வட மாகாண சபைத் தேர்தல் 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தி ஹிந்து பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் முறையான தேர்தல் ஒன்றை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் தேர்தலை நடத்தவென தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. யுத்தம் முடிந்துள்ள நிலையில் இன்னும் மக்கள் வட பகுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய காணிகளை கோருகிறார்கள். தேர்தல் சட்டங்கள் ஊடான பிரச்சினை அங்கு உள்ளது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அடுத்த பிரச்சினை. சர்வதேச உதவியுடன் இச்செயற்பாடுகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளோம். வாழ்வாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
தேர்தலின் பின்னர் அங்கு அரசியல் தீர்வு பிரச்சினை தீர்க்கப்படும். 1987ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவான 13ம் திருத்தத்தின் மூலம் அது சாத்தியப்படும். அதிகாரப்பகிர்வு, நம்பகத்தன்மை என்பவற்றை அது கொண்டுள்ளது. 13வது திருத்தம் அனைத்து மதத்தவர்களுக்கும் ஏற்றது. எல்லா மாகாணங்களுக்கும் உகந்தது.
வடக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மக்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தேவையான பகுதிகளில் மாத்திரம் இராணுவத்தை நிறுத்துமாறு இராணுவத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
2009 கவுன்ஸிலில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அதனால் இந்தியாவின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தி ஹிந்து பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் முறையாக 13 பிளஸ் என்பதற்கு ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
“நான் 13 பிளஸ் எனக் கூறினேன். செனட் சபை அமைப்பதற்கா என சிவ் சங்கர் மேனன் கேட்டார். நான் ஆம் என்றேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் செனட் சபை உருவாக்கி அதன் மூலம் செயற்பட வேண்டும். இதற்குத் தான் பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமாகிறது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்திய மீனவர்கள் குறித்து தி ஹிந்து பத்திரிகை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்த நிலையில், ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருடன் அத்தருணமே தொலைபேசியில் தொடர்புகொண்டு அது தொடர்பில் தகவல் அறிந்து கொண்டார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire