கிழக்கு மாகாண சபையின் 2வது தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள தீர்மானத்தில் முதலமைச்சராக யாரைத் தெரிவு செய்வது என்று மக்களும், கட்சியும் தீர்மானிப்பதற்கு முன்னர் ஊடகங்கள் வாயிலாக பல செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் 2008ம் வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று சி.சந்திரகாந்தன் முதலமைச்சரானார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் 07 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டதன் ஊடாகவே அம்பாறை மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொடுத்தனர்.
04 வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செயற்படுத்தியதுடன் தமிழ் பேசும் மக்களின் உரிமை பிரச்சினை எழும் போதும் அதற்காக உரத்துக் குரல் கொடுத்தது மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. தமிழர்களின் போராட்ட காலங்களில் போர்க்களத்தில் நின்ற சி.சந்திரகாந்தன் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய பின் அர்ப்பணிப்புடன் மக்கள் மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்பின் வெளிப்பாடாக சேவை புரிந்துள்ளார். மக்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்தேடு சோரம் போகாத பேரம் பேசும் அரசியல் போக்கினால் சமூகத்தின் சுபீட்சத்திற்கும் வித்திட்டுக் கொடுத்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மிகத் தெளிவாக உள்ளது. முதலமைச்சராக இம் முறையும் அதிக வாக்குகளைப் பெறும் சி.சந்திரகாந்தனுக்கே முதலமைச்சு வழங்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
இம் முறையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதிகூடிய வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாண சபையினை தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் முனையும் என்பதோடு, கிழக்கு மாகாண தமிழ் பேசும் சமூகத்திற்கான அபிவிருத்திக்காக பாடுபடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
Aucun commentaire:
Enregistrer un commentaire