mardi 17 juillet 2012

பிள்ளையானுக்கு வந்த புத்தி இப்போதுதான் சம்பந்தருக்கு வந்திருக்கிறது




தமிழ், முஸ்லிம் ஆகிய தமிழ்பேசும் மக்களின் விருப்பங்களுக்கு அமைய கிழக்கு மாகாண நிர்வாகம் எதிர்காலத்தில் அமையவேண்டும் என்பதன் அடையாளமாகவே தமது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ள புல்மோட்டை கிராமத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமொன்றிலிருந்து இந்த வேட்பாளர் போட்டியிடுவதாக சம்பந்தன் கூறினார்.வடக்கு கிழக்கு பிரதேசங்கள் இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட நடவடிக்கையை கண்டிக்கும் முகமாகத்தான் கடந்த தடவை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் பொறுப்பேற்ற நிர்வாகம் தமிழ்ப் பேசும் மக்களின் தேவைகளை அடையக்கூடிய விதத்தில் அமையாதபடியால்தான் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.
அதிகாரப்பகிர்வு முறையாக அமையவேண்டும், மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்ற அடிப்படையில் அதனை அடைவதற்காக தாம் முயற்சித்துவருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தேர்தலைப் புறக்கணிக்கமுடியாது என்ற அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடவேண்டியேற்பட்டதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வேட்புமனுக்களை கையளித்தபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் கருத்துக்களை தமிழோசையிடம் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire