இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சி காரணமாக பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் நெற்செய்கைப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளங்களில் உள்ள நீரைக் கொண்டு சுமார் 13 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
எனினும் தற்போதைய வறட்சி நிலைமை இந்த நெற்செய்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் நீர்ப்பாசனக் குளங்களே அங்குள்ள நீர்வளத்திற்கான ஊற்றுக்கண்களாக இருக்கின்றன.
மழை காலத்தில் நிறைகின்ற குளங்களின் நீரே, கோடை காலத்தில் குடிநீர் கிணறுகளில் ஊறுகின்றது. இதனால், குடிநீர் கிணறுகளில் நீரைப் பெறும் நோக்கத்துடன் நீர்ப்பாசனக் குளங்களில் கோடை காலத்தில் குறிப்பிட்ட அளவு நீர் மட்டத்தைப் பேண வேண்டிய தேவை இருக்கின்றது.
ஆனால் தற்போதைய வறட்சி நிலைமையில் குளத்தில் குறிப்பிட்ட அளவு நீர் மட்டத்தைப் பேணுவதும், செய்கை பண்ணப்பட்டுள்ள நெற்காணிகளுக்கு நீர் வழங்குவதும் கடினமான காரியமாகியிருக்கின்றது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன்.
காலபோக நெற்செய்கைக்கென வங்கிகளில் பெற்ற கடன்களை இன்னும் கட்டி முடியவில்லை. காலபோகத்தில் அறுவடை செய்த நெல்லை இலாபத்திற்கு விற்கவும் வழியில்லை. இந்த நிலையில் சிறுபோக நெல் விளையுமா அதனை அறுவடை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகியிருக்கின்றது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire