dimanche 7 juin 2015

"அணைப்பும் கைகோர்த்தலும்... காமமல்ல !"மீனா சோமு

சிறுவயதில் ஏனோ இந்த ஸ்பரிசத்தால் உணரும் அன்பை அனுபவிக்க நிறைய மனத்தடை இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அண்ணாவின், அக்காவின், தோழியின், கைகளை கோர்த்துக் கொண்டு கதைக்கனும்னு தோணும். ஆனால் செய்ததில்லை. செய்ய முடிந்ததில்லை. தொடுதலில் ஏன் இத்தனை தயக்கமும் கட்டுப்பாடும் ? இது எப்படி என்னுள் விதைக்கப்பட்டதுன்னு தெரியல. ஒரு 10வயசுக்கு அப்புறம் தொடுதல் குறித்த அதிகபட்ச கட்டுப்பாடுகள் வளர்ப்பில் நுழைக்கப்பட்டதா ஞாபகம் இல்லை.

குட் டச், பேட் டச் பற்றி பேசுமளவு மாறிய காலத்தில் தொடலுக்காக ஏங்கிய சிறுபெண்ணின் மனநிலையை சொல்லுவது ஒருவிதத்தில் இன்றைய பெற்றோர்களுக்கு தேவைப்படுமா என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த பதிவை எழுதவேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். தொடுதல் காமம் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்பட்ட காலத்தில் பிறந்ததாலோ என்னவோ ஸ்பரிச பரிமாற்றம் என்ற இயல்பான ஒன்று தவறாகவே திரிக்கப்பட்டிருந்தது.அன்னையின் மடி கூட ஒருவயதுக்கு பின் கிட்டவில்லை. எளிமையான உணர்வுகளை தேவைகளை என் பெற்றோர் காலம் தடைசெய்து காமாலை கண்களோடு பழகி விட்டிருந்தது.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களால் பன்முகத்தன்மையோடு மேற்கத்திய பண்பாடுகளையும் கொண்ட கல்லூரியில் படித்தபோது.. முதல் செமஸ்டர் விடுமுறையில் அணைப்போடு விடைகொடுத்த தோழியின் அணைப்பிற்குள் நெளிந்து விலகியது இன்றும் ஞாபகமிருக்கிறது. கை குலுக்கக்கூட இன்றுவரை ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

நேசம் குறித்த புரிதல் தெளிவு தேவை எல்லாம் தெளிந்தபின்னும் ஊறிக்கிடக்கும் இந்த மனத்தடை இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு தானிருக்கிறது. என் தோழி சட்டென்று சகதோழிகளை அணைத்து கைகுலுக்கி அன்பை வெளிப்படுத்துவதை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்ப்பதுண்டு. மிக நெருக்கமான கல்லூரி தோழிகள் ஓரிருவர் தவிர யாரிடமும் ஸ்பரிசத்தினை பகிர்ந்ததில்லை என் தங்கை உட்பட. இதில் சகோதரர்கள் ஆண் நட்புகள் எல்லாம் எங்கே ?!

"முத்தம் என்பது காமமல்ல" என ஆண், தன் பெண்குழந்தைக்கு முத்தமிடும்போது உணர்ந்ததாக சொல்லும் அந்த வரிகள் என்னை வசீகரிக்கவில்லை. மாறாக கோபம் வந்தது. அந்த வரிகள் அருவருப்பாக, இந்த சமூகத்தின் போலி பிம்பத்தை பல்லித்துக் காட்டியது. அன்னையை தந்தையை சகோதரியை சகோதரனை தோழியை தோழனை யாரையும் முத்தமிடவோ அணைக்கவோ கைகோர்த்து கதைபேசவோ அனுமதிக்காத பண்பாட்டு சிறையான இந்த சமூகத்தில், தொடுதலினால் பகிர்வது காமமாக மட்டுமே இருப்பது அருவருப்பானதும் உண்மைக்கு விரோதமானதுமாகும். இயற்கையான தேவை காமம் மட்டுமல்ல. இப்படி அன்பானவர்களோடு பகிரும் அணைப்பும் கூட தான்.

இப்போது ஓரளவு இந்த தயக்கங்கள், பண்பாட்டு தடைகள் மீறிய சமூகம் உருவாகி வருகிறது. இருந்தாலும் பெரிய மாற்றங்கள் இல்லை. இயல்பான இத்தேவைகளை மதிக்காத இந்த சமூகத்தில், காமத்தை மட்டுமே பூதாகரமாக்கி மற்ற ஆண்-பெண் உறவை கொச்சை படுத்துகிறோம். இது ஒரு ஆரோக்கியமான மனநிலையா ?

ஆனால் நம் கலாச்சார காவலர்கள் பொங்கி வகுப்பெடுப்பார்கள் ஆணையும் பெண்ணையும் எவ்வளவு தூரத்தில் பழக வேண்டுமென்று. முரண்பாடான சமூகமிது ஒழுக்கம். ஆண் - பெண் நட்பை அனுமதிக்காமல் சிறு வயதிலிருந்தே தனிதனிப்பள்ளிகள் , கல்லூரிகள் என பிரித்து பிரித்து ஆரோக்கியமான உறவு உணர்வுகளை வளர்க்க, மதிக்க கற்றுத்தருவதில்லை.இதில் அதற்கு அடுத்த படிநிலையான அன்பின் பரிமாற்றமான தொடுதலின் வழியை எங்கே உணர்த்த ? கமலின் கட்டிபுடி வைத்தியமாக கிண்டலடிப்படலாம் !

இதை பற்றி எழுத முக்கிய காரணமுண்டு, தொடுதலை அணைப்பை கைகோர்ப்பை இயல்பாக உணரவும் வெளிப்படுத்தவும் அனுமதிக்கப்பட்டால்... பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. ஸ்பரிசம் என்பது காமத்தின் தேவை மட்டுமல்ல அன்பின் பரிமாற்றமும் என்ற உணர்தல் ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்.

ஆனால் இப்போது காலம் மாறிவருகிறது... கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. நானும் கூட தான். என் சிந்தனைகள் என்னில் புகுத்தப்பட்டிருந்த தடைகளை தளர்த்தி இருக்கிறது போலும். அண்மையில் சித்தியின் மகளான என்குட்டிதங்கையின் வயிற்றில் கைபோட்டு மென்மையாய் அவளை அணைத்தபடி உறங்கினேன். அந்த பாசப் பகிர்வுக்கு, ஆயிரம் வார்த்தைகள் ஈடில்லை !              

Aucun commentaire:

Enregistrer un commentaire