vendredi 6 juillet 2012

தமிழன் என்றால் எப்படியும் கொல்லலாம், எப்படியும் நடத்தலாம். இதுதான் இலங்கையில்


தமிழன் என்றால் எப்படியும் கொல்லலாம், எப்படியும் நடத்தலாம். இதுதான் இலங்கையின் அதிகார வர்க்கத்தின் நடைமுறை. இன அடையாளம் மட்டும் போதும், அவர்களைத் தண்டிப்பதற்கான உரிமையை வழங்குகின்றது. நாட்டின் சட்டம் நீதி எல்லாம் தமிழனுக்கு கிடையாது என்பது, பொது நடைமுறை. தாம் அடித்தே கொன்ற பிணத்தைக் கூட, கொடுக்க மறுக்கும் அளவுக்கு தங்கள் இனவாதக் கொடூரங்கள் மூடி மறைக்கின்றது அரசும் நீதித்துறையும். நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த அரசு தான், தாம் கொன்ற பிணம் கூட நாட்டின் அமைதியைக் கெடுக்கும் என்று கூறுகின்றது. இந்த நிலையில் காணமல் போன 15 ஆயிரம் பேரின் விபரத்தை, சர்வதேச மனிதவுரிமை அமைப்பு இலங்கையிடம் கோருகின்றது.
தமிழன் என்றால் எந்த ஒரு குற்றமுமின்றி, குற்றச்சாட்டுமின்றி வருடக்கணக்கில் சிறையில் வைத்திருக்க முடியும். இதை இலங்கை நீதிமன்றங்கள் அங்கீகரிக்கின்றன. இப்படிப்பட்ட இனப்பாகுபாடு கொண்ட நீதிமன்றங்கள், சிறைக்கூடங்கள் தமிழ் மக்களை வகை தொகையின்றியும், காரணமின்றியும் வதைக்கின்றன. தங்களிடம் சரணடைந்தவர்கள் எங்கு உள்ளனர் என்பது தொடங்கி, தாங்கள் கைது செய்துவைத்துள்ளவர்களின் விபரங்களைக் கூட வருடக் கணக்கில் வெளியிடாது அவர்களைக் கொன்று வருகின்றது பேரினவாத அரச பயங்கரவாதம்.
இந்த நிலையில் தான் தம் மீதான அடக்கு முறைக்கு எதிராக சிறைக் கைதிகள் போராடுகின்றனர். வெளியில் ஒன்றுணைந்து போராடுவதற்கு உள்ள சுதந்திரத்தை விட, சிறையில் ஒன்றிணைந்து போராடும் வண்ணம் ஒடுக்குமுறையும் ஒன்றிணையக் கூடிய சூழலும் காணப்படுகின்றது. இது இயல்பாக பாசிச அரசிற்கு எதிராக வெடிக்கின்றது.                    சட்டத்திற்கு புறம்பான கைதுகள் மற்றும் நீதி விசாரணையற்று அடைத்து சித்திரவதை செய்து கொல்லும் ஒரு நாட்டில், சிறைகள் என்பது சட்டவிரோதமாகவே இயங்குகின்றன. 1983 ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை திட்டமிட்டு கொன்ற இந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசுதான், இன்று தமிழ்க் கைதிகளை அடித்தும் துவைத்தும் கொன்று இருக்கின்றது.
இனி இது இறந்தவர்களின் குற்றம், போராடியவர்களின் குற்றம் என்று விதவிதமாக அரசியல் விளக்கம் சொல்லும் எல்லைக்குள், பேரினவாத அரச பயங்கரவாதம் உலகறிய  இயங்குகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு மட்டுமல்ல, இது போன்ற உலகறிந்த குற்றங்களுக்கு கூட நீதி விசாரணை கிடையாது. இதுதான் நாட்டின் பொது நடைமுறையாகிவிட்டது.
போராடுபவர்களை அடித்துக் கொல்ல, இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றதோ? அரசு படைகள் என்றால், தமிழர்களை தண்டிக்கும் உரிமை பெற்றவர்களோ? தாங்கள் கொன்ற பிணத்ததைக் கூட, தரமறுக்கும் சுதந்திரமா இலங்கையில் சுதந்திரம்?
யுத்தத்தின் பின்னான இலங்கையில் போராடுவதை தவிர வேறு அரசியல் மார்க்கம் தமிழ் மக்களுக்கு இல்லை என்பதைத்தான், இந்த கொலை மூலம் அரச பயங்கரவாதம் பறைசாற்றுகின்றது. இதன் அரசியல் எதிர்வினை தனிநபர் பயங்கரவாதமாக மீண்டும் பரிணமிக்கும் அரசியல் எல்லைக்குள் தான், இன்று பொது அரசியல் சூழல் காணப்படுகின்றது.
அரசு இன்று இதைத்தான் விரும்புகின்றது. தன்னை நியாயப்படுத்த, தன் இராணுவ பாசிச குடும்ப சர்வாதிகாரத்தை தொடர்ந்து நிலை நிறுத்தும் வண்ணம், தமிழ் மக்களின் மேல் எதிர் வன்முறையை தூண்டுகின்றது. இந்த வகையில் தன்மீது தனிநபர் பயங்கரவாத தாக்குதலை நடாத்துமாறு, அரசு பயங்கரவாதம் கோரி நிற்கின்றது.
இந்த அரச பயங்கரவாதம் தன்மீதான வன்முறையினை நாடி நிற்கின்ற நிலையில், தனிநபர் பயங்கரவாத எதிர்வினைவு நடக்கக் கூடிய நிகழ்தகவுக்கான அரசியல் சூழல் பரவலாக இன்று காணப்படுகின்றது.
மிகப்பெரிய அளவில் பாசிச அரசின் கண்கணிப்பும் ஒடுக்குமுறையும் சமூகத்தை முடக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ் - சிங்கள புரட்சிகர சக்திகள் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பின்தங்கியுள்ள நிலையில் காணப்படுகின்றனர். இதனால் வெளிப்படக் கூடிய தனிநபர் பயங்கரவாத அபாயம், தமிழ் மக்களை மேலும் படுகுழியில் தள்ளிவிடும்.
இதைத்தான் அரசு தொடர்ந்து எதிர்பார்க்கின்றது. தன் கடந்தகால மனித விரோத நடத்தைகளையும், நிகழ்கால ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்த, அரசுக்கு இதைவிட வேறு எந்த ஒரு அரசியல் தெரிவும் இல்லை. அரச பயங்கரவாதம் இன்று  நாட்டை மேலும் ஆழமாக பிளக்க முனைகின்ற பின்னணியில், சிறை கூட முள்ளிவாய்க்காலாகியிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் காணமல் போன பிணங்கள் போல், பிணத்தைக் கூட தரமுடியாது என்கின்றது இந்த அரசு.
பி.இரயாகரன்

Aucun commentaire:

Enregistrer un commentaire