மற்றவர்களுக்கு சொந்தமான வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தனியார் வங்கிகளிலிருந்து சுமார் மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக பெற்ற ஐந்து சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்வேறு பிரதேசங்களில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 46 வங்கி அட்டைகளையும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு தொகையையும் சி. ஐ. டி. யினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
பல்வேறு பிரதேசங்களில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 46 வங்கி அட்டைகளையும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு தொகையையும் சி. ஐ. டி. யினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
மிகவும் சூட்சுமமான முறையில் பண மோசடிகளை மேற்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தர்மபுரம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, புதுக்குடியிருப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேக நபர்களையே கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சி. ஐ. டியினரால் கைது செய்யப்பட்ட மேற்படி மோசடி கும்பலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: 2012 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி காலை 9.00 மணி நேரமளவில் பிரான்ஸ், கனடா வங்கிகளினால் விநியோகிக்கப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி ஏ. ரி. எம். இயந்திரங்கள் மூலம் 3 கோடி 28 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா பணம் மோசடியாக பெறப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த சி. ஐ. டி.யினர் மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடியாக தன்னியக்க இயந்திரங்களிலிருந்து வங்கி அட்டைகளை பயன்படுத்தி பெறப்பட்டுள்ளமை உறுதி செய்துள்ளனர்.
இதனை அடுத்து விசாரணைகளை பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வந்த சி. ஐ. டி.யினர் சுமார் ஒரு வருட காலம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் வைத்து தர்மபுரம், பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடமிருந்து 46 வங்கி அட்டைகளையும் அவர்களது வங்கிக் கணக்குகளிலிருந்து 19 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி புதுக்கடை 3 ஆம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவரது கள்ளக் காதலியான களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 14 இலட்சத்து 86 ஆயிரத்து 797 ரூபா பணத்தையும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 89 இலட்சத்து 27 ஆயிரத்து 811 ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire