வங்கதேசத்தில் 8 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 509 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா அருகே ராணா பிளாசா என்ற 8 மாடி வணிக வளாகக் கட்டடம் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது. தொடர்ந்து பத்தாவது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இடிபாடுகளிலிருந்து வெள்ளிக்கிழமை 63 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து சாவு எண்ணிக்கை 509 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. என்ஜினீயர் கைது: கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கில் அப்துர் ரசாக் கான் என்ற என்ஜினீயரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அதன் உரிமையாளருக்கு இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உரிமையாளரும் கட்டுமான அதிபர்களும் அதைப் பொருள்படுத்தாமல் மேலும் மூன்று மாடிகளைக் கட்டியுள்ளனர். அதையடுத்து என்ஜினீயர் அப்துர் ரசாக் கானும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்டடம் இடிந்து விழுந்தவுடன் தலைமறைவான அவரை வெள்ளிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, இந்த வழக்கில் இரண்டு என்ஜினீயர்கள், கட்டுமான அதிபர்கள், சாவர் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Aucun commentaire:
Enregistrer un commentaire