வவுனியாவில் அண்மைக்காலமாக குளக்கட்டுக்களில் இளைஞர்களின் தீய செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக கிராமவாசிகள் குற்றம்சுமத்துகின்றனர். வவுனியாவின் தாண்டிக்குளம், பாவற்குளம், மருக்காரம்பளை குளம் ஆகியன உட்பட பல குளங்களுக்கருகில் இவ்வாறாக இளைஞர்கள் குழுவாக இணைந்து மது அருந்துவது மற்றும் பல்வேறான தீய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இளைஞர்கள் இவ்வாறு செயற்படுவதனால் அக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது தேவையின் பொருட்டு குளங்களுக்குச் செல்ல முடியாதிருப்பதாகவும் இளைஞர்கள் சில வேளைகளில் உடைகளை கழற்றி விட்டு நின்று நடனமாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் குறிப்பாக பெண்கள் குளங்களுக்கு செல்ல முடியாதிருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் கிராமவாசிகளுடன் முரண்படும் தன்மையில் இவ் இளைஞர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இதேவேளை மது அருந்திய பின் வெற்றுப்போத்தல்களை குளங்களுக்குள்ளும், வெளியிலும் உடைத்துப் போடுவதனால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் நீராடச்செல்பவர்கள் பலத்த காயமடைவதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமெனவும் அதன் மூலமே கிராமத்தவர்கள் நிம்மதியாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire