vendredi 20 juillet 2012

இந்திய அரசியற்கட்சி தலைவர்கள் பிரமுகர்கள் சமயப் பெரியோர்கள் ஆகியோர்களுக்கு வேண்டுகோள்.


அறுபது ஆண்டுகள் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள, நான்கு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி யுனெஸ்கோ (UNESCO)வின் சகிப்புத் தன்மையையும், அகிம்சையையும் முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட மதன்ஜித் சிங் விருது பெற்ற மூத்த அரசியல்வாதியின் அவசர நடவடிக்கையாக இவ் வேண்டுகோள் வருகிறது. இது இலங்கையின் இனப்பிரச்சனையை அமைதியாகவும் அவதானமாகவும் கையாளுமாறு தமிழ் நாட்டிற்கு விடப்படும் ஒரு செய்தியாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மாகாந்தி அவர்கள் இந்தியாவும், இலங்கையும் தமக்குள் சண்டையிட முடியாது எனக் கூறியுள்ளார். இலங்கையில் எல்லாம் நன்றாக இருப்பதாக நான் கூற வரவில்லை. இலங்கை தமிழர்களுக்கு பல ஆதங்கங்கள் உண்டு. உயர் மட்டத் தலையீடு தேவைப்படும் அளவுக்கு இவற்றில் சில கட்டுமீறி போகும் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் விரும்பியோ விரும்பாமலோ இவ்விரு அயல் நாடுகளுக்கிடையில் இருந்த உறவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் மிக விரைவில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடுமாகையால் இரு நாடுகளும் இந்த போக்கை உடன் நிறுத்தி அவற்றின் நன்மையை மனதிற் கொண்டு தமக்குள் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் நான் இந்திய தலைவர்களுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். எனது வேண்டுகோள்களை எவரும் செவிமடுக்கவில்லை. முன்பு ஒரு ஒருபோதும் இல்லாதவாறு இன்று இலங்கையில் தமிழ் மக்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றனர். அத்துடன் வடக்கிலும், கிழக்கிலும் செறிந்து வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஏனெனில் அவர்கள் பெருமளவு தென் பகுதிக்கு இடம் பெயர்ந்தும், அநேகர் வெளிநாடுகளில் உள்ள தமது பிள்ளைகள், உறவுகளிடமும் வேலைவாய்ப்புத் தேடியும் சென்றுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் தற்காலிகமாகவோ, அன்றி நிரந்தரமாகவோ சிங்கள கிராமங்களில் வாழ்கின்றனர். தமது பூர்வீக இடங்களில் வாழ விரும்பும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதியளவு முறையான கல்வி வசதி இல்லாமை போதிய உணவு கிடைக்காமை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி பெற்றும் சில இடங்களில் எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனங்களும் இல்லாத நிலையில் அம் மக்களின்; பிரச்சனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
வட மாகாணசபை இயங்கினாலோ அன்றி குறைந்த பட்சம் ஓர் இடைக்கால நிர்வாகமேனும் அமைக்கப்பட்டாலோ அவர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கான உலருணவும் சொற்ப பணமும் மட்டுமே வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு மிக மிக குறைவாக இருப்பதால் வன்னிப் பகுதியில் பசியும், பஞ்சமுமே தாண்டவமாடுகிறது. வெளிநாடுகளில் பிள்ளைகள் உள்ளவர்கள் ஓரளவுக்கு திருப்தியாக வாழ்ந்தாலும் எல்லோருமே அப்படி அதிஷ்டசாலிகள் அல்ல. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு வாய்ப்பு அயல்நாடாக தமிழ்நாடு இருப்பதால் அங்கிருந்து உதவி பெறுவதே.
 தமிழ் நாட்டவர் எவருக்கும், இலங்கை வாழ் மக்கள் பலருக்கும்;, தமிழ் நாட்டுடன் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு பற்றி தெரியாது. தமது வரலாறை மகாவம்சம் பதிந்து வைத்திருக்கின்றது என முழுதாக நம்பும் சிங்கள மக்கள் தமது மூதாதையரும் சிங்கள சமூகத்தை உருவாக்கியவராக நம்பப்படும் விஜயன், பாண்டிய நாடாகிய மதுரையில் இருந்து பாண்டிய இளவரசியை மணம் முடித்ததாகவும், அவரின் எழுநூறு நண்பர்களும் அவ்வாறே மதுரை பெண்களை வரவழைத்து திருமணம் செய்ததாகவும் நம்புகின்றனர். அத்துடன் ஆயிரம் குடும்பங்களும் பல்வேறும் தொழில்களில் அனுபவம் பெற்ற பல குடும்பங்களும் பல்வேறு பரிசுப் பொருட்களும் பாண்டிய மன்னரால் அனுப்பி வைக்கப்பட்டதாக சரித்திர குறிப்புக்கள் கூறுகின்றது. இக் கூற்றை கட்டுக்கதையென யாரும் கூற மாட்டார்கள்.
கடந்த காலத்தில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்ட போதெல்லாம் பல்வேறு உதவிப் பொருட்களுடன் இலங்கைக்கு முதல் முதலில் விரைந்து வந்ததும், வருவதும் தமிழ்நாடே. சுனாமி ஏற்பட்டபோது தமிழ் நாடு காட்டிய நல்லெண்ணத்தையும், உதவிப் பொருட்களையும் நம் நாட்டு மக்கள் அனுபவித்தவர்கள். எதிர்காலத்திலும் கூட இந்தியாவோடு தமிழ்நாடே எமக்கு முதல் முதலில் உதவ முன்வரும். ஆகவே எக்காரணம் கொண்டும் நாம் ஒருவருக்கொருவர் பகைமையை வளர்க்க முடியாது. இதையே மகாத்மாகாந்தியும் கூறியுள்ளார். தமிழ் நாட்டு மக்கள் பாக்குத்தொடுவாய்க்கு அப்பால் உள்ள பல்வேறு தேவைகளுடன் வாழும் தமது உறவுகளுக்கு உதவ வேண்டுமானால் தாராள மனப்பான்மையையும் அனுதாபமும் காட்டி பல்வேறு சமூகங்களுடன் சம உரிமையுடன் வாழ வேண்டுமென அங்கலாய்த்துக் கொண்டு வாழும் இலங்கை மக்களை பகைத்துக் கொண்டு ஒரு போதும் உதவ முடியாது. அதற்கு வேண்டியது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவே
இதையொட்டித்தான் தமிழ் நாடு இலங்கை வாழ்  தமது சகோதரர்களுக்கு உதவ வேண்டுமானால் தமிழ்நாடு இலங்கையுடன் நட்புடன் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் நாட்டில் பயிற்சி பெற்றுவரும் இலங்கை ஆகாயப் படையினரை அங்கிருந்து வாபஸ் பெறவேண்டுமென்ற வற்புறுத்தல்கள் மீள பரிசீலிக்கப்பட வேண்டிய விடயமாகும். இச் செயலால் இலங்கை அரசு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அடிக்கடி சீன அரசு இலங்கையில் பல இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத் தளபாடங்களையும் உதவியாக வழங்க முற்படுவது பற்றி இந்தியாவிலோ அல்லது குறிப்பாக தமிழ் நாட்டிலோ எவருக்கும் தெரியாது என எண்ணுகிறேன். அத்தகைய உதவிக்கு எதுவித அவசியமும் ஏற்படவில்லை. உதவி கோரப்பட்டிருந்தால் சீன அரசு அதனை நிராகரித்திருக்க வேண்டும். இதனால் இலங்கை தமிழ் மக்கள் பெரிதும் துன்பமடைகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டு காலமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறிய இராணுவ முகாம்களும் பல பெரிய முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முப்பது ஆண்டுகாலமாக பல விதங்களிலும் துன்பப்பட்ட மக்கள் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பல உயிர்களையும், மிகப் பெறுமதி வாய்ந்த சொத்துக்களையும் இழந்துள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு இலட்சம் விமானப் படையினருக்கு சீனாவிலோ அல்லது வேறெந்த நாட்டிலோ பயற்சிக்கு ஒழுங்கு செய்வது இலங்கை அரசுக்கு பெரும் கஷ்டமான விடயமல்ல. இதன் காரணமாகவே இத்தகைய விடயங்களில் நாம் மிக மிக அவதானமாக கையாள வேண்டுமென்றும் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்த்த விளைவுகளுக்கு மாறாக அமையக்கூடாது என்பதே. ஆகவே தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கையின் வட பகுதியில் உள்ள மிதவாத அரசியல்வாதிகளோடு கருத்துக்களை பரிமாறிக்கொள்வது அவசியமாகும். கடந்த சில ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கும், பிரதமர், முதலமைச்சர் போன்றோர்களுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எனது ஆலோசனைகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தால் இனப்பிரச்சனை தீர்விற்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு மிக கணிசமானதாக இருந்திருக்கும்.
இங்கு துர்ப்பாக்கியமான விடயம் என்னவெனில் 1976ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை கலைக்கப்பட்டபோது அன்று முதலமைச்சராக இருந்த கௌரவ மு.கருணாநிதி அவர்களின் சார்பாக வாதிடுவதற்கு மிகச் சிரமப்பட்டு பிரபல இராணி வழக்கறிஞர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களை வற்புறுத்தி நான் சென்னைக்கு கூட்டிச் சென்றிருந்தும், முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தும் அவர் ஒரு தடவையேனும் என்னுடன் கருத்து பரிமாறவும் இல்லை எனது ஆலோசனையை ஏற்கவும் இல்லை. சென்னையில் வழக்கை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சிங்கபூர் சென்ற ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் பூதவுடலே இலங்கைக்கு திரும்பி வந்தது.
ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்காது இந்திய அரசு நடுநிலை வகித்திருந்தாலும் அது எப்படியும் தானாக நிறைவேறியிருக்கும்.  இந்திய அரசு நடுநிலை வகித்திருப்பின் இலங்கையுடனான நல்லுறவை பயன்படுத்தி நிரந்தர தீர்வொன்றை காண உபயோகித்திருக்கலாம். இந்த நிலை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இலங்கை இனப்பிரச்சனை சம்பந்தமாக தமிழ்நாடு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகக் கவனமாக கலந்துரையாடப்பட்டும், பரிசீலிக்கப்பட்டும் செயற்படாவிட்டால் அவை எதிர்பார்க்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது தமிழர் பிரச்சனை தீர்வுக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Aucun commentaire:

Enregistrer un commentaire