jeudi 5 juillet 2012

கைதி அடித்துக்கொலை; பலரின் நிலை பரிதாபம்



இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டுகிறார்.
வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரை பிடித்து வைத்து போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் மகர சிறைச்சாலையில் இன்று புதன்கிழமை பார்வையிட்டனர்.

இவர்களில் ஆறுபேர் மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களது நிலைமை மோசமானதாக இருப்பதாகவும் அவர்களைப் பார்வையிட்ட நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் கூறினார்.
மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு கைதியான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் (28 வயது) இன்று அதிகாலை அங்கு உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் அவரது உடல் றாகம அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதுதவிர, மேலும் நான்கு பேர் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருக்கின்றார். ஏனைய மூவரில் ஒருவருக்கு இரண்டு கால்களும் அடித்து முறிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றொருவருக்கு ஒரு கால் அடித்து முறிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவருடைய காலில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை மற்றுமொருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகர சிறைச்சாலையில் காயமடைந்த நிலையில் 16 பேர் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

'சிறை உயரதிகாரி முன்னால் தாக்கப்பட்டனர்'


அத்துடன் கண்டி போகம்பறை சிறைச்சாலையிலும் இருவர் இருப்பதாகவும், இவர்கள் அனைவருமே வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்கள் பணயம் வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கண்ணீர்ப்புகையால் மயக்கமடைந்ததன் பின்னர் கம்புகள், தடிகளினால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உயர் சிறையதிகாரியின் முன்னிலையில் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டதாகவும் தங்களைச் சந்தித்த கைதிகள் அனைவரும் தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு மோசமான முறையில் தாக்கப்பட்டிருப்பது பாரதூரமான மனித உரிமை மீறல் என்று வர்ணித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கென பல்வேறு அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள விசேட குழுவொன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மகர சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இரண்டு தினங்களாக சட்டத்தரணிகள் முயற்சித்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்தள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற காரணத்தினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, மகர சிறைச்சாலையில் காயமடைந்த நிலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை தற்போதைய நிலைமை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire