இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை, தமிழ் அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைதி ஒருவர் உயிரிழந்தமை போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து மன்னார் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதற்கான அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருந்தது.
கடற்படையினரின் பாஸ் - அனுமதியின்றி கடலுக்குள் மீனவர்கள் இறங்க முடியாதுள்ளதால் தாம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடல் நீர் மட்டம் குறைந்துள்ள, கோடையுடன் கூடிய காற்றுக் காலத்தில் மீனவர்கள் தமது கிராமங்களில் உள்ள துறையில் இருந்து கடற்படையினரின் சோதனைச்சாவடி அமைந்துள்ள படகுத்துறைக்கு தமது மீன்பிடி படகுகளுடன் சென்று பாஸ்-அனுமதி பெற்ற பின்னரே கடலுக்குள் செல்ல முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
இதனால் உரிய நேரத்தில் தொழிலுக்குச் செல்ல முடியாதுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, சன்னார், முள்ளிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளில் இருப்பதனால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறியும் சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ, சொந்தக் காணிகளில் விவசாயம் செய்யவோ முடியாதிருக்கின்றது.
எனவே, பொதுமக்களின் காணிகளை விட்டு இராணுவத்தினர் வெளியேறி இயல்பு வாழ்க்கைக்கு வழி செய்யவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் நவ சமசமாஜ கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.
அத்துடன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும், தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் மரணத்தையும் வன்மையாக அவர்கள் கண்டித்திருக்கின்றனர்.
மக்களின் உரிமைக்கான இத்தகைய போராட்ட.ங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire