இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு கடல்மூலமாக ஆட்களைக் கடத்திச்செல்லும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலங்களில், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக படகுகளில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான வெள்ளத்தம்பி சுரேஸ்குமார் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதாக காவல்துறை தெரிவிக்கின்றது.
சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுத் துறையினர், இவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக காவல்துறை பேச்சாளரான அஜித் ரோகண தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 700 பேர்வரை இந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
இந்த மாதத்தில் மட்டும் சுமார் 380 பேர்வரை காவல் துறையினராலும் கடற்படையினராலும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் சுமார் 300பேர் கிழக்கு மாகாணத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire