை.
விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையின் மீது சுமத்த ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் ஆள் தேடும் வேட்டைக்கு நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாதது சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக, அவசரப்பட்டு கொண்டு வரப்படும் தீர்மானத்தால் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடைய முடியாது.
இது சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு துருவப்படுத்தப்படப் போகிறது என்று தான் ஜெனிவாவில் கூறினோம். அது தான் இன்று நடந்துள்ளது.
இரண்டு பக்கங்களிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தை பெற்றுத்தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் அதனை பெற்றுத்தரும் என்று புலம்பெயர் தமிழர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜெனீவாவில் இந்தியா, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது எல்லா சமூகங்களிடையேயும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire